2010 ல் இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்வு. பத்திரிக்கையாளரான 22 வயது நிருபமா தனது அறையில் சடலமாக மீட்க்கப்பட்டார். நிருபமா தற்கொலை செய்துவிட்டதாக குடும்பமே கதறியது. காவல்துறை அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். திடுக்கிடும் பரிசோதனை அறிக்கை நாட்டையே உறைய வைத்தது. நிருபமா மூன்று மாத கர்ப்பிணி. அவள் தற்கொலை செய்யவில்லை,மூச்சுத்திணறி கொலை செய்யப்பட்டுள்ளார். குழம்பிப்போன காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. உயர் சாதி நிருபமா தாழ்ந்த சாதியை சார்ந்த நிரஞ்சன் என்பவரை காதலித்துள்ளார். நிரஞ்சனை ஏற்க முடிந்த நிருபமாவின் குடும்பத்திற்கு அவன் சார்ந்திருக்கும் சாதி ஏனோ உறங்க விடவில்லை. சாதி எனும் ஒற்றைக் காரணத்திற்காக நிருபமாவை சமரசம் செய்ய முயன்று அது தோல்வியில் முடியவே பெற்ற மகளை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர். சொந்த குடும்பமே நிருபமாவை சித்திரவதை செய்து கொலை செய்தது அம்பலமானது. நிருபமாவின் மாமா பத்திரிக்கையாளார்களிடம் ஆணவக் கொலைக்கு நியாயம் கற்பித்ததை உலகமே காரி உமிழ்ந்தது.
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலவேறு தலைவர்களும் ஆணவக்கொலையில் ஈடுபடுவர்களையும் ஆதரிப்பவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். இருப்பினும் எவ்வித பயனும் இல்லாமல் தொடர்ச்சியாக நாட்டின் பல இடங்களில் சர்வ சாதாரணமாக இன்றும் தொடர்கிறது ஆணவக்கொலைகள்.
நிருபமாவைப் போல் தென் இந்தியாவிலும் பெற்ற பிள்ளைகளை கொலை செய்த,செய்யத் துணிந்த வரலாறு உண்டு. அவை அனைத்துமே பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளாயின.
நவம்பர் 2012 – இளவரசன் – திவ்யா விவகாரத்தில் கலவரம் வெடித்து வீடுகள் எரிந்தன. இளவரசன் ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
2014 ல் கலப்பு திருமணம் செய்ததற்காக விமலா தேவி எரித்து கொலை செய்யப்பட்டார்.
மார்ச் 2016 – பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து சங்கர் படுகொலை செய்யப்பாட்டார். கௌசல்யா படுகாயங்களுடன் தப்பினார்.
மே2016 – கலப்பு திருமணத்திற்கு உதவி செய்த கர்ப்பிணி பெண் தனது குழந்தைக்கு முன்னால் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் பிரணய் தனது கர்ப்பிணி மனைவிக்கு முன்னால் வெட்டிச் சாய்க்கப்பட்டார்.
இப்பரபரப்பு தனிவதற்குள் மேலும் ஓர் கொலை முயற்சி அரங்கேறியது. சந்திப் – மாதவி தம்பதியை தீர்த்துக்கட்ட மாதவியின் தந்தை அரிவாளால் வெட்ட நல்வாய்ப்பாக இருவரும் தப்பினார்.
இப்படியாக தொடர்கிறது ஆணவக் கொலைகளின் வெறியாட்டங்கள். எண்ணற்ற கொலைகள் வீட்டிற்குள்ளேயே புதைக்கப்படுகின்றன, இன்னும் விபத்துகளாகவும் தற்கொலைகளாகவும் கூட உருமாற்றப்படுகின்றன.
சாதி வெறி கொலையோடு மட்டும் முடிவதில்லை. காயப்படுத்துவது, அடைத்து வைப்பது, அமிலம் வீசுவது, பாலியல் வன்கொடுமை எனப் பல பரிமாணங்களில் நடக்கிறது. சாதிய பெயர்களை சூட்டிக்கொண்டு அதை பெருமையாக கருதுபவர்களும் ஆணவக் கொலைகளை கர்வத்தோடு வர்ணிப்பவர்களும் இன்று வரை இருக்கத்தான் செய்கிறார்கள். சாதியை தூக்கிப்பிடிப்பவர்கள் மனிதர்கள் வாழும் இம்மண்ணிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.
ஆணவக்கொலைகளில் ஈடுபடுபவர்கள், திட்டம் தீட்டுபவர்கள், ஆதரிப்பவர்கள் என சாதிய வெறி கொண்டவர்களை கடுமையான சட்டம் இயற்றி தண்டிக்கப்பட வேண்டும். சாதி எனும் போலி முகவரிக்காக ஆணவக்கொலைகளுக்கு நியாயம் கற்பிக்காமல் அதனை எதிர்த்து குரல் கொடுக்க போராடுவோம்.சமத்துவமும் சகோதரத்துவமும் இம்மண்ணில் நிலைத்திட வேற்றுமைகளை களைந்து சாதியை ஒழித்திட இயங்கிடுவோம்.
வறட்டு கவுரவத்திற்கும்,வீண் பெருமை காக்கவும் சாதியை வெறிபிடித்து நேசிக்கும் பெற்றோரும் உற்றாரும் கொஞ்சம் அடங்கி அமைதி கொள்ளட்டும்..!
அஸ்ஃபாக் அஹமது
சமூக ஊடகவியலாளர்