ஒருங்கிணைந்த இந்தியாவில் அறிவுச் சமூகம் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் ‘இந்தியாவுக்கு என ஒரு தனித்துவமான வரலாறு இல்லாமை’ என்பதாகத்தான் இருந்தது. அதனால் இந்திய விடுதலைக்கு முன்பு தேசிய பிரதேச அரசுகளின் தலைமையில் வரலாற்றை எழுதுவதற்கான முன்னெடுப்புகள் ஏராளமாக நடந்தன.
‘இறந்த காலம் குறித்த எந்தவிதமான விமர்சன உணர்வும் இல்லாத இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற எந்தத் தகுதியும் இல்லை’ என்று இந்தியாவின் நண்பனாகக் கருதப்பட்ட எட்வர்ட் தாம்சன் கூறியுள்ளார். அந்தச் சூழலில் வரலாற்று அறிவியலில் சுயசார்பும் தகுதியும் பெற வேண்டும் என்ற முடிவுக்குத் தேசியவாதிகள் வந்தனர்.
‘ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் கற்கும் இந்தியர்கள், தங்களது முன்னோர்களைக் குறித்துக் கற்றுக்கொள்ள விருப்பம் காட்டாதது ஏன்?’ என லாலா லஜபதிராய் சுயவிமர்சனம் செய்தார். ‘வங்காளம் தன் வரலாற்றைக் கண்டடைய வேண்டும்’ என பங்கிம் சந்திர சட்டர்ஜி கேட்டுக் கொண்டார். இதையடுத்து R.C.தத் (1848-1909), R.Cபண்டார்கர் (1837-1925) ஆகியோர் பண்டைய இந்தியா குறித்து விரிவான ஆய்வுகளில் இறங்கினர். இங்ஙனம் தேசியவாதத்தின் அரசியல் தேவைகளுக்கு மிகவும் அனுகூலமான அறிவுத் தோற்றவியலாக (Epistemology) வரலாறு உருமாறியது. வரலாறு என்பது அரசுகளின் தோற்றமும் மறைவும் ஆள்பவர்களின் பட்டியலை வரிசையாக நிரல் படுத்தும் முறையியலாகவே இருந்தது.
ஆனால் இதனைச் செய்தவர்கள் பெரும்பாலும் வடமொழிப் பண்டிதர்களாகவும் பிராமணர்களாகவும் இருந்தனர். அவர்கள் புராணங்களையும் இலக்கியங்களையும் வரலாற்று ஆதாரமாகக் கொண்டனர். ஆதிக்கப்பண்பாட்டின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர். தங்களது பண்பாட்டுச் சிறப்பின் அடிப்படைகளை விமர்சன ரீதியாக அணுகுவதற்கு வடமொழி, பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளைச் சார்ந்திருந்தனர். எனவே நாட்டின் தொடக்கக்கால வரலாற்று ஆசிரியர்களின் அடிப்படை நிலைப்பாடுகளுக்குக் காலனியப் பண்டிதர்கள் உருவாக்கியவைதான் முன்மாதிரியாக இருந்தது.
1905இல் பாலகங்காதர திலகர் எழுதிய இந்திய வரலாறு தொடர்பான Orion. The Arctic Home of Aryans எனும் நூல் வெளிவந்தது. அரவிந்த கோசும் லாலா லஜபதிராயும் இந்திய வரலாறு குறித்த தேடலில் ஈடுபட்டனர். காலனிய வரலாற்றாசிரியர்களும் கீழைத்தேய ஆய்வாளர்களும் எழுதிய வரலாற்று எழுதுமுறை (Historiography)யின் தாக்கம் இந்திய தேசிய வரலாற்று ஆசிரியர்களிடம் பெரிதும் காணப்பட்டது.
இதன் விளைவாக மத அடிப்படையிலான காலகட்டப் பிரிவு, பண்டைய காலம் குறித்த போலிப் பெருமிதம், மத்திய காலகட்டத்தை இருண்ட காலமாகச் சித்திரித்தல் ஆகிய நிலைப்பாடுகளை விமர்சன அணுகுமுறையின்றி கண்மூடித்தனமாகத் தேசிய வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக்கொண்டனர். இதுவே இந்தியாவில் ஃபாசிஸத்தின் விதையாகவும் ஊற்றுக் கண்ணாகவும் நுழைவாயிலாகவும் வரலாறு அமைந்ததன் பின்னணி.
முப்பதுகளில் புதிய பண்டிதர்களின் வருகைக்கு வரலாற்றுத்துறை சாட்சியானது.H.C.ராய் சௌத்ரி, K.P.ஜெய்ஸ்வால், R.Cமஜும்தார், R.K.முகர்ஜி ஆகியோர் தேசிய இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டனர்.
பண்டைய இந்தியாவின் பெருமிதத்தைத் தூக்கிப் பிடித்து நிகழ்காலத்தின் குறைகளுக்குப் பதில் சொல்வதற்கான கூட்டு முயற்சிகளைச் செய்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா நாகரிகம் நோக்கி நகர்ந்த போது பிரிட்டனில் நாகரிகம் துளிர்க்கவில்லை என்று பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பண்டைய இந்தியாவின் பெருமிதத்தைப் பயன்படுத்தினர்.
பண்டைய இந்தியா குறித்து கீழைத்தேயவாதிகள் தந்த புகழுரைகளைத் தூக்கிப் பிடித்து ஜெயிம்ஸ் மில் போன்றோரின் ஆட்சேபங்களுக்குத் தேசிய வரலாற்றாசிரியர்கள் பதிலளித்தனர். இப்படி எதிரியை அவர்களின் ஆயுதத்தாலேயே எதிர்கொள்வது என்ற நிலைப்பாடு வந்தது. இப்படி தேசியவாத வரலாற்றெழுதியல் மதத்தின், இறந்தகாலப் பெருமிதத்தின் கைவசம் சென்றது. தேசப்பற்றில் ஊறிய வரலாற்று எழுது முயற்சிகள் உண்மைகளைக் கண்டுகொள்ளாமல் உணர்ச்சிகளுக்கு இடமளித்தன.
மேற்குலகப் பாரம்பரியத்தை விடப் பழமையானது எங்களுடைய பாரம்பரியம் என்பதற்காகத் திலகர் ரிக்வேத காலகட்டத்தை கி.மு 4000க்கு முன்னால் இழுத்துச் சென்றார். இந்தக் கூற்றுக்கு இணக்கமான மாக்ஸ் முல்லர் கூட கி.மு. 2000க்கு அதனை முன்மொழிந்தார். ஆரிய வம்சத்தின் உற்பத்தியிடம் இந்தியா தான்; இங்கிருந்தே அது உலகெங்கிலும் பரவியதாகத் திலகர் கதை கட்டினார்.
தீவிர தேசப்பற்றினை, வெறியாக மாற்றி வரலாறு எழுதுவதில் K.P.ஜெய்ஸ்வால் கைதேர்ந்தவராக இருந்தார். கிரேக்கர்களுக்கு முன்னாலேயே இந்தியா சனநாயக முறையைக் கைக்கொண்டது எனவும் பண்டைய இந்தியாவில் கிராம சபைகள் சனநாயக அடிப்படையைக் கொண்டிருந்தது. ராஜசபைகள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைக்கு நிகராக இருந்தது என்றெல்லாம் அவர் வரலாற்றைத் திரித்தார். இது Hindu Polity எனும் பெயரில் தொகுக்கப்பட்டது.
இவை எந்த அளவுக்கு மிகைப்படுத்தப்பட்டது என்றால் பௌத்த நூலான ‘மஞ்சு ஸ்ரீ மூலகல்பத்தின்’ மொழிபெயர்ப்புக்கு An Imperial History of India (1934) என்று பெயரிடவும் செய்தார்.
‘இந்தியப் பாரம்பரியத்தின் சிறப்பானவை அனைத்தும் கிரேக்க, பாரசீக பண்பாடுகளிலிருந்து கடன் பெற்றவை’ எனும் வின்சென்ட் ஸ்மித் போன்ற வரலாற்றாசிரியர்களின் கூற்றை மறுப்பதற்காக ஜெய்ஸ்வாலின் குதர்க்கங்கள் வரம்பு மீறியது. இத்தகைய உரிமை கோரல்கள் ராஜ் நாராயண் போஸ், பூதேவ் முகர்ஜி, சந்திரநாத் பானர்ஜி, பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆகியோரிடம் வெறித்தனமாக வெளிப்பட்டன. இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை வெறும் வேலைப் பிரிவினையே என்ற கருத்தால் நியாயப்படுத்தினர். இவர்கள் சமூக வாழ்க்கையில் இருந்த தொழில் பிரிவினை ஐரோப்பாவிலும் இருந்ததாகக் கதை கட்டினர்.
பண்டைய இந்தியாவின் நாகரிக வாழ்க்கை குறித்து விளக்கிய கீ.இ.தத் (இடிதிடிடூடித்ச்tடிணிண டிண அணஞிடிஞுணt ஐணஞீடிச்) இந்தியப் பாரம்பரியம் குறித்த மேலை நாட்டு ஐயங்களுக்குத் தீர்வு காணவே முயலுகிறேன் என்றார். தேசியவாத வரலாற்றின் மிகப் பெரிய பலவீனம் ஒ.கு.மில்லின் காலகட்டப் பிரிவினையைக் கேள்வி கேட்கவில்லை என்பதுதான். பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குக் காரணமே முஸ்லிம்களின் ஆட்சி ஏற்படுத்திய பலவீனங்கள் தான் என வாதிடத் தொடங்கினர். இப்படியாக பொதுப் புத்தியில் சுல்தானேட் அரசுகளை இரட்டைக் குற்றவாளிகளாக உருவப்படுத்தினர்.
இவை இந்திய வரலாற்றின் பண்டைய காலகட்டத்தைப் பொற்காலமாக உருவாக்கவும், அதற்கு இந்து மத முலாம் பூசி, செயற்கையான ஆன்மிக முகத்தையும் அதற்கு அளித்தது. கிறித்து ஆண்டு ஆயிரத்துக்குப் பிறகு இந்து பொற்காலம் தகர்ந்ததாகவும் அதற்குக் காரணம் இஸ்லாமியர்கள் எனவும் நிறுவ முயன்றனர். இந்த வகையான வரலாற்றுத் திரிபு தேசியக் கட்டமைப்பில் வகுப்புவாத சிந்தனைக்கு அடித்தளமிட்டது. இங்ஙனம் காலனிய வரலாற்றாசிரியர்களின் கருத்துகளுக்குத் தேசிய வரலாற்றாசிரியர்களும் ஒத்து ஊதினர். தேசியவாத வரலாறு அகிம்சையை ஆன்மிகத் தத்துவம் எனும் நிலையிலும் இந்தியப் பாரம்பரியத்தின் கொடை எனவும் புகழ்ந்தது.
காலனிய வரலாறு உருவாக்கிய ஆரியத் திராவிட இருமை முக்கியத்துவம் வாய்ந்தது. இது தேசிய நீரோட்டம் குறித்து சுதந்திரத்திற்குப் பிறகான கட்டத்தில் உருவாக்கப்பட்ட கற்பிதம், பன்முக பிரதேச பண்பாடுகளைத் தவிர்ப்பதற்கான தந்திரமாகத் திகழ்ந்தது.
தேசப்பற்று குறித்த இந்த வரலாற்று உணர்வு காலனிய வரலாற்றெழுதியல் வளர்ந்து வந்த இந்து – முஸ்லிம் என்ற இருமையின் மாறுவேடமாக வளர்ச்சி அடைந்தது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியாவில் புரையோடிய வகுப்புவாத உணர்வை பின்வாசல் தேசியம் (Backdoor Nationalism) என்றார் பிபின் சந்திரா. காலனியத்துடன் போராடாமல் தேசியவாதிகளாகத் தங்களைக் காட்டுவதற்கு வகுப்புவாதம் துணையானது. தங்களுக்கு நேரடியாக உள்ள எதிரிகளைத் தவிர்த்து இறந்தகால வெளிநாட்டு எதிரிகள் குறித்துப் பேசும் வகுப்புவாதம் உருவானது. இப்படி தேசியம் = இந்து தேசியம் என்ற சமவாக்கியம் 19ஆம் நூற்றாண்டின் முதல் கட்டத்தில் உருவானது.
இந்து மறுமலர்ச்சியாளர்களாகவும் அடிப்படை வாதிகளாகவும் கருதப்படுபவர்கள், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில் வங்காள சமூகத்தின் முற்போக்கு சீர்திருத்தவாதிகளாக வங்காள சமூக வாழ்வில் இடம் பிடித்தார்கள். வங்காளத்தின் மைய நீரோட்ட வரலாற்றாசிரியர்களில் புகழ்பெற்ற போலாநாத் சக்ரவர்த்தி முஸ்லிம் ஆட்சியையும் பிரிட்டிஷ் ஆட்சியையும் இருட்டும் வெளிச்சமும் என்று ஒப்புமை செய்தார்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் காலனிய எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்த போது மேற்குறிப்பிட்ட இந்து தேசிய உணர்வு அதன் பிரிட்டிஷ் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து விலகியது. 11ஆம் நூற்றாண்டு முதலான இஸ்லாமியர் ஆட்சியையும் அந்நிய ஆக்கிரமிப்பாகக் கட்டமைத்தால் தான் இந்து தேசிய உணர்வுக்குத் தீனி போட முடியும் என்ற நிலைக்கு வந்தனர். எனவே இச்செய்திகள் காலனிய வரலாறு எழுதியலில் கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது.
முஸ்லிம் கட்டம் என்று காலனிய வரலாற்று ஆசிரியர்கள் கூறியதை ‘மத்திய காலகட்டம்’ என்று மாற்றுவதற்குத் தேசியவாத வரலாற்றாசிரியர்கள் முன்வர மறுத்து நாட்டின் பண்டைய பாரம்பரியத்தைத் தகர்த்தவர்கள் என்றே ஏற்றுக்கொண்டனர். மத்திய கால கட்டத்தை இருண்ட காலமாகத் தவறாக உருவகிக்க முனையும் பொய்களையே தொடர்ந்தனர்.
இந்திய வரலாற்றில் பிரபலமான சோழ, விஜய நகரப் பேரரசு உட்பட்ட அரசுகள் நிலை நின்ற காலம் அது. வடபகுதியிலிருந்து காஞ்சிபுரம் வந்த சமுத்திர குப்தரை வாழ்த்தியவர்கள் அவ்வழியே வடக்கே கங்கைக்கரை வரை இராணுவப் படை எடுத்த ராஜேந்திர சோழன் பற்றி மௌனம் காக்கப்படுவதை இந்திய வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
அரசு நிர்வாகம் மட்டுமல்ல கலைப் பண்பாட்டுத் துறைகளிலும் மத்திய காலகட்டம் இருண்டது அல்ல. இந்தியாவின் சாஸ்திரீய சங்கீதம், கர்நாடக சங்கீதம் ஆகியவை இந்த காலகட்டத்தில் தான் உருவானவை. கதகளி, மோஹினியாட்டம் போன்ற நடனங்களும் தாஜ்மஹால், குதுப்மினார் போன்றவற்றின் கட்டடக் கலைகள் போன்றவை இவர்கள் கண்களில் ஏனோ தென்படவில்லை. மேலும் அக்காலத்தில்தான் பிரதேச மொழிகள் பேசும் மக்களின் அடையாள உணர்வுகள் உருவானது. பக்தி இயக்கத்தின் அலை ஒலிகள் இந்தியாவெங்கும் பரவியதும், தமிழ் பக்தி மரபும், எழுத்தச்சன், கபீர் துளசிதாஸ், குரு நானக், சைதன்யா ஆகியோர் வலம் வந்ததும் ஓவியக் கலை சிறந்து விளங்கியதும் அக்காலத்தில்தான்.
இத்தகைய பேரொளி வீசிய ஆறு நூற்றாண்டுகளைக் கண்களை மூடி இருட்டாக்கிவிட்டனர். அதே வேளையில் வேத காலகட்டம் எனும் இருட்டில் இல்லாத பூனையைத் தேடினர். இந்த ஆரம்பப்புள்ளியே இன்று இந்தியாவைப் பாரதம் என்று கூறுமிடத்தில் வந்து நிற்கிறது.
- முனைவர் மு.அப்துல் ரசாக்