உத்திரப் பிரதேசத்தில் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மர்ம நபர்களால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசின் ஆட்சியில் நரேந்திர தபோல்கர், கெளரி லங்கேஷ் என பல செயல்பாட்டாளர்கள் பாசிசத் துப்பாக்கிக்கு பலியாகியுள்ளனர். பலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள அரசுக்கு உதாரணமாக பாஜகவினரால் உதாரணமாக கூறப்படும் யோகியின் உத்திரப்பிரதேசத்தில் தான் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் பெருகி இருக்கிறது.
அம்மாநிலத்தில்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் எம்.பியும், அவரின் சகோதரரும் நீதிமன்ற வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதுபோல் பல்வேறு சம்பவங்களும் அந்த மாநிலத்தில் நடந்துவரும் நிலையில், தற்போது பாஜகவிற்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டு வந்த சந்திரசேகர் ஆசாத் சுடப்பட்டிருப்பது ஆர்எஸ்எஸ், பாஜகவின் சித்தாந்தத் தோல்வியையே காட்டுகிறது.
சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடிவரும் ஆசாத் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு பொதுவெளியில் பலமான கண்டனங்கள் எழ வேண்டியது அவசியம். இந்தத் துப்பாக்கிச் சூடு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான தொடர் வன்முறையின் ஒருபகுதியாகவே அமைந்துள்ளது.
இப்படி சமூகத்தில் வன்முறைகள் சர்வ சாதாரணமாவதுதான் இந்துத்துவ சக்திகள் உருவாக்கத் துடிக்கும் “புதிய இந்தியா” போலும்! அவர்கள் வன்முறையை அன்றாட யதார்த்தமாக மாற்ற முனைகிறார்கள். அவர்களின் திட்டம் முறியடிக்கப்படுமா?