எழுதியவர் : அப்துர் ரஹ்மான், சமூக ஊடகவியலாளர்
1987 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி இந்துத்துவ பயங்கரவாதிகள் மீரட்டில் நடத்திய கலவரத்தின்போது, 42 முஸ்லிம் இளைஞர்களைச் சுட்டுப்படுகொலை செய்த உ.பி மாநில சிறப்பு இராணுவப்படையைச் சேர்ந்த 16 சிப்பாய்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மீரட், பாகல்பூர் படுகொலைகள் குறித்தெல்லாம் சிறுவயதில் கேள்விபட்டிருப்போம். விரிவான தகவல்கள் அதிகம் பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
இக்காலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்தும் படுபயங்கரமான அட்டூழியங்களை மிஞ்சும் வகையிலான அக்கிரமங்கள் இந்தியாவில் அக்காலத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது. அதில் ஒன்றே மீரட் படுகொலை.
1986 ஆம் ஆண்டு பாபர் மசூதி சீல் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் சமூகங்களிடையே பதட்டம் ஆரம்பித்தது. இந்நிலை இரு சமூகத்தின் தலைவர்களுடைய உணர்ச்சி தூண்டும் பேச்சுகளால் தூண்டப்பட்டு 1987 மார்ச்சில் கலவரமாக வெடித்தது. ஜூன் மாதம் வரை தொடர்ந்த இக்கலவரத்தில் 390 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுவரை ஒருவர்கூட இக்கலவரக் குற்றத்தில் தண்டிக்கப்படவில்லை.
இக்கலவரத்தின்போது, மீரட் நகரிலுள்ள ஹாஷிம்புரா கிராமத்திலிருந்து குழந்தைகள், முதியவர்களை நீக்கிவிட்டு 65 முஸ்லிம் இளைஞர்களை உ.பி. சிறப்பு இராணுவப்படையினைச் சேர்ந்த சிப்பாய்கள் லாரிகளில் ஏற்றிச் சென்று சுட்டுக்கொன்று, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கால்வாயில் வீசி சென்றனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிலர் அப்போதே காவல்நிலையத்தில் இப்படுகொலை குறித்து வாக்குமூலத்துடன் புகார் பதிவு செய்தனர்.
இச்சம்பவம் வெளியானவுடன் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி உடனடியாக மீரட் வந்து நிலைமைகளைப் பார்வையிட்டார். நீதிபதி சச்சார் மற்றும் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான விசாரணை குழு இப்படுகொலை குறித்து ஆய்வு செய்து 1987 ஜூன் 23 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.
1988 ஆம் ஆண்டு உத்தரபிரதேச அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. மூவர் கொண்ட விசாரணை குழு, 37 சிப்பாய்கள்மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்து 1994 ஆம் ஆண்டு விசாரணை அறிக்கையினைத் தாக்கல் செய்தது. ஆனால், 1995 ஆம் ஆண்டுவரை அதன்மீது எவ்வித மேல்நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டது. சிபிசிஐடி விசாரணை அடிப்படையில் நடவடிக்கைகோரி, கொல்லப்பட்டோரின் உறவினர்கள் நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்ததைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி 19 சிப்பாய்கள் மீது நடவடிக்கை எடுக்க உ.பி அரசு அனுமதி வழங்கியது. தொடர்ந்து 1997 மே 20 ஆம் தேதி, மீதியுள்ள 18 சிப்பாய்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அப்போதைய உ.பி முதல்வர் மாயாவதி அனுமதியளித்தார்.
சிபிசிஐடி அறிக்கையைத் தொடர்ந்த நீதிமன்ற விசாரணையின்போது 1994-1998 வரை 23 பிணை வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் ஒருவர்கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தொடர்ந்து 1998-2000 வரை 17 பிணையில்லா வாரண்டுகள் பிறப்பித்தும் எவரும் கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பினால், 2000 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அவர்கள் சரணடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் விசாரணை தொடங்கவில்லை.
உ.பி நீதிமன்றத்தில் வழக்கு ஒரு நடக்க வாய்ப்பேயில்லை என்பதை உணர்ந்ததும் பாதிக்கப்பட்டோரின் உறவினர், வழக்கை உ.பியிலிருந்து டெல்லிக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தை 2001 ஆம் ஆண்டு அணுகினர்.
2002 ஆம் செப்டம்பர் மாதம் இவ்வழக்கை டெல்லி விசாரணை நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் உ.பி அரசு வழக்கறிஞரை நியமிக்கக் காலம் கடத்தியத்தியதால் 2004 நவம்பர் வரை அங்கும் விசாரணை தொடங்கவில்லை. அதன் பின்னர் உ.பி அரசு நியமித்த வழக்கறிஞர் தகுதில்லாதவர் என்பதைக் காட்டி 2006 ஆம் ஆண்டுவரை இழுத்தடிக்கப்பட்ட்து.
இறுதியில் 2006 ஆம் ஆண்டு மே மாதம் கொலை, கொலை முயற்சி, கொலை சதி, சாட்சியம் அழித்தல் முதலான பல பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட சிப்பாய்கள்மீது சார்ஜ் பதிவு செய்யப்பட்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி நீதிமன்ற விசாரணை தொடங்கியது. விசாரணை காலத்தில், 2007 ஆம் ஆண்டு வழக்கின் விவரங்கள் வழங்க வேண்டுமெனக் கோரி பாதிக்கப்பட்டோரால் 615 மனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டன.
இதில் கிடைத்த விவரங்கள் அதிர்ச்சியானவை. சம்பந்தப்பட்ட 19 சிப்பாய்களும் தொடர்ந்து பணியில் இருப்பதாகவும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து எவ்வித ரிமார்க்கும் அவர்களுக்கான ஆண்டு தனிப்பட்ட அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரியவந்தது. மேலும் நீதிமன்ற விசாரணையின் போது, படுகொலை செய்யப்பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் ஃபாரன்சிக் சோதனைக்குப் பின்னர் ஆவணகாப்பகத்தில் பாதுகாக்காமல் மீண்டும் சிப்பாய்களுக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்ததும் தெரியவந்தது.
2010 மே 19 ஆம் தேதி அப்படுகொலையிலிருந்து உயிர் தப்பிய நான்கு நேரடி சாட்சிகளிடமிருந்து நீதிமன்றம் நேரடியாக வாக்குமூலம் பதிவு செய்தது.
நீதிமன்ற விசாரணை இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், 2012 அக்டோபர் 16 ஆம் தேதி, இப்படுகொலையில் அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் பங்கினைக் குறித்து விசாரிக்க வேண்டுமெனக்கூறி சுப்ரமணிய சாமி நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், சாட்சியங்களால் குற்றவாளிகளை அடையாளம் காட்ட இயலவில்லை எனக்கூறி 2015 மார்ச் 21 ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டிருந்த 19 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இத்தீர்ப்பினை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோர் மேல் முறையீடு செய்தனர்.
கொல்லப்பட்டோரின் உறவினர்களைச் சமாதானப்படுத்தும் நோக்கில் மே 2015 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குவதாக உத்தரபிரதேச அரசு அறிவித்தது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த மேல் முறையீட்டு விசாரணையின் இறுதியில், இன்று 2018 அக்டோபர் 31 ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்தாம் எனவும் அவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் 16 சிப்பாய்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நடந்து சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி, மேலும் 14 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, அதிகாரத்தின் அத்தனை கைகளையும் கொண்டு இல்லாமலாக்க முயற்சி செய்யப்பட்ட இந்தக் கொடூர கொலைக்கு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி வழங்கப்பட்டுள்ளது.