செப்டம்பர் தாக்குதலைச் சீனா எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது?
கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தின் நெருக்கடி மோசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2001 செப்டம்பர் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் உய்குர்கள் மீது நேரடி ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டது. செப்டம்பருக்குப் பிறகு உலகளாவிய அளவில் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ அறிவித்தது அமெரிக்கா. இதன்பெயரில் மற்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதங்களைக் களைய முனைப்புக் காட்டப்பட்டது. இதனைப் பின்தொடர்ந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, உய்குர்களின் போராட்டம் உலகளாவிய தீவிரவாதத்தின் ஒரு பகுதியே அன்றி, உள்ளூர் பிரிவினைவாத செயல் அல்ல என்று அறிவித்தது.
அமெரிக்காவும் இந்த விளக்கத்தை அப்படியே ஏற்றுக்கொண்டது. அப்பொழுது, பெரிதும் அறிந்திராத ஆப்கனின் ஆயுதப் போராட்டக் குழுவான ‘கிழக்கு தர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தையும் (இடிஐஎம்)’ பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருந்தது. உய்குர் முஸ்லிம்களை குவாண்டனமோ வளைகுடா சிறையில் அடைத்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரைப் பயன்படுத்தி உய்குர் மக்கள் தொகையில் பெரிய அடக்குமுறையை நிகழ்த்தியது சீனா. 10 லட்சம் உய்குர் இனமக்கள் கொடிய தடுப்புச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை ரகசியமாகவே சீனா மூடிமறைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியது.
பல நூற்றாண்டுகளாக உய்குர் மக்கள் வாழ்ந்துவரும் பகுதி அல்திஷார், கிழக்கு தர்கிஸ்தான் அல்லது ஜிங்ஜியாங் போன்ற வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. 1759ம் ஆண்டு மிங் பேரரசின் சட்டத்திற்குக் கீழ் கொண்டுவரப்பட்ட ஜிங்ஜியாங் புதிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டில் பல்வேறு கிளர்ச்சிகள் இருந்தபோதும் ஜிங்ஜியாங் மாகாணம் சீனாவுடன் இணைக்கப்பட்டது. பிறகு,பி1955ம் ஆண்டு அதனைத் தன்னாட்சி பிரதேசமாக அறிவித்தார் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாவோ.
அடுத்த தசாப்தங்களில் பொருளாதார முன்னேற்றமும் முதலீடும் பெருக அப்பகுதியின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. இதனால் அதிக இடம் எடுத்துக்கொண்ட மற்ற குடியேறிகளால் உய்குர்கள் விலைகொடுக்க நேரிட்டது. அதிகரித்த குடியேறிகள் காரணமாக பூர்வகுடி உய்குர்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இது பதற்றத்தை உருவாக்கியது. இந்த சமூக இடையீடு ஜிங்ஜியாங்கில் தீரா நெருக்கடியை ஏற்படுத்தியது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் உய்குர்களின் இனவுரிமை கோரிக்கைகளாக அவர்களின் அடிப்படையான தன்னாட்சி, கலாச்சார பாதுகாப்பு, கல்வியுரிமை, தொழிலாளர் நலம் மற்றும் சுகாதார பாதுகாப்பு போன்றவையே இருந்தன. இவர்கள் கூறுவது போல் ‘ஜிஹாத்’ என்று முத்திரையிடும் மதவாத வன்மமில்லை.
ஹான் குடியேறிகளுக்கும் உய்குர்களுக்கும் இடையேயான ஒத்திசைவின்மை பிரிவினைக்கான இயக்கங்களைத் தீவிரப்படுத்தியது. தங்கள் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் காக்க உய்குர்கள் சட்டரீதியான உரிமை பெற்றிருந்தபோதும் அதைச் செயல்படுத்த அதிகாரம் தேவைப்பட்டது. உள்ளூர் போராட்டங்கள் அரசால் ஒடுக்கப்பட்டது. 1989ம் ஆண்டு தினான்மென் சதுக்கத்தில் அரச கலவரம் நிகழ்த்தப்பட்டது. 90களில் உய்குரிலும் தேசங்கடந்தும் உய்குர் விடுதலை இயக்கங்கள் நிறுவப்பட்டன. அவற்றில் குறிப்பிட வேண்டியது கிழக்கு தர்கிஸ்தான் தகவல் மையம் மற்றும் உலக உய்குர் இளைஞர் காங்கிரஸ்.
90களின் இறுதியில் ஜிங்ஜியான் தலைநகர் உரும்கியின் பொதுப்போக்குவரத்து மற்றும் காவல் நிலையங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் ‘கிழக்கு தர்கிஸ்தான் பிரிவினைவாதிகள்’ என்ற பதத்திற்கு வலுசேர்த்தது. பிரிவினைவாதத்தைத் தடுக்க 1997ல் ‘கடுமையான தடுப்பு’ (Strike Hard) நடவடிக்கையைத் தொடங்கியது சீன அரசு. இதன்மூலம் சந்தேகத்தின் பெயரில் கும்பலாகக் கைதுகளையும் வெளியேற்றத்தையும் பாதுகாப்பு நிறுவனங்கள் நிகழ்த்தின. பிரிவினைவாதம் என்ற பெயரில் உய்குர் மக்களின் எதிர்ப்பையும் அரசின் திட்டங்களின் மீதான விமர்சனங்களையும் சமாளிக்க அவர்களை எவ்வழியிலும் ஒடுக்கலாம் என்றும், அதில் பிரிவினைவாதம் என்ற ஒரே ஜோடனைக்காக எந்த விதிமீறலையும் நியாயப்படுத்தலாம் எனும் அரசின் போக்கை உய்குர் செயற்பாட்டாளர்கள் விமர்சிக்கிறார்கள்.
தன்னாட்சிக்கு எதிரான வெறுப்புக்குச் செப்டம்பர் தாக்குதல் புதிய வழி அமைத்துக்கொடுத்தது. ‘நீங்கள் அமெரிக்காவுடன் இருக்க விரும்புகிறீர்களா அல்லது பயங்கரவாதிகளுடனா? என்ற ஜார்ஜ் புஷ் கேள்விக்குச் சீனா தெளிவாக இருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்கிறேன் என்று ஐநாவில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சீனா ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ பிரகடனத்திற்கு உடன்பட்டது. அமெரிக்காவுடனான இந்த பரஸ்பர நிலை கிழக்கு தர்கிஸ்தான் இயக்கத்தை உலகளாவிய பயங்கரவாதமாக அடையாளப்படுத்தவும் 2002ம் ஆண்டு அமெரிக்காவின் பயங்கரவாத இலக்குகள் பட்டியலில் சேர்க்கவும் உதவியது.
இடிஐஎம் வன்முறை பயங்கரவாதத்தில் ஈடுபட்டது என்பதற்குச் சான்றாக 90களில் நடத்தப்பட்ட சில இறப்புகளைக் கூறுகிறது சீன அரசு. அமெரிக்காவும் குவாண்டனமோவில் 22 உய்குர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் சில சான்றாதாரங்களைத் திரட்டியது. அவர்களின் விசாரணை முடிவில் இடிஐஎம் ஆப்கனைச் சேர்ந்த சிறிய பயங்கரவாத இயக்கம் என்றாலும், அவர்களுக்கும் சர்வதேச ஜிஹாத் நெட்வொர்க்கிற்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார்கள். ஆனால் இது விஷயமல்ல. செப்டம்பர் தாக்குதலைப் பயன்படுத்தி சட்டம், அரசியல் சாதனங்கள் மூலம் உய்குர்கள் போராட்டத்திற்கு எதிராகச் சீன கம்யூனிஸ்ட் அரசு நிகழ்த்திய அனைத்து ஒடுக்குமுறைகளும் நியாயப்படுத்தப்பட்டன. இடிஐஎம்மை பயங்கரவாத அடையாளத்தோடு முன்னிறுத்தி சீனாவின் உய்குர் அடக்குமுறைக்கு உடந்தையானது அமெரிக்கா.
செப்டம்பர் தாக்கத்தின் அழுத்தத்தால் 2000களில் உய்குர் போராட்டத்தின் வெப்பம் தணிந்திருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு உய்குர்களுக்கும் ஹான் மக்களுக்கும் இடையேயான பதற்ற நிலையால் உரும்கி குடியிருப்புகள் பற்றி எரிந்தன. சிக்கலான தொழிலாளர் பிரச்சனைகள், வதந்திகள், இனவாத சார்பு மற்றும் கலாச்சார வெறுப்பு போன்றவை 200க்கும் மேற்பட்டவர்களை இனப்படுகொலை செய்தது. சீன அரசின் தகவல்படி ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். சீன அரசின் ஆதரவு ஊடகங்கள் இந்த கலவரத்திற்குக் காரணம் என்று உய்குர் காங்கிரஸ் தலைவர் ரபியா கடீரை குறிப்பிட்டது. அவர் பயங்கரவாத இடிஐஎமுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
உய்குர் பயங்கரவாதம் என்ற சொல்லாடல் கடுமையான சமூக கட்டுப்பாட்டையும் நியாயப்படுத்தியது. (சீனாவின் மற்றொரு தன்னாட்சி இனக்குழு பிரதேசமான) திபெத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட ஆலோசகராக இருந்த சென் குவாங்வோவை ஜிஞ்ஜியாக்கின் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டியின் செயலாளராக நியமித்த அரசு கண்காணிப்பு அரசியலைத் தீவிரப்படுத்தியது. கண்களை ஸ்கேன் செய்வது, முறையற்ற ஸ்மார்ட் போன் உளவு பார்த்தல், வெளி ஊடகங்கள் தடை மற்றும் மொத்தமாக மக்களைத் தடுப்பு முகாம்களில் வைப்பது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை உய்குர் மக்கள் எதிர்கொண்டனர். பெண்கள் மூடுண்ட உடை அணிவது, ஆண்கள் அதிகம் தாடி வளர்ப்பது போன்ற சமூக கலாச்சார இறையியல் வாழ்வு குற்றமயமாகவும் உய்குர் மக்களின் எவ்வித இறையியல் நடவடிக்கையும் பயங்கரவாதத்திற்கான அறிகுறியாகச் சந்தேகிக்கப்பட்டது.
உய்குர் போராட்டத்தை ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ மற்றும் மற்றும் ‘பயங்கரவாதம்’ என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி வகைப்படுத்தியது, அமெரிக்காவின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு’ பொருந்திப்போனது. சமீப சில ஆண்டுகளாக உய்குர் மக்கள் சர்வதேச வெளிச்சத்தை அடைந்துள்ளனர். குறிப்பாக, தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுத் துன்புறும் அவர்களின் பரிதாப நிலை உலகளாவிய கவனம் பெற்றுள்ளது. இறுதியாக 2020ம் ஆண்டு இடிஐஎமை ‘பயங்கரவாத இயக்கம்’ எனத் தாம் வரையறுத்ததைத் திரும்பப் பெற்றது அமெரிக்கா. ஆனால், இது ஒருபோதும் பீஜிங்கின் அடக்குமுறையை ஆதரித்து முக்கிய பங்காற்றிய அமெரிக்காவின் தவற்றை மறக்கச் செய்யாது. அமெரிக்காவின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை’ மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையை அழித்துள்ளது. அவர்கள் யாவரும் செப்டம்பர் தாக்குதலுக்கு எவ்வித தொடர்புமற்றவர்கள். உய்குர்கள் உட்பட…
- கிறிஸ்டியன் பீட்டர்சன்.
அல்ஜஸீரா கட்டுரையின் மொழிபெயர்ப்பு…
தமிழில்; அப்துல்லா அஜ்மி.