எழுதியவர் : உமர் ஃபாரூக்,
ஆராய்ச்சி மாணவர், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம்,
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் இருக்கும் திருமலைகவுண்டர்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் திருமதி. பாப்பாள் அவர்கள் சத்துணவு சமைக்கும் பணியில் அமர்த்தபட்டுள்ளார். இதற்கு முன் இருந்த பள்ளி தொலைவில் இருந்ததால் சிரமத்துடன் சென்று வந்த அவர், தனது சொந்த ஊரில் அமைந்துள்ள இந்த பள்ளியில் தற்போது பணி காலியிடம் வந்தது தெரிந்ததும் இடமாற்றலுக்கு விண்ணபித்து பணியில் சேர்ந்த்துள்ளார். ஆனால் அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் (75 மாணவர்களில் 29 மாணவர்களின் பெற்றோர்கள் என்று செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) இவர் அருந்ததியினர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர் எங்கள் பிள்ளைகளுக்கு சமைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தி பள்ளியை விடுமுறை அளிக்க நிர்பந்தம் செய்து பின்னர் பள்ளியை திறக்க விடாமல் போராட்டம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சி வளர்ச்சி நிர்வாகத்தினர் சட்டத்தை மதிக்காமல் அங்கு நடைபெற்ற சாதிய வன்முறையை ஆதரிக்கும் விதமாக திருமதி.பாப்பாள் அவர்களை பணி இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இது போராட்டம் செய்த ஆதிக்க சாதி மக்களின் வன்முறையை விட மிகப் பெரிய வன்முறை ஆகும். தவறு செய்தவர்களை தண்டிக்காமல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிக்கும் செயலை தான் மிக கடுமையாக கண்டிக்க வேண்டும். இந்த கொடிய செய்தி அறிந்து அம்பேத்கரிய அரசியல் கட்சிகள் சாலை மறியல் போராட்டம் செய்து உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு சட்டத்தை நினைவுபடுத்தினர். இதனைத் தொடர்ந்து திருப்பூர் துணை ஆட்சியர் திருமதி.பாப்பாள் அவர்களை அதே பள்ளியில் தொடர்ந்து வேலை செய்யும் பொருட்டு பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்து போராட்டம் செய்தவர்கள் மேல் வழக்கு பதியப்பட்டு சட்டத்தை நிலை நாட்டினார். சட்டத்திற்கு புறம்பாக தீண்டாமை வன்முறைக்கு உடந்தையாக அதீத வன்முறை செய்யும் விதமாக பணியிட மாற்றம் உத்தரவிட்ட ஊராட்சி அலுவலர் மீது விசாரணைக்கு உட்படுத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேலே நடைபெற்ற வன்முறையை நாம் செய்தியாக அறிந்தாலும் இங்கு நடைபெற்ற (நடைபெறுகின்ற) மிகப்பெரும் வன்முறை, அதன் பிற வடிவம், பின்புலம் ,காரணிகள் போன்றவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முதலில் இங்கு நடைபெற்ற தீண்டாமை வன்முறை ஏதோ ஒரு கடைக்கோடி கிராமத்தில் நடைபெறும் விதிவிலக்கான வன்முறை அல்ல. மாறாக இந்தியா முழுவதும் நடைபெற்று வரும், பெரும்பான்மை மக்களின் கோர முகம். மேலும் நாம் நேரடி உடல் ரீதியான வன்முறையை மட்டும் கணக்கில் கொண்டு சாதிக் கட்டமைப்பின் கோர முகத்தை ,வன்முறையை புலப்படாமல் விட்டுவிடுகின்றோம். அடிப்படையில் நேரடி உடல் வன்முறையை விட ஆபத்தானதும், சாதி வன்முறை என்ற சொல்லிற்கு முழு வடிவம் தருவதும் சாதிக் கட்டமைப்பு வன்முறையே ஆகும். நேரடி தாக்குதல் என்பது அந்த தாக்குதல் நடைபெறும் நேரத்தில் மட்டும் வெளிப்படும் வன்முறை. ஆனால் இந்த சாதிக் கட்டமைப்பினால் ஏற்படும் வன்முறை ஒருவர் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் கொடூரமான வன்முறை. இந்த மனிதகுல அயோக்கிய குற்றத்தை ஒழிப்பது அனைவரின் கடமை. துரதிருஷ்டவசமாக சாதிக் கட்டமைப்பு, சாதி ஒழிப்பு கருத்துக்கள் நாம் முழுமையாக தெரிந்து கொள்ளாமலும் சில அடிப்படை புரிதல் தவறாக விளங்கி இருப்பதையும் காண முடிகிறது.
சாதிப்படி நிலை அதிகாரமே சாதி வன்முறையின் உச்சகட்டம்.
இது போன்ற வன்கொடுமை செயல்களை நாம் காணும்போது இந்த சாதி வறட்டு குணம், சாதிய பிற்போக்கு எண்ணத்தை கைவிட்டு எப்போது மனிதர்களாக மாறுவார்கள் என்று ஆதங்கப்படுகிறோம். சாதிக்கு எதிரான கருத்துக்கள் மக்களிடையே கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று விழைகிறோம். ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது வெறுமனே கருத்துக்கள் மட்டும் சாதிக் கட்டமைப்பை ஒழிக்காது. இங்கு சாதிக் கட்டமைப்பு என்பது வன்முறையான, ஏற்றத்தாழ்வு மிக்க படிநிலை அதிகாரம் ஆகும். இதில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று படியில் விளிம்பில் இருக்கும் மக்கள் மீது ஆதிக்க குணம் செலுத்தி சுயமரியாதையை பறித்து அவர்களின் உழைப்பை சுரண்டி சமுதாயத்தின் விளிம்பிலேயே வைத்திருக்கும். இந்த வன்முறை தான் திருப்பூரில் திருமதி. பாப்பாள் அவர்களுக்கு தினந்தோறும் ஏற்படுகிறது. இது அவர் மரணிக்கும் வரையில் நிகழும். அவர் பிள்ளைகளுக்கும் நிகழலாம். இது தான் சாதி வன்முறையின் உச்சகட்ட வன்முறை. இந்த மிகக் கொடூரமான மனிதகுல அவமான வன்முறையை நிறுத்தி இதன் காரணிகள், மூலபொருள் அவற்றை ஒழிக்க முற்படுவது தான் சாதி ஒழிப்பின் அச்சாரம். எனவே அந்த கட்டமைப்பு யாரால் கட்டிக்காக்கப்படுகிறது? அதன் நவீன தோற்றம் இவற்றை அறிய நாம் முற்கொள்ள வேண்டும்.
சாதி கட்டமைப்பு- பின்புலம்
சாதி கட்டமைப்பின் உச்ச கட்ட வன்முறை என்பது உயர் சாதியில் இருப்பவர்கள் பிற மக்களை தங்களின் அதிகாரத்தின் கீழ் அதாவது உயர் சாதியினர் அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதே ஆகும். இதுவே சாதி கட்டமைப்பின் மூல தனமும் ,அநீதியின் அடிப்படையும் ஆகும். இந்த அதிகாரத்தில் இருந்து தான் சாதியின் அனைத்து கோர முகமும் வெளிப்படும், வெளிபடுத்த முடியும். இந்த கட்டமைப்பின் நேரடி விளைவுகள் தான் நிரந்தரமான ஏற்றத்தாழ்வு உள்ள படிநிலை சமுதாயத்தை உருவாக்கி அதில் ஒரு பிரிவினரின் வாழ்க்கை தேடலை முட்டுக்கட்டை போட்டு பொது சிந்தனையிலும் அவதூறு, இட்டுக்கட்டு பரப்பி அனைத்து மக்களின் பார்வை, அணுகுமுறையிலும் தீண்டாமை, வன்கொடுமை நிலைக்க செய்வது ஆகும்.
இந்திய அரசின் முதல் பணி இந்த ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைத்து ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவது ஆகும். இதுவே அரசியல் சாசனத்தின் நோக்கம். ஆனால் இந்த ஜனநாயக சிந்தனை உருவாகாமல் தடுக்க, சாதிய கட்டமைப்பை வலுப்படுத்தி வைக்க நாசூக்காக தேசியத்தின் பெயரால் பல்வேறு மாற்று கருத்துக்கள் பரவவிடப்பட்டுள்ளது.
1. சக மனிதன் இன்னலை விட நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்திற்கு பெருமை சேர்ப்பதே உயர்ந்த செயல் என்ற எண்ணம். இது முரண்பாடான சிந்தனையாக தோன்றினாலும் இதில் நாசூக்காக சாதிய கட்டமைப்பை வலுப்படுத்தும் கருத்துதான் அடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். முதலில் நாட்டின் பாரம்பரியம், அடையாளம், கலாச்சாரம் என்ற போர்வையில் உயர் சாதியினர் சடங்குகள்,கொள்கைகளை முன்நிறுத்தி அது இந்த நாட்டின் பாதுகாக்கப்பட வேண்டிய, உயர்த்தி பிடிக்க வேண்டிய ,பெருமை கொள்ள வேண்டிய விசயம் என்ற படிநிலைக்கு உயர்த்துவது மட்டுமல்லாமல் இங்கு மனிதனின் துயரம் நீங்குவதை விட பெருமை மேலோங்குவது தான் சிறந்த செயல் என்ற கருத்து மக்கள் மத்தியில் புகுத்தப்படுகிறது. இந்த கோட்பாட்டின் வெளிப்பாடு தான் நாட்டின் பெருமைக்கு, நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் கருத்துக்கள் சொல்லக் கூடாது, பேசக் கூடாது, அது நாட்டிற்கு எதிரானவன் என்ற முத்திரை பதித்து நாட்டில் நடக்கும் அவலங்களைப் பற்றி பேசாமல் இருப்பவரே நாட்டை நேசிப்பவன் என்றும் நாட்டு மக்கள் மீது பற்று, அன்பு வைத்துள்ளவன் போன்ற பொது கருத்துக்கள் ஆகும்.
இவ்வாறு பொதுப் புத்தியை உருவாக்கி இந்த சமுதாயத்தின் பின்புலம் வன்முறையான ஏற்றத்தாழ்வு மிக்க சாதிய கட்டமைப்பு என்ற உண்மை நிலையை வளரும் தலைமுறைக்கு தெரியாமல் மூடி மறைத்து பொய்யான, இல்லாத பெருமையை பதிய வைக்கின்றனர். இது சாதிய கட்டமைப்பில் தொடங்கி அதன் விளைவு வன்முறையான அரசின் அத்துமீறல்,பாதுகாப்புப் படை, காவல்துறை அத்துமீறல் என வன்முறையை சுட்டிகாட்டி நியாயம் கேட்பவர்கள் நாட்டிற்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்று வன்முறையை தொடர செய்கிறார்கள். இப்படி சக மனிதனின் துயரத்தை விட நாட்டின் பெருமையே மேலோங்க வேண்டும் என்ற சிந்தனையின் எதிரொலிதான் புதுடெல்லியில் 2014 ஆம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கு 40,000 கோடி அலங்கார செலவு செய்து நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அனைத்து ஊடகங்களிலும் நாடு முழுவதும் பெருமையாக செய்தி ஒளிபரப்புவதும், அதே ஆண்டு புதுடெல்லியில் வசிக்க இடமில்லாமல் ,உடுத்த போதுமான துணிகள் இல்லாமல் சாலையோரத்தில் படுத்து உறங்கும் கூலி தொழிலாளர்கள் கடும் குளிரினால் இறந்த அவலமும் ஒரு சேர நடைபெறுவது.
2. தாழ்த்தப்பட்ட மக்கள் உயிர் வாழும் தேவையை பூர்த்தி செய்தாலே போதுமான செயல் என்றும் அவர்கள் மேல் விதிக்கப்பட்ட வர்ண வன்முறையான உயர்சாதியினருக்கு பணிவிடை செய்யும் அடக்குமுறையை லேசாக்கி செய்வதை புரட்சிகர திட்டம் போல் எண்ணம் கொள்வது. இதுவே கல்வி, வேலைவாய்ப்பில் தொடர்ந்து தீண்டாமை கொள்கைகள் கடைபிடிப்பதன் காரணம் ஆகும். ஆம் 100 நாள் வேலைத்திட்டம், ஸ்கில் இந்தியா, ஸ்மார்ட சிட்டி, நீட், Institute of Eminence என அனைத்து திட்டங்களின் சாராம்சமும் மேட்டுக்குடி அதாவது உயர் சாதியினர் சமுதாயத்தில் உயர்ந்த படி நிலையில் நிலைத்திருக்க செய்வதும், தாழ்த்தப்பட்ட மக்கள் சமுதாயத்தின் மேல்படிக்கு உயர்ந்து செல்ல முட்டுக்கட்டை போடுவதும் ஆகும். (ஆராய்ச்சி பட்ட படிப்பு, CBSEயின் தரமான கல்வி முறை என்பது உயர் சாதியினருக்கு.. மற்ற மாணவர்களுக்கு தரம் குறைந்த அரசு கல்வி முறையும், skill india (type writing) policy யும்).
3. இவற்றின் எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் நுட்பமான வன்முறை நவீன தீண்டாமை சமூக அடையாளத்தின் மேல் கட்டமைத்துள்ள பொது புத்தி வன்முறை. இந்த நுட்பமான வன்முறை தான் சராசரி திறமைக்கு குறைவான தகுதிகள் இருந்தும் உயர்சாதி இணைபெயரின் காரணத்தால் எளிதாக பட்டங்களும், சலுகைகள் பெறுவதும், சராசரி திறமையை அதே உயர்சாதி இணைபெயரின் காரணத்தால் வானளாவ உயர்த்தி போற்றுவதில் தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்கள் (முஸ்லிம் சமுதாயதின் மேலும் இந்த நுட்ப வன்முறை பயன்படுத்தப்படுகிறது) சரியான திறமை இருந்தும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் , பிரதநிதித்துவம் வழங்காமலும் ஒரு வேளை அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க பெறுமாயின் அது அவர்களின் துறையில் சக உறுப்பினரை விட அசாதாரண, பிறரால் மறுக்க முடியாத திறமையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எழுதப்படாத நியதி ஆக இருக்கிறது. இது வேதம் கற்றறிந்த உயர் சாதியினர் மேல் மக்களாக பிறக்கின்றனர் என்றும் பிற மக்கள் தகுதி குறைவாக பிறக்கின்றனர் என்ற வர்ணா சட்டத்தின் தொடர்ச்சியே. உயர் சாதி இணைபெயருக்கு சிறப்பு திறமைகள் இருப்பது போலவும் தாழ்த்தப்பட்ட மக்களின் பின்புலத்தில் இருந்து வருபவர்களுக்கு திறமைகள் இருக்காது என்ற வன்முறையான பொதுப்புத்திகள் மக்களிடயே பதிய வைப்பது ஆகும். இந்த வன்முறை பொதுப்புத்தி, சினிமா போன்ற ஊடகத்தின் வாயிலாகவும் மக்களிடம் பதிய வைக்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த London school of economics பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் doctorate பட்டம் பயின்றும் இந்திய நாட்டின் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளை ஆராய்ந்து அனைத்து திறமைகள் வாய்க்கப் பெற்றும் டாக்டர்.அம்பேத்கர் அவர்களுக்கு அன்று பாராளமன்ற பொருளாதாரக் குழுவில் இடம் தர மறுத்தது முதல் டீவியில் சில நாடகங்கள் நடித்த தகுதி மட்டுமே கொண்ட உயர் சாதி வகுப்பை சேர்ந்த ஸ்மிரீதி இராணிக்கு உயர் கல்வி துறை அமைச்சர் பதவி வழங்கியது வரையிலும் பல உதாரணங்கள் நாம் கண்டறியலாம். குறிப்பாக கிரிக்கெட் போன்ற விளையாட்டு துறையிலும், உயர் கல்வி வளாகத்தில் பிஎச்டி போன்ற ஆராய்ச்சி பட்ட படிப்பு, பேராசிரியர் பணிக்கும் மிகவும் வெளிப்படையாக உயர்சாதியினருக்கு எளிமையான நியமனங்களும் சலுகைகளும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதுமான திறமைகள், தகுதிகள் இருந்தும் வாய்ப்புகள் மறுக்கபடுவதையும் காண முடிகிறது.
பின்குறிப்பு: 30 மத்திய பல்கலைகழகங்களில் பணிபுரியும் 1057 பேராசிரியர்களில் 94.51% பேர் உயர் சாதியினர். ஆம், இடஒதுக்கீடு கொள்கைகளை மீறி. இட ஒதுக்கீடு கொள்கைகள் இல்லை என்றால் தமிழ்நாடு கிரிக்கெட் போல் 100% பேரும் உயர் சாதியினராகவே நியமனம் செய்யப்பட்டிருக்கக் கூடும்.
4. “இடஒதுக்கீடு நாட்டில் திறமையை மழுங்கடிக்க செய்யும். இடஒதுக்கீடு ஒழிந்தால் தான் சாதி ஒழியும்.”
இறுதியாக சாதிக்கட்டமைப்பை வலுபடுத்த இன்றைய தலைமுறையினரிடம் தவறாக பதிய வைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான கருத்துகளில் ஒன்று இடஒதுக்கீடு மேல் பரவபட்ட, பரவப்படும் வெறுப்பு கருத்து. இடஒதுக்கீடு இருப்பதால் திறமை மழுங்கடிக்கப்படுவதாகவும், இந்தியா முன்னேறாமல் இருப்பதாகவும் பதியப்படும் வன்முறை கருத்து. உண்மை யாதெனில் இடஒதுக்கீடு தான் நாட்டின் திறமைகளை ஒன்று சேர்க்க வழிவகை செய்யும். மேலே குறிப்பிட்டது போல் மிகவும் வன்முறையான ஏற்ற தாழ்வு படி நிலை சமுதாயமாக இந்த நாடு உருவாகி அந்த படி நிலையில் சிறிய மாற்றம் நிகழ்ந்தாலும் அது மிகப்பெரிய நேரடி உடல்,உடமை தாக்குதல் நிகழ்த்தப்படுவது தான் இன்று வரை நாம் காணும் நிதர்சன உண்மை. மேலும் நேரடி தாக்குதல் இல்லாமல் வக்கிர பொதுபுத்தி கட்டமைக்கும் ஏற்றத்தாழ்வு படி நிலையை தொடர செய்து வருகின்றனர். இங்கு இடஒதுக்கீடு தான் திறமைக்கும், தகுதிக்கும் சற்று நீதி வழங்குகிறது. மேலும் இங்கு உயர் சாதியினர் அனைத்து அதிகாரத்தையும் சாதிப்படி நிலையின் ஏற்ற தாழ்வை பயன்படுத்தி முழு அரசியல், ஆளும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு தான் இந்தியா தொடங்கபட்டது. பின்னர் சுதந்திரம் அடைந்து ஆட்சி அதிகாரத்தின் பயனாக தனியார் தொழில்துறையிலும் முழு ஆதிக்கத்தை செலுத்தி தன் சாதிய ஆட்சி அதிகாரம் தக்க வைத்துக் கொள்வதே கொள்கையாக பயன்படுத்தி வரும் சாதிய வன்முறையை தடுத்து திறமைக்கு நீதி வழங்குவதே இடஒதுக்கீடு ஆகும். நாடு முன்னேற வேண்டும், பல்வேறு திறமைகள் ஒன்று சேர்ந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும், அனைவருக்கும் சம வாய்ப்பு, சம நீதி வழங்கப்பட வேண்டும் என்றால் அதற்கு முதல் அடி ஏற்றதாழ்வு சாதிய படி நிலை சமுதாயக் கட்டமைப்பை தகர்க்க வேண்டும்.
குறிப்பிட்ட வெறும் 3% சதவீத மக்களிடம் மட்டும் திறமைக்கு வாய்ப்பு கொடுத்து மீதம் உள்ள 97% மக்களின் திறமைக்கு வாய்ப்பு பறிக்கபடுவது என்பது ஜனநாயக விதி மீறல். கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட சிறிய முன்னேற்றமும் கூட இடஒதுக்கீட்டின் நீதியால், திறமையால் வெகுஜன இடைநிலை மக்கள் ஆட்சி, அதிகாரத்தை எட்ட வாய்ப்பு உருவானதால் தான். இப்படி முழுமையாக சாதிய படி நிலை கட்டமைப்பை உடைத்து அனைவரும் முன்னேற வாய்புகள் வழங்கப்பட வேண்டும். அந்த வாய்புகள் வராமல் தடுக்கவே இடஒதுக்கீட்டின் அவசியமும், தேவையும் வளரும் தலைமுறையினருக்கு மூடி மறைத்து இடஒதுக்கீடு மேல் விசம கருத்துக்களை பொது புத்தியில் திணித்து உள்ளனர்.
சாதிய ஏற்றத்தாழ்வு படி நிலை சமுதாயத்தின் தர்மமே,சக மனிதன் வாழ்க்கை மேம்பாட்டை விட கௌரவம், பெருமையே சிறந்தது என்பதுதான். இதுபோன்ற பிற்போக்கு கொள்கை உடையவர்களிடம் ஏற்ற தாழ்வை உடைக்கும் திட்டத்தை எதிர்பார்க்க முடியாது. சமுதாய ஏற்றத்தாழ்வு படி நிலையை உயர்த்தி பிடிக்கும் வக்கிர திட்டங்கள் தான் வெளிப்படும். ஆரம்பக் கல்வி தரம் குறைந்து இருப்பதை மாற்றி அனைவருக்கும் தரமான கல்வி என்ற சமச்சீர் கொள்கையைத் தவிர்த்து மேட்டுக்குடி அதாவது உயர் சாதியினர் (ஏற்ற தாழ்வை ஊர்ஜிதப்படுத்த) பயன்படும் வகையில் தீண்டாமை சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களை நிறுவுவது, அவர்கள் எளிதாக உயர் கல்வி அடையவிடாமல் போட்டி தேர்வுகள் உருவாக்கி அதில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நுழைப்பது, உயர்கல்வி நிலையங்கள் போதிய நிதி, கட்டமைப்பு இல்லாமல் தவிக்கும் போது போதிய நிதி ஒதுக்க,உயர்கல்வி கட்டமைப்பை உயர்த்த மனம் இல்லாமல் உலக தரவரிசையில் இடம் கிடைக்கவில்லை என்று கவலை கொண்டு அதற்கு பல ஆயிரம் கோடி செலவு செய்து உயர் கல்வியில் ஏற்ற தாழ்வை நிலைக்க செய்வது, வெகுசன மக்கள் கூட்ட நெரிசலில் அசௌகரியமான ரயில் பயணத்தில் தவிக்கும்போது பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து மேட்டுக்குடி (மேட்டுக்குடி பெரும்பாலும் உயர்சாதியினரே) மக்களுக்கு மட்டும் பயன்படும் புல்லட் ரயில் திட்டம், இன்னும் பல்வேறு தீண்டாமை ரயில் திட்டங்கள், அதாவது குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்கள் விரும்பி செல்லக்கூடிய சில வழித்தடத்திற்கு மட்டுமே அதிநவீன ரயில் சேவை, அந்த அதிநவீன ரயில் குறிப்பிட்ட ரயில் தளத்திற்கு மட்டும் வந்து செல்லும், ஒட்டு மொத்த ரயில் நிலையத்தில் அந்த குறிப்பிட்ட ரயில் தளத்திற்கு மட்டும் குளிர்சாதன தங்கும் அறை, Escalator என அனைத்து சுக போக வசதிகள் இருக்கும்.
சாதிய வன்கொடுமை, தீண்டாமையின் காரணிகள்
வர்ணா கோட்பாடுகளை நேரடியாக திணிக்காமல் அதற்கு நாட்டின் பாரம்பரியம், நாட்டின் முதன்மையான சமய கருத்து போன்ற பெயர்களில் உருமாற்றி அதற்கு புனிதப்படி நிலையும், நாட்டின் அடயாளக் கருத்து போன்ற தகுதிகள் கொடுத்து இந்திய ஆட்சியத்தின் சிந்தனை கருத்தாக நிலைத்திருக்க செய்துள்ளனர்.
இவ்வாறு சாதிய பாகுபாடு, வர்ணா கருத்துக்களின் தாக்கம் தான் அரசின் பல்வேறு திட்டங்கள் , கொள்கைகள் அனைத்திலும் ஏற்றத்தாழ்வு படி நிலை வன்முறையையே எதிரொலிக்க செய்கிறது. இந்த சாதிய கட்டமைப்பினால் ஏற்படுத்திய வன்முறையான ஏற்றத்தாழ்வு படிநிலையில் குவிந்திருக்கும் அதிகாரம்- ஜனநாயகம் வளராமல் , மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்டு ,பொருளாதார ஏற்றத்தாழ்வை தூக்கிப் பிடிக்கும், ஏழைகளை நசுக்கும் அயோக்கிய பொருளாதார கொள்கைகளை உருவாக்கியும், மனித துன்புறுத்தலை நியாயப்படுத்தியும், அதிகார அத்துமீறலை நியதி ஆக்கியும், நல்ல மனிதர்கள் எதிரி மனிதர்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைத்து மனிதனின் கொடூர குணங்களை ஊக்கப்படுத்தி ஆதரித்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதநிதித்துவம், அதிகாரம் மறுக்கப்பட்டு நசுக்கப்பட்டு பறிக்கப்பட்டும், உயர் சாதிய தர்மத்தை நாசூக்காக தேச பக்தி ,பாரம்பரியம் போர்வையில் சாதிய கட்டமைப்பை வலுப்படுத்தி, சாதிய வன்கொடுமைகள், தீண்டாமை கொடுமைகள் இன்றளவும் தொடர காரணிகள் ஆகும்.
இறுதியாக..
எந்த அளவு சாதிய கோட்பாட்டை ,தீண்டாமை, சாதிய வன்கொடுமை கருத்துக்களை எதிர்க்க முற்படுகிறோமோ அதே அளவு அந்த கருத்துக்களை திணிக்கும், வலியுறுத்தும், நாசூக்கான வழியில் செயல்படுத்தும் சாதிய கட்டமைப்பான உயர் சாதிய அதிகார குவியலை தகர்த்து ,ஏற்றத்தாழ்வு படி நிலை சமுதாயத்தை மாற்றவும் வேண்டும். இது உயர் சாதி மக்களை வெறுக்கும் அரசியல் அல்ல. மாறாக சாதிய அதிகாரத்தை உடைத்து சமத்துவத்தை, நீதியை உருவாக்க முயற்சிக்கும் அரசியல். உயர்சாதியில் பிறந்தவர்களும் இந்த அரசியலில் சேர வேண்டும். பேண வேண்டும். சேருகிறார்கள். ஜனநாயகத்தை விரும்பும், மனித குல மேம்பாட்டை விரும்பும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பிரதநிதித்துவம் வழங்கி அரசியல் அதிகாரத்தை அளித்து குறிப்பாக எந்த மக்கள் அவர்களின் நிலையை தீண்டாமை, வன்கொடுமை செய்யப்படுகிறார்களோ அவர்களுக்கு அந்த நிலையில் இருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டு சமுதாயத்தின் உயர்ந்த நிலையை எட்டச் செய்ய வேண்டும்.
கூலித் தொழிலாளி நிலம் இல்லாமல், வீடு இல்லாமல் இருக்கும் போது அவர்கள் எந்த பொருளாதார தேக்கமும் இல்லாமல் நல்ல நிலையில் தேவைகள் தன்னிறைவோடு இருக்க செய்வது, திருநங்கைகள் பொருளாதார,அரசியல் அதிகாரம் மிக்க நிலையை எட்ட செய்வது, மாற்று திறனாளிகள் அனைத்து தளங்களிலும் பிற மனிதர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தளங்கள்,சௌகரியங்கள் அனைத்தும் ஈடாக செய்து தருவது, இவ்வாறு யார் மிகவும் விளிம்பு நிலையில் இருக்கிறார்களோ அவர்களிடம் இருந்து முன்னேற்றதை தொடங்கினால் தான் சமத்துவம் ஓங்கும். வெறுமனே முன்னேற்ற பாதை என்று திட்டம் வகுத்தால் அதனால் சில சமமற்ற முன்னேற்றம் நிகழலாமே தவிர சமத்துவம் பிறக்காது.சாதிய படி நிலை, தீண்டாமை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
இந்த அரசியல் புரிதலே அனைத்து தரப்பு மக்களும் பெற வேண்டும்.சாதி கட்டமைபை எதிர்ப்பவர்கள் , சாதிய வன்கொடுமையை எதிர்ப்பவர்கள் அதன் கருத்தை ஒழிக்க முற்படுபவர்கள் என அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். அனைவரின் அரசியலும் இந்த சாதிய படிநிலையை ,அதிகார குவியலை தகர்த்து அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல், பொருளாதார அதிகாரம் பெற்றவர்களாக குறிப்பாக சாதி படிநிலையில் ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரம் பெற்று சமத்துவ, ஜனநாயக கருத்துக்களோடு ,மனித குலத்தை நேசிக்கும் சமுதாயமாக உருவாக்க முற்பட வேண்டும். அதிகாரம் பிற்காலத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டு முற்போக்கு ஜனநாயக சமுதாயம் உருவாக வேண்டும் என்றாலும் அதன் ஆரம்பம் சாதிய படி நிலையை தகர்ப்பதே ஆகும். ஏனெனில் இங்கு சமநீதி, சமத்துவம், ஜனநாயகம்,சமவாய்ப்பு, மனித உரிமை, கல்வி உரிமை ,பொருளாதார முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம் என அனைத்தும் வன்முறையான சாதிய ஏற்ற தாழ்வு படி நிலை அதிகாரத்தை உடைப்பதிலும்,அதை வலியுறுத்தும் கருத்துக்கள் எந்த போர்வையில் இருந்தாலும் அதன் முகத்தை வெளிக்காட்டி அந்த கருத்துக்களை ஒழிப்பதிலும் தான் அடங்கியுள்ளது.