இதை நீங்க நிச்சயமாப் படிக்கப் போறது இல்ல…
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
அந்தக் காலத்துல நாங்க…
++++++++++++++++++++++++++++++++++++++++
அப்பல்லாம் நாங்க மக்களைப் பாதிக்கிற கல்வித்துறை மாற்றங்களை எதிர்த்துப் போராடுவோம்…
இப்ப ரிடையர் ஆன அப்புறமும் சில அந்தக் கால ஆட்கள் கல்வித்துறைக் கொடுமைகளை எதிர்த்து எதையாவது செய்யணும்னு நினைச்சு தனியா ஒரு அமைப்பை உருவாக்கி என்னவோ செய்றாங்க..
உயர்கல்வியில் இன்னைக்கு ஏற்பட்டுள்ள கொடிய மாற்றங்களை எதிர்த்து பாவம் இந்த வயசு போன முன்னாள்கள் எதோ பண்றாங்க.
அவங்க சென்னையில் நடத்திய ஒரு கூட்டத்துல வற்புறுத்தி என்னைப் பேசச் சொன்னாங்க. அப்புடி நான் இது குறித்துப் பேசிய ஒரு உரையை எழுதி அனுப்பச் சொல்லி..
நானும் மூணு நாளா வேற வேலையை எல்லாம் விட்டுட்டு எழுதி….
நீங்க நிச்சயம், அதுவும் இந்தத் தேர்தல் நேரத்துல அதைக் கண்டுக்க மாட்டீங்கன்னு தெரியும்…
அதனால. அந்தப் 15 பக்கக் கட்டுரையில் கடைசி அரைப் பக்கம் மட்டும் இங்கே…
________________
முடிவாகச் சில
உயர் கல்வி என்பது அம்பானி – பிர்லா அறிக்கை தொடங்கி மிக மிக வேகமாக முழுக்க முழுக ஒரு லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது. கல்வி என்பது ஒரு சந்தைக்குரிய வணிகப் பொருளாக இப்படி மாற்றமடையும் எனச் சென்ற நூற்றாண்டில் யாரும் நினைத்திருக்க மாட்டோம்.
இந்த அறிக்கைகளின் மீது பெரிய விளக்கங்கள் ஏதும் தேவையில்லை. மேலோட்டமாகப் பார்க்கும்போதே இதன் ஆபத்துகள் விளங்கும். முழுக்க முழுக்க உயர்கல்வி என்பது இன்று ஏழை எளிய மக்களுக்கு எளிதில் எட்ட முடியாத ஒன்றாகி விட்டது.
இது ஒரு உலகளாவிய ஒரு போக்காக உள்ளது. இதற்கு இன்றைய அரசை நாம் குறை சொல்லி என்ன பயன் என ஒருவருக்குத் தோன்றலாம். ஒரு வகையில் இது உண்மைதான். காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருக்கும். அதனால்தான் பிரதான எதிர்க் கட்சியாக உள்ள காங்கிரசோ இல்லை இதர கட்சிகளோ பெரிய எதிர்ப்பு எதையும் காட்டவில்லை.
உலகமயம் என்பதற்குள் நாம் தலையைக் கொடுத்துவிட்டோம் பின் என்ன செய்வது என எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டுவிட இயலாது. இந்த உலகம் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய ஒன்று. இந்தியா மக்கள் தொகை மிக மிக அதிகமாக உள்ள, பெரும் ஏற்றத் தாழ்வுகள் மிக்க, சாதி, தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கொடுமைகள் மிகுந்த, பெரும்பான்மை மதத்தினர், சிறுபான்மையினர் என்கிற முரண்பாடுகள் கூர்மைப் பட்டுள்ள ஒரு நாடு.. அதனால்தான் இங்கு இட ஒதுக்கீடு முதலான சில சிறப்பு நடவடிக்கைகள் இங்கு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகளாவிய நடைமுறைகளை ஏற்றுக் கொள்வது எனச் சொல்லி மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புப் பாதுகாப்புகள் முதலியவற்றை நாம் இழக்கவோ அல்லது ஒத்தி வைக்கும் நிலையிலோ நாம் இல்லை.
காங்கிரஸ் முதலான கட்சிகளும் கூட உலகமயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கட்சிகளாயினும் அவற்றுக்கு இல்லாத சில திட்டங்களையும் அணுகல்முறைகளையும், உள் நோக்கங்களையும் கொண்ட கட்சி பா.ஜ.க. அது இதை நடைமுறைப் படுத்துவதில் காட்டும் வேகமும், ஆர்வமும், மக்களுக்குத் தெரிவிக்காமலேயே இவற்றை நடைமுறைக்குக் கொண்டு வரும் வஞ்சகமும் அச்சமூட்டுவனவாக உள்ளன.
குறிப்பான சில ஆபத்துகளை மட்டும் சுட்டி இக்கட்டுரையை முடிக்கலாம்.
- உயர் கல்வி இப்போது தரப்படுத்தப்பட்டுவிட்டது. முதல் தரக் கல்லூரிகளில் இனி ஏழை எளிய மக்கள் இடம் பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது. இனிமேல் ஒரு வேலைக்குச் செல்வதானால் உரிய தகுதி வாய்ந்தவர்களுக்குள்ளும் அவர் முதல் தரக் கல்லூரியில் பயின்றவரா இல்லை மூன்றாம் தரக் கல்லூரியில் பயின்றவரா என்பதும் ஒரு முக்கிய தகுதியாக அமையப் போகிறது. இப்படியாக உருவாகும் இந்தப் புதிய ஏற்றத் தாழ்வு ஏற்கனவே உள்ள ஏற்றத் தாழ்வுகளை மிகுதிப்படுத்தப் போகிறது.
- மாணவர் சேர்க்கையில் ‘மெரிட்’ ஒன்றே இனி தகுதியாகக் கருதப்படும் என வெளிப்படையாகச் சொல்வதும், இட ஒதுக்கீடு குறித்து இந்த அறிக்கைகளும், கல்விக் கொள்கைகளும் காட்டும் மௌனமும் ஆபத்தானவை.
- பேராசிரியர்கள் தேர்வு, பேராசிரியர்கள் ஊதியம், பணிப் பாதுகாப்பு, மேல்முறையீடு எதிலும் இனி அரசுக் கட்டுப்பாட்டிற்கு இனி இடமில்லை. வெளிநாட்டுப் பேராசிரியர்களின் ஊதியம் 20 மணி நேரத்திற்கு 5 இலட்சத்துக்குக் குறையக் கூடாது எனச் சொல்லும் இந்த அறிக்கைகள் உள்ளூர்ப் பேராசிரியர்களின் ஊதியம், பணித் தேர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியன பற்றி ஒன்றும் சொல்வதில்லை. இனி ஆசிரியர்கள் அனைவருமே ஒப்பந்தக் கூலிகளாகவும் நிரந்தரமற்றவர்களாகவும் மட்டுமே இருக்கப் போவது உறுதி.
- மாணவர் கட்டணத்திற்கும் எந்தக் கட்டுப்பாடும் கூறப்படவில்லை.
- பாடத் திட்டங்களில் பூரண சுதந்திரம் என்பதும் ஆபத்தானதே. இப்படியான சுதந்திரங்கள் இல்லாதபோதே பாடத் திட்டத்தில் இத்தனை மாற்றங்கள் செய்பவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் என்னென்ன செய்வார்கள் என நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது.
இப்போதே தஞ்சைத் தமிழ்ப் பல்கலை.க் கழகத்தில் சோதிடம், புரோகிதம் முதலியன பாடங்களாக உள்ளன. இனி பல்லி விழும் பலனிலிருந்து மாட்டு மூத்திர ஆராய்ச்சி உட்படப் பாடங்களாக்கப் படலாம். மத வெறுப்பை இளம் மனங்களில் ஊட்டலாம். சிந்துவெளி நாகரிகம் ஆரியர்களுடையதே, தமிழ் சமஸ்கிருதத்திலிருந்தே பிறந்தது என்றெல்லாம் பாடத் திட்டங்கள் அமையலாம்.
ஏற்கனவே கலைத்துறைப் பாடங்கள் (Humanities), Inter Disciplinary Subjects, Linguistics, Comparative Grammer முதலான பாடங்கள் உயர் கல்வி நிறுவனங்களில் நீக்கப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் கருத்தாளர்கள் சொல்லிக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
உயர்கல்வி என்பது ஏற்கனவே கருப்புப் பண முதலீடுகளுக்கான களம் ஆகியுள்ளது.
இப்போது அம்பானி, ஏர்டெல், அனில் அகர்வாலின் வேதாந்தா, ஷிவ் நாடார், ஓ.பி.ஜின்டால், அஸிம் பிரேம்ஜி, KREA முதலான கார்பொரேட் முதலைகள் உயர் கல்வியில் கண் பதித்துள்ள நிலையில் இன்றைய இந்த முடிவுகள் எங்கு கொண்டு விடும்?
இனி உயர்கல்வித் துறைத் தலைவர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் காட்டிலும் கல்லாவை நிரப்புவது எப்படி, ஊதியம் முதலான செலவுகளுக்காகவும் HEFA வில் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டுவதற்காகவும் எவ்வாறு சம்பாதிக்கலாம் என யோசிப்பதற்கே அதிக நேரம் செலவிட நேரிடும். ஏற்கனவே இந்தக் கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் கல்விக் கட்டணம் 30 சதம் உயர்த்தப்பட்டுவிட்டது. பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் கட்டணம் 1000 சதம் உயர்த்தப்பட்டுள்ளது. இனி முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகள் ‘ச்கைப்’ முறையில் நடத்தப்படுமாம். தேர்வாளருக்குப் பயணப்படி கொடுப்பதை நிறுத்த இப்படி எல்லாம் திட்டமிடும் நிலை பல்கலைக் கழகங்களுக்கு ஏற்பட்டுவிட்டன.
கடந்த இருபதாண்டுகளில் உயர்கல்வி தொடர்பான பல குழுக்கள் அமைக்கப்பட்டன. சாம் பிட்ரோடா தலைமையில் தயாரிக்கப்பட்ட Knowledge Commission Report, யஷ்பால் குழு அறிக்கை (2009) ஆகியவை இக்கட்டுரையில் விவாதிக்கப்படவில்லை. மோடி ஆட்சியில் உருவாக்கப்பட்ட டி.ஆர்.சுப்பிரமணியம் குழு அறிக்கையை பல மாதங்கள் வெளியிடப்படாமலேயே வைத்திருந்து, பிறகு அவர் தானே அதை வெளியிடப் போவதாக மிரட்டியவுடன் வெளியிட்டனர். அதற்குச் சில மாதங்களுக்குப் பின் முன்னாள் ISRO தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் “தேசிய கல்விக் கொள்கை” க்கான ஏழு பேர் கொண்ட குழு ஒன்று (2017) அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இங்கு விவாதிக்கப்படாமலேயே இன்று நாம் இந்தக் கட்டுரையில் விவரித்துள்ள முக்கிய உயர் கல்வித்துறை மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
என்ன செய்யப் போகிறோம் நாம்?
எழுதியவர்
அ.மார்க்ஸ்