தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேற்றைய கோவை பயணத்தையொட்டி நடைபெற்ற உரையாடல்களையும், சில நாள்களுக்கு முன்பான நடப்புகளின் மீதான விவாதங்களையும் சீர்தூக்கிப் பார்த்தால் ஒரு நிகழ்வின் அடிப்படையில் கிடைக்கும் சாதக அம்சத்தை விட்டுவிட்டு அதையே முற்றிலும் ஒரு எதிர்மறையான உரையாடலாக கட்டமைத்துக் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் எழுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுகவின் தோல்வியையடுத்து ஒட்டு மொத்தமாக அம்மக்களை பாஜக ஆதரவாளர்களாக முத்திரை குத்தும் செயல் துர்வாய்ப்பாக சொந்த மாநில மக்களாலேயே நிகழ்த்தப்பட்டது. சரி இது ஒரு கடுப்புதான் சரியாகி விடும் எனப்பார்த்தால் தொடர்ந்து கோவையை தென்னகத்தின் உத்திரப்பிரதேசமாக குறிப்பிடும் போக்கு நாளடைவில் அதிகரிக்கத் துவங்கியது.
ஆனால் இப்படியான தொடர் செயல்பாடுகள் என்பது கிட்டத்தட்ட எதிரியின் கையிலேயே ஆயுதத்தை ஒப்படைக்கும் செயல் எனலாம். புரியும்படி சொன்னால் இப்படி யோசித்துப் பாருங்கள், தமிழ்நாட்டிலேயே தொழில் செய்து பிழைத்தாலும் தமிழக கட்டமைப்பின் மீது தீரா வன்மம் கொண்டுள்ள வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நகரம் அதுவும் தமிழகத்தின் மிக முக்கிய தொழிற்துறை நகரம் தமிழக மக்களாலேயே “தமிழகத்தின் உத்திரப்பிரதேசம்” என பெயர்பெறுவது எத்தனை சாதகமான அம்சம். அவர்களுக்கு எத்தனை மன நிறைவைத் தரும் செயல் அது. காரணம் கோவையை நாமே வட இந்தியர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் படு முட்டாள்தனமேயன்றி வேறில்லை. மேலும் உண்ட வீட்டிற்கு இரண்டகம் பன்னும் உள்ளூர் சங்கிகளுக்கு தமது நிலைப்பாட்டை நியாயப் படுத்த நமது கேலியும் கிண்டலுமே காரணமானது. தமிழ்நாடு மொத்தமும் சூரியன் உதிச்சாலும் இங்க உதிக்க முடியாது என்பது அவர்களுக்கான வசனமாகிப் போனது.
இப்படியொரு முத்திரையை அவர்கள் எதிர்பார்த்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால் கிடைத்த வாய்ப்பை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினார்கள். ‘எங்க ஏரியா உள்ள வராதே’ எனுமளவில் கொரோனாதேவி சிலை, நோய்த்தொற்று பரவலைக் குறைக்க பூஜைகள் எனத் துவங்கி படித்தவர்கள் நிறைந்த நகரமான கோவையில்தான் பொது ஆவிபிடித்தல் களை கட்டியது.
கொரோனா சிலை ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே ப்ளேக் நோய் வந்த காலத்திலும் இப்படியான வழிமுறை உண்டு எனலாம். உண்மைதான். ஆனால் அறியாமை நிரம்பிய அந்நாள்களில் நோயின் அச்சம் குறித்த வழிபாடென்பது தனிநபர் வேண்டுதலாக இருந்ததே தவிர இப்படியான ஒரு தொழில்முறை நேர்த்தியுடனும், உள் நோக்கத்துடனும் கூடிய பகட்டு ஆர்ப்பாட்டமாக இல்லை.
ஆனால் இன்று நடை பெறுவதெல்லாம் அப்பட்டமான எதிர்நிலை அரசியல் செயல்பாடுகள். நாம் விளையாட்டாக வீசுகிற சுள்ளிகளை பொறுக்கும் எதிரிகள் அவற்றை விறகாக்கி வினையமாக பிரிவினைத் தீயை மூட்டிக் கொண்டுள்ளார்கள். அது புரியாத நாமோ அவர்களுக்கு மென்மேலும் காய்ந்த சுள்ளிகளை வீசியெறிந்து கொண்டிருக்கின்றோம்.
மொத்தம் 57 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் அதிமுக 45 லும் திமுக 12 இடங்களிலும் வென்றுள்ளன. என் நினைவுகளின் படி எழுதுவதானால் 57 தொகுதிகளிலும் அதிமுக vs திமுக இடையிலான வாக்கு வித்தியாசம் அதிகபட்சம் 150,000 லட்சம்தான் எனப்படித்த நினைவு. இதுவொரு பெரிய வித்தியாசமுமில்லை. ஆனால் நாமோ 57 இடங்களிலும் அதிமுக பெருவெற்றி பெற்று திமுகவின் டெபாசிட் பறிபோய் உள்ளதைப் போல பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே ‘கோவையன்ஸ்’ என அவர்களை அலட்சியப்படுத்துவது தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலுக்கு நன்மை செய்வதாக இருக்காது. இது ஒருவிதத்தில் திமுகவிற்கு வாக்களித்த மக்களை அவமானப்படுத்துவதோடு அல்லாமல் நாளடைவில் அவர்களை நேரடியாக பாஜகவின் ஆதரவாளர்களாக கொண்டு நிறுத்துவதில்தான் முடியும். எனவே திமுகவிற்கு வாக்களித்தால்தான் அது பெரியார் மண் இல்லையெனில் அது உத்திரப்பிரதேசம் எனப் பேசுவது ஜனநாயக விரோதம்.
தவிர இம்முறை மேற்கு மண்டல தேர்தல் களமானது அதிமுக vs திமுக என்பதற்கு ஈடாக அல்லது அதையும் விட அதிகமாக முக்குலத்தோர் vs கவுண்டர் என்பதாகவும் இருந்தது. ஒரு வேளை தெற்கு மண்டலத்தில் அதிமுக ஜெயித்து மேற்கு மண்டலத்தில் தோற்றுவிட்டால் கட்சியின் கட்டுப்பாடு EPSடமிருந்து பிடுங்கப்பட்டு OPS கைக்கு சென்று விடும். ஜெயித்தாலும் OPS ஸே முதல்வராகக் கூடும். கட்சியும், ஆட்சியும் கைவிட்டுப் போனால் இத்தனை காலமும் நாம் காத்து வந்த அதிமுகவின் மண்டலம் என்ற பெருமை போய்விடும். தவிர திமுக வென்றுவிட்டால் சுத்தம். நமக்கென எந்த முக்கியத்துவமும் இருக்காது. அரசியலில் நாம் அப்புறப்படுத்தப்பட்டு விடுவோம் போன்ற அச்சங்களும் அங்கு அதிமுக பெருவாரியாக வென்றதன் அடிப்படைக் காரணங்களாகும். எனவே இப்படியான ஒரு சத்தியம் வாங்காத குறையாய் நடைபெற்ற வாக்கப்பதிவில் இத்தனை நெருக்கடியிலும் திமுக 12 இடங்களை வென்றது மட்டுமல்ல கிட்டதட்ட அதிமுக பெற்ற வாக்குகளில் 80% சதவீத வாக்குகளை பெற்றதும் பெரும் நம்பிக்கைக்குறிய விசயமே. இதை அறிந்து கொண்டுதான் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த மாலையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் கூட ‘அடடா இவர்களுக்கு வாக்களிக்காமல் விட்டு விட்டோமே’ என எண்ணிப்பார்க்கும் அளவில் அனைவருக்கும் நல்லதைச் செய்வோம் என்றார் ஸ்டாலின்.
இப்போதுள்ள நிலையில் நாம் சொல்ல வேண்டியதும் அதைத்தான். செய்ய வேண்டியதும் அப்படியொரு நம்பிக்கையையூட்டி நாம் அவர்கள் பக்கம் நின்று பேசுவதோ அல்லது நம்பக்கம் அவர்களை வரவழைப்பதோ தான்ஒரு முதிர்ந்த சமூகத்தின் அரசியல் வெளிப்பாடாக இருக்க முடியும். அதை விட்டு விட்டு தொடர்ச்சியான கேலியும் கிண்டலும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். நேற்றைய நிகழ்வையே எடுத்துக் கொள்வோம். முதல்வரான இந்த இருபது நாள்களில் மூன்று முறை கோவை சென்று வந்துள்ளார் ஸ்டாலின். கோவையில் வென்ற அதிமுக உறுப்பினர்கள் கிட்டதட்ட காணாமல் போயிருக்கின்ற நிலையில் சென்னைப்பிணி குறைத்து அடுத்ததாக கோவையின் பக்கம் தங்களது பார்வையை செலுத்தியிருக்கின்றது கொரோனாவை கையாளும் அவரது நிர்வாகக் குழு. “சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்குத்தான் அதிகளவில் தடுப்பூசிகள் அளிக்கப் பட்டிருக்கின்றன” என நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார் முதல்வர்.
எனவே இப்படியான நேர்மறை அம்சங்களை அதிக அளவில் பேசத்துவங்குகிற போதுதான் நேர்மறை விளைவுகளை நாம் உருவாக்க முடியும். மாறாக நம்முடன் நிற்பவர்களை நமது அலட்சியத்தால் கோட்டுக்கு எதிர்புறம் கொண்டு நிறுத்துவது பெரும் அரசியல் பிழையாகும். சில்லென்ற கோவை, சிறுவாணி நீர், செயற்கை குற்றாலம், தேநீர் அருந்த ஊட்டி, தடுக்கி விழுந்தால் கல்லூரி என நாம் செல்லம் கொஞ்சிய கோவையை நாமே எதிரிகளிடம் ஒப்படைப்பது என்ன நீதி?
இந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுகவின் தோல்வி தவிர்க்க முடியாதது. ஆனால் அடுத்தடுத்த தேர்தலில் எங்களின் நேர்மையான செயல்பாடுகளாலும் மக்கள் நலத் திட்டங்களாலும் சென்னை துவங்கி கன்னியாகுமரி வரையிலும், கோவை துவங்கி நாகை வரையிலும் தமிழ்நாடு எங்கள் வசமாகும். நேற்றல்ல, இன்றல்ல, நாளையல்ல என்றென்றும் தமிழ்நாடு பெரியாரின் மண்தான் எனப் பேசத்துவங்கும் போதுதான் சமூக நீதிக்கான குரல்கள் ஒருங்கிணைந்து சனாதான குரல்களை கட்டுப்படுத்தவியலும். இங்க இருந்துகிட்டு மதப்பிரிவினை அரசியல் பேசமுடியாது என்ற நிலையை வடமாநிலத்தவர் மட்டுமின்றி உள்ளூர்காரர்களுக்கும் அது முற்றாக உணர்த்தப்படும் போதுதான் இந்நிலத்திற்கும், நம் சந்ததியினருக்கும் நலன் பயக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான அரசியலையும், கடந்த பத்தாண்டுகளாக தேக்கமடைந்த வளர்ச்சியையும் நாம் மீட்டெடுக்க முடியும். மட்டுமல்ல இந்நிலத்தை அபகரிக்கும் கொடுந்திட்டத்தோடு உள்ளவர்களுக்கு அது ஒருபோதும் நடக்காது என்ற நிராசையை உருவாக்கி சாதி, மதமாச்சர்ய அரசியலில் இருந்து கோவை துவங்கி ஒட்டுமொத்த தமிழகத்தையும் மீட்டெடுக்க அதுவே வழிவகுக்கும்.
பாரூக் மீரான்
எழுத்தாளர்