2013ஆம் ஆண்டு சிபிஎஸ்இ- ஆல் முன்மொழியப்பட்ட நீட் தேர்வு தமிழ்நாடு, கேரளா போன்ற மாநில அரசுகளின் எதிர்ப்பால் பின்வாங்கிக் கொள்ளப்பட்டது. அதையடுத்து 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு நீட் தேர்வு இரண்டு கட்டமாக நாடு முழுவதும் நடத்தப்பட்டது. ஆனால் அப்பொழுதும் கூட அது கடுமையான எதிர்ப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டது. அதன் விளைவாக நாட்டின் பிற பகுதிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்ட போதும் தமிழ்நாடு மட்டும் அதிலிருந்து விலக்கு பெற்றிருந்தது. 2016 டிசம்பரில் அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் விளைவாக நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் 2017ஆம் ஆண்டு ஊடுருவியது.
நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் ஆண்டே 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள், 196.6% கட்ஆஃப் பெற்ற தலித் கூலித்தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் பெற்றுத் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார். 2017ஆம் ஆண்டு மாணவி அனிதா தொடங்கி அண்மையில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் வரை தமிழ்நாட்டில் 27 மாணவர்கள் நீட் தேர்வில் தங்களுடைய உயிரை மாய்த்துள்ளனர். இவர்களில் பலர் கிராமப்புறங்களைச் சார்ந்த, சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள். இதில் ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முந்தைய நாளிலேயே தேர்வின் அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் எனும் மாணவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாத காரணத்தால் கடந்த ஆகஸ்ட் 12ஆம்தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை அடுத்து மகன் இறந்த சோகத்தினால் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தமிழ்நாட்டில் நீட் அரசியல் சூழலை மீண்டும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
நீட் தேர்வு – அதன் பிரச்னைகள்
நீட் (NEET / National Eligibility cum Entrance Test) என்பதற்குத் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு என்று பொருள். இந்த நீட்டின் பொருளை உற்றுநோக்கினாலே அது சொல்லவரும் செய்தியை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவராக வேண்டும் என்கிற கனவு இருக்கலாம். ஆனால் மருத்துவர் ஆவதற்கான தகுதி அவர்களுக்கு இருக்கின்றதா! என்று சோதிப்பதற்காகத்தான் இந்தத் தேர்வு என்று அதன் பெயரே சொல்லாமல் சொல்கிறது.
இங்கு அவர்கள் தகுதி என்று எதைச் சொல்கின்றார்கள் என்பதில் தான் பிரச்னையே இவர்கள் மறைமுகமாக மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பிராமணர்கள், உயர் சாதியினர், செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் தகுதிகளாகக் கூறுகின்றனர். (அவை பின்வரும் செய்திகளைப் பார்க்கையில் புரியும்).
நீட் தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதில் ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 720 மதிப் பெண்களுக்காக மாணவர்கள் 180 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். இதில் தவறாக அளிக்கப்படும் பதில்களுக்கு அவர்கள் சரியாகப் பதிலளித்ததில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து ஒரு மதிப்பெண்ணைக் குறைத்து விடுவார்கள். இந்தத் தேர்வு மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும். இதுதான் நீட் தேர்வு எழுதும் முறை. இதில் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிற மாணவர்கள் 107-136 மதிப்பெண்கள், பொதுப் பிரிவு மாணவர்கள் 137 மதிப்பெண்களைப் பெற்றாலும் தேர்ச்சியடைந்து விடலாம். (இவை ஒவ்வொரு ஆண்டும் மாறக் கூடியது),
நீட் தேர்விற்கான பாடத்திட்டம் பிரதானமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. சிபிஎஸ்இ என்பது தேசிய அளவில் ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படுகின்ற பாடத்திட்டமாகும். இந்தியாவில் சிபிஎஸ்இ என்பது பெரும்பாலும் உயர் சாதி வகுப்பினராலும் பொருளாதாரத்தில் முன்னேறிய செல்வந்தர்களாலும் நகரப்புறங்களில் வாழும் மக்களின் பிள்ளைகளாலும் படிக்கின்ற பாடத்திட்டமாகும். சிபிஎஸ்இ பள்ளிகளின் கல்விக் கட்டணம் சாதாரண அரசுப் பள்ளி கட்டணத்தைவிடப் பலமடங்கு அதிகமாகும். சில முன்னாணி சிபிஎஸ்இ பள்ளிகளின் கட்டணங்கள் பல இலட்சங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிபிஎஸ்சி பள்ளிகளில் படிப்பதென்பது ஏழை எளிய சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.
அதேசமயம் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் பாடத்திட்டங்களுடன் குறைந்த கட்டணத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை நடத்தி வருகின்றன. அரசுப்பள்ளிகளில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால் நம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு மாநில அரசுப் பள்ளிகள் மட்டுமே கல்விக்கான ஒரே வழியாகத் திகழ்கிறது. இப்படி அரசுப் பள்ளிகளில் பயந்து வரும் மாணவர்களின் மருத்துவக் கனவுகளின் வாயில்களை அடைக்கும் காரணியாகவே நீட் தேர்வு இருந்து வருகிறது.
“நீட் தேர்வில் தேர்ச்சி பெற சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை முறையாகப் படித்தால் மட்டும் போதும்!” என்பதும் “தமிழ்நாட்டின் மாநிலப் பாடத்திட்டமும் சிபிஎஸ்சிக்கு இணையான அளவில் மாற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு மாணவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி அடைவதில் என்ன பிரச்னை” என்பது பாஜக, சங் பரிவாரங்களால் தொடர்ந்து கூறப்படுபவை. ஆனால் இவை முழுக்க முழுக்க பொய்யான கூறுகளே!
பெரும்பாலும் நீட்டிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வெறும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டுமே படித்து தேர்ச்சி பெறுவதில்லை. அதனோடு இலட்சக்கணக்கில் பணம் கட்டி தனியார் நீட் பயிற்சி வகுப்புகளிலும் சேர்ந்து படித்துத்தான் தேர்ச்சி பெறுகின்றனர். இதில் தமிழ்நாட்டின் முன்னணி சிபிஎஸ்ஐ பள்ளிகள் என்று சொல்லப்படக்கூடியவை பைஜூஸ், ஆரக்கிள் போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 11 – 12 ஆம் வகுப்பு கல்விக் கட்டணத்துக்கு மேல் கூடுதலாக பல இலட்சங்கள் சிறப்புக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கையில் நீட் என்பது சிபிஎஸ்இ, இது போன்ற தனியார் பயிற்சி நிறுவனங்களின் வணிகத்துக்கான ஒரு வாயிலே என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.
நீட் தேர்வின் ஓராண்டு கணக்கை மட்டும் உதாரணமாகக் கூற விரும்புகிறேன். இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வில் 11,45,876 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் (அதாவது அந்த 720 மதிப்பெண்களில் 106 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைவருமே மருத்துவர்களாக ஆவதற்குத் தகுதி உள்ளவர்களாம். ஆனால் இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவ இடங்களே 1,04,300 தான். இதில் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்கள் 54,277 மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உரியவை. இப்போது அந்த அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் நீட் தேர்வில் தேசிய அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் சேர்ந்துவிடுவார்கள்.
ஆனால் அதற்கு அடுத்துள்ள தனியார் கல்லூரிகளில் முன்னணி மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு அடுத்த நிலையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தான் சேர்வார்களா என்றால் அது மிகப்பெரும் கேள்விக்குறியே. ஏனென்றால் இத்தகைய தனியார் கல்லூரிகளில் ஆண்டிற்கு 25 இலட்சம் வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படும். அப்போது மீதமுள்ள பத்தரை இலட்சம் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் எந்த மாணவரின் பெற்றோரிடம் அதிகப் பணம் இருக்கின்றதோ அவர்களால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இணைந்து படிக்க முடியும். (அதாவது நீட் தேர்வில் வெறும் 107 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த ஒருவரிடம் அதிகப் பணம் இருந்தால் மட்டும் போதும் அவர் மருத்துவராகி விடலாம். ஆனால் 500 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரிடம் பணம் இல்லை என்பதால் அவரால் மருத்துவராக முடியாது.)
இப்படி தன்னைவிடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர் பணம் உள்ளது எனும் ஒரே காரணத்திற்காகவே மருத்துவர் ஆகிறார். ஆனால் தன்னால் மருத்துவர் ஆக முடியவில்லையே என்கிற விரக்தியே நீட்டில் தோல்வியடைந்த தலித், ஏழை மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
நீட் தேர்வும் தமிழ்நாடும்
நீட் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட நாள் முதலே அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டுதான் வந்தது. அதன் நீட்சியாகக் கடந்த மாநிலங்களவைத் தேர்தல் பரப்புரையில் திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கையெழுத்திடும் முதல் ஆணையே நீட் ரத்து என்பதாகத்தான் இருக்கும் எனக் கூறியது, அவ்வாறு கூறியதன் அடிப்படையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தடை மசோதாவை இரண்டு முறை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஆளுநரிடம் அனுப்பி வைத்துள்ளது. ஆனால் பாஜகவின் கைக்கூலியான ஆளுநர் ரவி அந்த மசோதாவில் கையொப்பமிடவில்லை. இரண்டாவது மசோதாவை வேண்டா வெறுப்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கிடையில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்மையில் தந்தை மகன் தற்கொலை செய்து கொண்டதால் நீட் எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் மீண்டும் சூடு கிளப்பியுள்ளது. எப்படியோ இந்த ஒருசார் மக்களுக்கு மட்டும் பயனளிக்கும் நீட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து சாமானிய மாணவர்கள், பெற்றோர்களின் அவாவாக உள்ளது.
நுழைவுத் தேர்வுகள் – அபாயம்
இதுவரை இந்துத்துவ ஃபாசிஸ அரசால் நடத்தப்படும் ஒரேயொரு மருத்துவப் படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்வில் உள்ள பிரச்னைகளை மட்டுமே பக்கம் பக்கமாகப் பார்த்தோம். ஆனால் அண்மையில் அவர்களால் புறவாசல் வழியாக அனைத்து மாநிலங்களின் மீதும் திணிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை சாதாரண கலை அறிவியல் முதல் பொறியியல் வரை அனைத்து வகையான உயர்கல்விப் பாடங்களுக்கும் நீட் தேர்வைப் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று சொல்கிறது.
இவ்வாறு அனைத்து உயர்கல்வி பாடத்திற்குமே நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் அனைத்து நடுத்தர, கிராமப்புற, பொருளாதார, சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வியே கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு மட்டும் எதிராகப் போராடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒட்டுமொத்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் போராட வேண்டும். மாநில பட்டியவில் இருந்த கல்வி எமர்ஜென்சி காலத்தில் ஒன்றியப் பட்டியலில் சேர்க்கப்பட்டதை எதிர்த்தும் குரல் கொடுத்து அதனை மீண்டும் மாநிலப் பட்டியலிலேயே இணைப்பதை நோக்கிச் செயல்பட வேண்டும்.