‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘லால் சலாம்’ கோஷங்களும் விண்ணைப் பிளக்க திகார் சிறையிலிருந்து வெளியே வந்தனர் மாணவர் செயற்பாட்டாளர்களான தேவஞ்சனா கலிதா, நடாஷா நார்வல் மற்றும் ஆசிக் இக்பால் தன்ஹா. இவர்கள் மூவரும் ஓராண்டுக்கு முன்பு சட்டவிரோத உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். வடகிழக்கு டெல்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைதான இவர்களைச் சமீபத்தில் விடுவித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
குடும்பம், நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களால் வரவேற்கப்பட்ட இவர்கள் ‘உபாவை நீக்குக, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க!’ என்று முழங்கினர். ‘எனது தந்தை என்னைக் காண விரும்பும்போது நான் பெயில் கிடைக்க விரும்பினேன். ஆனால், அவரது இறுதி நிமிடங்களில் அவருடன் என்னால் இருக்க முடியவில்லை’ என்று வருந்தினார் நடாஷா. அவரது தந்தை மஹாவிர் நார்வல் கடந்த மாதம் கொரோனோ தொற்றால் உயிரிழந்தார். இறுதி சடங்கிற்கு மட்டும் நடாஷாவிற்கு பெயில் வழங்கப்பட்டது. ஜாமியா மில்லியா மாணவர் ஆசிக் தன்ஹாவிற்கும் அவரது தேர்வுக்காகக் கண்காணிப்பு பெயில் வழங்கப்பட்டிருந்தது.
‘நான் இந்த வாயிலுக்கு வெளியேயான வானத்தை விசித்திரமாகப் பார்க்கிறேன். ஆனால், இதுவே இறுதி முறையாக இருக்கும் என்று என்னால் கூற முடியாது. பொய்க் குற்றச்சாட்டில் செயற்பாட்டாளர்கள் சிறையிலடைக்கப்படுவது மீண்டும் நிகழும், ஆனாலும் எங்கள் போராட்டம் தொடரும்’ என்றார் கலிதா. ‘என்னைப் பயங்கரவாதி, உளவாளி, ஜிஹாதி என்றெல்லாம் கூறினர். அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் நான் அவர்களில் ஒருவனல்ல. இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் குடிமக்கள் பக்கம் உள்ளது என்பதை டெல்லி நீதிமன்றம் நிரூபித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேட்டு ஆவணத்திற்கு எதிராகவும் எனது போராட்டம் தொடரும்’ என்றார் ஆசிக் தன்ஹா.
கடந்தாண்டு பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்திற்கு வினையூக்கியாக இருந்தார்கள் என்று கூறி இந்த மூன்று மாணவர்களும் சென்றாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டனர். தற்போது மூன்று மாணவர்களையும் உடனடியாக விடுவிக்கக் கோரியும் டெல்லி காவல்துறை விடுக்கவில்லை. மாணவர் தரப்பினர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வை நாடினர். உடனடியாக விடுவியுங்கள் என்று நீதிமன்றம் கண்டித்தும், வலுக்கட்டாயமாக 48 மணிநேரத்திற்கு பிறகே விடுதலை செய்தது காவல்துறை. இந்நாட்டில் நீதிமன்றத்தின் பேச்சுக்கே மதிப்பில்லை எனில் நம் ஜனநாயகம் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலில் இருக்கிறது என்று உணர வேண்டிய நேரம்.
நன்றி – த பிரிண்ட்
தமிழில் – அஜ்மீ