இஸ்லாமிய பொற்காலத்திற்கு முதல் அடித்தளமிட்ட பல்கலை பாடசாலையான பைத்துல் ஹிக்மா உருவாக்கப்பட்டதன் நோக்கம் உலகில் அதை போலவே பல பல்கலைகள் உருவாக காரணமாயிருந்தது, அவ்வகையில் ஃபாத்திமத் கலிபாக்காளின் ஆட்சியில் எகிப்தில் தாருல் இல்ம் / தாருல் ஹிக்மா ( House of Knowledge) எனும் மற்றொரு மகா நூலகமும் தோற்றுவிக்கப்பட்டு குர்ஆன் கல்வியும் உலக கல்வியும் போதனம் செய்யப்பட்டது. அல்ஹகீம் பி’அம்ரல்லாஹ் எனும் ஃபாத்திமத் கலீபா அதனை தோற்றுவித்தார்.
ஒரு பக்க ஷெல்ஃபில் 40,000 புத்தகங்களை அடுக்க முடியும் என்றால் அதன் பிரம்மாண்டம் உங்களது கற்பனைக்கானது. கிமுவில் எரிந்து சாம்பலாக்கப்பட்ட அலெக்ஸாண்டிரியா நூலகம் மீண்டும் அதே இடத்தில் ஃபாத்திமத் கலிபாக்களால் தாருல் ஹிக்மா என்ற பெயரில் மறுவுருவாக்கம் செய்யப்பட்டது. தாருல் ஹிக்மா என உலகம் முழுவதும் அதன் கிளைகள் உண்டு. குறிப்பாக சவூதி-ஜித்தா, மலேசியா மற்றும் இந்தோனேசிய நாடுகளில் இன்றும் அவை பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது.
முஸ்லிம்கள் பெரும்பாலும் போர்களிலும் நாடுபிடிப்பதிலும் தான் நாட்களை செலவழிப்பார்கள் என்கிற எண்ணத்தை எட்டாம் நூற்றாண்டிலேயே தவிடு பொடியாக்கியவர்கள் முஸ்லிம் கலிபாக்கள் என்பது அடுத்தடுத்து கல்விக்காக பெரும் சேவையாக பல்கலைகளையும் நூலகங்களையும் உலகிற்கு அர்ப்பணித்துள்ளார்கள். இத்தனை வரலாறுகளுக்கு பிறகும் இன்னும் நீளும் இஸ்லாமிய கல்விச்சேவைகளின் பட்டியல்.
கிபி.859ல் பாத்திமா அல் ஃபிஹ்ரி எனும் பெண் கல்வியாளரால் மொராக்கோ, பெஸ் நகரிலுள்ள அல் குவரயீன் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. எகிப்தின் கைரோ நகரில் கிபி.970ல் தொடங்கப்பட்ட அல் அஸார் பல்கலைக்கழகம் என உலகின் மிகப்பழைய மற்றும் இன்று வரை நடத்தப்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும், இஸ்லாமியர்களால் தொடங்கப்பட்டதே.
நூலகங்களும் நினைவகங்களும் :-
உலகின் தொன்மங்களை பற்றி அறிந்துகொள்ள மக்களுக்கு பேருதவியாக இருப்பது அருங்காட்சியகங்களே. ஆனால் நம்மில் பலரும் பழம்பொருட்களை காணவோ அதை பற்றி ஆராய்ச்சி செய்து அறிந்துகொண்டு பிறருக்கு அறிவிக்க செய்யவோ விரும்புவதில்லை.
உலகிலுள்ள அனைத்து பல்கலைக்கழக வளாகங்களிலும், நாடாளுமன்ற வளாகங்களிலும் ,புதைபொருளுக்கென தனியான அருங்காட்சியக கட்டிடங்களிலும் நிச்சயமாக ஒரு மியூசியம் இருக்கும். உலகின் புராதன பல்கலையான மொராக்கோவின் அல்குவரயீனிலும், பக்தாதின் பைத்துல் ஹிக்மா மற்றும் அலெக்ஸாண்ட்ரிய நகரின் நூலகம் ஆகியவற்றில் சரித்திர காலத்திற்கு முற்பட்ட மானுடவியல் கலைப்பொருட்கள் சேகரமாக்கப்பட்டு இருந்தன. காலத்தால் அழிக்கப்பட்ட அவற்றின் தொடர்ச்சியுடைய வரலாற்று சாசன ஆவணங்களுக்கென உருவாக்கப்பட்டது தான் அருங்காட்சியகங்கள்.
உலகின் முதல் அருங்காட்சியகம் 2,500 ஆண்டுகளுக்கு முன் பாபிலோனிய இளவரசி என்னிகாலத்தி என்ற ஒருவரால் உருவாக்கப்பட்டிருந்தது என பிரபல தொல்லியலாளர் லியானார்டோ வுல்லி கூறுகிறார். வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த பற்பல கலைப்பொருட்கள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகவும், மிக நேர்த்தியாக பெயர்களுடன் கூடிய அழகிய வரிசையடுக்குகளில் அவை வைக்கப்பட்டிருந்தன தன எனது 1925ம் ஆண்டின் அகழாய்வு பற்றி கூறுகிறார். ரோமானிய பேரரசின் வீழ்ச்சியின் தொடக்கமாக அந்த காலத்தை அவர் வரையறுக்கிறார். பண்டைய ஊர் – பாபிலோனிய அரண்மனையில் அவர் கண்டெடுத்தவை பிரிட்டிஷ் மியூசியத்தில் பாதுகாக்கப்படுகிறது. லியானார்டோ வுல்லி இங்கிலாந்தை சேர்ந்தவர், புராதன அனாடோலியா பகுதியாக ஹெடிட் அகழாய்வுகளில் முக்கிய பங்கு வகித்தவர். எகிப்து மன்னன் துத்திற்கு இணையாக அதே காலகட்டத்தில் பாபிலோனியாவை ஆண்ட ஷுபாத் எனும் அரசியின் கல்லறையை கண்டறிந்தார். அது 4,500 வருடம் பழமையானது என்று அறிவித்தார், இதனை அவரது புத்தகமான “Ur of the Chaldees” ல் குறிப்பிட்டுள்ளார்.. பைத்துல் ஹிக்மா எனும் எட்டம்நூற்றாண்டு நவீன பல்கலை தான் மீதம் வரவிருக்கும் அனைத்து கல்விசார் கூடங்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறது.
இரண்டாவதாக உலகின் மிக பழமையான அருங்காட்சியகம் இத்தாலியில் இருக்கும் கேபிடோலின் மியூசியம் ஆகும் கிபி.1734ல் இருந்து பொதுமக்கள் பார்வைக்காக நடைமுறையில் இருக்கும் ஒரு புராதன அருங்காட்சியகம். கிபி.1471ல் கேபிடோலி மலையில் நான்காம் போப் சிக்டஸ் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த மியூசியத்தில் ரோமர்களின் அனைத்துவித கலைப்பொருட்களும் உலோக ஆயுதங்களையும் அவர் அங்கே சேகரப்படுத்தியிருந்தார். ஆனால் அது அரசகுலத்தவர் மட்டுமே வந்து கண்டு செல்ல இயலும். பொதுமக்கள் பார்வைக்கு மூன்று நூற்றாண்டு கழித்தே திறந்துவிடப்பட்டது.
மூன்றாவதாக இந்தியாவின் , கொல்கத்தா மாநகரிலுள்ள சௌரிங்கி பார்கில் இருக்கும் ஏசியாடிக் சொசைட்டி தான் இந்தியாவிலேயே மிக புராதனதும் மிகப்பெரியதுமான பழம்பொருள் அருங்காட்சியகம். 1796ல் சாதாரணமாக தொடங்கப்பட்ட அந்த அருங்காட்சியகம் 1814ல் தாவரவியலாளர் நதேனியல் வாலிச் என்பவரால் பிரம்மாண்ட ரூபம் பெற்றது. இந்தியாவில் கிடைத்த பழம்பொருட்கள் மற்றும் அரச பரம்பரையினரின் பொருட்களும், கோவில் கொத்தளங்களில் கிடைத்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்களுடன் அது அலங்கரிக்கப்பட்டது. botany, art, geology, Archaeology, anthropology, and Zoology ஆகிய ஆறு பிரிவுகளில் 35 கேலரிகளையுடைய மிகப்பெரிய அருங்காட்சியகம் அது.
நான்காவது பிரெஞ்சு நாட்டின் Louvre Museum. 12ம் நூற்றாண்டில் இரண்டாம் பிலிப் மன்னரால் கட்டப்பட்ட ஒரு கற்கோட்டை அது. பிறகு 1546ல் அதனை அரசர் அரண்மனையாக மாற்றினர். மீண்டும் நெப்போலியனின் காலத்தில் 573 ஓவியங்களையுடைய சிறிய அருங்காட்சியகம் ஒன்று அங்கே திறக்கப்பட்டது. 1793முதல் மக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது. நெப்போலியன் ஆட்சி முடிவுக்குப்பின் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கலைப்பொருட்கள் அனைத்தும் அதனதன் உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 35,000 கலைப்பொருட்களுடன் பிரான்சின் தலைநகர் பாரிசின் முக்கிய அடையாளமாக மாறிப்போயிருக்கும் அந்த அருங்காட்சியகம் 60,600 சதுர அடிக்கு விஸ்தரிக்கப்பட்டு எகிப்தின் கிராண்ட் மியூசியத்திற்கு பிறகு உலகில் அநேக மக்கள் போய் பார்க்கும் ஒரு உலக பிரசித்திபெற்ற அருங்காட்சியகமாக வடிவெடுத்துள்ளது.
ஐந்தாவதாக எகிப்தின் கிராண்ட் மியூசியம், உலகின் மிகப்பிரம்மாண்ட அருங்காட்சியகம் என பெயர் பெற்ற கைரோவின் கிராண்ட் மியூசியத்தில் 1,20,000 கலைப்பொருட்கள் சேகரமாகியுள்ளன. இவற்றை தவிர காட்சிப்படுத்தப்படாத ஆயிரக்கணக்கான பொருட்களை ஸ்டோர் ரூம்களில் போட்டுள்ளனர். கிபி.1835ல் உஸ்பெகியா தோட்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் எகிப்திய பாரோக்களின் அருங்காட்சியகம், பிறகு 1855ல் கைரோவிற்கு மாற்றப்பட்டது. தற்போதிருக்கும் கிராண்ட் மியூசிய கட்டிடம் 1901ல் கட்டப்பட்டது. உலகின் மிக பழமையான நாகரீகமாக வரையறுக்கப்பட்ட எகிப்திய நாகரீகத்தின் தொடர்புடைய பல பொருட்களை இங்கே காட்சிப்படுத்தியுள்ளனர். வேற்று நாட்டு கலாச்சாரத்தை பறைசாற்ற ஒருதுளியும் இடமில்லாத அளவிற்கு எகிப்து நாகரீக பழம்பொருட்களே அங்கே தங்கமும் வெள்ளியுமாக குவிந்து கிடக்கிறது. உலகில் அதிக தங்க பொக்கிஷங்களை உடைய அருங்காட்சியகம் என்றால் அது கைரோவின் கிராண்ட் மியூசியம் தான். தற்போது புதிய பிரம்மாண்ட கட்டிடம் ஒன்றும் இரண்டாம் மியூசியமாக திறக்கப்படவுள்ளது.
இதுபோல ரஷ்யா,ஜெர்மனி,அமெரிக்கா,பிரிட்டன்,ஜப்பான், மெக்ஸிகோ, மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் பிரம்மாண்ட அருங்காட்சியகம் உண்டு. ஆங்காங்கே கிடைக்கப்பெற்ற ஆதிமனிதன் முதல் ஆண்ட்ராய்டு மனிதன் வரையிலான கலைப்பொக்கிஷங்கள் அங்கே பாதுகாக்கப்படுகின்றன. உலகின் 35 மியூசியங்கள் முக்கியமானதாக வரையறுக்கப்பட்டுள்ளது.
தொடரும்
ரோஸி நஸ்ரத் – எழுத்தாளர்