‘மெளலானா மெளதூதி எனும் மகத்தான ஆளுமையை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.’என்று சொல்லி முடிப்பதற்குள் ‘ஆம்.. அவரை நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? அவரிடம் கற்பதற்கு என்ன இருக்கிறது?, ஏன் தனி நபரைத் தூக்கிப் பிடிக்கின்றீர்கள்?’என்பன போன்ற வினாக்கள் அடுக்கடுக்காக அலையாய் எழும். அதே வினாக்களுடனே இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கலாம்.
இஸ்லாத்தில் தனிநபர் ஆராதனை இல்லை. தனிநபர் ஒருவரைக் கண்மூடித்தனமானப் பின்பற்றுதலை இஸ்லாம் கண்டிக்கிறது. அதே நேரத்தில் சிறந்த ஆளுமைத் திறன் படைத்தவர்களை அங்கீகரித்தும் இருக்கிறது. மெளலானா மெளதூதியைக் கற்பது என்பது அவர் முன்வைத்த சித்தாந்தத்தைக் கற்பதாகும். இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக, தனித்துவமிக்க பார்வையில் கருத்தியல் ரீதியாக அவர் முன்வைத்த விதம்தான் அவரை நாம் கற்றுக் கொள்வதற்கான அடிப்படையாக இருக்கின்றது. இந்தக் கண்ணோட்டத்தில் நாம் இங்கு மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்களின் கருத்தியல் வாயிலாக அவரை நாம் கற்க வேண்டும்.
20ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஆராய்பவர்கள் மறவாமல் நினைவு கூரும் ஓர் ஆளுமைதான் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). அறிஞர்கள், மெத்தப் படித்த மேதைகள், பாமரர்கள், விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள்,ஆண்கள், பெண்கள் அனைத்து தரப்பு மக்களாலும் கவரப்பட்ட ஓர் ஆளுமை அவர்.
மனிதர்கள் இயற்றிய இஸங்களை, சித்தாந்தங்களைத் தெளிவாக அலசி, ஆராய்ந்து அவை அனைத்தும் அசத்தியம் என்று ஆதாரப்பூர்வமாக விமர்சித்ததுடன், படைத்தவன் அளித்த ஆதாரப்பூர்வ வாழ்க்கை நெறிதான் இஸ்லாம் என்று துணிந்து பிரகடனப்படுத்தியவர். இஸ்லாத்தை மதமாக மட்டுல்லாமல் மார்க்கமாக, வாழ்வின் அனைத்துப் பிரச்னைகளுக்கு தீர்வாக, ஈருலக வெற்றிக்கான வழியாக, இயக்கமாகச் சமர்ப்பித்தவர். இஸ்லாத்தை மதம் என்ற குறுகிய நோக்கிலிருந்து விடுவித்து தனது பேச்சு, எழுத்து மூலமாக ஓர் புதிய பார்வை, புதிய உலகத்தை படம் பிடித்துக் காட்டிய ஓர் ஆளுமையாக இந்திய துணைக் கண்டத்தின் இஸ்லாமிய இயக்க முன்னோடித் தலைவராகத் திகழ்கிறார் மெளலானா மெளதூதி.
ஓர் ஆளுமையைப் புரிந்து பயன்பெற வேண்டுமென்றால் அவர் வாழ்ந்த காலத்தைப் புரிந்து கொள்வது அவசியம். எத்தகைய காலத்தில் மௌதூதி வாழ்ந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் உலகம் தன்னம்பிக்கை இழந்த காலம். கிலாபத் தொலைந்து போன காலம். தேசியவாதம், மதக்குழுவாதம் இந்திய துணைக் கண்டத்தைக் கவ்விப் பிடித்து இருந்த காலம். முஸ்லிம்கள் அந்த இரண்டிற்குமிடையே தங்களைப் பங்கு போட்டுக் கொண்டு வாழ்ந்த காலம். தேசியவாதத்தின் பக்கம் காங்கிரசின் அழைப்பு. குழுவாதத்தின் பக்கம் முஸ்லிம் லீக்கின் அழைப்பு. முஸ்லிம்களின் அன்றைய நிலை எப்படி இருந்ததென்றால் ஒரு முஸ்லிம் தேசியவாதியாக இருக்கவேண்டும் அல்லது அவர் மதக்குழுவாதியாக இருக்க வேண்டும்.
இத்தகைய கால கட்டத்தில் மௌதூதி சாஹிப் முஸ்லிம்களை நோக்கி “முஸ்லிம்களே! உங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு தேசியவாதத்திலும் இல்லை, மதக்குழுவாதத்திலும் இல்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இஸ்லாத்தை சொல்லாலும், செயலாலும் சான்று பகருங்கள். இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்று வாழுங்கள். சத்தியத்திற்குச் சான்று பகருங்கள்” என்று மாற்றத்தின் குரலை எழுப்பினார். இக்குரல் ஓர் நம்பிக்கையை முஸ்லிம்களுக்கு வழங்கியது.
இந்திய துணைக் கண்டத்தின் நிலை இதுவென்றால், முழு உலகமும் மேற்கத்திய பண்பாட்டுப் பிடியில் மாட்டிக் கொண்டிருந்தது. கம்யூனிசம், முதலாளித்துவம் என இரண்டு பொருளாதார சித்தாந்தங்களில் உலகம் இரண்டாக பிளந்து இருந்தது. முஸ்லிம்கள் உள்ளிட்ட உலக அறிவுஜீவிகள் இந்தப் பண்பாட்டில் மூழ்கியிருந்தார்கள். இத்தகைய சூழலில் மிக நிதானமாக மௌதூதி மேற்கத்திய பண்பாட்டையும், முதலாளித்துவ கம்யூனிச பொருளாதார முறைகளையும் விமர்சித்து எழுதினார். இவை உருவாக்கிய தீமைகளை, அளிக்கின்ற நச்சுக்கனிகளை படம் பிடித்துக் காட்டினாரார். இவ்விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாகவும், விழிப்பு உணர்வை ஊட்டும் வண்ணமும் இருந்தன. இவ் வழிமுறைகளுக்கு ஓர் மாற்றாக இஸ்லாத்தை முன்னிறுத்தினார்.
வட்டியே பொருளாதாரம் என்று இருந்த காலகட்டத்தில் வட்டி ஒரு சுரண்டல், ஒரு கொடுமை என்று உரத்து முழங்கினார். மேற்கத்திய பண்பாட்டினால் மட்டுமே பெண்விடுதலை சாத்தியம் என்ற கருத்துருவாக்கம் நிலவிய அன்றைய சூழலில் இஸ்லாம் மட்டும்தான் உண்மையான பெண் விடுதலை மார்க்கம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார். மேற்கத்திய பண்பாடு பெண்களை ஓர் வணிகப் பொருளாக பாவிக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துரைத்தார். இவை எல்லாம் முழு முஸ்லிம் உலகமும் மௌனமாக தலைசாய்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒலித்த சத்திய ஒலி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் உருவாக்கிய ஆன்மிக, குடும்ப, பொருளாதார அரசியல் வடிவமைப்புகளை விமர்சித்ததுடன், படைத்த இறைவன் தூதர்கள் மூலம் அருளிய சத்திய வாழ்வியல் நெறியை தெளிவுபடுத்தினார்.
இந்தியக் கண்டத்தின் தேசியவாத, மதக்குழுவாத கொள்கைகளையும், உலகளாவிய முதலாளித்துவ, கம்யூனிச பொருளாதாரக் கொள்கைகளையும் , மனித உரிமைகள், பெண் விடுதலை, குடும்பவியல், அரசியல் போன்ற
மேற்கத்திய வழிகாட்டல்களை ஒரே நேரத்தில் தர்க்க ரீதியாக விமர்சித்தார். நீதமிக்க, நிரந்தர ஆரோக்கியமான தனிநபர், குடும்ப, பொருளாதார அரசியல் விழுமங்களை இறைவன்தான் அருளி வழிகாட்டமுடியும் என்பதையும் கருத்தியல் ரீதியாக நிறுவினார்.
கருத்தின் வாயிலாக மக்களை ஈர்த்த பல அறிஞர்களை இவ்வுலகம் பார்த்திருக்கிறது. இன்றும் இத்தகைய அறிஞர்களின் நூல்கள் உலகில் பல்வேறு நூலகங்களில் இருக்கின்றன. இவர்களில் மெளலானா மௌதூதி சற்று வித்தியாசப்படுகிறார். தாம் எடுத்தியம்பும் புரட்சிகரமான கருத்துகளைப் புரிந்து செயல்படும் ஓர் இலட்சியக் குழுவை உருவாக்கினார் என்பதே அந்த வித்தியாசம். இஸ்லாமிய எழுச்சி தனிநபரைச் சார்ந்திராமல் அது தொடர்ந்து செயல்பட வேண்டிய பணி என்பதை உணர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி என்ற பேரியக்கத்திற்கு மெளலானா வித்திட்டார். தனிநபர்கள் வருவார்கள் சென்று விடுவார்கள். இஸ்லாமிய இயக்கமோ இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் மௌதூதி மிகத் தெளிவாக இருந்தார். இதனால் தனது பணியின் வேகம் குறைந்தாலும் சரியே, காலம் கடந்து போனாலும் சரியே மக்களை ஒன்றிணைத்து பணிபுரிவதில் மிகுந்த பொறுப்பு உணர்வுடன் பணியாற்றினார்.
உலக பிரச்னைகளுக்கு இஸ்லாம் வழங்கும் தீர்வை மக்களிடம் சேர்ப்பதற்காக 1933-1941 வரை சுமார் 8 ஆண்டுகள் தர்ஜுமானுல் குர்ஆன் பத்திரிகையில் எழுதி வந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தனது கருத்துகளுக்கு ஆதரவு கிடைத்த பின் அவர்களை ஒருங்கிணைத்து 1941 ஆம் ஆண்டு 75 நபர்களுடன் ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கினார். பெரும் கால அவகாசம் ஏற்பட்டாலும் பணி தொடர, மலர இது அவசியமாக இருந்தது.
மௌலானா தமது எழுத்துகளின் மூலமாக மக்களுக்கு வாழ்வாதார குறிக்கோளை மிகத் தெளிவாக விளக்கினார். தீனை நிலை நாட்டுங்கள்; கூறு போடாதீர்கள்,பிரிந்து விடாதீர்கள். வாழ்க்கையை வணக்கமாக்குங்கள் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினார். குர்ஆனிய பிரபலமான (சொற்களாகிய) தாஅவா, இகாமத்தே தீன் போன்ற வார்த்தைகளை தமது எழுத்துகளின், உரைகளின் மூலமாக விளக்கினார். இகாமத்தே தீன் என்ற பெரும் பணியைச் செய்யும் ஒவ்வொரு தனிநபரும் இறைவனின் உவப்பையும், மறுமை வெற்றியையும் மட்டுமமே தூண்டுகோலாக வைத்து இயங்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.
இஸ்லாத்தை மதத்தைத் தாண்டி ஒரு மார்க்கமாக, வழிகாட்டும் நெறியாக நினைவூட்டினார். அழைப்புப்பணியை மறந்த காலகட்டத்தில் மீண்டும் நினைவூட்டி மக்களை அதன்பால் கவனத்தைத் திருப்பினார். இதர மதத்தினருக்கு சத்திய மார்க்கத்தை எடுத்துரைக்கும் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இயக்கத்தில் இணையாதவர்களுக்கு பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இஸ்லாம் ஓர் வாழ்க்கை நெறி என்பதையும் அதன் அடிப்படையில் வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் இஸ்லாம் வழி காட்டுவதையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.
ஊழியர்களுக்கு சிந்தனைத் தெளிவை ஏற்படுத்தினார். இந்த சிந்தனைத் தெளிவு இறையருளால் இந்த இலட்சியக் குழுவுக்குப் பரிசாக கிடைத்தது. சிந்தனை ஒற்றுமை, பயிற்சி, இஸ்லாமிய உலகில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்பத்தியது. ஜமாஅத்தே இஸ்லாமியின் தாக்கம் முழு உலகெங்கும் வியாபித்து இருக்கிறது. இத்தகைய சிந்தனையுள்ள மக்கள் உலகின் எந்தக் கோடியிலும் இல்லாமல் இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. மௌலானாவின் கருத்துகள், புத்தகங்களின் வடிவில் ஒலி, ஒளி மூலமாக இணையதளம் போன்ற நவீன சாதனங்களின் மூலமாக இறையருளால் உலகமெங்கும் பரவின.
இஸ்லாமிய இயக்கத்தை நிறுவிய அந்தக் காலகட்டத்தில் இருந்த சூழல் இன்றும் நிலவுகின்றது. மேற்கத்திய பண்பாட்டுத் தாக்கமும், கம்யூனிச முதலாளித்துவச் சிந்தனையும், இறைமறுப்புக் கோட்பாடும் இன்று வெவ்வேறு வடிவங்களில் வீரியமெடுத்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களிடையே குழுவாதம் தலைதூக்கியிருக்கின்றது. இந்தியா அழைப்பின் பூமியாகத் திகழ்கின்றது. இச்சூழலில் மெளலானா மெளதூதி இன்றைக்கும் தேவையானவராக இருக்கின்றார். சிந்தனைத் தளத்தில் மெளலானாவின் கருத்துகள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். உலகம் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றது. அமைதிக்காக தவித்துக் கொண்டிருக்கின்றது. பிரச்னைகளுக்கான தீர்வுக்காக அலைமோதிக் கொண்டிருக்கின்றது. இந்தக் காலச் சூழலில் இஸ்லாத்தை அனைத்திற்கும் தீர்வாக, ஆதாரத்துடன் நிறுவ வேண்டும். அதற்கான அழகிய வழிகாட்டுதல்களும், ஆழமான சிந்தனைகளும் மெளலானாவின் வாழ்வில் நிரம்பக் கிடக்கின்றது.
விருப்பு,வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, இயக்க மாச்சரியங்களைக் கடந்து மெளலானா மெளதூதியை நாம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். அவர் முன்வைக்கும் சித்தாந்த கருத்தியலை விரிவாக நாம் அலச வேண்டும். அதற்கான காலம்தான் இது. வாருங்கள் மெளதூதியைக் கற்போம்.