உத்திர பிரதேசத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகளால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட 16 வயது சிறுமி முதல்வர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்ய முயன்றார். தொடர்ச்சியான புகார்களுக்கு பின்பும் முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை. அந்த சிறுமியின் தந்தை, கற்பழித்த எம்எல்ஏவின் தம்பியால் கடுமையாக தாக்கப்பட்டதுடன், பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டார். அவர் நேற்று இறந்துவிட்டார்.
ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமியான ஆஷிஃபா கடத்தப்பட்டு 8 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமாக வன்புணர்வு செய்யபபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பேரால் கற்ப்பழிக்கப்பட்ட பின்பு சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டார். மரணித்த பின்பும் ஒரு காவல் அதிகாரியால் மீண்டும் வன்புணர்வு செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி அந்த சிறுமியின் சமூகத்தைச் சார்ந்த மக்களிடையே அச்சத்தை விதைக்கவே இந்த செயலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளான். ஆளும் பாஜகவின் மாநில செயலாளர், இந்துத்துவ இயக்கமான ஏக்தா மன்ச் இணைந்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று வக்கீல்கள் சேர்ந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய விடாமல் நீதிமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பல மணி நேரம் முடக்கினர்.
இன்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீதான கற்பழிப்பு வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். ஹரித்வாரில் உள்ள அமைச்சரின் ஆசிரமத்தில் பல நாட்கள் அடைத்து வைத்து பல முறை கற்ப்பழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியிருந்தார். நீதிமன்ற அனுமதியுடன் அரசு வழக்கறிஞர் வழக்கில் இருந்து விலக அனுமதிக்கும் 321 crPC சட்டப்பிரிவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளது. ஆனால் விலகுவதற்கான எந்த காரணமும் அந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்டால் இன்றைய சூழலில் நிச்சயம் ஏற்றுக் கொள்ளும்.
தனது கட்சியின் எம்எல்ஏக்கள் குற்றவாளிகளாக இருக்கும் இந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்கக் கூட இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று சம்பவங்களிலும் அரசு, காவல்துறை, நீதித்துறை, ஆளும் கட்சியினர் என்று அனைவரும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பவர்களாகவும், அவர்களைக் காப்பாற்ற முயல்பவர்களாகவும் இருப்பது இந்தியா கற்பழிப்புக் கேந்திரமாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
8 வயது குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் இத்தகைய கொடூரங்களை எதிர்த்து சமூக செயற்பாட்டாளர்கள் களத்தில் இறங்க வேண்டும்.