கற்றல் – கற்பித்தலில் எழுந்துள்ள சிக்கல்கள்
கல்விச் சூழலில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சமீபகாலமாக தொடர்ந்து கூடிக்கொண்டே வந்திருக்கின்றன. இதில் கொரானாகால கல்விச்சூழல் பெற்றோர் – ஆசிரியர் -மாணவர் என்ற முத்தரப்புக்கும் இந்த நெருக்கடிகளை அதிகப்படுத்தி புதிய சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. அத்தகைய பிரச்சினைகளை தொகுத்தும் பகுத்தும் பார்க்கலாம்.
பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
கல்வி விலை உயர்ந்த பண்டமாக மாறிவிட்ட வர்த்தக அமைப்பில், வருமானத்தை இழந்து எதிர்கால அச்சத்தில் நிற்கும் உழைக்கும் மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக வேகமாக மாறிவருகிறது.
வருமானத்திற்கான வழிகள் அடைக்கப்பட்டு, அடிப்படை வாழ்வியல் ஆதாரங்களுக்கே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் நிலவுவதால் கல்வியை இரண்டாம் பட்சமாக கருதும் போக்கு விளிம்புநிலை மக்களிடம் பரவியிருக்கிறது.
கல்விச்சூழலை விட்டு சாமான்ய மக்கள் செய்வதறியாது முற்றிலுமாக ஒதுங்கி நிற்கிறார்கள்.
கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்களில் 50% மேற்பட்டோர் எழுத்தறிவற்ற வர்களாகவே இருக்கிறார்கள் எனும் பின்னணியில் நவீன தொழில் நுட்ப கருவிகளின் மூலம் முன்னெடுக்கப்படும் கல்வியை விட்டும் அவர்கள் முற்றிலும் அந்நியப்பட்டு விடுகிறார்கள். ஏற்கனவே தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு பயிற்றுவித்தல் அளவில் எந்த பங்களிப்பையும் இவர்களால் செய்ய முடிவதில்லை. மேலும் தங்கள் பிள்ளைகளின் கற்றல் பிரச்சினைகள் குறித்தும் அவர்களால் தக்கமுறையில் ஆசிரியர்களோடு உரையாடவும் முடிவதில்லை. இந்த நிலையில் முழுதும் விநோதமான கல்வி அமைப்பில் அவர்கள் எங்ஙனம் பொருந்த முடியும்?
சாமான்யர்களின் உயிர்வாதைக்கே பதிலில்லாத அரசியல் அமைப்பில், அனைவருக்கும் கல்வியை உத்திரவாதப்படுத்தும் எந்த முன்னெடுப்பும் காத்திரமான செயல் திட்டங்களும் கல்வித் துறையிடம் இல்லை.
குறைவான நேரம், குறைவான பாடம், மேலாண்மை செலவுகள் என எல்லாமே குறைந்து போன நிலையில் முழுமையான கட்டணத்தை வசூலிப்பதில் கறாராக இருக்கும் கல்வி நிறுவனங்களின் நியாயத்தை ஒருவரும் விளக்க முன்வரவில்லை.
மருத்துவம் உள்ளிட்ட சில தொழில்முறை படிப்புகளை ஆன்லைனில் பயிற்றுவிக்க முடியாது. நேரடியான பயிற்சியில்தான் உண்மையான கல்வியே இருக்கிறது. அது முற்றாக தவிர்க்கப்பட்ட நிலையிலும் நிறைய கல்வி நிறுவனங்கள் முழுக் கல்வி கட்டணத்தைக் கேட்கிறார்கள். அத்துடன் விடுதியில் தங்கவோ, சாப்பிடவோ இல்லாத இந்த நான்கு மாதத்திற்கு மட்டுமின்றி, இனிவரும் மாதங்களுக்கும் முழுப்பணமும் கட்டச் சொல்கிறார்கள்! கல்வியை வியாபாரமாகக் கூட செய்யாமல் பெரும் பணம் பறிக்கும் சூதாட்டமாக நடத்தும் இந்த அட்டூழியமும் எந்த கேள்வியுமின்றி தொடரத்தான் செய்கிறது.
அப்படி முழுக்கட்டணம் செலுத்திய பிறகும் திறன்பேசி, இணைய கட்டணம் போன்ற கூடுதல் செலவுகளையும் சந்திக்க வேண்டிய அவலநிலையில் சாமான்யர்கள் தவிப்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை..
திறன்பேசிகள் வெளிப்படுத்தும் நீலஒளிக் கதிர்கள் பார்வை குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதால் அதை தவிர்க்க பிரத்தியேக eyezen கண்ணாடிகள் பயன்படுத்த வேண்டிய தேவையில் அதற்காகவும் கூடுதல் செலவுகளை சந்திப்பது பெரும் அபத்தமாகத் தென்படுகிறது.
கொரானா கதவடைப்பால் கேள்விக்குறியாகிவிட்ட குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியம், ஒழுங்கமைவு ஆகியவை அலட்சியமாக கடந்து செல்லப்படுகின்றன.
பள்ளிகள் மூடப்பட்டதால் பொறுப்பற்றுத் திரியும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலையோடு மாற்றுத் திட்டங்கள் எதுவும் விவாதத்திற்குக் கூட எடுக்கப்படவில்லை.
கொரானா காலமும் கல்வியாண்டு முடிவும் ஒரே காலகட்டத்தில் பொருந்திப் போனாதால் கல்வி இடைநிற்றல் அதிகரித்துள்ளது.
பணியில் இருக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் கல்விப் பொறுப்பையும் ஏற்பது சாத்தியமில்லாத விசயம் என்பதும் கருத்தில் கொள்ளப்படவில்லை. இந்த மாதிரியான நிலையில் குழந்தைகள் கவனிக்க ஆளின்றி தனித்து விடப்படுகிறார்கள்.
ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்டால் – சீர்தர இயக்கச் செயல் முறைகளை (standard operating procedures) பின்பற்றும் கட்டமைப்புகளை அரசு உறுதிபடுத்தி இருக்கிறதா?
நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளையும் உரிய கண்காணிப்பு பொறிமுறைகளையும் அரசால் வழங்க முடியுமா?
மாணவர்களுக்கு மத்தியில் போதுமான ஸ்தூல இடைவெளிகளையும் உளப்பூர்வமான பிணைப்புகளையும் ஏற்படுத்தும் வண்ணம் என்ன வகைமாதிரிகளுக்கு ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் பயிற்றுவிக்கப் பட்டுளளனர்..?
-லியாக்கத் அலி கலிமுல்லாஹ்