சென்னை பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறையில் மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டிவிட்டு ஒரு தரப்பு மாணவர்களை தீவிரவாத முத்திரை குத்தும் வேலையை துறைத் தலைவரே மேற்கொண்டுள்ளது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக ஊடகவியல் துறை தலைவரைக் கண்டித்து துறை மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறை தலைவர் ரவீந்திரன் என்பவர், தான் நடத்தி வரும் ‘முற்றம்’ என்ற அமைப்பில் பங்குகொள்ளாத மாணவர்களை தேர்வுகளில் தோல்வி அடையச் செய்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட மாணவர்கள் மீது நக்சலைட்கள் என்று முத்திரை குத்தி அவர்களது எதிர்காலத்தை பாழ்படுத்திவிடுவதாகவும் குடும்பத்தினர் மீது பாலியல் வழக்கு போடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
தனது பரிந்துரையில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களை அந்த மாணவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு மோதலை ஏற்படுத்தும் வேலையையும் ரவீந்திரன் செய்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரிந்திருந்தும் அவரது அரசியல் செல்வாக்காலும், பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவில் அவர் இருப்பதாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பிற்கு குந்தகம் விளைவிப்பதுடன் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தையே நாசமாக்கும் ஊடகவியல் துறை தலைவர் ரவீந்திரன் போன்றவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதே போராடும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தி சேகரிப்பு:
சகோதரன் குழு