அதீத அக்கறையில்,
ஓட்டமும் நடையுமாய்
கொழுப்புணவில் கவனமாய்,
சத்துணவே கதியென்று,
பார்த்துப் பார்த்து,
தின்று தீர்த்து
உடல்நலமே முக்கியமாய்
நாம்
கழிக்கும் வாழ்நாட்கள்.
என்ன கவனம் வைக்கிறோம்,
நம் மனநலத்தில்?
அதிகவேலை – பணிச்சுமை
கோபம் – தாபம்
போட்டி – பொறாமை
மன அழுத்தம் – கலக்கம்
இரவுப்பணி – ஓய்வின்மை
தனிமை – விரக்தி
மரியாதைக் குறைவு
கண்ணியக் குறைவு
வயதுமூப்பு – கவனமின்மை
முக்கியத்துவம் இழப்பு
மதிப்பு இல்லாமை –
இவை எல்லாம்
யாரும் கவனம் வைக்காத
அன்றாட சுமைகளாய்,
தினமொன்றாய் ஒன்று கூடி,
மனநலம் கெட்டு,
வருங்காலம் பாழ்பட்டு,
நம்பிக்கை இழந்து,
தூக்கம் கெட்டு,
சுயபுத்தி இழந்து,
இறுதி முடிவைத்தேடி
தற்கொலை நாடி
நிமிடத்திற்கு ஒருவர்
செல்லும் அவலம்
நம் திருநாட்டில்.
மனநலத்தில் கவனமே
இல்லாத தேசமாய்
உருமாறும் நிலை.
சகமனிதனை மதிக்காமல்,
மனிதநேயத்தை சாகடித்து,
தன்சார்பு நியாயத்தை
மட்டுமே பார்த்து,
சீர்குலையும் மானிடம்.
உடல் நலத்திற்காக
அதிகமாய் மெனக்கெடும்
நாம்,
என்ன கவனம் வைக்கிறோம்,
நம் மனநலத்தில்?
நம்மை சுற்றியிருக்கும்
மனிதர்களை நினைக்கிறோமா?
கவலைக் கொள்கிறோமா?
ஆறுதலாய், அன்பாய்
சில வார்த்தைகள்
தான் பேசுகிறோமா?
இன்றே தொடங்குவோம்.
முடங்காமல் வெளிக்கிளம்புவோம்.
கவலைகளை பகிர்வோம்.
பிறர் கவலைகளுக்கு
காது கொடுப்போம்.
நம் சுமைகளை
கொஞ்சம் இறக்கிவைப்போம்.
பிறர் சுமைகளை
குறைக்க பாடுபடுவோம்
மனநலமும், உடல்நலமும்
நம் இரு கண்கள்.
– ஜ. ஜாஹிர் உசேன்.