இந்திய பன்மைச் சூழலில் சமத்துவம் என்பதை பெருமளவு சாத்தியப் படுத்தியவை கல்விக்கூடங்கள் என்றால் அது மிகையாகாது. வேறுபட்ட பழக்கங்கள், பழகுமுறை பண்பாடுகள், பேச்சு வழக்குகள், சாதி – மத பிளவுகள், சமூக சடங்காச்சாரங்கள் ஆகியவற்றிற்கு இடையே கல்வி கற்க ஓரிடத்தில் வந்து குழுமிய மாணவர்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்தனர். உரிமைகளைப் பேசினர். சமூகத் தளைகளை அகற்றி சிந்திக்கத் தலைபட்டனர். ஆசிரியர் – மாணவர் உறவு கற்பித்தலுக்கான கருவியாக மட்டும் அமையாமல், மனிதமனங்களைக் கட்டிப்போடும் நுட்பமான உளவியல் சங்கிலியாகவும் உருவெடுத்தது. அந்த சங்கிலித் தொடர்பைத் துண்டிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அதில் முக்கியக் கண்ணியாக இணையவழிக் கல்வியைக் கையில் எடுத்துள்ளது சிபிஎஸ்இ.
கல்விச் சூழலில் கூடுதல் ஏற்றத் தாழ்வைப் புகுத்தும் இணையக்கல்வி, பள்ளிக்கூடங்களின் பின்னணியில் செயலாற்றும் சமூகப் பொறுப்பை அரித்துத்தின்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே இன்னும் 8.5 கோடி குழந்தைகள் பள்ளியையே எட்டிப் பார்க்காத நிலையில் குறைந்தபட்சம் 3-10 வயது பிரிவினருக்காவது கல்விக் கூடங்கள் இன்றியமையாத் தேவையாக இருக்கின்றன. கல்விச் சூழலை விட்டு அதிகம் பேரை வெளிதள்ளும் போக்கையே அவ்வப்போது வெளிப்படுத்தி வரும் கொள்கை முடிவுகள் இவை எவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கத் தயாராயில்லை.
கொரானா அச்சத்தைக் காட்டி பள்ளிகளை மூடிவைத்து இணையத்தின் வழி மெய்நிகர் (virtual) போதனாமுறை படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உலகளவில் மிகப் பிரபலமான லேன்சட் என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரை ஒன்றில், “பள்ளிகள் மூடப்பட்டதால் தடுக்கப்பட்டதாக சொல்லப்படும் கோவிட் மரணங்கள் ரொம்பவும் குறைச்சலாகவே இருக்கின்றன. ஆனால் கல்வி புகட்டுவதை விட்டு விலகியதால் ஏற்பட்ட முகத்தில் அறையும் அதீத தீமைகளை அப்படி குறைத்து மதிப்பிட முடியாது” என்று கூறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.
இணைய வழிக் கல்வியின் சாதக பாதகங்களை அறிய அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இணைய வகுப்பில் கல்வி கற்கும் மாணவா்களில் 48% பேர் தங்களின் வாராந்திர பாடத்தை முடிக்க முடியாதவர்களாகவும், 45% பேர் கருத்தூன்றி படிப்பதில் பிரச்சினை உள்ளவர்களாகவும், 40% பேர் நாளொன்றுக்கு மூன்று மணி நேரத்திற்குக் குறைவாகவே படிப்பில் நாட்டம் உடையவர்களாகவும், 81% பேர் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே காணொளி வகுப்புகளுக்கு வருகை புரிந்தவர்களாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளிச் சூழலில் இது நிச்சயம் மேம்பட்டதாயிருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் பள்ளிகள் மூடப்படுவதால் குழந்தை தொழிலாளர், கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்றவை அதிகரித்துள்ளதாகவும் சில ஆய்வுகள் தெரிவித்தன.
இதெல்லாம் தொலைதூர கல்வியில் நெடிய அனுபவமும் ஆற்றலும் கொண்ட சிறந்த தொழில் நுட்பங்களும் கண்காணிப்புகளும் உள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் என்றால் இப்படி எந்த தரவுகளும், இயங்கியலும் இல்லாத இந்தியாவின் நிலைமை என்ன என்பதை சொல்லத்தான் வேண்டுமோ? இந்த கட்டமைப்புகளை வைத்துக் கொண்டு தான் விளிம்பு நிலை மாணவர்களை நுரை தின்று பசியாற சொல்கிறது அரசு. சமூகத்தின் அடிதட்டுகளில் இருந்துவரும் ஒரு குழந்தை இந்த ஆலோசனைகளின் ஊடாகவே கல்விச்சூழலை எப்படி அனுமானிக்கும்? எங்ஙனம் இந்த விசித்திர கற்பனா உலகில் பொருந்திப் போகும்?
(தொடரும்)
-லியாக்கத் அலி கலிமுல்லாஹ்