மூன்றாவது முறையாக ‘ஜனநாயக முறையில்’ சர்வாதிகாரியாக பொறுப்பேற்றவர் என்ற ‘புகழுக்குரிய’ ரஷ்யாவின் ‘குடியரசுத் தலைவர்’ விளாடிமிர் புடின், சுதந்திர ஜனநாயக நாடான உக்ரைனை ஆக்கிரமித்து, தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க கூடிய நேரத்தில் வெளிவந்துள்ள ஒரு ஆய்வு அறிக்கை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்வீடனில் கோதன்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள வரைட்டீஸ் ஆஃ டெமோக்ரசி (வி – டெம்) என்ற தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட டெமோக்ரசி ரிப்போர்ட் 2022 அறிக்கையில் ஏகாதிபத்தியத்தின் முறையும் செயல்பாடுகளும் மாறி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் தங்களது அதிகார பலத்தால் உலகத்தை மென்மேலும் ஏகாதிபத்தியத்தின் பக்கம் இழுத்துக் கொண்டு செல்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். 180 நாடுகளில் உள்ள 3700 நிபுணர்கள் 300 இலட்சம் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கையை தயார் செய்துள்ளனர். இதில் கடந்த பத்தாண்டுகளில் உலகில் ஜனநாயக முறைமைகளுக்கு ஏற்பட்ட மோசமான மாற்றங்களும் அதன் மூலம் உருவான தீய விளைவுகளையும் எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள். சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மென்மேலும் வலுப்படுத்தும் என்று கருதப்பட்ட அதன் சில தத்துவங்களே அதனுடைய தவறான பயன்பாட்டிருக்கும் சீர்குலைவுக்கும் காரணமாக அமைந்துள்ளது என்ற அனுபவ உண்மைகளை அந்த அறிக்கை அளிக்கின்றது. உலகம் மெல்ல மெல்ல சர்வாதிகாரத்தின் பக்கம் பலவிதங்களிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பதன் வெள்ளிடை சித்திரம்தான் வி – டெம் அறிக்கை.
சர்வதேச அளவில் சர்வாதிகாரத் தன்மை வலுப்பட்டு வருகிறது என்றும் அது உள்நாட்டு கலவரங்களுக்கும் நாடுகளுக்கு இடையேயான சண்டைகளுக்கும் வழிவகுக்கும் என்றும் சமூக அறிஞர்களும் அரசியல் நிபுணர்களும் முன்னரே எச்சரிக்கை செய்துள்ளனர். அந்த திசையை நோக்கிய பயணத்தில்தான் இந்தியா உட்பட பல நாடுகள் சென்று கொண்டிருக்கிறது என்ற சூழலில் வி – டெம் அறிக்கை அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த அறிக்கையின் அடிப்படையில், ஜனநாயக வழிமுறை அனுமதித்துள்ள எதிர் குரல்களை நசுக்குவது, தேர்தல் முறைமைகளை மாற்றியமைப்பது அல்லது சீர்குலைப்பது, நீதி-நிர்வாக முறைமைகள் நடைமுறையில் இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கட்டளைக்கு இணங்க அவற்றை கட்டுப்பட வைப்பது, சமூகப் பிளவுகளையும் இனப்பாகுபாடுகளையும் உருவாக்குவது, அதற்காக தவறான புள்ளி விவரங்களை தயார் செய்வது, அவற்றை பிரச்சாரம் செய்வது போன்ற வேலைகளையெல்லாம் அரசாங்கத்தின் மேற்பார்வையிலும் ஆசீர்வாதத்தோடும் அதிகாரப்பூர்வமான செயல்பாடாக மாற்றுவது போன்ற செயல்பாடுகள்தான் இப்போது சர்வாதிகாரத்தின் புதிய நடைமுறையாக உள்ளது. ஜனநாயகத்தை படுகொலை செய்து, உலகத்தை சிதைக்கும் பேராபத்தின் பக்கம்தான் இன்று உலகம் சென்று கொண்டிருக்கிறது என வி – டெம் அறிக்கை எச்சரிக்கை செய்கிறது.
இந்த புதிய ஏகாதிபத்திய பாதையில் பயணிக்கும் நாடுகளில் முன்னணியில் உள்ள 6 நாடுகளில் ஒன்றுதான் இந்தியா. ஜனநாயகத்தையும் அதன் முதன்மை அடையாளமான வாக்குரிமையையும் சர்வாதிகாரத்திற்காக எவ்வாறு தவறாக பயன்படுத்தலாம் என்பதற்கான மோசமான முன்னுதாரணமாக இந்தியா திகழ்கிறது என அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பன்முகதன்மை எதிர்ப்பாளர்களான கட்சிகள்தான் பிரேசில், ஹங்கேரி இந்தியா, போலந்து, செர்பியா, துருக்கி என்ற 6 நாடுகளில் சர்வாதிகார ஆட்சி முறைமைக்குத் தலைமை வகிக்கின்றன. ஜனநாயகப் பற்றின்மை, சிறுபான்மையினரின் உரிமை மறுப்பு, அரசியல் எதிராளிகளை குறித்து தவறாக சித்தரிப்பது, அரசியல் வரம்பு மீறல்கள், தாக்குதல்கள் போன்றவைகள் எல்லாம் பன்முகத் தன்மையை அங்கீகரிக்காத இவர்களின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சிகள் தேசியவாதத்தின் பிரச்சாரகர்களாக மாறி தங்களது சொந்த அஜெண்டாவை பொதுமக்களின் மீது வம்படியாக திணிக்கிறார்கள். 2014இல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, ஜனநாயகத் தேர்தல் முறைமையில் இருந்து ஏகாதிபத்தியத் தேர்தல் முறைமையின் பக்கம் சென்று கொண்டிருக்கிறது இந்தியா. வெளிப்படையான ஜனநாயகம் என்ற பட்டியலில் 2013 க்கு பிறகு இருபத்தி மூன்று புள்ளிகள் குறைவாகப் பெற்று கீழே இறங்கி இருக்கிறது இந்தியா. கடந்த பத்து வருடங்களில் உலகம் சென்று கொண்டிருக்கும் ஏகாதிபத்தியமயமாக்கலின் பாதையில் குறைவான காலகட்டத்தில் மிக விரைவான மாற்றங்களை இந்தியா அடைந்து இருக்கிறது என அந்த அறிக்கை கூறுகிறது.
உலக மக்கள் தொகையில் 44 சதவீதம், அதாவது 340 கோடி மக்களை அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறது இந்த புதிய ஏகாதிபத்திய ஆட்சி நடைமுறை. அது விரைவாக 70% ஆக மாறும் பேராபத்து உள்ளது. தாராளவாத ஜனநாயகம் வெறும் முப்பத்து நான்கு நாடுகளில் மட்டுமே உள்ளது. தேர்தல் ஜனநாயக முறைமைகள் 55 நாடுகளில் உள்ளதாக 2021 இறுதியில் சொல்லப்பட்டாலும் உலகின் 16 சதவீத மக்கள் மட்டுமே அதை உள்ளபடியே அனுபவிக்கின்றனர்.
தேர்தல், சட்ட ஆட்சி, கருத்துச் சுதந்திரம், அமைப்பு சுதந்திரம் போன்றவைகள் எல்லாம் 2011இல் முப்பதிற்கும் அதிகமான நாடுகளில் அதிகரித்தது. ஆறு நாடுகளில் குறைந்தது. ஆனால், அது 2021ல் தலைகீழாக மாறிவிட்டது. 35 நாடுகளில் ஜனநாயக அடையாளங்கள் சீர்குலைவை சந்தித்த நிலையில், பத்து நாடுகளில் மட்டும்தான் அது பாதுகாப்பாக உள்ளது. கடந்த பத்து வருடங்களில் நாற்பத்தி நான்கு நாடுகளில் குடியுரிமை அமைப்புகள் (civil society) நசுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தன்னார்வ சேவை அமைப்புகளின் மீது, ஆட்சி – அதிகாரம் அமைப்புகளைப் பயன்படுத்தி நடந்து கொண்டிருக்கும் தாக்குதல்களும் உருவாக்கப்படும் தடைகளும் நாம் அறிந்ததே. இந்தியா உட்பட 37 நாடுகளில் அங்குள்ள குடியுரிமை அமைப்புகளை அந்தந்த அரசாங்கங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. இனப் பிளவுகளும் இனப்பாகுபாடும் அதன் உச்சத்தில் உள்ளது. எதிர்க்கட்சிகளையும் எதிர்க்குரல்களையும் தங்களுக்கு அச்சுறுத்தலாக கண்டு ஒழித்துக்கட்ட முனைவது, தேச பாதுகாப்பு என்ற பெயரில் ஜனநாயக நடைமுறைகளையும் சட்டங்களையும் சீர்குலைப்பது, நாம் / அவர்கள் என்ற வேறுபாடுகளை கற்பித்து மக்களை பிளவுபடுத்துவது, தங்களுக்கு சாதகமாக பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதற்காக தவறான புள்ளி விவரங்களையும் தகவல்களையும் உருவாக்கி அரசாங்கத்தின் ஆதரவோடு சமூக ஊடகங்களில் பரப்புவது போன்றவைகள் ஏகாதிபத்திய அரசாங்கங்களின் பொதுவான தன்மைகளாக மாறியிருக்கிறது.
ஆனால் இவர்களைத் தடுக்கவே இயலாதோ என்று என்னும் அளவிற்கு ஏகாதிபத்திய சக்திகள் முன்னேறிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், இவர்களுக்கு எதிராக ஜனநாயகவாதிகளால் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கும் போராட்டங்கள் இருள் சூழ் உலகில் ஏற்றப்படும் வெளிச்சக் கீற்றுகளாய் நம்பிக்கையை விதைக்கிறது. ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டங்கள் கடந்த இரண்டு வருடங்கள் முன்பு வரை வலுப்பெற்று வந்தது. ஆனால், கோவிட் கொள்ளை நோயால் ஏற்பட்ட சூழலை பயன்படுத்தி அவற்றை சற்று மட்டுப்படுத்த ஏகாதிபத்திய அரசாங்கங்களால் முடிந்தது. பெருந்தொற்று நோயின் பிடியிலிருந்து உலகம் மீண்டு வரும் நிலையில் மீண்டும் ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கான மக்கள் போராட்டங்கள் உயிர்த்தெழும் என எதிர்பார்க்கலாம். அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மட்டும்தான் நமது கவலைக்கான மருந்து.
கே.எஸ். அப்துல் ரஹ்மான் – எழுத்தாளர் .