பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை வல்லுனரான டாக்டர் பர்ஹான் ஜாவித் 2015 ஆம் ஆண்டு “தப்லீக் ஜமாஅத்தும் தீவிரவாத தொடர்புகளும்” என்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்டி ‘தப்லீக் ஜமாஅத்தின் மறுபக்கம்’ என்று 2.4.2020 அன்று எஸ். குருமூர்த்தி ஒரு வெறுப்பு கட்டுரையை இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதியிருந்தார். இப்போது “சமூகத்திற்கான அச்சுறுத்தல்” என்ற காரணங் காட்டி தப்லீக் ஜமாஅத்தை தடைசெய்திருக்கும் சவுதியை சாட்சியாக்கி தப்லீக் இயக்கத்தினர் மீது வன்மப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்ட மாரிதாஸை வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம்.
அதே அடிச்சுவட்டைப் பின்பற்றி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக குமார், சவுதியைப் பின தொடர்ந்து இந்தியாவிலும் “திவிரவாதத்தின் உற்பத்தி மையமா”க விளங்கும் தப்லீக் ஜமாஅத்தை தடை செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். இதில் டாக்டர் பர்ஹானின் கருத்துக்கு ஏராளமான எதிர்வாதங்கள், மறுப்புகள் இணையத்திலேயே குவிந்து கிடக்கின்றன. ஆனால் குருமூர்த்திகளுக்கோ மாரிதாசர்களுக்கோ, அர்னாபுகளுக்கோ இது பற்றியெல்லாம் கவலையில்லை. இரத்தத்தாலும் சீழாலும் அவர்களது வயிறு நிறைந்தால் போதும். இவர்கள் மட்டுமல்ல சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய சுயநல மன்னர் சாம்ராஜ்யங்களும் குற்றுயிரும் குலையுயிருமாக மனிதர்கள் ஓலமிடும் விபத்து பகுதிகளில் அகப்பட்ட பொருட்களை – நகைகளைக் கொள்ளையிடும் கூட்டத்திற்கு ஒப்பானவர்களாகவே இருக்கிறார்கள்.
இஸ்லாமோபோபியா பல விநோத வடிவங்கள் எடுக்கும் இந்த யுகத்திலும் பெரும்பணத்தைக் குறிவைத்து செயலாற்றும் அரபு வணிக அரசின் எந்த கொள்கையும் உலகெங்கும் பேரவலத்தில் உழலும் முஸ்லிமை இதமாக தடவிக் கொடுப்பதாய் கூட இருந்ததில்லை. அதில் கடைசியாக வந்து சேர்ந்திருப்பது தப்லீக் ஜமாஅத் தடை.
கொரானா ஜிகாத் எனும் முன்னொட்டோடு இந்தியாவில் ஆர்எஸ்எஸ் கட்டவிழ்த்துவிட்ட விஷமப் பிரச்சாரத்தின் போதே தப்லீக் ஜமாஅத்திற்கு ஜிஹாத் செய்வதற்கான தகுதியோ திறனோ இல்லை என்பது அந்த அமைப்பின் இயங்கியலை நன்கறிந்த அனைவருக்கும் தெரியும். தப்லீக் ஜமாஅத் என்பது இன்றைக்கு உலகெங்கும் 40 கோடி முஸ்லிம்களை உள்ளடக்கிய பேரமைப்பு. அப்படிப்பட்ட பெருஞ்சக்தியை தம்மிடம் வைத்திருந்த போதும் எந்த வீராவேசமான வாய்ப்புரையையும் அவர்கள் இதுவரை செய்ததில்லை. எந்த வம்பையும் அவர்கள் இழுத்ததாக வரலாறில்லை. தன்வசம் உள்ள ஆற்றல்களை அனைத்தையும் உறிஞ்சி விட்டு, அதிகாரங்களை எவ்விதத்திலும் எதிர்க்காத சக்கையாக தப்லீக் இயக்கம் ஆரம்பம் முதலே இருந்து வந்திருக்கிறது. அதனால் தான் பிரிட்டிஷ் இந்தியாவில் தோற்றம் பெற்ற இந்த அமைப்பை வெள்ளை ஏகாதிபத்தியம் போற்றிப் பாதுகாத்துக் கொண்டது. “இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிறணும்டா” என்ற வசனத்துக்கு 100% பொருத்தமாக வாழ்பவர்கள் தப்லீக் ஜமாஅத்தை சார்ந்தவர்கள். இதை நாம் சொல்லவில்லை.. டெல்லியைச் சுற்றி அமைந்துள்ள சில பகுதிகளை உள்ளடக்கிய மேவார் சிற்றரசில் 1926-27 ஆம் ஆண்டுகளில் மௌலானா முஹம்மது இலியாஸ் காந்தலாவி எனும் மார்க்க அறிஞரால் இந்த அமைப்பு உருவாகி, வளர்ச்சியடையத் தொடங்கிய போது, இது குறித்து விசாரித்த பிரிட்டிஷ் அரசு “இதுதான் நாம் எதிர்பார்த்த இஸ்லாமிய பிரச்சாரப் பணிக்குழு.. இவர்கள் தங்களின் ஆற்றல் முழுவதையும் இஸ்லாத்தின் எதிரிகளை நோக்கி வெளிமுகமாக திருப்பாமல் தங்களைச் சார்ந்த முஸ்லிம்களை நோக்கியே உள்முகமாக திருப்பிக் கொள்கிறார்கள்.. எனவே இதில் ஒரு பழுதுமில்லை” என்று தப்லீக் வளர்ச்சிக்கு பூரண ஒத்துழைப்பு அளித்தனர்.
மேவார் மியா (மோடியின் மியான் முஷரப் என்ற அடைமொழி இதன் எச்சம்தான்) முஸ்லிம்கள் ராஜபுத் வம்சா வழியில் வந்தவர்கள். முஸ்லிம் அரசியல் அதிகாரம் கைவிட்டுப் போன பின்னர், இவர்களில் பலர் இந்துக்களாக மாறினர். சுத்தி மற்றும் சங்காதன் இயக்கங்கள் இந்த வேலையை முன்னெடுத்து தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருந்ததைக் கண்டு மனம் வெதும்பியவர் மௌலானா இலியாஸின் ஆசிரியரான மௌலானா ரஷீத் அஹமது கங்கோஹி. ஆசிரியரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து முஸ்லிம்களை இஸ்லாத்தை நோக்கித் திருப்பி அதில் நிலைநிறுத்த மாணவர் ஆரம்பித்த இயக்கமே தப்லீக். அதற்கு அவர்கள் முக்கியமாக வலியுறுத்தியது ஐவேளை தொழுகை., எந்நிலையிலும் இறைவனை சார்ந்திருத்தல். யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல், எல்லாவற்றிற்கும் தலையையாட்டும், அதீதமான பொறுமையும் பணிவும் கொண்ட அமைப்பினராக தப்லீக் ஜமாஅத் தன்னை வடிவமைத்துக் கொண்டதால் தான் இந்த இயக்கம் இன்று 200 நாடுகளில் இடம்பிடித்து உலகளவில் மாபெரும் இஸ்லாமிய பிரச்சார இயக்கமாக மாறியிருக்கிறது.
எங்காவது ஒரு இடத்தில் நெருடல் இருந்திருந்தாலும் எப்போதோ சின்னாபின்னமாகியிருக்கும் என்பதே சமகால வரலாறு நமக்கு சொல்லித்தரும் பாடம். மௌலானா இலியாஸ் இந்த அமைப்பின் அறைகூவலாக முன்வைத்த ‘ஏ முசல்மானோ.. முசல்மான் பனோ‘ (ஓ முஸ்லிம்களே.. முஸ்லிம்களாக ஆகுங்கள்) என்பதே. இது முஸ்லிம்களைத் தவிர வேறு யாரையும் குறிவைத்து எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவு படுத்தும். ஆரம்பகட்ட தப்லீக் பணி முஸ்லிம்கள் தங்கள் பழமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. மேவார் விளிம்புநிலை மியாக்களின் வாழ்வியல் பண்பாட்டில் ஊடுருவியிருந்த இந்து மத சடங்கு சம்பிரதாயங்களைக் களைந்து முஸ்லிம்களின் மத – கலாச்சார அடையாளங்களை மீட்டெடுப்பதாக அது அமைந்தது.
தப்லீகர்களின் அரசியல் ஒவ்வாமை, அதன் சர்வதேச வளர்ச்சிக்குத் துணை புரிந்தது. உள்ளூர் அரசியலில் மட்டுமன்றி சர்வதேச முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் பலஸ்தீன், ரோஹிங்கியா, உய்குர் என்கிற எந்த இனஅழிப்புக் குறித்தும் எவ்வித பொது கருத்தும் வெளியிட தயங்கும் அமைப்பு அது. ஒரு இடத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டாலும் மீதியுள்ள முஸ்லிம்களிடம் தயங்காமல் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் ‘ஆன்மீக‘ பலம் பெற்ற இயக்கம். சமீபத்திய டெல்லி கலவரங்களில் கூட எந்த எதிர்வினையும் அற்று நிஜாமுதீனில் முடங்கி, இறைவனிடம் இருகரமேந்திக் கிடந்தவர்கள் தப்லீகர்கள். அவர்களைத் தான் ”பயங்கரவாதத்தின் வாயிற்காவலர்களாக” சித்தரித்திருக்கிறது சவுதி அரசு.
இதே நிலையில் தான் கத்தருடன் வம்பிழுத்த போது, சமகால இஸ்லாமிய பேரறிஞர் யூசுப் அல்கர்ளாவி மீது தீவிரவாத முத்திரைக் குத்தி அழகு பார்த்தார்கள். தவிரவும் கத்தருக்கு ஆதரவாகவோ சவுதி நலனுக்கு எதிராகவோ யார் எதைப் பேசினாலும் எழுதினாலும் 5 முதல் 15 ஆண்டுகள் சிறை, லட்சக்கணக்கான ரியால்கள் அபராதம் என்று கொக்கரித்தார்கள். இவை அரபுலகின் அசல் முகத்தை ஓரளவிற்கு வெளிப்படுத்தும் அல் ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனத்தை முடக்கி விட்டேனா பார் எனத் தொடைத் தட்டி நின்றார் சல்மான் அரசர். மொத்தத்துவ அரசுகள் இப்படித்தான் அடாவடியாக செயல்படும். இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதே கூட தங்களுக்கு உகந்த அழைப்புப் பணியாகவே அரபு அரசுகள் பார்க்கின்றன. வெள்ளிக்கிழமை உரைகள் கூட முன்தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுடன் தான் வாசிக்கப்படுகின்றன. ஆக, அழைப்புப்பணியோ, அழைப்பாளர்களோ அரபு வம்சாவழி ஆட்சிகளின் விருப்பு வெறுப்புக்குட்பட்ட ஒடுக்கப்பட்ட சத்தியத்தின் குரலாகவே ஒலிக்கிறது.
மேலும் தப்லீக் ஜமாஅத் என்பது நிறுவனங்களுக்கு ஆதரவான அமைப்பாகும் (pro establishment). அரசு நிறுவனத்திற்கு மட்டுமன்றி, சமூகத்திற்குள்ளிருக்கும் மஸ்ஜித், வக்பு போன்ற நிறுவனங்களுக்கு முற்றிலும் ஆதரவானவர்கள். உண்டி, உறையுள் வசதிகள் மசூதிகளில் (செலவுகள் முழுக்க தப்லீகர்கள் உடையதுதான்) கிடைத்துவிடுவதால் மிகப்பெரிய ஊழல் நடக்கும் பள்ளிவாசல்களில் கூட நீதிதேவதையைப் போல் கண்ணைக் கட்டிக்கொண்டு தங்கள் கடமையில் கருத்தாக கிடப்பார்கள். இதன் காரணமாகவே, மத குழுக்கள் பகிரங்கமாக செயல்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் மேற்கத்திய நாடுகளிலும் கூட கிளைபரப்ப அனுமதிக்கப்பட்டனர். முதலாவது வெளிநாட்டு தப்லீக் பிரச்சாரப் பயணக்குழு, சவுதிக்கும் இங்கிலாந்துக்கும் 1946லேயே புறப்பட்டுப் போனது.. இதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கால் பதித்தது. 1970 – 80களில் பெருவாரியான ஐரோப்பிய நாடுகளில் வேரூன்றிவிட்டது. இருப்பினும் 1979ல் சவுது குடும்பத்தினரின் பிடியை விட்டு மெக்கா புனித தலத்தை விடுவிக்க உதைபி என்பவர் தலைமையில் புறப்பட்ட புரட்சிப்படை ராணுவ நடவடிக்கையால் அடக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி மன்னராட்சி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கியது.
இன்றைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தப்லீக் பணி சிறப்பாக நடைபெற்று வந்தாலும் சவுதியைப் பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே அங்கு செயல்பட்டது. தப்லீகர்களின் முக்கிய இரண்டு அம்சங்கள்: ஒன்று தொழுகையை நிலைநிறுத்துவது, இரண்டு பயணப்படுவது. “மனிதன் என்பவன் கொந்தளிக்கும் கடலில் சிக்கிப் பாதிப்படைந்த கப்பலைப் போன்றவன்.. அந்த கப்பலை சீர்செய்ய வேண்டுமானால் அதை கடலை விட்டு வெளியில் கொண்டு வரவேண்டும்.. அதே போன்று மனிதனை சீர்செய்ய, ஆசாபாசங்கள், அறியாமை போன்ற பேரலைகள் வீசும் இவ்வுலக வாழ்வை விட்டு வெளியே கொண்டு வர வேண்டும்” என்பதே தப்லீகீன்களின் போதனை, பாடம், பகுத்தறிவு எல்லாம். இந்த நோக்குநிலையில் பார்க்கும்போது வையத் தலைமையைக் கைப்பற்றும் உள்ளடி வேலைகள் அவர்களின் நிகழ்ச்சிநிரலில் எப்போதும் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. இருந்தாலும் சவுதியின் அச்சமும் அரசியல் அபிலாசைகளும் வேறுபட்டவை. அந்த வகையில் சவுதியின் உதறலைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவர் சையத் சாதத்துல்லா உசைனி சொல்வதைப்போல் “அவர்கள் சீர்திருத்த இயக்கங்களின் பிரசுரங்களைக் கூட தடை செய்வார்கள். இது அவர்கள் எத்தகையவர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது”.
தப்லீக் இயக்கம் நடத்தும் மாநாடுகள் (இஜ்திமா என்று சொல்லப்படும்) மாவட்ட, மாநில, தேசிய, உலகளாவிய நிலைகளில் நடத்தப்படுகிறது.. உலகளாவிய இஜ்திமா முதன்முதலாக போபாலில் நடைபெற்ற போது சுமார் 20 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். பங்களாதேஷில் நடைபெறும் இஜ்திமாவில் 30 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொள்கிறார்கள்.. 2018ல் அவுரங்காபாதில் நடந்தேறிய இஜ்திமாவில் 40 லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து சாதனைப் படைத்தனர். கேவலம் ஆயிரம் பேர் திரண்டுவிட்டால் அடுத்த ஆட்சி நம்முடையது என்று நரம்புகள் தெரிக்க முழங்கும் ஆட்களுக்கு மத்தியில் லட்சக்கணக்கானவர்களைக் கூட்டி இருந்த இடமும் தெரியாமல் கலைந்து போன தடமும் தெரியாமல் ஓட்டுக்குள் ஒடுங்கும் ஒரே அமைப்பு உலகிலேயே தப்லீக் ஜமாஅத் மட்டுமே. தப்லீக் ஜமாஅத் குறித்து சர்வதேச சமூகத்தில் உள்ள அதிகப்படியான குற்றச்சாட்டு என்பது அவர்களின் இஜ்திமாக்களில் தீவிரவாதக் குழுக்கள் ஆள்பிடிக்கின்றன என்பதும், ஜமாஅத் செல்லும் வெளிநாட்டு பயணங்களில் தீவிர இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் ஊடுருவி ரகசிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதுதான். இதுவும் முற்றிலுமாக நிரூபிக்கப்படவில்லை.. ஆனால் பெருந்திரள் மாநாடுகளை நடத்திக் காட்டும் எந்த அமைப்பிலும் 100% கண்காணிப்பு சாத்தியப்படாது. தவிரவும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு சிறைகளில் இருந்து தான் ஆட்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். சிறைகளில் தான் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். அதற்காக சிறைகளே கூடாது என்று சொல்லிவிட முடியுமா?
பல்வேறு கலை, கலாச்சாரப் பயணக் குழுக்களிலும் குற்ற நடத்தையுள்ள ஆட்கள் ஊடுருவுகின்றனர். இதுபோன்ற அற்பக் காரணிகளை வைத்துத்தான் தப்லீக் புள்ளைப் பூச்சியை அடித்துள்ளார் துக்ளக் அறிவாளி குருமூர்த்தி. அந்த புண்மைத்தேரையை சவுதி தனது மேற்கத்திய நன்னடத்தை சான்றிதழுக்கான பலிகடாவாக ஆக்கி காலடியில் மிதித்து நசுக்கப் பார்க்கிறது. இந்த புள்ளைப் பூச்சியை அடிப்பதற்கே தீவிரவாத – அடிப்படைவாத கம்பைத் தான் இஸ்லாமிய வல்லரசுகளும் உருவிக் கொண்டு வரும் அவலநிலையில் தான், நாம் மேற்குலகை, அதன் ஊடகங்களையும் மோடி அரசையும் அதன் முஸ்லிம் வெறுப்பு அரசியலையும் பேசி ஓய்ந்து போகிறோம். இப்படி உள்ளும் புறமுமாக கூர் பார்க்கப்பட்டு குதறி எடுக்கப்படும் உம்மத் (உலகளாவிய இஸ்லாமிய சமூகம்) குறித்து வெறுமனே பரிதாபப்படத்தான் முடியும்.
சென்ற வருடம் சமூக ஊடகங்களில் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிலரை குறிவைத்து அரபுலகில் கடும் கண்டனங்கள் எழத் தொடங்கியிருந்த சமயத்தில், இந்த திடீர் சூடு சொரணைக்கு கொரானா தொற்றுக்கு தப்லீக் ஜமாஅத்தை சீண்டியதே காரணமாக இருக்கக் கூடும் என்று பலர் எண்ணத் தொடங்கி இருந்தனா். என் மதிப்பிற்குரிய பேராசிரியர் அ. மார்க்சும் அவர்களில் ஒருவர். இஸ்லாம் என்பது ஒரு நிறுவனம் – அதன் கிளை நிறுவனங்களின் மேல் தொடுக்கப் படும் தாக்குதல் நிறுவனத்தில் எதிர்வினைகளை தோற்றுவிக்கக் கூடும் என்ற எண்ணம் அவர்களிடம் இத்தகைய கருத்தை உருவாக்கியிருக்கலாம். நாம் அறிந்தவரை இஸ்லாமிய பிரச்சாரப் பணியை – அதற்கான அமைப்புகளை – இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்களுக்கு அநுகூலமாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஐரோப்பா ஆட்சியதிகாரத்தை திருச்சபையை விட்டு விடுவித்துக் கொண்டதைப் போல இஸ்லாமிய மன்னராட்சிகளும் சமய தலைமைப் பீடங்களுக்கு அப்பாற்பட்டு தங்கள் அதிகாரத்தை எப்போதோ நிலைநிறுத்திக் கொண்டுவிட்டன. சமய குரு பீடங்கள் ஆளுகை விவகாரங்களில் தலையிடாமல் இருக்கும் வரை – அப்படியான உத்திரவாதத்தைப் பெற்றுக்கொண்டு – அவர்களுக்கு உரிய கௌரவத்தை அரபக அரசுகள் வழங்கி வருகின்றன. தங்கள் விடுதல்கள் – தொடுதல்களுக்கு ஆரோகணம் அவரோகணம் பாடும் நிலைய வித்வான்களையே அவர்கள் கக்கத்தில் முடிந்து கொள்கிறார்கள். இந்த புள்ளியை விட்டு விலகுகிற எந்த குருபீடத்தையும் குருமார்களையும் அம்போ என்று கைவிடுவதே அரபகத்தின் வலிமையான விதி. உதாரணத்திற்கு ஜாகிர் நாயக்.. (மலேசியா தான் அவருக்கு அடைக்கலம் தந்திருக்கிறது).. ஜாக் இல்லையெனில் டிக், ஹாரி என்று சவுதி மன்னர்கள் போய்க் கொண்டே இருப்பார்கள். அதே நிலையில்தான் தப்லீகர்கள் குறித்த எந்த அக்கறையும் ஷேக்குகள் இதுவரை கொண்டிருக்கவில்லை.
இப்போது வலதுசாரி சங்கிகள் மேல் பாய்வதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும்.. கச்சா எண்ணெய் விலை வீழ்ந்து பொருளாதாரம் அதலபாதாளத்தில் கிடக்கிறது.. இந்தியர்களைத் தற்காலிகமாக திருப்பி அழைத்துக் கொள்ள பல மட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தியும் இந்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. ஆட்குறைப்பு என்பது எழுதப்பட்டு விட்ட நிலையில் இந்த சந்தர்ப்பத்தை தந்திரமாக பயன்படுத்திக் கொண்டார்கள். மத துவேஷத்தில் ஈடுபட்டார்கள் என்று காரணம் சொல்லி வேலையை விட்டுத் துரத்த முடியும். அதனால் தான் சங்கிஸ்கான்கள் சரணாகதி அடைந்து மண்டியிட்டார்கள். அடுத்தது.. எல்லாத்துக்கும் குறுக்கே விழுந்து கடித்துக் குதறும் அமெரிக்கா கொரானா பேரிடரில் பல் விழுந்து பொக்கை வாயாக நின்று கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் ஷேக்குகளுக்கு ஷோக்கா இந்த சந்தர்ப்பம் வாய்த்தது… துள்ளி விளையாடினார்கள் அஞ்சு வருடத்துக்கு முன்னே கழுவி ஊற்றியதை தூக்கிக் கொண்டு வந்தார்கள். தூங்கி எழுந்த ஆமை திடீரென ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல் எப்போது வேண்டுமானாலும் வாலை சுருட்டிக் கொள்வார்கள் என்பதையும் நாம் ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். இவையனைத்தையும் விட அரபு குறுநில பிரதேசங்களிடம் மேலோங்கி நிற்பது சுயநலம்.. அது அந்த தேசியங்களில் கலந்துவிட்ட ஒன்று.. எப்போதும் மாறாது.. இந்தியா மற்றும் ஆசிய முஸ்லிம்களை விடுங்கள் பிரபுத்துவ நலன்களில் கோலோச்சும் அரபு அமீரகங்களில் ஒரேயொரு நாடு கூட சக அரபு நாட்டில் வாழும் முஸ்லிமின் நலனை என்றாவது முன்னிலைப் படுத்தி யோசித்திருக்கிறதா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இரண்டு பங்காளிகளின் சொத்தை சல்லிக்காசுக்கு வாங்க, முடிந்தால் ஒட்டு மொத்தமா ஆட்டைய போட, ஒருத்தனைப் பத்தி இன்னொருத்தவன்கிட்ட போட்டுக் கொடுத்து, ஒருத்தனை ஒருத்தன் அடித்துக் கொண்டு சாவதற்கு அடியாள் படைகளையும் (ராணுவ தளம் மற்றும் தளவாடங்கள்) ஏற்பாடு பண்ணிக் கொடுத்து, அடிச்சுக்கிட்டு சாகிறார்களா என்று பார்க்க சர்வதேச ஆலமரத்தடி பஞ்சாயத்தை (ஐநா சபை)யும் ஏற்பாடு பண்ணி வைத்திருக்கற சர்வதேச நாடு கொளுத்தி அமெரிக்க ஜனாதிபதி கண்ணசைவுக்கு ஏற்ற மாதிரி நடப்பதில் தான் இவர்களின் வாழ்வும் சாவும் இருக்கிறது. அதனால் தான் கத்தர் – சவூதி விவகாரம் குடும்பப் பிரச்சினை, அதனை அவர்கள் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வெள்ளை மாளிகை வழுக்கிச் செல்லும் அதே நேரத்தில் கத்தரின் ஒட்டகங்கள் சவுதி எல்லையில் மேய்வதற்கும் தடை விதித்து வாயில்லா ஜீவன்களிலும் வயிற்றில் அடிக்கவும் தயாராக இருக்கிறது சவுதி அரசு.
எல்லாவற்றையும் விட உலகளாவிய நிலையில் அதிகமாக அரசியல்பட்ட இஸ்லாமிய சமூகம், நவயுக அரசியலைக் கற்காமலே இருக்கிறது. அது முன்னெடுக்கும் அரசியல் எல்லாமே அதன் மேல் திணிக்கப்பட்ட அரசியலும் எம்மில் யார் பெரியவன் எனும் ஈகோ அரசியலும் தான். அதனால் தான் முஸ்லிம் சமூகத்தால் காத்திரமான அரசியல் கருத்துரு எதையும் உண்டாக்க முடியாமல் போகிறது. இம்மை வாழ்க்கையை விட்டு விலகுவது என்ற தொடர் போதனையின் காரணமாக தம்மைச் சுற்றிலுமான உலகியல் பார்வை அறவே விட்டொழித்த ஒரு கூட்டத்தைத் தான் தப்லீக் இயக்கம் பொதுவெளியில் உருவாக்கி வருகிறது. உலகில் என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாததுதான் தப்லீக் ஜமாஅத்தின் இன்றைய கைசேதத்திற்கான முக்கிய காரணம்.. குருமூர்த்திகள் தொடங்கி முஹம்மது பின் சல்மான் வரை ஆளுக்கொரு குத்துக் குத்திப் பார்ப்பதற்கான ஆரம்பப் புள்ளியும் அதுவே. மூளையை மழுங்கடித்தல் என்பது தமக்கான செம்மறி ஆட்டுக் கூட்டத்தை உருவாக்குவதற்கான கைதேர்ந்த உத்தி். தப்லீக் ஜமாஅத் இன்றைக்கு இருத்தப்பட்டுள்ள இடர்படு சூழலுக்கு (precarious position) இதுவே முக்கிய காரணி. ‘அக்கம் பக்கம் பாரடா தம்பி ராசா.. ஆகாசப் பார்வை என்ன ராசா‘ என்ற பாடல் வரிகளுக்கு முழுக்க பொருத்தமான கூட்டம். தலை கவிழ்ந்து, சுயபிரக்ஞை அற்றுப்போய் யாரோ ஒருவர் ஆற்றும் உப்பரிகை உபதேசத்திற்கு மந்திரித்துவிட்ட விட்ட கோழிகள் மாதிரி சிக்கிக் கொள்பவர்கள் தனது உரிமைகளை — நியாயங்களைக் கேட்கும் திராணியற்றவர்களாக மாறிப் போகிறார்கள்.
அப்படி அசமஞ்சமாக இருக்கிறார்கள் என்பதை நன்றாக விளங்கி வைத்திருப்பதால் தான் கொரானா நோய்த்தொற்றின் ஆரம்பக் கட்டத்தின் போது தப்லீக் ஜமாஅத்தினர் நிர்வாணமாக நடக்கிறார்கள். மருத்துவப் பணியாளர்கள் முகத்தில் காறி உமிழ்கிறார்கள்.. பெண்களிடம் தவறாக நடக்கிறார்கள்.. அடேய்.. இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காதேடா! தப்லீக் ஜமாஅத்தை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஒழுக்கக் கட்டுப்பாடுகளில், பழகுமுறை பண்புகளில் அவர்கள் மீது ஒருவரும் கல்லெறிய முடியாது. இந்த ஜமாஅத் பணியில் செல்ல விரும்பும் புதியவர்களுக்கு – குறிப்பாக இள வயதினருக்கு தூங்கச் செல்லும்போது அவர்கள் கற்றுக் கொடுக்கும் ஒழுங்குகளைக் கேட்டிருக்கிறேன். படுக்கப் போவதற்கு முன் அவர்கள் அணிந்திருக்கும் லுங்கியின் முன்பின் கீழ் ஓரங்களை ஒன்றாக இணைத்து முடிச்சுட்டு உறங்கச் சொல்வார்களாம். தூக்கத்தில் கூட ஆடைவிலகக் கூடாது என்பதில் அவ்வளவு கவனம்.. ஆண்கள் மட்டுமே கூடியிருக்கும் அவையில் இப்படி கண்ணியமாக உறங்க பழகியவர்கள் பெண்களுக்கு முன்பாக அதுவும் உயிர்காக்கும் மருத்துவ மனையில்… ச்சே என்ன ஜென்மமடா நீங்கள்..? இதே வார்த்தைகள் தான் உலகிலேயே பயந்த சுபாவம் கொண்ட முஸ்லிம்களின் ஸ்தாபனமான தப்லீக் ஜமாஅத்தினரை பயங்கரவாதிகள் என்று கொக்கரிக்கும் சவுதிகளுக்கும் பொருந்தும். என்ன ஜென்மமடா நீங்கள்? தங்களுக்கான பொது அடையாள வெளியாக தப்லீக் சேவையை ஆக்கிக் கொண்ட இந்த நல்லவர்கள் உங்களைப் பார்த்தும் “அல்லாஹ் பார்த்துக் கொள்வார்” என்று சொல்வதோடு விவகாரத்தை முடித்துக் கொள்வார்கள் என்றளவில் வெறுப்பு வியாபாரிகள் நிம்மதியாக மூச்சு விடலாம்.
கோடை கலீம் – எழுத்தாளர்