தன்னுடைய அடையாளம் பற்றிக் கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய தலைவர் அப்துல் வாலி கான்,
நான் கடந்த ஐம்பது வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன்,
ஐநூறு வருடங்களாக முஸ்லிமாக இருக்கிறேன்,
ஆனால் ஐயாயிரம் வருடங்களாக பட்டானாக இருக்கிறேன்
என்றார். அதுபோல நாமும் அறுபது வருடங்களாகத்தான் இந்தியராக இருக்கிறோம். ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளாக தமிழராக வாழ்கிறோம்.
இனவியலும், இனவியல் போராட்டங்களும்
‘இனம்’ என்பது ஒரு மக்களின் மரபுக் கூறு சார்ந்ததோ அல்லது பண்பாடு சார்ந்ததோ மட்டும் அல்ல; அது ஒரு மக்கள் கூட்டம் மற்றொரு மக்கள் கூட்டத்தை ஒடுக்கி மேலாண்மை செய்யும் ஒரு ஒடுக்குமுறைக்கான கருத்தியலாகவும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. வரலாறு தொடங்கிய காலம் முதலே இன ஒடுக்குமுறையும் இருந்து வந்திருக்கிறது.
அது போன்றே, ஒரு மக்கள் கூட்டத்தை அணைத்து ஓர்மை உணர்வூட்ட உரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் சக்தியாகவும் இன உணர்வு இருந்து வந்திருக்கிறது. இன்றுவரை வரலாற்றின் உந்து சக்தியாகவும் இருந்து வருகிறது. மனிதகுலம் மரபினங்களாகத் தோற்றம் பெற்று இன்று தேசிய இனங்களாகப் படிமலர்ச்சி பெற்றுள்ளது. உடல்சார் பண்புகளால் இனி ஓரினத்தை அடையாளம் காண முடியாது. தவிர்க்கவியலாதபடி மரபினக் கலப்புகளுடன் உருவாகிவிட்ட தேசிய இனங்களை மொழிகளே அடையாளப்படுத்துகின்றன.
ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான இறையாண்மையுடைய தேசத்தைப் படைத்துக் கொள்ள உரிமை படைத்தது. அவ்வாறு தனக்கான தேசத்தைப் படைத்த தேசிய இனங்கள் உரிமையோடு வாழ்கின்றன. சில தேசிய இனங்கள் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.
உலகெங்கும் நடைபெற்றுவரும் தேசிய இனங்களின் உரிமைப் போராட்டங்கள் உலகின் உளச் சான்றை உலுக்காமல் இல்லை. 1980களுக்குப் பின் தேசிய இனப் போராட்டங்களுக்கு ஆதரவான தீர்மானங்கள் ஐ.நா அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1980-ல் ஐ.நா நியமித்த வல்லுநர் குழுவின் அறிக்கை இப்படிக் கூறுகிறது;
‘தெளிவான வரையறுக்கப் பட்ட பகுதியில் தன்னாட்சி நடத்திய வரலாறும், தனித்த பண்பாடும், இழந்த தன்னாட்சியை மீண்டும் பெறுவதற்கான பொது விருப்பமும் ஆற்றலும் உள்ள (தேசிய இன) மக்களே தன்னுரிமை பெறத் தகுதி பெற்றோர் ஆவர்’இந்த அறிக்கையை ஐ.நா அங்கீகரித்துள்ளது. மரபினத்துக்கும், பண்பாட்டு இனத்துக்கும், தேசிய இனத்துக்கும் வேறுபாடு அறியா நிலையில் தமிழர்கள் கிடக்கையில், தமிழினம் தனது தேசிய இன அடையாளத்தை அறிந்து தன்னுரிமைக் கோரிக்கையோ அல்லது தமிழ்த் தேச விடுதலைக் கோரிக்கையோ முன்வைத்துப் போராடப்போவது எப்போது?
‘தமிழினம்’ என்று தம்மை அமைத்துக் கொண்டாலும், அதன் பொருள் பற்றிய புரிதல் இல்லை. சிலர் தம் சாதிகளை ‘இனம்’ என்று அழைக்கிறார்கள்.சிலர் தாம் பெரு வாரியான மக்களைக் கொண்ட சாதிகளைச் சேர்ந்தவராக இருந்தால் ‘துணை தேசியம்’ என்று அழைத்துக் கொள்வதில் பெருமை பாராட்டுகிறார்கள்.
சமூகம், மக்கள், தேசிய இனம் ஆகியவை வெவ்வேறா? இவை மூன்றிற்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் மூன்றும் அச்சாக ஒன்றே அல்ல.
சமூகம் என்பது ஒர் இனக் குழுவின் விரிவாக்கமே. குறிப்பான நில எல்லைகளுக்குள் வாழ்ந்து, மொழி, பண்பு மற்றும் குணநலன்களைப் பொதுவாகப் பெற்றிருக்கும் ஒரு மக்கள் குழு சமூகம் ஆகும். (Webster’s Pocket dictionary)
அரசியல் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டம் அல்ல. ஒரே மொழி, ஒரே பண்பாடு ஆகியவற்றைக் கொண்டு, ஒரு தேசத்தில் அல்லது ஒர் அரசின் கீழ் உள்ள மனிதர்கள் மக்கள் ஆவர்.The People என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது அது ஒரு தேசத்திற்குரிய மக்களைக் குறிக்கிறது. ஐ.நா.உரிமை அட்டவணையில் தேசிய இனம் The People என்றே குறிக்கப்படுகிறது. நடைமுறையில் சாதாரணப் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டத்தைக் குறிக்கிறது.
உலகம் ஒன்று, உலக மக்களின் ஒருமைப்பாடு உண்டாக வேண்டும் என்ற உயர்ந்த மனித நேயக் கருத்துகள் வளர்ந்து வரும் காலத்தில் தேசிய இனம் பேசி மனித குலத்தைப் பிரிக்கலாமா? என்றெல்லாம் சிலர் கேட்கக்கூடும். உலகம் ஒன்று. மனித குலம் ஒன்று என்ற மனித நேயப் பார்வை மிகச் சரியானது தான். ஆனால் இன்று உலகமும், உலக மனித குலமும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை என்ற நடைமுறை உண்மையைப் பார்க்க வேண்டும். ஏன் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை? இதற்கான புவியியல், சமூகவியல், வரலாற்றியல் காரணங்கள் மனித மனநிலைக்குப் புறத்தே இருக்கின்றன.
புவிக்கோளம் வேறுபட்ட புவி அமைப்பு உள்ளிட்ட இயற்கை நிலைகளைக் கொண்டு ஐந்து கண்டங்களாகப் பிரிந்துள்ளது. இதில் வாழும் மக்களுக்கு ஒரே மொழி இல்லை ஒரே பண்பாடு இல்லை. உணவு வகை வேறுபடுகிறது. உடை வேறுபடுகிறது. செடிகொடிகளும் விலங்குகளும் கூட வேறுபடுகின்றன. வெவ்வேறு நாடுகளாக இருக்கிறது. கடவுச்சீட்டு அனுமதி இல்லாமல் ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்குள் நுழைய முடியாது. இந்த நாடுகளில் வெவ்வேறு கொள்கை உடைய அரசுகள் இருக்கின்றன. வலிமையுள்ள நாடுகள் வலிமைக் குறைவான நாடுகளையும், ஏமாந்த மக்களையும் ஆக்கிரமித்துச் சூறையாடுகின்றன. எடுத்துக்காட்டாக, சர்வதேச பயங்கரவாத அரசு அமெரிக்காவில் இருக்கிறது. அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்ட அரசை ஆதரிக்கின்றனர். அதற்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
உலக நிலையில் மனித சமத்துவத்திற்கான மாற்றம் வர இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. நாம் விரும்புவதால் மட்டுமோ, நமது கற்பனையினால் மட்டுமோ மனிதகுலச் சமத்துவத்தை உடனே படைத்துவிட முடியாது.
(தொடரும்)
ஃபக்ருதீன் அலி அஹமது – எழுத்தாளர்