மூன்று வேளாண் சட்டங்களையும் விலக்கிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் பிரதமர். விவசாயிகளின் வருமானத்தையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க உதவும் என்ற நம்பிக்கையில், சுதந்திரச் சந்தை ஆதரவு பொருளாதார அறிஞர்கள் இச்சட்டங்களை ஆதரித்தனர். மாறாக, இவை விவசாயிகளைப் பெருந்தொழில் நிறுவனங்களின் லாப நோக்குக்கு ஏற்ப செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளிவிடும் என்று இடதுசாரி பொருளாதார அறிஞர்கள் எதிர்த்தனர்.
என்னைப் பொருத்தவரை, சட்டங்களின் உள்ளடக்கத்தைவிட, அவை உருவாக்கப்பட்டதிலும், அவசர கதியில் எப்படி அணுகப்பட்டன என்பதிலும்தான் பிரச்சினை அதிகம் என்பேன். அவற்றை சட்டமாக்கிய விதமும், விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க இந்த அரசு கையாண்ட கொடூரமான அடக்குமுறைகளும், ஜனநாயக வழிமுறைகளையும் நடைமுறைகளையும் அப்பட்டமாக மீறிய செயல் என்பேன்.
முட்டாள்தனம்
இந்திய அரசமைப்புச் சட்டப்படி, வேளாண்மை என்பது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலுக்குள் வருவது ஆகும். ஆனால், மூன்று வேளாண் சட்டங்களும் எந்தவொரு மாநில அரசையும் – பாஜக ஆளும் மாநிலங்களைக்கூட – ஆலோசனை கலக்காமலேயே இயற்றப்பட்டன. இந்த அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிந்த வகையில், சட்டத்துக்கான வரைவு மசோதாக்கள் பிரதமருடைய அலுவலகத்திலிருந்துதான் தயாராகியிருக்க வேண்டும் – மத்திய அமைச்சரவையிடமிருந்து மசோதாவுக்கான கருத்துகள் ஏதும் பெறப்பட்டிருக்காது, வேளாண் துறை அமைச்சரிடம்கூட கருத்து கேட்கப்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன்.
கோடிக்கணக்கான இந்தியர்களைப் பாதிக்கும் எந்தவொரு முடிவும், ஒருதலைபட்சமாக, தன்னிச்சையாக இப்படி எடுக்கப்படுவதுதான் மோடி அரசு பதவியேற்றது முதலாக நடக்கிறது. எல்லோருக்கும் பொருந்தும் என்ற நோக்கில் மேலிருந்து கொள்கைகளைத் திணிப்பது, குறிப்பாக வேளாண்மை போன்ற துறைகளில் முட்டாள்தனமான காரியம்.
மாநிலங்களைப் புறக்கணிக்க முடியுமா?
சூழலியல் மாநிலத்துக்கு மாநிலம் – மாநிலத்துக்குள்ளேயே பகுதிக்கு பகுதி – மாறுபடும் பன்மைத்துவம் உள்ள நாடு இது. மண் வகைகள், தண்ணீர் வளம், பாசன முறைகள், பயிர்வாரி முறை, நில உடைமை வரலாறு என்று அனைத்து அம்சங்களிலும் பெருத்த வேறுபாடுகள் இருக்கும்போது, மாநிலங்களுடன் ஆலோசனை கலக்காமலேயே எப்படி சர்ச்சைக்குரிய முடிவை பிரதமரால் எடுக்க முடிகிறது?
உருவான வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அதன் ஒப்புதலைப் பெறும் நடைமுறையும், நாடாளுமன்ற மரபுகளுக்கும் நடைமுறைகளுக்கும் சிறிதும் மரியாதை அளிக்காமல் வெகு அலட்சியத்துடன் மீறப்பட்டது. பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மையுள்ள இந்த மசோதாக்களை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் பரிசீலனைக்கு முதலில் அனுப்பியிருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்குள் விவாதிப்பதுடன், அந்தந்த துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை வரவழைத்து மசோதாவின் சாதக – பாதகங்களை அலசி ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அளித்திருப்பார்கள்.
மக்களவையில் பாஜகவுக்கு உள்ள பெரும்பான்மை வலு காரணமாக, அங்கு வெகு எளிதாக சட்டம் நிறைவேறிவிட்டது. மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்தபோது பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்குமா என்ற ஐயம் பாஜகவுக்கு ஏற்பட்டது. அங்கே எதிர்க்கட்சிகளுக்கு வலுவான பிரதிநிதித்துவம் நிலவுகிறது. இந்த மசோதா மீது விரிவாக விவாதிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்போடு காத்திருந்தன. ஆனால் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவம்சியோ அதைத் தடுத்துவிட்டார். தான் அப்பதவிக்கே அருகதையற்றவர் என்பதைத் தெரிவிக்கும் வகையில், அதன் மீது வாக்களிக்க அனுமதி தருவதை மறுத்து, குரல் வோட்டுக்கு விடுவதாகக் கூறி, அதிலும் ‘ஆம்’ என்போர் அதிகம் என்று அவராகவே கூறி, மசோதா நிறைவேறிவிட்டதாக அறிவித்தார்.
விவசாயிகளிடம் உருவெடுத்த சந்தேகம்
வேளாண் சட்டங்கள் ரகசியமான உருவாக்கப்பட்ட விதமும், நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்றிய அவசரமும் வட இந்திய விவசாயிகளிடத்தில் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியது. மாநில வேளாண் அமைச்சர்களுடன் வெளிப்படையாகவும் விரிவாகவும் விவாதித்திருந்தால், இந்தச் சட்டத்தோடு தொடர்புடையவர்களின் கருத்துகளையும் கேட்டு மசோதாவில் சேர்த்திருந்தால், நாடாளுமன்றமும் இதை வெகு கவனமாக விவாதிக்க அனுமதியளித்திருந்தால் விளைவுகள் வேறு மாதிரியாகக்கூட இருந்திருக்கும். இதே சமயத்தில் அம்பானி, அதானி போன்ற பெருந்தொழில் நிறுவனங்கள் வேளாண் விளைபொருள்களை வாங்கும் தொழிலில் தீவிரமாக இறங்கி, சந்தைக்கு வந்த நிகழ்வும் விவசாயிகளின் கவலையையும் பதற்றத்தையும் கூட்டிவிட்டன.
விவசாயச் சட்டங்களின் தன்மையைப் பார்க்கும்போது அதிக பலன்களைப் பெறும் வாய்ப்பு அதானி தொழில் குழுமத்துக்கு இருப்பது புலனாகிறது என்று அரசியல் விமர்சகர் ஹர்தோஷ் சிங் பால், ‘தி காரவான்’ இதழில் வெளிப்படையாகவே எழுதிவிட்டார்.
விவசாயிகளின் சத்யாகிரகம்
இந்தியக் குடியரசின் கூட்டாட்சி முறையையும், நாடாளுமன்றத்தையும் மோடி அரசு எந்த அளவுக்குத் துச்சமாக மதிக்கிறது என்பதையே விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் பறைசாற்றுகிறது. இயல்பான ஜனநாயகப் பிரதிநிதித்துவ நடைமுறைகள் அனைத்தையும் பிரதமர் மோடி இதில் அப்பட்டமாக மீறியதால், எதிர்ப்புத் தெரிவிக்க சத்யாகிரக முறையைக் கையாண்டார்கள் விவசாயிகள்.
புதுதில்லி மாநகருக்கு வெளியே எல்லைப்புறங்களில் அவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர், வானமே கூரையாக இருந்த இடத்திலேயே அமர்ந்தனர், இரவுகளில் படுத்தனர். தங்களுடைய கோரிக்கையின் வலிமையை உணர்த்தப் பாடினார்கள், கதைகளைச் சொன்னார்கள்.
போராட்டக்காரர்கள் அனைவரும் பாராட்டும்படியாக அகிம்சையைக் கடைப்பிடித்தார்கள். ஆனால், ஒன்றிய அரசு அவர்களை முரட்டுப் பிடிவாதத்தோடு அடக்குமுறைகளால் சந்தித்தது. போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் மீது கலவரத் தடுப்பு வாகனத்திலிருந்து, தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. சாலைகளில் விவசாயிகளின் வாகனங்கள் செல்ல முடியாதபடி டயர்களைக் குத்தி கிழிக்க சூலங்களைப் போல கூரான இரும்புக் கம்பிகள் நடப்பட்டன. போராட்டக்காரர்கள் தங்களுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியாமல் இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
அரசு கையாண்ட அடக்குமுறைகளுக்கு இணையாக, மோடி ஆதரவு ஊடகங்கள் போராட்டக்காரர்களை ‘மாறுவேடத்தில் வந்த காலிஸ்தானிகள்’ என்று வசைபாடின.
விவசாய சத்யாகிரகிகள் அஞ்சவில்லை. போராட்டத்தின்போது ஏற்பட்ட தட்ப-வெப்பநிலைத் தாக்குதல்களாலும் நோயாலும் நூற்றுக்கணக்கில் விவசாயிகள் உயிரிழந்தனர். இருப்பினும் தொடர்ந்து போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் பலமுறை ஆலோசனை கலக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது – இருந்தும் பிரதமர் அதில் பங்கேற்காமல் விலகியே இருந்தார்.
பிரதமரின் பகடி
ஏகாதிபத்தியர்களின் தலைநகரத்துக்கு வெளியே விவசாயிகள் மன உறுதியோடு காத்திருந்த நிலையில், பிரதமர் அவர்களை, ‘போராடியே உயிர்வாழ்பவர்கள்’ (ஆந்தோலன் ஜீவி) என்று நாடாளுமன்றத்துக்குள் பகடிசெய்தார். போராட்டம் சில நாள்களுக்குப் பிறகு பிசுபிசுத்துவிடும் என்று எதிர்பார்த்தார். அப்படி நேரவில்லை.
இப்போது ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு அடுத்து பொதுத் தேர்தல் நடைபெறப்போவதாலும், அங்கெல்லாம் ஆட்சியைத் தக்கவைக்கவோ, புதிதாக ஆட்சியமைக்கவோ பாஜகவால் முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதாலும், நவம்பர் 19 வெள்ளிக்கிழமை நாட்டு மக்களிடையே ஊடகங்களில் நேரடியாகத் தோன்றி திடீரென உரை நிகழ்த்தினார் மோடி.
மோடியின் பதினேழு நிமிடப் பேச்சில், பதினைந்தாவது நிமிடத்தில்தான் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் திடீர் திருப்பமான முடிவு இடம்பெற்றது. அதற்கும் முன்னால், மற்றவர்களைவிட தனது அரசு அதிகமாக விவசாயிகளுக்காகத்தான் செய்திருப்பதாக பலவற்றை அவர் பட்டியலிட்டார். இருப்பினும், தான் எடுத்த முடிவை அவர் திரும்பப் பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. தன்னுடைய செயலால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்காக வருந்தி பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்டது இதுவே முதல் முறை.
எதற்கும் வருந்தியது இல்லை
குஜராத்தில் முதல்வராக மோடி பதவி வகித்த 2002-ல் ஏராளமானோர் வகுப்புக் கலவரத்திலும் காவல் துறையின் நடவடிக்கைகளிலும் இறந்தபோது அவற்றுக்காக அவர் வருந்தியதில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு நிருபர் ஒரு பேட்டியின்போது அதை நினைவுபடுத்திக் கேட்டபோது, கலவரத்தில் இறந்தவர்களை (பெரும்பாலும் முஸ்லிம்கள்) – கார் வேகமாகச் செல்லும்போது திடீரென்று வந்து அதில் சிக்கி அடிபட்டு இறக்கும் பூனையோடு ஒப்பிட்டார். அதற்குப் பிறகு மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு அவரே நேரடிக் காரணம் என்றாலும் அவர் வருத்தம் தெரிவித்ததே இல்லை. 2016-ல் எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்காக அவர் வருந்தியதே இல்லை. இது இந்தியப் பொருளாதாரத்தையே சீரழித்ததுடன், லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டது. கோவிட்-19 பெருந்தொற்று நோயின்போது, திடீரென அறிவிக்கப்பட்ட திட்டமிடப்படாத முழு ஊரடங்கால் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் பரிதவித்தனர். சிலர் செத்து விழுந்தனர். சொந்த ஊர்களுக்குப் போவதற்கு வாகனங்கள் கிடைக்காமல் சாலைகளிலும் ரயில் பாதைகளிலும் நடந்தும், சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை நெடுந்தொலைவு ஓட்டியும் உணவு, குடிநீரின்றி பதைபதைப்புடன் வெளியேறியதைத் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் புகைப்படக்காரர்களும் படம் பிடித்து, காலாகாலத்துக்கும் அழியாத நினைவுச் சித்திரமாக பதிவுசெய்துவிட்டனர். அதற்காகவும் அவர் வருத்தப்பட்டதில்லை. எனவே மன்னிப்பு கோருகிறேன் என்று வெள்ளிக்கிழமை அவர் செய்த அறிவிப்பு முக்கியமானது, இதற்கு முன் நடந்திருக்காத செயல், கடந்த காலச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
தேர்தல் கணக்கு
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், இதே போன்ற நவம்பர் மாதத்தில்தான் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து விலக்க்கிக்கொள்ளப்படுகின்றன என்று திடீரென்று அறிவித்தார் மோடி. உத்தர பிரதேசத்தில் அடுத்து நடைபெறவிருக்கும் சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத்தான் மோடி இந்த அறிவிப்பைச் செய்கிறார் என்று சில அரசியல் பார்வையாளர்கள் அப்போது விமர்சித்தனர்.
பாஜக அல்லாத அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுக்காக வைத்திருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளைச் செலவழிக்கவும் முடியாமல், மாற்றவும் முடியாமல் அழிய வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிச் செய்யப்பட்டதாக அவர்கள் கருதினர். கடந்த வெள்ளிக்கிழமை அவர் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது நிச்சயம் உத்தர பிரதேச சட்டப் பேரவை பொதுத் தேர்தலுடன் நேரடியாகத் தொடர்புள்ளது. உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பெரும் எண்ணிக்கையில் இந்தக் கிளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். தேர்தலில் அவர்களுடைய ஆதரவு மிகவும் முக்கியப் பங்கை வகிக்கப்போகிறது.
புதிய வேளாண் சட்டங்களைத் தீவிரமாக ஆதரித்தவர்களில் சிலர், அவை திரும்பப் பெறப்படுவது குறித்துத் தங்களுடைய ஆதங்கத்தை சுட்டுரையில் (ட்விட்டர்) வெளியிட்டுள்ளனர். ‘இது நாட்டுக்கு மிகப் பெரிய பின்னடைவு’ என்று அவர்கள் வருந்தியுள்ளனர். அதைத் தீர்மானிப்பதற்கான காலம் கனிந்துவிடவில்லை. வேளாண் மசோதாக்கள் சரியாக தயாரிக்கப்பட்டனவா, இப்போதுள்ள நிலையில் அவற்றால் நன்மைகளை வழங்கிவிட முடியுமா என்பதிலேயே பொருளாதார நிபுணர்களிடம் கருத்துவேற்றுமைகள் நிலவுகின்றன. இந்தச் சட்டங்களால் கிடைக்கப்போகும் முடிவுகள் சிறப்பானவை என்றே வைத்துக்கொண்டாலும் அதற்காக, பழிக்கக்கூடிய விதத்தில் அவற்றை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை.
வேளாண் சட்டம் தயாரிக்கப்பட்ட விதமே கூட்டாட்சி முறையைச் சிறிதும் மதிக்காமல் இருந்தது. அதை இரு அவைகளிலும் நிறைவேற்றிய விதம் நாடாளுமன்றத்தின் புனிதத்தை அரசு மதிக்கவில்லை என்பதையே உணர்த்தியது. அமைதியாகப் போராடியவர்கள் மீது அரசு கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளும், அவர்களுக்கு பயங்கரவியர்கள் என்று பட்டஞ்சூட்டியதும் இந்தக் குடியரசு எந்த லட்சியங்களின் அடிப்படையில் உருவானதோ அவற்றுக்கே மரியாதை இல்லை என்பதையே உணர்த்தியது. எனவே வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட நிகழ்வானது சத்யாகிரகத்துக்குக் கிடைத்த வெற்றி, உண்மையின் வலிமைக்கு உரைகல், ஆணவத்துக்கும் அகந்தைக்கும் கிடைத்த சம்மட்டி அடி.
மிகவும் அரிதான, எப்போது வேண்டுமானாலும் திசை திரும்பக் கூடிய – சர்வாதிகாரத்தை ஜனநாயகம் வென்ற நிகழ்வு இது; எப்படியிருந்தாலும் இது வெற்றிதான்!
ராமச்சந்திர குஹா – எழுத்தாளர்