கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நடந்த தசாரா ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த சில நபர்கள் வலுக்கட்டாயமாக அப்பகுதியில் உள்ள மஹ்மூத் கவான் எனும் மதரஸாவிற்குள் நுழைந்து அவ்வாளாகத்தினுள் ஹிந்துமத கோஷங்களை எழுப்பியும் மற்றும் ஹிந்து சடங்குகளையும் செய்துள்ளனர்.
15 ஆம் நூற்றாண்டில் பிதார் பகுதியில் கட்டப்பட்ட இந்த முகமது கவான் மதரஸாவானது இந்திய தொல்லியல்துறை கணக்கெடுப்பின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
NDTV – ன் அறிக்கைப்படி இச்சம்பவம் தொடர்பாக 9 நபர்களின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமைக்குள் இது தொடர்பான யாரும் கைது செய்யப்படவில்லை என்றால் போராட்டங்களை நடத்தப் போவதாக முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவின் மூலம், இந்தக் கூட்டமானது மதரஸாவின் பூட்டை உடைத்து விட்டு உள்ளே சென்று பின் மதரஸாவின் படிகட்டுகளின் மேல் ஏறி நின்று “ஜெய் ஸ்ரீ ராம்” மற்றும் “ஹிந்து தரம் ஜெய்” போன்ற கோஷங்களை எழுப்பியது தெரியவந்துள்ளது.
அகில இந்திய மஜ்லிஸே இத்திகாமுல் முஸ்லிமின் அமைப்பின் தலைவர்அசாதுதீன் உவைசி, கர்நாடகாவின் பிஜேபி அரசானது இது போன்ற சம்பவங்களை ஊக்குவிப்பதன் மூலம் “முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துகின்றது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழில்
- ஹபிபுர் ரஹ்மான்