கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவத் தொடங்கிய 2019 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி ஆர்வத்தை தக்க வைப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சி தான் இந்த கல்வி தொலைக்காட்சி என்பது.
இந்த கல்வித் தொலைக்காட்சிக்கு புதிதாக ஒரு C.E.O பதவி கடந்த மே மாதம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் விண்ணப்பித்த 20 க்கும் மேற்பட்ட நல்ல தரமான கல்வி மற்றும் ஊடகவியல் பின்னனி கொண்டோரிலிருந்து ஏனோ, ஆர்எஸ்எஸ் பின்புறம் கொண்டவரும், சாணக்கியா YOuTube Channel இன் இணை இயக்குனர்களில் ஒருவருமான மணிகண்ட பூபதிக்கு தற்போது அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆளும் திமுக கட்சியினர் தொடங்கி, அதன் தோழமை கட்சியினர் தொட்டு, திமுக அரசு உருவாகுவதற்கும், உருவான அரசின் சாதனைகளை விளக்கிச் செல்வதிலும் பெரும்பங்கு ஆற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுமே கூட இந்த நியமனத்தை கடுமையாக எதிர்த்த நிலையில், தற்போது இவரது நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தி.மு.க தனது கட்சிக்காரர்களை வைத்து இளைஞரணி சார்பில் “திராவிட மாடல் பயிற்சிப் பாசறை” நடத்தி, தி.மு.க-வின் அரசியல் வரலாறு குறித்தும், திராவிட சித்தாந்தம் குறித்து வகுப்புகள் எடுத்துவருகிறது. இந்தச் சூழலில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வி தொலைக்காட்சியின் முதன்மைச் செயலாளராக வலதுசாரி சிந்தனை உடைய மணிகண்ட பூபதி என்பவரை நியமித்ததது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சி என்ற பெயருக்கு மட்டும் சொல்லிக் கொள்ளும் இந்த ஆட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து அதனுடைய செயல்பாடுகளில் இருந்து வரும் இந்துத்துவ சித்தாந்த சார்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு முறை எதிர்ப்புகளை சந்திக்கும் பொழுதும் இவ்வாறு அறிவிப்புகள் பின்வாங்கப்படுவதும், தள்ளி வைக்கப்படுவதும், மறைமுகமாக அவை நடைமுறைப்படுத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் பள்ளிப் பாடங்களும், UPSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகள் மற்றும் அரசு வேலை வாய்ப்பு தேர்வுகள் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம், மனிதம் வளர்க்கும் நல்லொழுக்கம், மனிதநேயக் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை குறித்த கல்வி பரவலுக்காக 40 சதவீதம் ஒதுக்கப்பட்டு நிகழ்ச்சிகள் தயாராகி ஒளிபரப்பாகின்றன.
மாணவர்களின் அடிப்படை அறிவை, சிந்திக்கும் பாங்கை வளர்த்தெடுக்கும் இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஊடக தலைமை பொறுப்பை இந்துத்துவ பக்க சார்பு கொண்ட ஒரு நபருக்கு அளித்ததோடு மட்டுமல்லாமல் அதை அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை ஊடகங்கள் கேள்வி கேட்கும் பொழுது, “இதனால் ஒன்றும் குடி மூழ்கி போகாது!” என்று கூறுவதும், எந்த மாதிரியான திராவிட போக்கு என்பது புரியவில்லை!?!.
ஒரு நிறுவனத்தின் கொள்கை வழிப்போக்கை தீர்மானிக்க கூடியவராக, அதை உறுதி செய்யக் கூடியவராக இருக்கக்கூடிய ஒரு பொறுப்பு மிக்க பதவிக்கு புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பேசி வலதுசாரி சிந்தனை போக்கை தமிழகத்தில் பரவலாக்குவதற்காக ஒரு ஊடகத்தையும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் மண்ணுக்கு மாற்றான சிந்தனை போக்கு கொண்ட ஒரு நபரை அரசு தனது கல்விக் கொள்கைகளை தீர்மானிக்கும், வழிநடத்தும் இடத்தில் வழிகாட்டியாக நியமிப்பதை பெரும் அதிர்ச்சிக்குரிய செயலாகவே நாம் பார்க்கின்றோம்.
ஏற்கனவே இந்த CEO நியமனத்தில் அதீத கவனம் எடுத்து ஆர்வமுடன் செயல்பட்ட தமிழக கவர்னரின் ஆர்வத்தையும், அதற்கு துணை நின்ற அரசு எந்திரங்களையும் இனி அதீத விழிப்போடு அரசு கண்காணிக்க வேண்டும். “திராவிடம் மாடல்” என்று வெறும் வார்த்தைகளிலும், நிகழ்ச்சிகளிலும் மாத்திரம் சொல்லாமல் இந்த அரசு திராவிட வெறுப்பை – வலதுசாரி சித்தாந்த ஆதரவை கொண்ட இதுபோன்ற நபர்கள் அரசு நிறுவனங்களில், அரசு எந்திரங்களில், முடிவெடுக்கும் அதிகாரம் வட்டத்தில் தொடர்ந்து இயங்கி வருவதை கவனமுடன் கண்காணித்து, விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இனி வரக்கூடிய காலங்களில் சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற நியமனங்கள், உத்தரவுகளை அரசு கண்காணித்து உரிய முறையில் செயல்படுத்தும் உத்திரவாதத்தையும் மக்களுக்கு அளித்திட வேண்டும்.
இதனிடையே மணிகண்ட பூபதியின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது நியமனத்திற்கு காரணமான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை பதவி விலகக் கோரியும் இன்று #Resign_AnbilMahesh என ட்விட்டரில் ட்ரோல் ஒன்று வைரல் ஆகி வருகின்து. இது நிச்சயம் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை!
தேர்தல் அறிக்கையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்து ஆட்சிக்கு வந்த திமுக கழகம் இன்று புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களை விட முனைப்போடு செயல்படுவதை வேதனையோடு இந்த பிரச்சனையோடு சேர்த்து பார்க்க வேண்டி இருக்கின்றது. இன்று எல்லா அரசு பள்ளிகளிலும் ‘மேலாண்மை குழுக்கள்’ என்ற பெயரில் பள்ளிகளின் நடைமுறைகளை நிகழ்வுகளை வடிவமைப்பதை தனி நபர்களிடம் கொடுத்து விட்டதையும் இதோடு சேர்த்து பார்க்க வேண்டி இருக்கின்றது.
“கல்வித்துறையை மாநில பட்டியலுக்கு மாற்றும்” என்கிற கொள்கை பூர்வமான எதிர்பார்ப்பை இந்த திராவிட மாடல் அரசு பொய்யாக்கிவிட்டது.இனியும், மேடைப்பேச்சுகளில் மட்டும் திராவிட மாடலை முன்னெடுப்பதை விட்டுவிட்டு செயல் பூர்வமாக நடைமுறையில் அதனை சாதித்துக் காட்ட இந்த அரசு முன்வரவேண்டும்.
“ஆரியம் மக்களுக்கு எதிரானது, திராவிடம் மக்களுக்கானது” என்று இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆதரவாளர்களின் குரலுக்கு அரசு இனியேனும் செவிசாய்க்க முன் வரட்டும்.
வரலாற்றுப் புதினங்களில் மகாராஜாக்கள் மந்திரிகளை பார்த்து, “அமைச்சரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?” என்று கேட்பதைப்போல, மக்களைப் புரிந்துகொள்ளாமல், அவர்களின் அன்றாட பாடுகளை – எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ளாமல் ஆள்வது என்ன ஆட்சி?
ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பிரச்சனையையும், அது ஊதிப்பெரிதான பிறகு பின்வாங்கி தற்காலிகமாக நிறுத்துவது ஓர் நல்ல அரசின் லட்சணங்களில் ஒருபோதும் அடங்காது. அது நல்லாட்சிக்கான அடையாளமும் அல்ல!…
- ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். V – எழுத்தாளர்