கல்வி அமைச்சகத்தின் கீழ் அகில இந்தியா அளவில் AISHE நடத்திய உயர் கல்விதொடர்பான ஆய்வறிக்கையில், இந்திய முஸ்லிம் சமூகம் பிற சமூகங்களை விடப் பின்தங்கியுருப்பது தெரிய வந்துள்ளது.
உயர்கல்வி சேர்க்கையில் பட்டியலின சாதிகள், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற சமூகத்தினரின் சேர்க்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் முன்னேறியுள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகம் 8% சரிவைச் சந்தித்துள்ளது. அறிக்கையில் சுமார் 1,79,000 முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சரிவிற்கு கொரோனா தொற்று பரவல் ஒரு விதத்தில் காரணமாக உள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிகள் திறமையான மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதைவிட பத்தாம் வகுப்பு முடித்தவுடனே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளி விடுகிறது
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 36%, ஜம்மு – காஷ்மீர் 26%, மகாராஷ்டிரா 8.5%, தமிழ்நாடு 8.1% என கணிசமான சரிவைக் கண்டுள்ளது. தில்லியில், முதுநிலைப் பள்ளிப் படிப்பை முடித்த ஐந்தில் ஒரு முஸ்லிம் மாணவர் உயர்கல்வியில் சேர்வதில்லை.
உத்தரப் பிரதேசத்தில், முஸ்லிம்கள் மக்கள் தொகை 20% ஆனால் உயர்கல்வியில் அவர்களின் சேர்க்கை வெறும் 4.5% மட்டுமே. நம்பிக்கையளிக்கும் வகையில் கேரளாவில் உயர்கல்வி படிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43% ஆக உள்ளது.
இந்த ஆய்வின் படி உயர்கல்வியில் OBC யினரின் சேர்க்கை 36% ஆக உயர்ந்துள்ளது. இதே போல் பட்டியல் சாதியினருக்கு 14% ஆக உயர்ந்துள்ளது. இவ்விரு சமூகங்களும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கிட்டத்தட்ட 50% இடங்களைப் நிரப்பியிள்ளனர்.
மாறாக, நாட்டின் ஜனத்தொகையில் 14%-க்கு மேல் இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் உயர்கல்வி சேர்க்கை வெறும் 4.6% மட்டுமே. மேலும் முஸ்லிம், பிற சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் ஆண் மாணவர்களை விட உயர்கல்வி படிப்பதில் அதிகமாக இருக்கின்றனர். இது இச்சமூகப் பெண்களின் முன்னேற்றத்தையும், ஆண்கள் ஆரம்ப நிலையிலேயே பணிக்குச் செல்ல வேண்டியுள்ள அழுத்தத்தையும் காட்டுகிறது.
இந்த ஆய்வு உயர்கல்வி நிறுவனங்களில் போதிய அளவில் முஸ்லிம் ஆசிரியர்கள் இல்லை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்தியாவில் உள்ள மொத்த ஆசிரியர்களில் 56% பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். OBC, SC, ST ஆசிரியர்கள் முறையே 32%, 9%, 2.5% உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் வெறும் 5.6% மட்டுமே ஆசிரியர்களாக உள்ளனர்.
உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை 4,13,80,71 ஆகும். மொத்த மாணவர் சேர்க்கையில் மாணவிகளின் சேர்க்கை 48.67% ஆகவும், மாணவர்கள் 51.33% ஆகவும் உள்ளது.
மத்திய அரசால் உயர் கல்வியைத் தொடரும் முஸ்லிம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை திட்டத்தை நிறுத்திய ஐந்து மாதங்கள் கழித்து மேற்சொன்ன ஆய்வு வெளியாகியுள்ளது. இதை ரத்து செய்தது முஸ்லிம் மாணவர்களை பெரிதளவில் பாதித்துள்ளது.
இந்த ஆய்வு உயர் கல்வியில் முஸ்லிம் சமூகம் சந்திக்கும் ஏற்றத் தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் தேவையையும் உயர்கல்வியைத் தொடர ஊக்கம், ஆதரவளிக்கும் சூழலையும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
அரசு எந்திரங்கள் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமூகத்தினருக்கு முறையான கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் கல்வி உதவித்தொகைகளை வழங்கவும், மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்குத் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திறமையான மாணவர்கள் நிதி நெருக்கடியின் காரணமாகக் கல்வியைக் கைவிடும் நிலை ஏற்படுவதும் தடுக்கப் படவேண்டும்.
அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் போன்றவை முஸ்லிம் சமூகம் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் கல்விக்கான சமவாய்ப்புகளை வழங்கவும் கல்விப் பிளவைக் குறைக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த சவால்களுக்குத் தீர்வு காண்பதன் மூலம் மட்டுமே நாட்டின் அனைத்து குடிமக்களும் ஏற்றத் தாழ்வுகளின்றி சமமாக வாழும் நிலையை உருவாக்க முடியும்.
(உதவி: The Cognate)