வாழ்க்கையில் பணம்தான் எல்லாமே, பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனக் கருதும் கதாபாத்திரமான புலிப்பாண்டியும், அவரின் நண்பர்களும் தூத்துக்குடியில் சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்துவருகின்றனர். ஒருகட்டத்தில் காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக மாலை போட்டு சபரிமலைக்குச் சென்று விடுகின்றனர்.
அங்கு இஸ்லாமிய முதியவர் இஸ்மாயிலிடம் ஒரு லாட்டரி சீட்டை வாங்கி, அதை அங்கேயே தவற விட்டுச் செல்கின்றார். முதியவர் அதை எடுத்து பத்திரப்படுத்தி வைக்கிறார். எதிர்பாராத விதமாக அந்த லாட்டரிக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுகிறது.
இதை அறிந்து அதிர்ந்துபோன முதியவர், அந்தப் பணத்தின் உரிமையாளரான கதாநாயகன் புலிப்பாண்டியிடம் தனக்கு இருக்கும் பல தடைகளையும் தாண்டிச் சென்று அதைச் சேர்த்தாரா, இல்லையா என்பதை உண்மைக்கு நெருக்கமாக ஆக்சனுடன் எமோஷனைக் கலந்து சொல்லியிருக்கும் படம்தான் பம்பர்.
கடந்த வாரம் வெளியான இப்படத்தை அறிமுக இயக்குநரான செல்வக்குமார் இயக்கியுள்ளார். அருமையான கதை, கதாபாத்திரங்கள். அதற்கேற்ற பக்காவான நடிகர்கள் தேர்வு. கதாநாயகக் கதாபாத்திரம் வெற்றி உட்பட நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு பாராட்டுக்குரியது. அதிலும் குறிப்பாக, முதியவர் இஸ்மாயில் பாத்திரத்தில் நடித்த ஹரீஷ் பெரேடி தூள் கிளப்பியிருக்கிறார். நேர்த்தியான ஒளிப்பதிவு, மென்மையான இசை போன்றவை இத்திரைப்படத்தின் பலங்கள்.
பணம் எனும் காரணி மனித மனங்களைப் புரட்டி எவ்வாறு அவர்களைத் தீமையின்பால் அழைத்துச் செல்கிறது என்பதையும், நேர்மையும் மனிதமும் அதை எவ்வாறு வெல்கிறது என்பதையும் இத்திரைப்படம் காட்சிப்படுத்தி இருக்கிறது.
இயக்குநர் இந்தப் படத்தின் கதாபாத்திரங்களை எவ்வளவு அழகாக வடிவமைத்துள்ளார் என்று பாருங்கள். ஒருபக்கம், முதியவர் இஸ்மாயில் வறுமையில் தன் குடும்பமே வாடும் நிலையிலும் தனக்குச் சொந்தமில்லாத பிறரின் பணத்தின் மீது துளியும் ஆசை அற்றவராகவும் நியாயமானவராகவும் இருக்கிறார். மறுபுறம், திருடி, கொலை செய்தேனும் பணம் சேர்த்து விட நினைக்கும் புலிப்பாண்டி கதாபாத்திரம். இவ்விரு கதாபாத்திரங்களும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சியில் இஸ்மாயிலின் நல்லொழுக்கத்தின் தாக்கத்தால் புலிப்பாண்டிக்கு ஏற்படும் மனமாற்றம் நம்பும்படியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
பொதுவாகவே முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் வில்லன்களாகவும் சித்தரித்து திரைப்படங்கள் எடுக்கப்படும் சூழலில் இஸ்மாயில் போன்ற கதாபாத்திரத்தை வடிவமைத்ததற்கே இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.
படத்தில் சிறுசிறு குறைகள் இருப்பினும், இத்திரைப்படம் பேசும் மனிதம், நுட்பமான அரசியல் போன்றவை அவை அனைத்தையும் மறக்கச் செய்கின்றன. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ வேண்டிய ஒரு நல்ல படைப்பு ‘பம்பர்’.
சமீபத்தில் வெளியான பல குப்பைத் திரைப்படங்களை குடும்பம் குடும்பமாகச் சென்று பார்த்த மக்கள் இதுபோன்ற சமூகத்திற்கு நல்ல கருத்துகளை எடுத்துரைக்கும் திரைப்படங்களை ஆதரிக்காவிட்டால், வருங்காலத்தில் பம்பரைப் போன்ற நல்ல திரைப்படங்களை நாம் இழக்க நேரிடும்.
1 Comment
அருமையான பதிவு