தமிழ்த் தேசியம் என்பதை உணர்ச்சியாகவும், கற்பனையாகவும், சாகசமாகவும் பலரும் அவர்களுடைய புரிதலுக்கேற்ப விளங்கிக் கொள்கிறார்கள் அல்லது விளக்கம் அளிக்கிறார்கள். சிலர் அதன் அடிப்படையில் செயல்படவும் செய்கிறார்கள்.
தமிழ்த்தேசியம் பேசிக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்பினரிடம் அது குறித்த ஒத்த கருத்து இல்லை. இதனால் தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்படும் குழப்பங்களும் பின்னடைவுகளும் ஏராளம். இந்நிலையில் தமிழ்த்தேசியம் என்பதன் சாரம் என்ன, அதன் நோக்கம் என்ன என்பதைப் பற்றி தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமாக உள்ளது.
தேசியவாதம் என்றால் என்ன?
இந்தக் கேள்வியை நாம் கேட்டே ஆக வேண்டும். தேசியவாதம் என்பதன் பொருள்தான் என்ன? இதற்கான விடை, பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அத்தனை எளிதானதல்ல. ‘தேசியம்’, ‘தேசியவாதம்’, ‘தேசம்-நாடு’ போன்ற பதங்கள், 17-ம் நூற்றாண்டில் வெஸ்ட்பேலியா அமைதி ஒப்பந்தத்துக்குப் பின் ஐரோப்பாவில் புழக்கத்துக்கு வந்தன.
ஐரோப்பிய தேசியவாதம்
ஐரோப்பாவின் தேசியவாதம் மூன்று முக்கிய இயல்புகளைக் கொண்டிருந்தது.
முதலாவதாக, ஐரோப்பிய தேசியவாதம், ஒட்டுமொத்த மக்களை உள்ளடக்கியதாக ஒருபோதும் இருந்ததில்லை; ‘தேச’த்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்கூட. அது எப்போதுமே ‘உள்ளுக்குள் எதிரி’ (உதாரணத்துக்கு யூதர்கள்) என்ற கருத்தாக்கத்தை எழுப்பிக்கொண்டேயிருந்தது.
இரண்டாவதாக, அது ஏகாதிபத்தியத் தன்மை கொண்டதாகவே இருந்தது.
மூன்றாவதாக, தேசம் என்பது தன்னளவில் உச்ச வடிவத்தை அடைந்தது. தேசத்தை வலுவாக்குவது பரவலான கருத்தாக இருந்தது.
ஏனைய நாடுகளை ஒப்பிட, மிகப் பிற்காலத்தில், 19-ம் நூற்றாண்டில் உருவான தேசமான ஜெர்மனி தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியது. தேசியவாதம் என்ற கருத்தாக்கத்தில் மற்ற நாடுகளைவிட உறுதியானதாக இருந்ததுடன் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் அதைப் பயன்படுத்துக்கொண்டது. இவை அனைத்தும் பாசிஸக் கோட்பாட்டின் கீழ் வளர்ந்து உச்சமடைந்தன. இரண்டு உலகப் போர்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்ததன் மூலம் தேசியவாதத்தைவிட, முற்போக்கான, ஜனநாயகமான மரபு சமீப ஆண்டுகளாக ஐரோப்பாவில் வளர்ந்துவந்திருக்கிறது.
இந்திய தேசியவாதம்
காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டக் காலங்களில் இந்தியா போன்ற நாடுகளில் உருவான தேசியவாதக் கொள்கை முற்றிலும் வேறு மாதிரியானது. மிகவும் சக்தி வாய்ந்த எதிரியாக இருந்த காலனி ஆதிக்க நாடுகளை எதிரான போராட்டம் என்பதால், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அப்போராட்டம் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இயன்றவரை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டியிருந்தது. அதேபோல், இதே மாதிரியான போராட்டங்களுடன் ஒன்றிணைந்தும் செயல்பட வேண்டியிருந்தது. அதன் காரணமாக, மற்ற மூன்றாவது உலக நாடுகளுடன் நட்பார்ந்த உறவைக் கொள்ள நேர்ந்தது. இறுதியாக, தேசத்தின் பெருமையைவிடவும் மக்களின் நலனையே முக்கிய நோக்கமாகக் கொண்டதாக இந்திய விடுதலைப் போராட்டம் அமைந்தது. “ஒவ்வொரு இந்தியனின் கண்ணீரையும் துடைத்தகற்றுவதுதான் சுதந்திரத்தின் நோக்கம்” என்று காந்தி குறிப்பிட்டது அதைத் தெளிவாக வெளிப்படுத்தியது.
இந்தியாவின் இந்த தேசியவாதம் ஒப்புமை இல்லாததாகவும், இதற்கு முன்னர் உலகம் பார்த்திராத நிகழ்வாகவும் இருந்தது. மிகைப்படுத்தப்பட்ட ஐரோப்பிய தேசியவாதத்தை ஒப்பிட, அது ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும் சமத்துவமானதுமாகவும் இருந்தது. முன்பு குறிப்பிட்ட மூன்று விஷயங்களிலும், ஐரோப்பிய தேசியவாதத்திலிருந்து வேறுபட்டு நின்றது, இந்திய தேசியவாதம்.
கிரேக்கப் புராணங்களில் வருவதுபோல் ஜியூஸின் தலையிலிருந்து வெளிவந்த அதீனா போல் முழுமையாக உருவான அற்புத விளைவாக இந்திய தேசியவாதத்தைச் சொல்ல வரவில்லை. அதிலும் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் போக்கும் கலந்தே இருந்தது. ஆனால், அதை முன்னிறுத்தியபோதெல்லாம் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. தனது நோக்கத்தில் வெற்றியடைய வேண்டும் என்றால் அனைவரையும் உள்ளடக்கியதான ஜனநாயகபூர்வமான தேசியவாதமாகவே அது இருக்க வேண்டியிருந்தது.
தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கான நிலுவைத் தொகையை இந்தியா கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் காந்தி தனது இறுதி நாட்களில் வலியுறுத்தியபோது அவர் தேச விரோதியாகக் கருதப்படவில்லை. காலனிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டப் பின்னணியிலான ஜனநாயகபூர்வமான தேசியவாதத்தில் ஒரு இணக்கமான நிலைப்பாட்டைத்தான் அவர் எடுத்தார். சகிப்புத்தன்மை, ஒற்றுமை, வேறுபாடுகள் ஏற்படும்போது பேச்சுவார்த்தை, அமைதியை ஏற்படுத்தவோ, மேலாதிக்கத்தை நிலைநாட்டவோ வன்முறையைப் பிரயோகிக்காமை ஆகியவைதான் இந்த தேசியவாதத்தின் மையம்.
தேசியவாதத்தின் மையம்
இந்த தேசியவாதத்தின் அடிப்படையில், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டால், அதிலும் பயங்கரவாதச் சம்பவங்களோ வன்முறையோ இல்லாதபோது, வன்முறையைத் தூண்டும் சம்பவங்கள் நிகழாதபோது, அது சுயபரிசோதனைக்கான, ஆய்வுக்கான தருணமாக ஆக வேண்டும். மாறாக, காலனியாதிக்க யுகத்தைச் சேர்ந்த தேச விரோதச் சட்டங்களைப் பயன்படுத்தி அடக்குமுறையில் ஈடுபடக்கூடாது.
ஐரோப்பாவின் மிகைப்படுத்தப்பட்ட தேசியவாதத்துக்கும், நமது சூழலில் உருவான தேசியவாதத்துக்கும் இடையிலான மிகப் பெரிய வித்தியாசம் இதுதான்: ஐரோப்பாவின் தேசியவாதத்தின்படி, உள்ளுக்குள் எதிரி எனும் கருத்தாக்கத்தின் கீழ், குறைவான எண்ணிக்கையில் இருந்தவர்களே எதிரிகளாக்கப்பட்டனர். ஜெர்மனியின் மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 0.7%தான் என்று நாஜிக்களே கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மிகைப்படுத்தப் பட்ட தேசியவாதம் எதிர்கொள்ளவிருக்கும் ‘உள்ளுக்குள் இருக்கும் எதிரிகள்’ எண்ணிக்கை மிகப் பெரியது. இந்த தேசியவாதம் கொண்டுவரும் சமூகப் பிளவின் அபாயமும் மிகப் பெரியது. தோல்வியடைந்த நாடாக இந்தியா மாறும் சூழலைத் தவிர்க்க வேண்டும் என்றால், இதுபோன்ற ‘தேசியவாத’த்தைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்!
தேசிய இன போராட்டம்
தமிழர்கள் ஒரு தேசிய இனமா என்றால் ஆம் என்று மிக எளிமையாக சொல்லி விடலாம். தனித்த நிலப்பரப்பு, மொழி, பொருளாதார வாழ்வு, ஒரே மன இயல்பு என அனைத்துமே கைவரப்பெற்ற ஒரு இனம் தமிழினம். அதே போல இந்தத் தமிழ்த் தேசிய இனம் இந்திய ஒன்றியத்தால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றதா என்றால் நிச்சயம் மறுப்பேதும் இன்றி ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தனித் தமிழ்நாடு கேட்கும் அளவிற்கு சூழ்நிலை மிக மோசமாக இருக்கின்றதா என்றால் ஆம் இன்னும் அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் இன்று தனித் தமிழ்நாடு கேட்கும் அளவிற்கு தெம்பும் திராணியும் உள்ள எந்த அமைப்பும் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் உண்மை.
இருக்கும் பெரும்பாலான தமிழ்த் தேசிய அமைப்புகள் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளாகவும், பெயரளவிற்கு இந்திய ஒன்றியத்தையும், அதன் அடக்குமுறைகளை கண்டிப்பவர்களாகவுமே உள்ளார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராகவும், இந்திய அரசு தமிழ்நாட்டின் மீது திணிக்கும் நாசகார திட்டங்களுக்கும் எதிராகவும் இங்கிருக்கும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். ஆனால் இது எதுவொன்றும் ஒரு தேசிய இனம் தன்னை அடக்கி ஆளும் ஒரு ஆட்சி முறையில் இருந்து விடுவித்துக் கொள்வதற்கான தேசிய இன போராட்டம் என்ற எல்லையை இதுவரை தொட்டதில்லை.
ஏன் அப்படியான ஒரு மனநிலைக்கு தமிழ்ச் சமூகம் வரவில்லை என்பதையும், அவர்களை அப்படி வரவிடாமல் தடுக்கும் காரணிகள் எவை என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு நாசகாரத் திட்டங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றுபட்டு போராடி, அதை வரவிடாமல் தடுத்திருக்கின்றார்கள் என்பது உண்மைதான். ஆனால் போராட்டக் களத்தில் சாதியைக் கடந்து ஒன்றுபடும் தமிழன் வீட்டிற்கு வந்த பின்னாலும் அவ்வாறுதான் இருக்கின்றானா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்று சொல்லிவிட முடியும்.
போராட்டக் களத்தில் தோழனாக தெரிபவன், வீட்டிற்கு வந்ததும் தேவனாகவும், வன்னியனாகவும், செட்டியாராகவும், முதலியாராகவும், கவுண்டனாகவும் மாறுகின்றான். போராட்டக் களத்தில் தமிழனாக இருந்தவன் அதே போராட்டக் களத்தில் தமிழனாக இருந்த இன்னொருவனை வெட்டிக் கொல்கின்றான், சாதிய ஆணவப் படுகொலை செய்கின்றான், அவனுக்கு எதிராக தீவிரமான தீண்டாமையைக் கடைபிடிக்கின்றான். இது தமிழ்நாட்டில் மட்டும் உள்ள பிரச்சினை இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான பிரச்சினையாகவே உள்ளது. சாதிய மனநிலையை கடக்காத வரைக்கும் நிச்சயம் தமிழர் என்ற பொது அடையாளத்தோடு வர்க்க உணர்வு பெறுவது சாத்தியமற்றது.
சரி அப்படி என்றால் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை மட்டும் நடத்தினால் தமிழ்த் தேசிய இனம் விடுதலை பெற்றுவிடுமா என்றால் நிச்சயம் இல்லை. தேசிய (இன)ப் பிரச்சினை என்பது, பட்டாளி வர்க்கப் புரட்சி என்ற பொதுப்பிரச்சினையின் ஒரு பகுதியாகவும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பொதுப் பிரச்சினையின் ஒரு பகுதியாகவும் அமைகின்றது என்கின்றார் லெனின். இந்த அடிப்படையில் நின்று நோக்கும்போது உண்மையான தமிழ்த் தேசிய இயக்கம் என்பது சாதியப் பிரச்சினையை பட்டாளி வர்க்கப் புரட்சியுடன் எப்போது இணைக்கின்றதோ அப்போதுதான் அது அதன் உண்மையான பொருளில் தமிழ்த் தேசிய இயக்கமாக இருக்க முடியும்.
லெனின், “ஏகாதிபத்தியத்தைப் பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடிய, தூக்கியெறிவதாக இருக்கக் கூடிய தேசிய விடுதலை இயக்கங்களை தவறாமல் ஆதரிக்க வேண்டும்” என்கின்றார். “ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைப் போராட்டத்தை, பாட்டாளி வர்க்க கட்சிகள் தனது நேரடி நடவடிக்கைகள் மூலம் ஆதரிக்காமல் போனால் தேசங்களின் சமத்துவம் பற்றிய அவற்றின் பிரகடனங்கள் பொருளற்றதாகவும் நாணயமற்றதாகவுமே இருக்கும்” என்கின்றார்.
இந்திய தேசியத்தில் இருந்து விடுதலை கோரும் தமிழ்த்தேசியம் என்பது தற்போதைய சூழ்நிலையில் அதன் உண்மையான பொருளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சாதிக்கு கருத்தியல் அடித்தளமாய் இருக்கும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்டிருக்கின்றதா என்று பார்த்தால் நிச்சம் இல்லை என்று சொல்லிவிட முடியும். எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பையும், பார்ப்பன எதிர்ப்பையும் தங்களது அரசியல் செயல்தந்திரங்களாக கொண்டிருக்கும் எந்த ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியும் இது போன்ற தமிழ்த் தேசிய இயக்கங்களை ஏற்று அங்கீகரிக்க முடியாது. அடிப்படையில் இனவாத, சாதியவாத அரசியலில் மூழ்கிக் கிடக்கும் இந்த அமைப்புகள் ஒருவகையில் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கே வேட்டு வைப்பவையாகும்.
தமிழகத்தில் சாதிய உணர்வு கெட்டிப்படுவதற்கு இங்கிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் பெரும்பங்காற்றி இருக்கின்றன. இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் பல சாதிவெறி பிடித்த நபர்கள் எல்லாம் தங்களை தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் நிலைதான் இயல்பாய் இருக்கின்றது.
எனவே இங்கிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகள் எதையும் தேசிய விடுதலை இயக்கங்கள் என்று நிச்சயம் அங்கீகரிக்க முடியாது. பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையைக்கூட வலியுறுத்தி எந்த ஒரு போராட்டத்தையும், அதற்கான மக்கள் திரளையும் கட்டியமைக்கத் திராணியில்லாத இந்த அமைப்புகள்தான் தமிழ்த் தேசியம் என்ற கற்பனைக் கோட்டையை கட்டி வைத்திருக்கின்றன. ஏன் அவை அவ்வாறு இருக்கின்றன என்பதை நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோம். அவை சாதியத்தை ஏற்றுக் கொண்டவையாகவும், ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதாகவும் உள்ளன. எனவே இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டே தமிழ்த் தேசியம் பேசும் புரட்டர்களை சிறிதளவாவது அறிவும் நேர்மையும் இருக்கும் நபர்கள் புரிந்துகொண்டு அது போன்ற ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளிடம் இருந்து விடுபட வேண்டும்.
கம்யூனிசத்தில் உள்ள கருத்துக்களை இந்திய சமூகத்திற்கு ஏற்றார்போல பயன்படுத்தும், பயன்படுத்திக் கொண்டிருக்கும் அமைப்புகளும் உள்ளன. அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு, பார்ப்பன பாசிச எதிர்ப்பை தன்னுடைய செயல்தந்திரங்களாகக் கொண்ட அமைப்புகள். எனவே சமூக மாற்றத்தில் உண்மையான அக்கறை உள்ள நேர்மையானவர்கள் நிச்சயம் இது போன்ற செயல்தந்திரத்தைக் கொண்டிருக்கும் அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படுவார்கள். சாதியத்தையும் முதலாளித்துவ அடிவருடித்தனத்தையும் விட்டொழிக்க மனதற்ற பிழைப்புவாதிகள்தான் வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் பிற்போக்கு தமிழ்த் தேசிய அமைப்புகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.
ஃபக்ருதீன் அலி அஹமது – எழுத்தாளர்