இந்த மௌனம் கொல்கிறது நண்பர்களே!
உங்கள் மௌனம் என்னைக் கொல்கிறது நண்பர்களே!
உண்மைதான்!
உங்கள் மௌனம் எனது கொலைக்கு ஒப்பானதாய் நான் கருதுகிறேன் நண்பர்களே!
முகநூலில், ஐந்தாயிரம் நண்பர்கள். இதில் பின்பற்றாளர்கள் இன்னும் சில ஆயிரம். அப்படியிருந்தும் இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அராஜகம் குறித்து நீங்கள் மௌனமாக இருப்பது என்னை பெருத்த கேள்விகளால் துளைத்தெடுக்கிறது என்பதே உண்மை.
எனது பதிவுகளுக்கு நீங்கள் தெரிவிக்கும் விருப்புகள், வெறுப்புகள், அழகிய முறையில் விவாதிக்கும் பின்னூட்டங்கள், எனது ஒளிப்படங்களுக்கான உங்களது புகழுரைகள், விமர்சனங்கள் இவை எல்லாம் போலியானவை என்று உங்கள் மௌனத்தின் பொருளாய் நான் எடுத்து கொள்ளலாமா?
இன்னும் ஓரிரு மாதங்களில் பாட்டன், பூட்டன் என்று காலங்காலமாய் வாழ்ந்து வந்த ஒரு சமூகத்தின் அங்கத்தினரான எனது குடியுரிமை சம்பந்தமாக வளர்ந்து நிற்கும் கேள்விக்குறியும், அனுதினமும் நாட்டில் நடக்கும் பதட்டங்களுமாய் கழியும் பொழுதுகள் ஒருவேளை நீங்கள் உள்வாங்காமலிருக்கலாம்.
ஆனால், நானும் என்னைச் சார்ந்தோரும் இந்த நாட்டின் பூர்வகுடிகள் என்று உயிருடன் நெஞ்சை கிழித்து காட்டிகொண்டிருக்கும் முயற்சிகளை நான் எப்படி உங்களிடம் விவரிப்பேன் நண்பர்களே!
கோபம், வருத்தம், கவலை என்று என்னைச் சுற்றியும் படர்ந்து நிராசையுடன் ஒருவர் மற்றொருவரைப் பார்க்கும் நிலையில் உங்களது மௌனம் என்னை பெரிதும் கொல்கிறது தோழர்களே!
நாட்டின் அமைப்பு சட்டத்துக்கு எதிராக, அதன் பன்முகத்துக்கு எதிராக மனுவாதிகள் நடத்திவரும் அட்டூழியங்கள் எங்களுக்கு மட்டுமானவை அல்ல நண்பர்களே உங்களையும் பாதிப்படைய செய்ய இருப்பவை என்பதை காலங்கடந்துதான் உணரப் போகிறீர்களா? அன்று நான் இருப்பேனோ என்னவோ தெரியாது.
நாம் எல்லோரும் ஒன்று என்றால் இல்லை என்கிறார்கள் மனுவாதிகள்.
நீங்களோ யாருக்கோ ஆனதுபோல சம்பந்தமின்றி மௌனமாக இருக்கிறீர்கள்.
ஒரே ஒரு ஆறுதல் வார்த்தையும் சொல்ல மறுக்கிறீர்கள். இந்த மௌனம் என்னைக் கொல்கிறது நண்பர்களே!
எங்கள் உணவுமுறையில் கைவைத்தார்கள் மனுவாதிகள்.
மாட்டுக்கு தரும் மரியாதையை மனித உயிருக்கு தராமல் உயிருடன் அடித்துக் கொன்றார்கள். வேதனைகளை அடக்கிக் கொண்டு அமைதி காத்தோம்.
உங்களை எவ்வகையிலும், பாதிக்காத எங்களது வாழ்வியல் சட்டங்களில் ‘முத்தலாக்’ என்று கை வைத்தார்கள் மனுவாதிகள்.
அமைதி குலையக்கூடாதென்று அப்போதும் பொறுத்துக் கொண்டோம்.
எங்கள் வழிபாடு தலத்தை இடித்து தரைமட்டமாக்கினார்கள் மனுவாதிகள்.
நாட்டின் உயரிய நீதிபரிபாலனம் நடுநிலையாக நிற்கும் என்ற நப்பாசையில் பல்லாண்டுகள் காத்து கிடந்தோம்.
இறுதியாக, இடித்தவனுக்கே நிலம் சொந்தம் என்று ஒரு விசித்திரமான ஒரு தீர்ப்பு எழுதப்பட்டது. அதையும் பொறுத்துக் கொண்டோம்.
கடைசியில், குடியுரிமை என்ற பெயரில், எம் மண்ணிலிருந்து அப்புறப்படுத்த மனுவாதிகள் நினைக்கும்போது, மௌனமாக நிற்போம் என்று நீங்களுமா நண்பர்களே நினைத்தீர்கள்?
இறுதியாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல நினைக்கிறேன். அன்று வெள்ளையனை விரட்ட எழுந்த முதல்குரல் இங்கிருந்துதான் எழுந்தது.
இன்று நாட்டின் அமைதியை, அதன் பன்முகத்தன்மையை சூறையாட நினைக்கும் கொள்ளையரை, மனுவாதிகளை விரட்ட மீண்டும் ஒலித்திருக்கும் குரல் இங்கிருந்துதான்!
எங்கள் கொள்கையை ஒருவேளை வாசித்திருந்தால் ஒன்று உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் நண்பர்களே. “இறைவன் புறத்திலிருந்து வந்தோம்! மீண்டும் இறைவன் புறத்தில் திரும்பி செல்பவர்களாகவே இருக்கிறோம்!” – என்று ஒவ்வொரு கணமும் எங்களுக்கு எங்கள் முன்னோர்கள் ஊட்டி வளர்த்ததைப் போலவே எங்கள் பிள்ளைகளுக்கும் ஊட்டி வளர்க்கிறோம்.
அதனால், இழப்புகள் எதுவாயினும் அவை இறைவனுக்காகவே என்று உள்வாங்கி வளர்ந்தவர்கள் நாங்கள். எங்களை வாசித்திருந்தால் நண்பர்களே இந்த எஃகு உறுதியை உங்களால் புரிந்து கொண்டிருக்க முடியும்.
மனுவாதிகள், உங்கள் வீட்டு கதவுகளைத் தட்டும் முன் உங்களுக்கும் அரணாய் நின்று இவர்களைத் தடுத்திட நினைக்கிறோம் நண்பர்களே!
ஒருவேளை.. ஆம்.. ஒருவேளை, இந்த அஹிம்சை போராட்டத்தில் மரணமுற நேர்ந்தால் மண்ணறை அருகிலாவது உங்களது மௌனத்தை கலைப்பீரா நண்பர்களே!
- இக்வான் அமீர்