எழுதியவர் : அஷ்ஃபாக் அகமது, சமூக ஊடகவியலாளர்
உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளுள் ஒன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அரங்கேறியது. அது ஒரு பேரழிவு. உலகமே அதிர்ச்சியில் உறைந்து இந்தியாவை கொஞ்சம் உற்றுப்பார்த்தது.
அந்த பேரழிவுக்கு காரணம் ஓர் அமெரிக்க ஆலை. அமெரிக்க நிறுவனத்துக்குச் சொந்தமான பூச்சிக்கொல்லி தயாரிக்கும் யூனியன் கார்பைட் ஆலை.
ஆலையை நவம்பர் மாதத்திலேயே மூடிவிடலாம் என்று தான் அவர்கள் எண்ணி இருந்தனர். ஆனால் விதி என்னவோ டிசம்பரில் மக்களை காவு வாங்குவதற்காக காத்திருந்தது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி இரவு நடந்தது அந்த மீள முடியாத துயரம்.
அமைதி சூழ்ந்த இரவில் போபால் நகர மக்கள் இளைப்பாறிக் கொண்டிருந்த நேரம். நடுநிசி பொழுதில் திடீரென உறக்கத்தில் இருந்தவர்கள் இரும ஆரம்பித்தனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பலருக்கு வாந்தி மயக்கம். யாருமே இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. கதவு ஜன்னலை அடைக்கத் தொடங்கினர். இருப்பினும் விஷவாயு வீட்டுக்குள் புகுந்து நீண்ட நேரம் ஆனது அம்மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் மூச்சு விட சிரமமாக இருந்தது. ஏதோ விபரீதம் நடப்பதை உணரத்தொடங்கினர். வீட்டை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். உடுத்திய உடையுடன், வீடுகளை பூட்டாமல், அனைத்தையும் விட்டுவிட்டு ஓடினர். பாவம் எங்கு ஓடுவது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சிலர் மயக்கம் அடைந்து தெருக்களில் விழுந்தனர். உலகம் அழியத் தொடங்கிவிட்டதாக பதறினர். ஆனால் அழிவு என்னவோ உலகுக்கு அல்ல, போபாலுக்கு தான்.
இரவில் 30 டன் மீதைல் ஐசோ சையனைடு எனப்படும் உயிர்க்கொல்லி விஷவாயு அமெரிக்க நிறுவனத்துக்குச் சொந்தமான பூச்சிக்கொல்லி தயாரிக்கும் ஆலையில் இருந்து கசிந்து வளிமண்டலத்தில் கலந்தது தான் இது அனைத்துக்கும் காரணம்.
விஷவாயுவை சுவாசித்த பலர் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரை விட்டனர். தப்பிக்க நினைத்தவர்களும் பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் பரிதாபமாக மரணத்தை தழுவினார்கள். அடுத்த நாள் காலையிலும் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக மக்கள் மடிந்து சாய்ந்தனர்.
மருத்துவமனை நிரம்பி வழிந்தது. இடமில்லை. சிகிச்சைக்காக ஓடோடி வந்தவர்களெல்லாம் சாலையில் சுருண்டு விழுந்து இறந்தனர். ஒன்றும் அறியா கால்நடைகளும் செத்து மடிந்தன. இக்கொடூர பேரழிவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவிகள் மரணமடைந்தனர்.
இது ஓரிரு நாளில் முடியவில்லை. அதன் தாக்கம் இன்று வரை மக்களை நிம்மதி இழக்கச் செய்துவிட்டது. ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இப்பேரழிவில் இருந்து தப்பியவர்கள் இன்னமும் புற்றுநோய், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பின்விளைவுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிலரின் பணத்தாசை, சிலரின் கவனக்குறைவு விலைமதிப்பற்ற லட்சம் உயிர்களை காவு பறித்துவிட்டது. பெண்கள் கணவனை இழந்து விதவையானார்கள். குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதைகளாயின. தவம் இருந்து பெற்ற குழ்ந்தைகள் இறந்து பிறந்தது.
கருத்துச்சிதைவுகள் ஏற்பட்டது. விஷவாயுவின் தாக்கம் தாய்ப்பாலையும் விட்டு வைக்கவில்லை. இன்று வரை உடல் உறுப்புகள் செயலிழந்து தவிப்பவர்கள் எண்ணற்றவர்கள்.
யாரும் யாரையும் காப்பாற்றிக் கொள்ள முடியாத ஓர் அழிவு.
கொடூர விஷவாயு தனது பசிக்கு யாரையும் விட்டு வைக்கவில்லை. போபால் பேரழிவு ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கிப் போட்டது. இந்திரா காந்தி ஆட்சியில் தான் இந்த அமெரிக்க நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சாதாரண மனித தவறில் சிக்கி சின்னாபின்னமாகி உருக்குலைந்து போனது போபால். அந்த ஆலையின் மேலாளரும் அமெரிக்க தொழிலதிபருமான வாரென் ஆன்டர்சன் ஒரு நாள் கூட சிறைவாசம் அனுபவிக்கவில்லை. ஆணவ அமெரிக்க அரசு அந்த பாவியை தற்காத்துக்கொண்டது. அது தானே அவர்களின் கொள்கையும். இந்திய அரசு அவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் அவ்வளவு முனைப்பு காட்டவில்லை. அவனை பத்திரமாக அமெரிக்க அனுப்பி வைத்தது அன்றைய மத்திய அரசு.
92 வயதில் அவன் மரணித்த பிறகும் உலகின் பல ஓரங்களில் இருந்து செயல்பாட்டாளர்கள் கண்டன குரல்கள் எழுப்பினர். லட்சம் உயிர்கள் செத்து மடிய காரணமாக இருந்த ஆன்டர்சன் சாதாரணமாக இறக்க விட்டிருக்கக்கூடாது. இந்திய மக்களும் போராடினர். இருப்பினும் என்ன பயன்?
இன்று வரை போபால் வீதிகளில் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இதுவரை அரசு தரப்பில் முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை.
இன்னமும் போபால் நிலத்தடி நீரில் கலந்துள்ள விஷம் அகற்றப்படவில்லை. மீள முடியா துயரக்கடலில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் வேதனையுடனேயே கழிக்கிறது போபால் நகர மக்களின் வாழ்வு.
மருத்துவமும் தொழில்நுட்பம் வளர்ச்சியை நோக்கி பறந்து கொண்டிருக்க, இன்னமும் அம்மக்களை பாதிப்பில் இருந்து மீட்க முடியாதது கொடுமையின் உச்சகட்டம். இன்னும் நீங்காத சுவடுகளோடு காலம் காலமாய் நோயாளிகளாகவே வாழ்ந்து மடிகிறது போபால்.