இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (CERT) இணைந்து ஜூன் 20 அன்று புதுடெல்லியிலுள்ள பிரஸ் கிளப் ஆப் இந்தியாவில், கல்வியிலுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களைவதற்கும், கல்வித்துறையில் சம வாய்ப்புகளை ஏற்ப்படுத்தவும் உடனடி நடவடிக்கையெடுக்கக் கோரி ‘ஷிக்ஷா சம்வாத் 23’ எனும் நாடு தழுவிய கவன ஈர்ப்பு பிரச்சார இயக்கத்தைத் துவங்கியுள்ளது. இவ்வியக்கம் சரிந்துவரும் முஸ்லிம்களின் உயர்கல்வி சேர்க்கை வீதத்தை குறைப்பதையும் அனைவரும் கல்வி பெறுவதற்கான சம வாய்ப்புகளை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர் நிவேதிதா மேனன் “பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கும், வாய்ப்புகளைத் திறக்கும் ஒரு மாற்றும் காரணியாக இருக்கக்கூடிய கல்வி அனைத்து மக்களுக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எப்படியோ AISHE ஆய்வறிக்கை உன்மைநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அது, உயர்கல்வி சேர்க்கையில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்டோர் முறையே 4.2%, 11.9%, 4% முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை வீதம் 8% வீழ்ச்சியடைந்துள்ளதாகச் சொல்கிறது, இது தோராயமாகக் கடந்த ஆண்டின் மொத்த வீழ்ச்சியான 1,80,000 மாணவர்களுக்குச் சமமாகும்,” எனக் கூறினார். தொடர்ந்து, இந்த சரிவுக்கான அடிப்படைக் காரணங்கள் “முஸ்லிம்களுக்குக் குறைந்த வேலைவாய்ப்புகளையே வழங்கும் பக்கச்சார்பான தொழிலாளர் சந்தை, குறிவைக்கப்பட்டு முஸ்லிம்கள் அடுக்கடுக்கான தொடர் வன்முறைகளுக்கு இலக்காவது போன்றவை அவர்களின் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளது. இவையே அவர்களின் தரமான கல்விக்கான அணுகளைத் தடுத்துள்ளது”என்று கூறியுள்ளார்.
Quill (குயில்) அறக்கட்டளையையின் ஆய்வு மாணவர் ஃபவாஸ் ஷஹீன், AISHE-ன் ஆய்வை குறிப்பிட்டு உயர்கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம் போதுமான அளவு இல்லாததை அடையாளப்படுத்தி “56% பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களும், 32%, 9%, 2.5% முறையே OBC, SC மற்றும் ST பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் உள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் வெறும் 5.6% மட்டுமே உள்ளனர். மேலும் இந்த ஆய்வு கல்வித்துறையில் இருக்கும் பாலின ஏற்றத்தாழ்வையும் தோலுரித்துக் காட்டியுள்ளது. மற்ற பிரிவுகளில், 100 ஆண் ஆசிரியர்களுக்கு 75 பெண் ஆசிரியர்கள் எனும் வீதத்தில் உள்ளனர், ஆனால் முஸ்லிம்களில் 100 ஆண் ஆசிரியர்களுக்கு 59 பெண் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.” என்று விளக்கினார்.
SIOவின் தேசிய செயலாளர் அப்துல்லா ஃபைஸ், 2006இல் சச்சார் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அளவு தற்போது முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கவில்லை என்றாலும் அதை நாம் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து “தற்போதைய முஸ்லிம் மாணவர்களின் இடைநிற்றல் 23.1% ஆக உள்ளது, இது தேசிய சராசரி இடைநிற்றல் விகிதத்தைவிட அதிகமாக உள்ளது. முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர ஆதரவளிப்பதற்கும், கவனம் செலுத்தும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
CERTயின் இயக்குநர் முனைவர் ரோஷன் மொஹித்தீன், இந்த கல்வி ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய ஷிக்ஷா சம்வாத் மேற்கொள்ளப் போகும் விரிவான முயற்சிகளை விளக்கிய அவர் “வட்ட மேசை சந்திப்புகள் முதல் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சிகள், திறன் மேம்பாட்டுப் பட்டறைகள், உதவித்தொகை வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரை பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் தற்போதுள்ள சூழலை மாற்றி மாணவர்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கப் பாடுபடும்,” என்று கூறினார். தொடர்ந்து, நிறுத்தப்பட்ட MANF மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் குறைவது குறித்து விசாரணை நடத்த வேண்டும். கிஷன்கஞ்ச், சம்பல் போன்ற சிறுபான்மையினர் அதிகமுள்ள உடனடியாக பல்கலைக்கழகங்களை நிறுவப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள பாகுபாடுகளைக் களையக் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும்; கல்வி காவிமயமாவதைத் தடுக்க வேண்டும்; போன்ற ஷிக்ஷா சம்வாதத்தின் முக்கிய கோரிக்கைகளை தெரிவித்தார்