இதுவரை நாம் பார்த்த குஜராத்தின் துறை ரீதியான தகவல்கள், அரசாங்கத்திற்குச் சாதகமாகவும், சாதாரண பாமர மக்களுக்குப் பாதகமாகவும் இருந்திருக்கலாம். மேலும் குஜராத் மக்களின் அன்றாட வாழ்க்கையை இத்தகைய துறைகளின் பிற்போக்குத்தனம் மறைமுகமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் குஜராத் மாநிலத்தை முன்மாதிரி மாநிலமாக உயர்த்தி காட்டுவதற்கான உந்து சக்தி அம்மாநிலத்தில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய அழிக்க முடியாத கறையை மறைப்பதற்காகத்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
2002 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவிக்கு வந்த முதல் ஆண்டிலேயே குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு படுகொலைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி பெரும்பான்மை இந்து மக்களை, சிறுபான்மை முஸ்லீம் மக்களிடமிருந்து பிரித்துக் காட்டி, தெளிவான திட்டங்களுடன் பிரித்து வாக்கு வங்கிகளாக மாற்றியது. இந்துத்துவ வாதிகள் முஸ்லிம் மக்களின் மீது வைத்திருந்த அருவருப்பை செயலளவில் செய்து காட்டி, முஸ்லிம்களை அவர்கள் பிறந்த நாட்டிலேயே பாதுகாப்பற்ற சூழ்நிலையை நிரந்தர வடுவாக உருவாக்கியது ஆர்எஸ்எஸ் காவி கார்பரேட் மோடியின் மிகச்சிறந்த செயல்திறனுக்கான எடுத்துக்காட்டு.
குஜராத் இனப்படுகொலை நடந்து முடிந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. குஜராத் முதல்வராகப் பதவியில் அமர்ந்தவர் இன்று இந்தியாவின் பாரத பிரதமராக இரண்டு முறை அரியணை ஏறிவிட்டார். ஆனால் நடந்து முடிந்த இவ்வினப்படுகொலையில் கொல்லப்பட்ட 2500 முஸ்லிம்களின் நீதிக்கான தேடலை பெரும்பாலான மக்கள் மறந்தே விட்டனர்.
கொடூரமான குற்றங்கலைச் செய்த, குற்றங்களுக்குக் காரணமான, குற்றங்களுக்கு உடந்தையான பல கொடூரர்கள் இன்று உயர் பதவிகலோடும் மரியாதைகளோடும் சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி வாழ்ந்து வருகின்றனர்.
குஜராத் இனப்படுகொலை நடைபெறுவதற்கு முழு காரணமாக இருந்த சம்பவம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தான். கோத்ரா என்ற பகுதியில் சபர்மதி என்ற விரைவு வண்டி எரிக்கப்பட்டு அதில் சுமார் 59 நபர்கள் ரயிலோடு எரித்துக் கொல்லப்பட்டனர். ஆனால் அதை நடத்திக் காட்டியது முஸ்லிம்கள்தான் எனவும், கொலை செய்யப்பட்ட அம்மக்களில் சில பெண்களை முஸ்லிம் பயங்கரவாதிகள் கற்பழித்து கொலை செய்தனர் என்ற புரளியும், காட்டுத்தீ போல குஜராத் மாநிலம் முழுவதும் மிக வேகமாக பரப்பப்பட்டது தான் இம்முழு இனக் கலவரத்திற்கும் காரணமாகும்.
குஜராத் படுகொலையில் உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர்கள், பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்த, அனுபவித்த கொடுமைகள், இன்னல்கள் கேட்பதற்கே நமது ஈரக் குலைகளை நடுங்கச் செய்பவை, பாதிக்கப்பட்ட மக்கள் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நாம் கேட்கும் போதோ அல்லது படிக்கும் போதோ ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் அனுபவித்த அந்த காலகட்டத்திற்கே கொண்டு சென்று விடுகின்றன. மனிதர்களில் சிலர் இவ்வாறும் கல்லுள்ளம் படைத்தவர்களாக இருக்க முடியுமா அல்லது இவர்கள் மனிதர் அல்லாத வேறெதும் மிருக உள்ளங்களைக் கொண்டவர்களா என்று ஒரு நிமிடம் நம்மை திக்கு முக்காடச் செய்யும் நிகழ்வுகள் அவை.
குஜராத்தின் தலைநகர் அகமதாபாத்தில் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டிருந்தால் ராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தி இருக்க முடியும். உள்ளூர் போலீஸ் மற்றும் அதிகாரிகளின் உதவி இல்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணிநேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.
குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக இருந்த ஆட்சி காலத்தில் காவல்துறையின் உளவு பிரிவு கமிஷனராய் பதவியில் இருந்தவர் சஞ்சீவ் ராஜேந்திர பட். அவர் தனது வாக்குமூலத்தில் குஜராத் இனப்படுகொலை நடந்து முடிந்ததற்குப் பிறகு குல்பர்கா சமூக கூடத்தில் நடந்த சம்பவங்களை தனது அனுபவங்களின் வாயிலாக பகிர்ந்து கொண்டதை பாருங்களேன்.
“நான் குல்பர்கா சமூகக்கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அப்பகுதியின் தரையெங்கும் மனிதச்சதை தீயில் பொசுங்கிப் பிசுபிசுபுக் கூழ் போல் இருந்தது. என் காலணியின் கீழ்ப் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக்கொண்டது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும், எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டி விட்டு முதல் பக்கத்தைப் பிரித்துப் பார்த்தேன். இஹ்ஸான் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகாக முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததை என்னால் காண முடிந்தது. அன்றைக்கு நான் அணிந்திருந்த ஷூவை அதற்குப்பின் பயன்படுத்தவில்லை, அதன் அடிப்பகுதியைச் சுத்தம் செய்யவும் இல்லை. எனது கையில் பாதி எரிந்து போன நிலையிலிருந்த அந்த புத்தகத்திலிருந்த அழகான கையெழுத்தைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்து நின்றேன். அந்த நேரத்தில் எனது பள்ளி நாட்களில் நினைவுகள் என் மனதிற்கு வந்தது. நான் சிறுவனாக இருந்தபோது இணையதளம் போன்ற வசதிகள் கிடையாது. என்சைக்ளோபீடியாவை படிக்க வேண்டும் என்றால் சில கிலோமீட்டர்கள் சைக்கிளை மிதித்து நூலகத்துக்குத் தான் செல்ல வேண்டும். எனது மாணவப் பருவத்தின் லட்சியமே ஒரு நல்ல என்சைக்ளோபீடியாவை சொந்தமாக வாங்குவதுதான். இதோ எனது கையில் இப்போது ஒரு என்சைக்ளோபீடியா இருக்கிறது. பாதி எரிந்து போன நிலையில் நெருப்பால் கருகிய மனித சதை கூழ் படிந்து போன நிலையில். நான் ஜாஃப்ரியை எனது வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. ஆனால் அந்த அழகான கையெழுத்து நிச்சயம் அந்த மனிதரின் பக்குவப்பட்ட கலாச்சாரத்தை எனக்கு உணர்த்தியது.” என்றார்.
குஜராத் இனப்படுகொலையின் ஆரம்ப நாட்களில் அச்சமடைந்த, எண்ணில் அடங்கா முஸ்லிம்கள் மெகாணி நகரில் உள்ள குல்பர்கா சமூகக் கூடத்தில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். பிப்ரவரி 28 ஆம் தேதி அங்கு தஞ்சம் அடைந்தவர்களின் ஒருவர்தான் காங்கிரசின் முன்னாள் எம்பி இஹ்ஸான் ஜாஃப்ரி. அன்று அந்த கூட்டத்துக்கு வெளியே முஸ்லிம்களைக் கொன்று போட வேண்டும் என்று கூச்சலிட்டுக்கொண்டு ஆர்எஸ்எஸ், பாஜக, விஎச்பி போன்ற இந்து பயங்கரவாத இயக்கங்களின் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் கள நிலவரத்தை அங்குள்ள காவல்துறை ஆய்வாளர், சஞ்சீவ் பட்டுக்கு ஜாஃப்ரி தெரிவித்திருக்கிறார். சஞ்சீவ் பட் தனது மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிகழவிருக்கும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். ஆனால் நிலைமை எவ்வித தாமதமும் இல்லாமல் எல்லையைக் கடந்து சென்றிருக்கின்றன.
இஹ்ஸான் ஜாஃப்ரியை வெளியே இழுத்து வந்த இந்து வெறியர்கள் அவரது கழுத்தில் நாய் பிடிக்கும் இரும்புச் சுருள் கண்ணியை மாட்டி இறுக்கி தரதரவென்று இழுத்து வந்துள்ளனர். அவர் இறந்த பின் அவரை துண்டு துண்டாகப் பிளந்து நெருப்பில் அடையாளம் தெரியாத அளவுக்கு எரித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் 69 முஸ்லிம்கள் படுகொலை செய்தனர்.
இவையெல்லாம் ஏதோ ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலைகள் அல்ல. சட்டென்று ஒருகண நேரக் கோபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அல்ல. ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் கைப்பேசி அவற்றில் உத்தரவுகள் வந்து கொண்டிருந்தன. முஸ்லிம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய தகவல்கள் அவர்களது கைகளில் இருந்தன. மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு, அங்கே சிலைகளும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில சம்பவங்களை நமக்கு புரியும் பொருட்டு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்…
கற்பழிப்புக்கு உள்ளாகி உயிர் பிழைத்த பில்கீஸ் என்ற பெண்ணின் கதை:
ராண்தீக்பூர் கிராமம், தாஹோத் மாவட்டம், மார்ச் 3, 2002.
21 வயது பில்கீஸ் 5 மாத கர்ப்பிணி. பிப்ரவரி 28ஆம் தேதி அவருடைய கிராமத்தில் இருந்த முஸ்லிம் வீடுகள் ஆதிக்க சாதியினராலும், வெளியில் இருந்து வந்து சேர்ந்து கொண்ட ஆட்களாலும் தாக்கப்பட்ட போது, அவரும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அங்கிருந்து தப்பித்து வெளியேறினார். இரண்டு நாட்கள் அவர்கள் கிராமம், கிராமமாக அலைந்திருக்கின்றனர்.
முதலில் அவர்கள் 5-6 கிலோமீட்டர் தள்ளி இருந்த சுன்டாகி என்ற கிராமத்திற்கு தப்பி ஓடி உள்ளூர் எம்எல்ஏ பிஜால் தாமோரின் வீட்டில் அடைக்கலம் புகுந்து இருக்கிறார்கள். அங்கிருந்து கௌஜேருக்கு நடந்தே சென்று இருக்கிறார்கள். அங்கு ஒரு பள்ளிவாசலில் அடைக்கலம் புகுந்து இருக்கிறார்கள். பள்ளிவாசலில் சமீம் ஒரு செவிலி தாயின் உதவியோடு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். பள்ளிவாசல்கள் கும்பல்களால் குறி வைத்து தாக்கப்பட்டு கொண்டிருந்ததால், விரைவிலேயே அங்கிருந்தும் போக சொல்லப்பட்டிருக்கிறார்கள். பச்சிளம் குழந்தையை அவளுடைய தங்கை தூக்கி வர, நடக்கவே முடியாத ஷமீமை இழுத்துக் கொண்டு எப்படியோ ஒரு வழியாக குத்பா கிராமத்திற்கு போய் சேர்த்து இருக்கிறார்கள். அங்கு ஷமீமின் நிலைமையைப் பார்த்து இரக்கம் கொண்ட அங்கிருந்த ஆதிவாசிகள், அவர்களை தங்கள் குடிசைகளில் தங்க வைத்திருக்கிறார்கள்.
பில்கிஸ் தொடர்கிறார், “அவர்கள் எங்களிடம் அன்போடு நடந்து கொண்டார்கள். ஷமீமின் ஆடைகள் அசுத்தமாக இருந்தன. ஆதிவாசிகள் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்த போதிலும், அவளுக்கு சுத்தமான ஆடைகளை அணிய கொடுத்தார்கள். எங்களுக்கு அங்கு சிறிது ஓய்வு கிடைத்தது. ஆனால் அங்கிருந்தும் போய்விட வேண்டி இருந்தது என்றாலும், அவர்கள் அடுத்த கிராமமான சப்பாத்வத் வரை பாதுகாப்பாக எங்களுடன் வந்து பத்திரமாக எங்களை விட்டு சென்றார்கள். அங்கிருந்து பாணி வேலி கிராமத்தை நோக்கி நகர ஆரம்பித்தோம். ஆள் நடமாட்டமே இல்லாத மலைப் பாங்கான பகுதி அது.
திடீரென்று ஒரு வண்டியின் சத்தம் கேட்டது. எங்களுடைய கிராமத்தை சேர்ந்தவர்களையும் வெளி ஆட்களையும் கொண்ட ஒரு டிரக் வந்தது. அவர்கள் எங்களுக்கு உதவுவதற்காக வரவில்லை என்று மட்டும் எங்களுக்கு தெரிந்தது. அவர்கள் எங்களை தடுத்து நிறுத்தினார்கள்.
நிலைமை தலைகீழாக மாறியது. என் கையில் இருந்த குழந்தையை பிடுங்கி எறிந்தார்கள். என்னையும் மற்ற பெண்களையும் சற்று ஒதுக்குப்புறமாக இழுத்துச் சென்று கற்பழித்தார்கள். என்னை மூன்று பேர் வன்புணர்ச்சி செய்தார்கள். நான் கதறிக்கொண்டே இருந்தேன். அவர்கள் என்னை அடித்து சாகும் நிலையில் விட்டுவிட்டு போய் விட்டார்கள். எனக்கு நினைவு திரும்பிய போது நான் மட்டும் தனியாக இருப்பதை உணர்ந்தேன். என்னை சுற்றிலும் என் உறவினருடைய உடல்கள். என் குழந்தை, ஷமீமின் பச்சிளங்குழந்தையின் சிதைந்த உடல்கள் சிதறி கிடந்தன. அவர்களுடைய உடல்கள் மீது பாறைகள் அழுந்திக் கிடந்தன.
அன்றிரவும், மறுநாளும் நான் அங்கியே கிடந்தேன். விழிப்பதும், நினைவிழப்பதுமாக கிடந்தேன். பிறகு லிம்கேதா காவல் நிலையத்தில் இருந்து வந்த ஒரு குழு என்னை கண்டுபிடித்தது. அவர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்தார்கள்”.
(ஆதாரம் AIDWA உண்மை அறியும் குழுவின் அறிக்கை)
தன்னுடைய மகளும் மற்ற பெண்களும் கற்பழிப்பு செய்யப்பட்டது பற்றிய மதினாவின் வாக்குமூலம்:
பாஞ்ச்மஹால் மாவட்டத்தில், கோல் தாலுகாவில் உள்ள ஏரால் கிராமத்தில், என்னுடைய மாமியார் வீட்டில் குழந்தைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தேன். என் மாமனார் ஓய்வு பெற்ற ஒரு பள்ளி ஆசிரியர். என் கணவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை செய்கிறார். எங்கள் கிராமத்தில் 45 முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன.
28ஆம் தேதி எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள், எல்லா இடங்களிலும் கலவரம் நடப்பதையும், அதனால் எங்களை உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேறி முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் கலோலுக்கு போய்விடும்படியும் கூறினர். என் மாமனார் அவருக்கு அந்த ஊரில் நல்ல மரியாதை இருப்பதாலும், காலம் காலமாக அவர்கள் அங்கேயே வசித்து வருவதாலும் யாரும் தாக்க மாட்டார்கள் என்று நம்பினார். ஆனால் மற்ற முஸ்லிம் குடும்பங்கள் அன்றே கலோலை நோக்கிக் கிளம்பி விட்டனர்.
ஆனால் பதட்டம் அதிகமானதும், தெலோல் கிராமத்திலிருந்து எங்களிடம் அடைக்கலமாக வந்திருந்த உறவினர் மெஹபூப் பாய் உட்பட எங்கள் குடும்பத்தினர் 13 பேர் வீட்டை விட்டு வெளியேறி வயல்களில் ஒளிந்து கொண்டனர். நாங்கள் ஒரு தாகூருக்குச் சொந்தமாக இருந்த காலி வீட்டில் ஒளிந்து கொண்டோம். இரண்டு இரவும், பகலும் நாங்கள் ஒளிந்திருந்த இடங்களை மாற்றிக் கொண்டே இருந்தோம். சனிக்கிழமை காலை நாங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்யச் சொன்னார்கள்.
நாங்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்து விட்டிருந்ததால் அவர்களுடைய வீட்டிற்கும் தீ வைத்து விடுவார்கள் என்று வீட்டுச் சொந்தக்காரர்கள் பயந்தார்கள். இரண்டு நாட்களும் எங்களுக்கு உணவும், தண்ணீரும் தந்து வந்த சாகன்பாய், எங்களுக்கு இந்த தகவலைச் சொன்னார்.
1 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி போலப் பயங்கரமான ஆயுதங்களும், பெட்ரோல், மண்ணெண்ணெய் வைத்திருந்த 400-500 பேர் கொண்ட கும்பல் ஒன்று, முஸ்லிம்களுடைய வீடுகளைக் கொள்ளையடித்துவிட்டு, பிறகு எரித்தார்கள். அன்று இரவு ஒருவரும் எங்களுக்கு அடைக்கலம் தரவில்லை. எங்களுக்கு உதவி செய்வதை யாராவது பார்த்துவிட்டால் அவர்களும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்று பயந்தார்கள்
ஞாயிற்றுக்கிழமை காலை, ஆதம் பஞ்சாவின் வயலிலிருந்த ஒரு வயல் கூலியின் குடிசையில் ஒளிந்து கொள்வது என்று நாங்கள் முடிவு செய்தோம். அன்று மதியம் 12-1 இருக்கும். கும்பல் நாங்கள் ஒளிந்திருந்த குடிசையைத் தாக்க ஆரம்பித்தது. எங்கேயும் போக வழி இல்லாமல் நாங்கள் கண்ட திசைகளில் சிதறி ஓடி சோளக்காட்டிற்குள் ஒளிந்து கொண்டோம். தரையில் படுத்துக் கொண்டு ஒரு சத்தமும் வராமல் இருக்க முயற்சி செய்தோம்.
ஆனால் கும்பல், சோளக்காட்டிற்குள்ளும் புகுந்து தேட ஆரம்பித்தது. எங்களில் சிலரைக் கண்டுபிடித்துத் தாக்க ஆரம்பித்தது. என் குடும்பத்தைச் சேர்ந்த பலர் தாக்கப்பட்ட போது, இரக்கம் காட்டுமாறு கெஞ்சி குக்கூறலிட்டதை என்னால் கேட்க முடிந்தது. என் மகள் சபானாவை, என் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இழுத்துக்கொண்டு போவதைப் பார்த்தேன். அவள் தன்னை தனியாக விட்டு விடும்படி கதறினாள். தங்களுடைய தன்மானத்திற்காக ரக்கியாவும், சுஹானாவும், சபானாவும் கெஞ்சிக் கதறிக் கூக்குரலிட்டு அழுதது எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது. என் இதயம் அச்சத்தாலும் கோபத்தாலும் சீறிக் கொண்டிருந்தது. என் மகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி வதைபட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத பூ போன்றவள் என் மகள். அவளுக்கு ஏன் இதை அவர்கள் செய்தார்கள்? என்ன வகையான மனிதர்கள் இவர்கள்? என் செல்ல மகளை அந்த மிருகங்கள் கந்தல் கந்தலாகக் கிழித்து எறிந்து விட்டார்கள். கொஞ்ச நேரம் கழித்து அந்த கும்பல், “அவர்களைத் துண்டு துண்டாக்கி விடுங்கள், ஒரு ஆதாரமும் விட்டு வைக்காதீர்கள்” என்றது. நெருப்பு கொளுத்தப்பட்டதைப் பார்த்தேன். அப்புறம் கும்பல் அங்கிருந்து போக ஆரம்பித்தது, எல்லாம் அமைதியானது.
தட்டுத் தடுமாறி வெளியே வந்த போது குழந்தைகளின் அழுகுரல் கேட்டது. ஒன்றை ஒன்று அணைத்துக் கொண்டு சிறார்கள் அழுது கொண்டு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். 11 பேரைக் கண்டுபிடித்து விட்ட கும்பல் 6 பேரைச் சித்திரவதை செய்து கொன்று விட்டது. குழந்தைகள் மட்டும் தப்பித்து விட்டனர். பிறகு காவல்துறை எங்களை கலோலுக்கு கொண்டு வந்து சேர்த்தது. (மதீனாவின் வாக்குமூலம் – AIDWA)
அடுத்த கட்ட சம்பவம் நம் மனதை உலுக்கக்கூடியதாக இருக்கலாம்.
“என் மைத்துனியின் தங்கை கௌஸர் பானுவுக்கு அவர்கள் இழைத்தது தான் எல்லாவற்றிலும் மிகவும் கொடூரமானது. அவள் 9 மாத கர்ப்பிணி. அவளுடைய வயிற்றை கிழித்து, கருவை வெளியே எடுத்து நெருப்பில் வீசினார்கள், அவளையும் நெருப்பில் தள்ளினார்கள்”
கூறியவர்: சாயிரா பானு, நரோதா பாட்டியா, (மார்ச் 27, 2002 ஷா-ஆலம் முகாமில் பதிவு செய்யப்பட்டது)
ஷா-ஆலம் முகாமில் இருந்தவர்களின் பலரும் இதுபோன்ற பல சம்பவங்களை பற்றி கூறினார்கள். சில சமயங்களில் விவரங்கள் சற்று மாறுபட்டு இருக்கும்.
கருவை தரையில் போட்டு அடித்தார்கள், கத்தியை கொண்டு கூறு போட்டார்கள், கத்தி முனையில் தொங்கவிட்டு நெருப்பில் வீசினார்கள்.
இன்னும் ஏராளமான கதைகள் இதுபோல் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் சொந்த கதைகள் போல இருக்கும். எண்ணிலடங்கா கொடூரங்கள் நடந்த நிலையில் படிக்கும் வாசகர்களாகிய நமக்கு அனுபவித்தவர்களின் வலியும், பயம் கலந்த அனுபவமும் தெரிய வாய்ப்பில்லை. பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தவர்களின் கற்பனையில் உதித்தவையா இவை?
ஆயிரக்கணக்கான கௌஸர் பானுக்கள் இன்று குஜராத்தில் இருக்கிறார்கள். மிகவும் கொடூரமான செயல்களை செய்தவர்கள் மட்டும் இன்று சுதந்திரமாக வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
“என் மைத்துனியின் தங்கை கௌஸர் பானுவுக்கு அவர்கள் இழைத்தது தான் எல்லாவற்றிலும் மிகவும் கொடூரமானது. அவள் 9 மாத கர்ப்பிணி. அவளுடைய வயிற்றைக் கிழித்து, கருவை வெளியே எடுத்து நெருப்பில் வீசினார்கள், அவளையும் நெருப்பில் தள்ளினார்கள்”
கூறியவர்: சாயிரா பானு, நரோதா பாட்டியா, (மார்ச் 27, 2002 ஷா-ஆலம் முகாமில் பதிவு செய்யப்பட்டது)
ஷா-ஆலம் முகாமிலிருந்தவர்களின் பலரும் இதுபோன்ற பல சம்பவங்களைப் பற்றிக் கூறினார்கள். சில சமயங்களில் விவரங்கள் சற்று மாறுபட்டு இருக்கும். “கருவைத் தரையில் போட்டு அடித்தார்கள், கத்தியைக் கொண்டு கூறு போட்டார்கள், கத்தி முனையில் தொங்கவிட்டு நெருப்பில் வீசினார்கள்” என.
இன்னும் ஏராளமான கதைகள் இதுபோலுள்ளன. ஒவ்வொன்றும் மனதை உலுக்ககூடியத்ஹக இருக்கும். இதைப் படிக்கும் வாசகர்களாகிய நமக்கு அனுபவித்தவர்களின் வலியும், பயம் கலந்த அனுபவமும் தெரிய வாய்ப்பில்லை. இவை என்ன பைத்தியம் பிடித்தவர்களின் கற்பனையில் உதித்தவையா? ஆயிரக்கணக்கான கௌஸர் பானுக்கள் இன்று குஜராத்தில் இருக்கிறார்கள். மிகவும் கொடூரமான செயல்களைச் செய்தவர்கள் இன்றும் சுதந்திரமாக வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
எந்தக் குழந்தையும் பார்க்கக் கூடாத விஷயங்களை சில குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள், சிலர் கேட்க மட்டும் செய்திருக்கிறார்கள் என்றாலும், குழந்தைகள் காதில் விழக்கூடாத வார்த்தைகள் அவை. கண்கள் நீர் ததும்பச் சொல்லியிருக்கிறார்கள். “இந்துக்கள் கெட்ட வேலைகளைச் செய்து விட்டார்கள்”.வன்புணர்விற்கு அவர்களது மொழியில் ‘கெட்ட வேலைகள்’ என்று பொருள். “பலாத்காரம் என்றால் என்ன என்று உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” ஒன்பது வயதுக் குழந்தை ஒன்று தானாக முன்வந்து. “பலாத்காரம் என்றால் ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி பின்னர் எரித்து விடுவது” சொல்லிவிட்டு தலையைக் கீழே கவிழ்த்துக் கொண்டு தரையை வெறித்துப் பார்த்துள்ளது.
ஒரு குழந்தையால் இப்படித்தான் சொல்ல முடியும். காரணம், நரோதா பாட்டியாவில் திரும்பத் திரும்ப நடந்தது இதுதான். பெண்கள் நிர்வாணப்படுத்தி வன்புணர்வு செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர்.
அகமதாபாத் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் காலணியான நரோடா பாட்டியா வில் நடந்த தாக்குதலின் போது 97 பேர் கொல்லப்பட்டனர். இந்த 97 பேரில் 30 பேர் ஆண்கள், 32 பேர் பெண்கள், 35 பேர் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர். இந்தப் படுகொலையின் போது கொல்லப்பட்டோரில் பெரும்பாலோர், கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு, அவர்களின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு எரித்தும் கொல்லப்பட்டனர். பெண்கள் கும்பல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு தீ வைத்து எரித்துக்கொல்லப்பட்டனர். இப்படி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டவர்களுள் 20 நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தையும், ஒன்பது மாத நிறை கர்ப்பிணியான கௌஸர் பானுவும் ஒருவர்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது முஸ்லிம்கள் மூலமாக, இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்கள் என்ற பொய் செய்தி குஜராத் எங்கும் காட்டுத் தீ போலப் பரவி இருக்கிறது. சராசரி நபரும் அதனை அறிந்து வைத்திருக்கிறார்கள். கோத்ரா சம்பவத்தை தலைப்புச் செய்தியாகத் தாங்கி வந்த ஒரு சில பத்திரிகையின் பிரதிகளைக் கையில் ஏந்திக் கொண்டு “இரத்தத்திற்கு இரத்தம்” என்று கத்திக் கொண்டு இந்துத்துவ வாதிகள் அலைந்திருக்கிறார்கள். அதைச் செய்தவர்களுக்கு எதுவும் புனிதம் இல்லை எனவும், அவ்வளவு மிருகத்தனமானவர்களால் தான் அவ்வாறு செய்ய முடியும் போன்ற கருத்துக்களின் காரணமாகவே முஸ்லிம்களின் மீதும் முஸ்லீம் பெண்களின் மீதும் இவர்களுக்குக் கோபம் வந்திருக்கிறது.
கோத்ரா ரயில் தீ விபத்து நடந்த மறுநாளே 10,000க்கும் அதிகமான இந்து மதவெறி பிடித்தவர்கள், நரோதா பாட்டியாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்திய சமயத்தில் அத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த மாயாபென் கோட்னானி, கைத்துப்பாக்கியோடு அப்பகுதியைச் சுற்றிச் சுற்றி வந்ததோடு, இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங்களையும், மண்ணெண்ணெய்யும் விநியோகம் செய்து கொண்டு இருந்திருக்கிறார். பெண்களையும், குழந்தைகளையும் தீயில் போட்டுத் துடிக்கத் துடிக்க எரித்துக் கொன்ற வெறியாட்டத்துக்கு தலைமை தாங்கிய மாயாபென் கோட்னானி ஒரு மகப்பேறு மருத்துவர். அதுமட்டுமல்லாது இனப்படுகொலை நடந்ததற்குப் பின் மோடியின் அமைச்சரவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறையில் துணை அமைச்சராக இருந்தவர். மேலும் இப்படுகொலையில் முக்கியமான முறையில் சம்பந்தப்பட்டவர், பாபு பஜ்ரங்கி. இவர் குஜராத் மாநில பஜ்ரங் தள் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். இவர்கள் இருவருக்கும் நீதிமன்றத்தின் மூலமாக தற்பொழுது தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது என்றாலும், தீர்ப்பிற்கு முன் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதவி மற்றும் அந்தஸ்து என்னவென்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வினப்படுகொலை நடந்து முடிந்து 20 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் ஒரு முறை கூட பிரதமர் நரேந்திர மோடி இதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. அன்றைய குஜராத் முதல்வராக இருந்தபோது முகாம்களுக்குக் கூட தரிசனம் செய்ததில்லை. 2500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது மட்டுமல்லாது தண்டிக்கப்பட வேண்டியவர், இப்போது பாரதத்தின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவியில் அமர்ந்திருக்கிறார்.
குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராகப் பதவியேற்றடிலிருதே அம்மாநில காவல்துறை துறையை முன்னே போதும் இல்லாத அளவிற்குக் காவி மயமாக்கும் பணியைச் செய்துள்ளார். அதன் விளைவு, கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் இரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல, கள்ளத்தனமாக மௌனம் சாதிக்கும், இந்த நாட்டின் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் அனைவருமே ஒருவகையில் இந்த படுகொலைக்கு உடந்தையானவர்கள் தான்.
இங்கனம் குஜராத் மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு மாதிரியாக இருந்திருக்க முடியும். ஆனால் அதை மாதிரியாக மாற்ற நினைத்தவர்களின் வக்கிர புத்தியும், அழுக்கு படிந்த உள்ளங்களும் அதை மாற்றாமல் மாதிரி போன்ற ஒரு மாயை ஏற்படுத்தி இருக்கிறது. தலைவர்கள் ஒருநாளும் தீய எண்ணங்களும், சூழ்ச்சிகளையும் கொண்டவர்களாக இருக்க முடியாது. “காலையில் கொடுத்தேன் கைது செய்தார்கள், மாலையில் கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்” என்பதுபோல் இருக்கும் ஆட்சியாளர்கள் மாற வேண்டும். சமூகத்திற்கு என்றைக்குமே ஆபத்து விளைவிக்கும் காவி சித்தாந்த கொள்கைகளைக் கொண்ட மக்கள், தங்களது எண்ணங்களைச் சித்தாந்த ரீதியான முறையில் மாற்றிக்கொள்ள வேண்டும். அது வரையில், குஜராத் மாநிலம் மாதிரியாக மாயை ஏற்படுத்துவதன்றி, நிரந்தர மாடலாக உருவாகவே முடியாது.