(இந்த கட்டுரை, முஹம்மது முஜம்மில் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதிவை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.)
பொதுவாக மக்களிடையே அறிவியல் குறித்து மேலோட்டமான ஒரு கருத்து உள்ளது. அதாவது, அறிவியலால் அனைத்தையும் மதிப்பிட முடியும், நமது கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க முடியும் என்பதே. ஆனால் அது பிழையானது.
உதாரணத்திற்கு ஒரு கூற்றை எடுத்துக் கொள்வோம். “ஐஸ்வர்யா ராய் அழகானவர்” இந்த கூற்றை அறிவியல் அடிப்படையில் நம்மால் நிரூபிக்க இயலுமா? அவரது அழகை அறிவியலால் மதிப்பிட முடியுமா? முடியுமானால், ஒருவர் ஐஸ்வர்யா ராய் அழகில்லை என்று கூறுகிறார் எனில் அவர் அறிவியலின் அடிப்படையில் தவறான கருத்துடையவர் ஆவார்.
இதை எப்படி நாம் ஏற்றுக் கொள்வது. அழகு போன்ற மனித பண்புகள் சார்ந்தவற்றில் ஒவ்வொரு மனிதரின் பார்வைக்கும் வேறுபாடுகள் இருக்கும். இது போன்ற மனித பண்புகளை அறிவியலின் அடிப்படையில் மதிப்பிடவோ விளக்கவோ முடியாது. இப்படி அறிவியலால் விளக்க முடியாத பல விஷயங்கள் இவ்வுலகில் உள்ளன.
அப்படிப்பட்ட விஷயங்களில் முதன்மையானவை தான் ஒழுக்க விழுமியங்களும், நன்னெறிகளும். இவற்றை அறிவியலால் விளக்கவோ மதிப்பிடவோ ஒருபோதும் முடியாது.
அறிவியலால் இவை தொடர்பான ஆதாரங்களை மட்டுமே அளிக்க முடியும். உதாரணமாக, இவை மனித மூளையில் ஏற்படுத்தும் தாக்கங்கள், சமூகத்தில் அவற்றால் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை கூற முடியும். ஆனால், ஒழுக்க விழுமியங்கள், நன்னெறிகள் பற்றிய இறுதித் தீர்மானமான சரி எது? தவறு எது? என்பதை நிர்ணயிக்க முடியாது.
ஏனெனில் ஒழுக்க விழுமியங்களும் நன்னெறிகளும் சமூக, கலாச்சார, மத அடிப்படையில் உருவாகும் உள்ளார்ந்த உணர்வுகள் மற்றும் கருத்துகளாகும். எனவே தான், நாம் மத வழிகாட்டுதல்கள், தத்துவங்கள் ஆகியவற்றில் இருந்து அவற்றை பெற்றுக் கொள்கிறோம்.
இங்கு, தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக உள்ள ஓரினச்சேர்க்கையை நம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.
அறிவியலின் வழி ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பவர்களால் வைக்கப்படும் ஒரு முக்கிய வாதம் என்னவென்றால் “ஓரினச்சேர்க்கை இயற்கை தானே?” அது ஏன் எதிர்க்கப்படுகிறது, குறிப்பாக இஸ்லாம் ஏன் அதை தடை செய்துள்ளது என்பதாகும்.
ஓரினச்சேர்க்கை இயற்கை தான் (அதிலும் கருத்து வேறுபாடுகள் இருக்க) என்ற வாதத்தினை முன்வைத்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டாக வேண்டும் என வாதிடப்படுகிறது.
நாம் இங்கே ஒரு விஷயத்தை நினைவுகூற வேண்டியுள்ளது, இரு பால் உறவும் இயற்கையே, ஆனால் அனைத்து வித இரு பால் உறவையும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை. இரு பால் உறவு இயற்கையாக இருப்பினும் விபச்சாரத்தையும், திருமணத்திற்கு புறம்பான உறவையும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் இது குடும்ப அமைப்பையும், உறவுகளையும் சீரழிவிற்கு இட்டுச்செல்லும்.
இது போன்றே ஓரினச்சேர்க்கையும் தனி மனிதனுக்கும், குடும்ப அமைப்பிற்கும் பெரும் தீங்கை இழைக்கிறது. பாலியல் நோய்கள், மன ரீதியிலான பிரச்சனைகள், குடும்ப அமைப்பையும் உறவுகளையும் சீர்குலைத்தல் போன்றவை குறிப்பிடத்தக்க பிரச்சனைகள் ஆகும்.
சமூக அளவில் பார்த்தோமானால், ஓரினச்சேர்க்கையாளர்களால் குழந்தை பெற இயலாது, அது மக்கள் தொகை சரிவுக்கு வழிவகுக்கும். குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே மக்கள் தொகையில் சரிவை சந்தித்து வரும் வேளையில் ஓரினச்சேர்க்கையானது மேலும் பெரிய பாதிப்பை அடைய வழிவகுக்கும்.
மேற்கத்திய தாராளவாதிகளின் ‘தீங்கு கொள்கை’ ஒருவர் மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்காத வரை என்ன வேண்டுமானாலும் அவர் செய்து கொள்ளலாம் என்கிறது. இதன் அடிப்படையிலும் ஓரினச்சேர்க்கை தவறு என்றே வரையறுக்கப்படுகிறது.
இமானுவேள் கான்ட் பொய் பேசுவது ஒழுக்க அடிப்படையில் தவறு என்றுகிறார். அது மறைமுகமாக சமூகத்திற்கு இழைக்கும் தீங்கின் காரணமாக தடை செய்யப்பட வேண்டும் என்கிறார். ஒரு மனிதன் பொய் பேச அனுமதிக்கப்பட்டால், பரவினால், அது சமூகத்தின் கட்டமைப்பையே எதிர்காலத்தில் குழைத்துவிடும் என்கிறார். இதன் அடிப்படையிலும் ஓரினச்சேர்க்கை தவறே.
இப்படி அறிவியலுக்கு அப்பால் பார்க்கும் போது ஓரினச்சேர்க்கை எப்படிப்பட்ட தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிய முடிகிறது. இது போன்ற ஒழுக்க சீரழிவிற்கு வழிவகுப்பதாலே இஸ்லாம் ஓரினச்சேர்க்கையை தடை செய்துள்ளது.
இந்த ஆய்வின் மூலம் ஒழுக்க விதிகளை அறிவியலால் தர முடியாது என்பது நிரூபணம் ஆகிறது.