சமீபத்தில் ஒரு ஓடிடி தளத்தில் புர்கா எனும் சர்ச்சைக்குரிய திரைப்படம் வெளியாகியிருந்தது. படத்தின் கதைக்களமும் காட்சியமைப்பும் இஸ்லாத்தின் மீது வெறுப்பை விதைக்கும் உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. பெண்ணியவாதத்தின் பெயரால் இந்துத்துவ அரசியலுக்கு வலுச்சேர்க்கும் திரைப்படம் அது.
திருமணமாகி வெறும் ஒரே வாரத்தில் தன் கணவனை இழந்து இத்தாவிலிருக்கும் 21 வயதேயான நஜ்மா ( மிர்னா) சில சந்தர்ப்ப சூழ்நிலையால் சூரியா( கலையரசனை) எனும் கதாபாத்திரத்திற்கு தன் வீட்டில் அடைக்கலம் அளிக்கிறார், அதன் பிறகு நடைபெறும் இவர்களுக்கிடையேயான உரையாடல் தான் இம்முழுப்படமும்.
புர்கா படத்தை காட்சிவாரியாக விவரிக்கும் அளவுக்கு படத்தில் ஒன்றுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, திருமணத்துக்கு அப்பாலான உறவை புரட்சிகரமாகச் சித்தரிக்க முயலும் லஷ்மி எனும் குறும்படத்தை இயக்கிய சர்ஜூன் என்பவர்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இதில் ‘இத்தா’ வழக்கத்தை பிரச்னையாக்கியிருக்கிறார்.
இத்தா என்பது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு – மணவிலக்கு நடந்தால் மூன்று மாத காலம் உறவுகொள்ளாமல் ஒரே வீட்டில் இருக்க வேண்டும். அவர்களுக்கு மீண்டும் மனம் பொருந்தினால் சேர்ந்துகொள்ளலாம். இல்லாவிட்டால் இக்காலத்தைக் கடந்து மூன்று தலாக் முடிந்து விட்டால் அவர்களுடைய திருமண ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும்.
இரண்டாவது, இப்படத்தில் காட்டியுள்ளதைப் போல் கணவன் இறந்த பிறகு இருக்கும் இத்தா. இதிலும் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, கணவனும் மனைவியும் உறவுகொண்டிருந்தால் நான்கு மாதம் பத்து நாள் இத்தா இருக்க வேண்டும். அது நீங்கள் உங்கள் படத்தில் காட்டியுள்ளதைப்போல தனிமை சிறையில் அடைக்கப்பட்டதைப் போல இருப்பதல்ல. அப்பெண்ணின் மனதை வலிமைப்படுத்த, சோகத்தை மறக்கடிக்க, தன் வயிற்றில் ஏதாவது குழந்தை உருவாகியுள்ளதா என்பதையெல்லாம் அறிவதற்கான காத்திருப்புக் காலம். அந்நிலையில் அந்நிய ஆண்களைத் தவிர அனைவரிடமும் பழகலாம்.
குடும்பத்திற்குச் சம்பாதிக்க வேறு யாரும் இல்லாத நிலையில் தானே வெளியில் சென்று சம்பாதிக்கவும் செய்யலாம். ஆனால் அந்நிய ஆணிடம் தான் பேசுவேன், பழகுவேன் என அடம்பிடிப்பதற்கு வேறு பெயர்!
1400 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த சட்டத்தை ஏன் பின்பற்றுகிறீர்கள். அப்போது அறிவும் இல்லை, அறிவியலும் இல்லை என்ற வசனம் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அறிவு வளர்ந்து முதிர்ச்சி அடைந்த தற்காலத்தில்தான் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்த குழந்தைக்கு இத்தா நடைமுறை மூலம் சொத்துரிமையை வழங்கியுள்ளதுதான் மிகப்பெரும் முற்போக்கு.
திருமணமாகி உறவு கொள்ளாமலேயே கணவர் இறந்து விட்டால் பெண்ணுக்கு இத்தா கடமையே அவசியமில்லை. இப்படத்தின் கதைக் களத்திலும் அப்படித்தான், இந்த அடிப்படை புரிதல்கூட இல்லாமல் படத்தை எடுத்து இருக்க வாய்ப்பில்லை ஆக அறிந்தே இஸ்லாமியர்களின் மீது வன்மத்தைக் கக்கி சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கலவரத்தில் அடிப்பட்டு வந்த கலவரக்காரனை காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தால் அவர்களே சிகிச்சை செய்து காப்பாற்றி இருப்பார்கள். அப்படிச் செய்யாமல் தன் வீட்டிலே வைத்து சிகிச்சை செய்கிறார். இப்படி அப்பெண்ணின் தைரியத்தைக் காட்டுவதற்காகச் சித்தரித்திர்கிறார்களாம். கொஞ்சம்கூட அந்நிய ஆண் என எந்தக் கூச்சமுமில்லாமல் சகஜமாக உயிர்த் தோழனைப் போல உறவாடுகிறார். ஆனால் படம் முழுவதும் முகத்தில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு திரிகிறார் கதாநாயகி. அதற்கு ஹிஜாப் என்று பெயராம். அந்நிய ஆணோடு தனியாக இருந்து பல இடங்களில் வலிவதைப் போல் பேசி முகத்தை மட்டும் மூடி தன் உடலை வெளிப்படுத்தி அடுப்பங்கரை வரை அந்நிய ஆணை அனுமதித்து, தோளில் சாய்ந்து, உருக்கமாகப் பேசி இஸ்லாத்தைக் குறைகூறி, நான் இந்த மதத்தால் அடிப்பட்டு, இந்த சடங்கின் மூலம் தனிமையில் வாடுகிறேன் என்று முஸ்லிம் கதாநாயகி வருந்துவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்த அறியாமையும், இஸ்லாம் மீதான வன்மமும்தான் படம் நெடுக விரவிக்கிடக்கின்றன.