குடியரசு தினத்தன்று தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணிகள் கலவரத்தில் முடிந்திருப்பது துரதிருஷ்டவசமானது. கடந்த 62 நாட்களாக வெட்டவெளியில் கடும் குளிர், பனி மற்றும் மழை , நூற்றுக்கும் மேற்பட்டவர்களின்
உயிரிழப்பு ஆகியவற்றை சகித்துக்கொண்டு அமைதியான முறையில் போராட்டங்களை நடத்திவந்த விவசாயிகள்மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி தாக்குதலும் நடத்திய தில்லி காவல்துறை கண்டனத்திற்குறியது. இந்த முன்னுதாரனத்தை நாம் தூத்துக்குடியில் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம்.
ஏற்கனவே காவல்துறை சமூக விரோதிகள் பேரணியில் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக சொல்லியும் விவசாயிகளும் அதை பொருட்படுத்தவில்லை. விவசாயிகள் சற்று கவனமாக இருந்திருக்க வேண்டும்.காவல் துறையின் தாக்குதலுக்கு ஒரு விவசாயி உயிரிழந்திருக்கிறார் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல்துறை ஐ.டி ஓ அலுவலகம் மற்றும் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயிகளை தடுக்கத்தவறியதன் மூலம் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறிஇருக்கிறது.
சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்திருப்பதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் அரசு எதிர்பார்த்து காத்திருந்ததா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால்தான் பேச்சுவார்த்தை என்கிற பெயரில் இத்தனை நாட்கள் காலம் கடத்தினார்களோ என்ற சந்தேகமும் சேர்ந்தே எழுகிறது. உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனைக்குள்ளாக்கவேண்டியது காவல்துறையின் கடமை.
சீப்பை ஒழித்து வைத்தால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என்பதைப்போல இணையதளத்தை துண்டிப்பதன் மூலம் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது வேடிக்கையானது. பதினோருகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்திருப்பது அரசின் விவசாயிகள் மீதான அக்கறையின்மையும், பிடிவாதத்தையும் காட்டுகிறது. மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் கார்பாரேட்டுகளுக்கு அரசின் மீதான நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்ற மத்திய விவசாய அமைச்சரின் கூற்று, இந்த அரசு யாருக்கானது என்பதை தெளிவுபடுத்துகிறது.
உண்மையிலேயே இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு உபயோகமானது என்றால் அதை ஏன் அரசால் விவசாயிகளுக்கு புரியவைக்கமுடியவில்லை. சட்டம் இயற்றுவதற்கு முன்பாக விவசாயிகளிடத்தில் கலந்தாலோசிக்காமல், பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பாமல், பாராளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடத்தாமல் குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டத்தை நிறைவேற்றியிருப்பது பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு முரணானது. மேலும் விவசாயம் என்பது மாநில பட்டியலில் இருக்கிற ஒரு துறை. மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறவகையில் மாநில அரசுகளுடன் ஏந்தவித ஆலோசனையும் நடத்தாமல் இந்த சட்டங்களை இயற்றி உள்ளது. சட்டம் இயற்றுவதற்கு முன்பே நாடுமுழுவதும் பலலட்சம் மெட்ரிக் தன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்குகளை நிறுவி இருப்பது அம்பாணிக்கும் அரசுக்கும் உள்ள நெருக்கத்தை காட்டுகிறது. எனவே இந்த சட்டங்களை ரத்து செய்வது ஒன்றே தீர்வாக இருக்கமுடியும்.
தங்களின் உரிமைகளுக்காகவும், அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும் அஹிம்சாவழியில் போராடும் மக்களை தேசவிரோதிகள் என்றும், தீவிரவாதிகள், அர்பன் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் என்றும் பட்டம் கட்டி, புனையப்பட்ட பொய்யான வழக்குகள் மூலம் பழிவாங்குவதை இந்த அரசு வழக்கமாக கொண்டுள்ளது.அதே பாணியில் தற்பொழுது விவசாயிகளை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என்று சித்தரிக்க அடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் கலவரங்களை காரணம் காட்டி போராட்டத்தை கலைக்க நினைக்கிறது. அரசின் இந்த வலையில் விவசாயிகளும் வீழ்ந்து வீட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது.
மேலும் காலம் தாழ்த்தாமல் பிரதமர் தன் ஈகோவை கைவிட்டு உடனடியாக விவசாயிகளை அழைத்துப்பேசி இந்த பிரச்சினைக்கு முடிவுகாணவேண்டும்.
-அப்துர் ரஹ்மான்