முஸ்லிம் பெண்கள் தங்கள் பள்ளி சீருடையின் நிறத்தில் கூடுதலாக ஒரு துணியை தலையில் அணிவது பெரும் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியச் சமூகத்தில் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கப்படும் பின்னணியில் மட்டுமே இந்த சர்ச்சையைப் புரிந்து கொள்ள முடியும்.
ஹிஜாப் தடை தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, சொந்த நாட்டிலேயே இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை கொன்று அடைக்கப்பட்ட சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட கடைசி ஆணியாகும். இனிமேல், ‘உங்கள் நம்பிக்கையை நீங்கள் புரிந்துகொண்டபடி கடைப்பிடிக்க உங்களுக்கு உரிமை இல்லை’ என்று மட்டுமல்ல, ‘உங்கள் சமயத்தின் அடிப்படை கடமைகள் என்ன என்பதை தீர்மானிக்கும் மார்க்க அதிகாரம் உங்களுக்கு இல்லை’ என்றுதான் இந்தத் தீர்ப்பு
முஸ்லிம்களைப் பார்த்துக் கூறுகிறது. அதாவது, சில முஸ்லிமல்லாத ‘மௌலவிகள்’ நீதிபதிகளாக வேடமிட்டு உங்கள் நம்பிக்கையின் செயல்பாடுகள் தொடர்பான இறையியல் மற்றும் மார்க்கச் சட்டம் தொடர்பான விஷயத்தை முடிவு செய்யும்போது, நீங்கள் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்குவதற்காக செய்த (இஸ்லாமிய) மார்க்க நடைமுறைகளின் கடமையான பகுதிப் பற்றிய ஆராய்ச்சியில் மூன்று கோணங்களில் குறைபாடுகள் காணப்படுகிறது.
முதலில், இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்ற கட்டளை இஸ்லாத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் ஒப்புக் கொள்ளும் விஷயங்களில் ஒன்றாகும். இது ஓர் ஆணாதிக்க நடைமுறையா அல்லது இஸ்லாம் பெண்களை இரண்டாம் பட்சமாகப் பார்க்கிறதா என்பது தற்போதைய விவாதத்திற்கு முக்கியமல்ல. ஒரு சமயத்தைச் சார்ந்த பெரும்பான்மையான மக்கள் தங்களது சமயத்தில் ஒரு குறிப்பிட்ட உடைப் பழக்கம் அல்லது வழிபாட்டு நடைமுறைகள் அவசியமானது என்று
ஒருமனதாக நம்பினால், அவை அரசியலமைப்பு அல்லது மனிதநேய விழுமியங்களை மீறாத வரை அதை நிராகரிக்க நீதிமன்றத்திற்கு எந்த உரிமையும் இல்லை.
இரண்டாவதாக, மரியாதைக்குரிய நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்குவதற்காக செய்த (இஸ்லாமிய) மார்க்க நடைமுறைகளின் கடமையான பகுதிப் பற்றிய ஆராய்ச்சி அபத்தமானது, அறிவுக்கு புறம்பானது. சில பள்ளிக்கூடங்களில் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் குற்றச்செயல் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம். சாஸ்திரங்கள் மற்றும் மனுஸ்மிருதிகளின் அடிப்படையில் ‘தீண்டாமை’ தங்களின் மத நம்பிக்கையின் பிரிக்க முடியாத அங்கம் என வாதிட்டு அதே உயர் நீதிமன்றத்தை இந்துத்துவ குழுக்கள் அணுகினால், மரியாதைக்குரிய நீதிமன்றம் எவ்வாறு பதிலளிக்கும்?
இது போன்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்க வேத வசனங்களுக்கு பொருள் கொள்வது மட்டுமே போதுமானது என்றால், இந்து மதத்தை கடைப்பிடிப்பதில் தீண்டாமை இன்றியமையாதது என்பதை ‘உறுதிப்படுத்தும்’ அளவுக்கு இந்து மதத்தில் போதுமான வேத நூல்கள் உள்ளன.
மற்றொரு விசித்திரமான ஒரு சூழ்நிலையை எடுத்துக்கொள்வோம். நிஜாமுதீன் மற்றும் அஜ்மீர் ஷெரீப் உட்பட நாட்டிலுள்ள அனைத்து தர்காக்களையும் தரைமட்டமாக்க இந்திய அரசு முடிவு செய்கிறது. இதற்கு எதிராக முஸ்லிம்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். ஆனால் சமாதிகளை அமைப்பது இஸ்லாத்தின் இன்றியமையாதப் பகுதி அல்ல என்று அரசு வாதிடுகிறது. அதற்கும் மேலே சென்று மண்ணறை வழிபாடு நடைமுறை இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிரானது என அரசு வாதிடுகிறது. வேதத்தின் அடிப்படையிலும், உறுதியான இஸ்லாமிய ஏகத்துவக் கண்ணோட்டத்தில் பேசினாலும், இந்த வாதம் உண்மையில் செல்லுபடியாகும். அப்படியென்றால், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சமாதிகளை அழிக்கவும், முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு நடைமுறையை ஒழிக்கவும் இந்திய அரசுக்கு உரிமை உள்ளதா? இந்தியா போன்ற மனதைக் கவரும் வகையில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் இத்தகைய உணர்வுப்பூர்வமான பிரச்னைகள் இப்படித்தான் தீர்க்கப்படுகின்றனவா?
மூன்றாவதாக, ஹிஜாப் அணிவதற்கு எதிரான சர்ச்சையும், அதை ஆதரிக்கும் நீதிமன்றமும் இந்திய தேசத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கொள்கையை நிராகரிக்கிறன. இக்கொள்கைதான் நம் தேசத்தின் இறையாண்மையின் மிகவும் உண்மையான, பரந்த விளக்கமாகும்.
*சீர்மை Vs வேற்றுமை
*ஒருமை Vs பன்மை
*ஒற்றைத்தன்மை Vs பன்மைத்தன்மை
*மாணவர்கள் மீது உடைக் கட்டுப்பாட்டை திணிக்கும் பள்ளிகளின் உரிமைகள் Vs மதச் சுதந்திரம் போன்ற விவாதங்களில் இந்திய அரசியலமைப்பும் ‘இந்தியா’ என்ற கருத்தை வரையறுக்கும் நெறிமுறைகளும் இரண்டாம் தரப்பின் பக்கமே வெளிப்படையாக நிற்கிறது. எனவே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசனத்தின் ஆன்மாவையும், அதை உருவாக்கியவர்களின் ஞானத்தையும் காலில் போட்டு மிதித்துள்ளது என்று கூறலாம். வகுப்புவாதப் பிரிவினையை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு நீதித்துறை ஒப்புதல் வழங்குவது மட்டுமே சர்ச்சைக்குரிய பிரச்னை அல்ல. ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையின் இன்றியமையாத பகுதியா இல்லையா என்பதன் அடிப்படையில் ஒன்றை நீதித்துறை நியாயப்படுத்துவதோ அல்லது நிராகரிப்பதோ, மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்ற பல வினோதமான மற்றும் அபத்தமான பிரச்னைகளை கிளறிவிடும். ஆனால் மோடியை நேசிக்கும் பெரும்பான்மையான இந்தியர்கள் அதன் அபத்தத்தை உணராமல் இருக்கலாம். ஏனெனில் இந்தத் தீர்ப்புகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமய நம்பிக்கைத் தொடர்பானது. அதைப் பின்பற்றுபவர்கள் பெருமைமிக்க தேசத்தின் செல்லப் பிராணியாக மாறிவிட்டனர்.
‘புதிய இந்தியாவில்’ வகுப்புவாத வெறிக்கும், நீதித்துறையின் தவறான வாதத்திற்கும் இடையிலான பரஸ்பர உறவு இப்போது சாதாரணமாகிவிட்டது. அயோத்தி வழக்கு மற்றும் பாபர் பள்ளிவாசல் இடிப்பு தொடர்பான இரண்டு தீர்ப்புகளும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மத்தியக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பள்ளிவாசல் 1992 டிசம்பர் மாதம் ஒருநாள் காலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது. ஆனால் அதை ஒரு மதவெறிப் பிடித்த கும்பலின் சதிவேலையாக மாற்ற விரும்பியது என நம்மை நினைக்க வைத்தது. இஸ்லாத்தில் தற்கொலை ஒரு பாவச் செயலகும். எனவே அப்பாவத்தை பொதுமக்களிடம் மறைக்க அப்பள்ளிவாசல் விரும்பியது. இதன் விளைவாக, அத்வானி, உமாபாரதி போன்ற சிறந்த இந்திய தேசபக்தர்கள் புனையப்பட்ட கிரிமினல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். எத்தகைய ஒரு கேவலம்!
முஸ்லிம் பெண்கள் தங்கள் பள்ளிச் சீருடையின் நிறத்திற்கு பொருந்தக்கூடிய துணியை கூடுதலாக அணிய அனுமதிக்கலாமா? அல்லது கூடாதா? என்பது பற்றிய முழு சர்ச்சையும், இந்திய வாழ்க்கை அமைப்பில் முஸ்லிம்களின் அடையாளத்தை திட்டமிட்டு அழிக்கப்படுவதன் பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ‘முஸ்லிம் ஆணாதிக்கம்’, ‘ஹிஜாப் அணிவது விருப்பமா அல்லது வற்புறுத்தலா?’, ‘முஸ்லிம்களிடையே உள்ள பழமைவாதம்’, ‘முஸ்லிம் பெண்களுக்கு சீருடையாக மாறும் கவர்ச்சியான கருப்பு பர்தா’ போன்ற மற்ற அனைத்தும் உண்மையில் விவாதத்திற்குரியவை. ஆனால் தற்போதைய பிரச்னையின் வட்டத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டவை. இந்துத்துவ வெறியர்களால் நடத்தப்படும் ஒரு சில நிறுவனங்கள் முஸ்லிம்களை கொடுமைப்படுத்த புதிய சூழ்ச்சியைக் கொண்டு வருகின்றன. இது ஒரு தேசிய பிரச்னையாக மாறுகிறது. பல தசாப்தங்களாக தாங்கள் அனுபவித்து வந்த, இயல்பாகவே தங்களுக்கு உரியது என்று நினைத்துக் கொண்டிருந்த உரிமைகளை பாதுகாக்கும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். மதவெறியர்களின் செயல்பாடுகளை நீதிமன்றம் முன்வந்து அங்கீகரிக்கிறது. இவை வருத்தத்துடன் எதிர்பார்த்தவை தான். ஆனால் மறைமுக வழிகளில் இனப்படுகொலை செய்வதற்கான பெரும்திட்டத்தின் ஒரு பகுதியாகதான் இதை இந்திய முஸ்லிம்கள் பார்ப்பார்கள்.
– ஷாஜஹான் மாதம்பட்,
(எழுத்தாளர் மற்றும் கலாச்சார விமர்சக எழுத்தாளர் (மலையாளம் மற்றும்
ஆங்கிலத்தில்). அவரது சமீபத்திய புத்தகம் God is Neither a Khomeini or a Mohan Bhagwat: Writings)
தமிழில்: பேரா. உமர் ஃபாரூக், திருச்சி