காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சிபிஐ ஒரு கூண்டுக்கிளி என பாஜக விமர்சித்தது. ஆனால் இன்றைக்கு பாசிச பாஜகவின் ஆட்சிக் காலத்தில் அமைப்புச் சட்ட நிறுவனங்கள் அனைத்தும் வாலாட்டும் வேட்டை மிருகங்களாக மாறிவிட்டன.
EC (தேர்தல் ஆணையம் – Election Commission)யும் ED (அமலாக்கத்துறை – Enforcement Directorate)யும் இப்போது எதிர்க்கட்சிகளை வேட்டையாடுவதற்குண்டான ஒன்றிய அரசின் ஆயுதங்களாக மாறிவிட்டன. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி, இயன்ற அளவு இன வெறி – இனவெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுவது. அதன் மூலம் தேர்தலில் வெற்றியை பெற முயற்சிப்பது. வெற்றி பெற இயலாவிட்டால், வெற்றி பெற்ற கட்சியின் எம்எல்ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் பிடிக்க முனைவது, அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றுவது.
அதுவும் இயலாவிட்டால், பிறகுதான் அமலாக்கத் துறையின் மாஸ் என்ட்ரி. பாசிச பாஜகவின் திட்டங்களுக்கு ஒத்துழைக்காத எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாடுவது. அமலாக்கத்துறை என்பது பொருளாதார குற்றங்களை விசாரிப்பதற்கான ஒன்றிய அரசின் ஏஜென்சியாகும். ஆனால் அதுதான் இப்போது ஒன்றிய அரசின் துருப்புச் சீட்டாக உள்ளது. அமித் ஷாவின் குதிரை பேர ஆயுதத்தை விட மிக பலமான ஆயுதம். மகாராஷ்டிராவில் குதிரைப் பேரத்தின் மூலம் ‘அகாடி முன்னணியின்’ ஆட்சியை வீழ்த்த முனைந்த ஷாவின் முயற்சி வீணான நிலையில், அமலாக்கத்துறை களத்தில் இறங்கியது. அதன் மூலம் உத்தவ் தாக்கரேவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதற்கு முன்பு கேரளாவில் தன் வேலையை காட்டியது அமலாக்கத்துறை. ஆனால் அப்போது அமலாக்கத் துறையின் மீது கேரள அரசு வழக்கு பதிந்தது.
ப. சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் எண்ணிலடங்கா முறை ரெய்டுகளை நடத்தியுள்ளது அமலாக்கத்துறை. நேஷனல் ஹெரால்டின் பெயரில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். அமலாக்கத்துறையின் தற்போதைய வேட்டைக்களம் மேற்கு வங்கமாகும்.
மம்தாவின் வலது கையாக இருந்து திருணாமூல் காங்கிரஸின் ஆட்சியை மேற்கு வங்கத்தில் உருவாக்க உறுதுணையாக இருந்து செயல்பட்ட பார்த்த சாட்டர்ஜிதான் அமலாக்கத் துறையின் மேற்குவங்க வேட்டையில் முதல் பலி. முதல் தாக்குதலிலேயே அவரது மந்திரி பதவி பறிபோனது. இப்போது அவர் காவல்துறை கஸ்டடியில் உள்ளார்.
அமலாக்கத்துறை அரசியல் எதிரிகளின் மண்ணில் மட்டும் கால் பதிக்குவது சரியா? மாநில உரிமைகளின் மீது செலுத்தப்படும் ஆதிக்கம் அல்லவா இது என்று பலரும் கேட்கிறார்கள். ஆனால் அமலாக்கத் துறையின் செயல்பாட்டில் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தவறுகள் எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. பொருளாதார குற்றங்கள் நடக்கும் இடத்தில் அமலாக்கத்துறை சென்று விசாரணை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. அதாவது மாநில அளவிலான காவல்துறை விசாரிக்க வேண்டிய சிறு சிறு குற்றங்களையும் தங்கள் இங்கிதத்திற்கு அனுசரித்து அமலாக்கத்துறை தலையிட்டு விசாரிக்கலாம் என்று பொருள்.
மேற்குவங்கத்தில் திருணாமூல் காங்கிரஸ் கட்சியை உருவாக்குவதிலும் ஆட்சியை கைப்பற்றுவதிலும் தீதிக்கு உறுதுணையாக இருந்த செயல் பட்ட பார்த்த சாட்டர்ஜியும் அர்பிதாவும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அமைச்சராக உள்ள பார்த்த சாட்டர்ஜி ஆசிரியர் நியமனம் தொடர்பான விஷயத்தில் பெரும் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமான ஒன்று. அமலாக்கத்துறை பல கோடி ரூபாய்களையும் நகைகளையும் கைப்பற்றி பார்த்தாவை கைது செய்துள்ள நிலையில், மம்தா பானர்ஜி அவரை மந்திரி சபையில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கி தன்னை காப்பாற்றியுள்ளார். தற்போது நடைபெற்றுள்ள நிகழ்வுகளை தனக்கு எதிரான சதித்திட்டத்தின் நீட்சியென பார்த்த சாட்டர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இதன் இறுதி விளைவு என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. பார்த்தா சட்டர்ஜி இறுதியில் பாஜகவில் இணைவார். பிறகு அவர் தூய்மையாளராக மாற்றப்படுவார். மேற்கு வங்கத்தில் பாஜகவை வலிமைப்படுத்துவதற்குண்டான தலைவர்களில் ஒருவராக அவர் மாற்றப்படுவார். ஏற்கனவே மம்தாவின் வலது கைகளில் ஒருவரான சுவேந்து அதிகாரியை தன்னகப்படுத்திய பாசிச பாஜக இப்போது அமலாக்கத்துறையின் மூலம் பார்த்தாவையும் பறிக்க முனைகிறது.
உச்ச நீதிமன்றம் கூறுவதைப் போல அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் நியாயமானதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் அனுமதிக்க கூடியதாகவும் உள்ளதா என்பதை நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இது நாள் வரை எதிர்க்கட்சி தலைவர்களின் மீதும் பாசிச பாஜகவிற்கும் ஒன்றிய அரசுக்கும் எதிராக குரல் எழுப்பி செயல்பட்டு வரும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும் 5430 தடவை அமலாக்கத்துறையின் ரெய்டு நடைபெற்றுள்ளது. 95300 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரெய்டுகளுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோ வெறும் 0.5 சதவீதம் மட்டுமே. 23 நபர்களுக்கு மட்டுமே குற்ற பத்திரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 800 கோடி ரூபாய் மட்டுமே அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அமலாக்கதுறையால் கைப்பற்றப்பட்ட அல்லது முடக்கப்பட்ட சொத்துக்கள், பொருளாதாரத்தின் மீது வழக்குகள் நடைபெற்று வருகிறது.
பொருளாதார மோசடிகளின் மீதான அல்லது குற்றச்சாட்டுகளின் மீதான அமலாக்கத்துறையின் ரெய்டும் விசாரணையும் பாஜக அல்லாதவர்களின் மீது மட்டுமே நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் – ஜனதாதள கூட்டணியை உடைத்து பாஜகவின் ஆட்சியை உருவாக்குவதற்காக ‘ஆபரேஷன் தாமரையின்’ பகுதியாக ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும் 50 கோடி ரூபாய் விலை பேசிய எடியூரப்பாவின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதுவும் அவர் பேசிய பேரங்களின் பேச்சுக்கள் வெளியான பிறகும் அமைதியை கடைப்பிடிக்கிறது அமலாக்கத்துறை.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை காலகட்டங்களின் போது புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்த ஜனார்த்தன ரெட்டி மீதோ சேகர் ரெட்டி மீதோ எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவேதான் நாம் உரத்த சொல்கின்றோம். அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புச் சட்ட நிறுவனங்களும் கூண்டுக்கிளிகளாக அல்ல, ஒன்றிய பாசிச பாஜக அரசின் வாலாட்டும் வேட்டை மிருகங்களாக மாறிவிட்டன.
- K.S. அப்துல் ரஹ்மான்