பாஜக ஆட்சியும் அரசியலமைப்பு சாசனமும்
இந்தியா சுதந்தரமடைந்து இத்தனை வருடங்களில் இதுவரை பேசப்படாத அளவிற்கு ஜனநாயகம் பற்றியும் அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பது பற்றியும் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ஜனநாயகம் என்பது சாதி, மத, வர்க்க பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் சமமான உரிமைகளையும், பங்களிப்பையும், அதிகாரப் பகிர்வையும் பெற வழிவகுக்கிறது. இந்த ஜனநாயகத்தை உறுதி செய்யும் பொறுப்பை அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஜக ஆட்சியை நாம் மீளாய்வு செய்து பார்க்கும்போது இந்தியாவில் எவ்வாறு ஜனநாயகம் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதையும், அரசியல் சாசனம் எப்படி நீர்த்து போகச் செய்யப்பட்டுள்ளது என்பதையும் நம்மால் உணர முடியும்.
இந்த துறை, அந்த துறை என்றல்லாமல் சகட்டுமேனிக்கு எல்லாத்துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை அகல விரித்து வைத்திருக்கும் பாசிச ஆட்சியால் தெருவில் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கணக்கற்ற பொத்தல்கள் கொண்ட ஆடையைப் போல இந்தியா நான்கு வருடங்களில் கிழிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த ஆட்சி தொடர்ந்தால் முழு ஆடையும் கிழிக்கப்பட்டு நிர்வாணமாக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. பக்தர்களின் பாசையில் சொல்ல வேண்டுமானால் அவர்களது பாரதத்தாய் பாசிச வெறி பிடித்த நாய்களால் கடித்துக் குதறப்பட்டு மரணத் தருவாயில் போராடிக் கொண்டிருக்கிறாள்.
அரசியலமைப்பு சட்டத்தின் மீதான பாஜகவின் தாக்குதல் இந்த ஆட்சியில் மட்டும் நடப்பதல்ல. தவறான இடத்தில் இருந்த சரியான நபர் என்று சொல்லப்பட்ட வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப்பட வேண்டிய, இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகளின் தொகுப்பு என்று அறிவிப்பதற்காகவே ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தின்போதே அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று சூளுரைத்தே வெற்றி பெற்றிருக்கிறது. சுதந்திரம் பெற்றது முதலே தொடர்ந்து வரும காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ரத்து செய்வோம் என்று சொல்லியே ஆட்சிக்கு வந்தது. அதோடு காஷ்மீர் நிரந்தர குடிமக்கள் பற்றி வரையறுக்கும் 35A என்ற பிரிவையும் ரத்து செய்யப் போவதாக பேசி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே நாங்கள் அரசியல் சட்டத்தை மாற்றவே வந்திருக்கிறோம் என்று கூறினார். அரசியல் சாசனத்தின் முன்னுரையில் இருக்கும் Secularist,Socialist என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று பேசியுள்ளார். பல முக்கியமான சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறாமல் குறுக்கு வழியில் நிறைவேற்றியிருக்கின்றனர். நில அபகரிப்பு சட்டத்தை ராஜ்யசபாவில் நிறைவேற்ற போதிய பலம் இல்லாததால் ராஜ்யசபா ஒப்புதல் தேவைப்படாத Money Bill ஆக மாற்றி நிறைவேற்றியிருக்கின்றனர். பல்வேறு முக்கியமான துறைகளின் நியமனங்களையும் அரசியலமைப்பு சட்டம் சொல்லாத குறுக்கு வழியில் தங்களது சொல்படி ஆடும் பாசிச எண்ணம் கொண்டவர்களை வைத்து நடத்தியுள்ளனர்.
மத்திய அரசு அரசியல் சட்டத்தை எந்தளவிற்கு மதிக்கிறது என்பதற்கு பணமதிப்பழிப்பு ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டில் புழக்கத்தில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட பணத்தை செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் அறிவிக்கவோ, விவாதிக்கவோ இல்லை. ஏன் அரசில் அங்கம் வகுக்கும் அமைச்சர்களிடம் கூட கலந்தாலோசிக்கவில்லை. பிரதமர் தனது தூக்கத்தில் தோன்றிய கனவை அரசியல் சட்டத்தை, நாடாளுமன்றத்தை, மக்கள் பிரதிநிதிகளை மருந்துக்குக் கூட மதிக்காமல் சர்வாதிகாரத்தனமாக நனவாக்க முயன்றுள்ளார். அவசரக்கோலத்தில் அவர் செய்த அந்த குற்றத்திற்கு நாட்டின் குடிமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணதண்டனை அனுபவித்தும் இன்றுவரை அதற்காக சிறு வருத்தம் கூட தெரிவிக்காமல் ஆட்சி செய்து வருகிறார்.
அரசியல் சாசனம் அனைத்து தரப்பு மக்களுக்குமான அதிகாரப் பகிர்வை வலியுறுத்துகிறது. ஆனால் தற்போதைய மத்திய அரசு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இந்த தேசத்தில் எந்தவிதமான உரிமைகளும், அதிகாரமும் இல்லை என்பதை தனது கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறது. தற்போதைய ஆளும்கட்சி எம்பிக்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. உத்திரபிரதேசத்தில் ஆளும் பாஜக சார்பாக ஒரு எம்எல்ஏ கூட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தில் இருந்து இல்லை. நாட்டிலும், நாட்டின் மிகப்பெரிய மாநிலத்திலும் ஐந்தில் ஒரு பங்கு வாழும் ஒரு சமுதாயக் கூட்டத்தில் இருந்து ஆளும் அரசில் ஒரே ஒரு மக்கள் பிரதிநிதி கூட இல்லாததன் மூலம் பாஜக சொல்ல வரும் செய்தி ஒன்றே ஒன்று. எங்கள் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எவ்வித உரிமைகள், அதிகாரம், பங்களிப்பும் இருக்காது. நாங்கள் ஆட்சியில் தொடர்ந்தால் இந்த நாட்டிலேயே அவர்களுக்கு இடம் கிடையாது என்பதுதான் அது. இந்த செய்தியைத் தான் அவர்களது பிரதிநிதிகள் ஊர் ஊராக, கூட்டம் கூட்டமாக சொல்லி வருகிறார்கள். ராமரை ஏற்காதவர்கள் இந்தியர்கள் இல்லை, சூரியனை வணங்காதவர்கள், யோகாவை எதிர்ப்பவர்கள்பாகிஸ்தான் செல்லுங்கள், அரசை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகள், முஸ்லிம் பெண்களின் பிணங்களைத் தோண்டியெடுத்நு கற்பழியுங்கள், மாட்டிறைச்சி வைத்திருந்தால், மாடு வளர்த்தால் மரண தண்டனை இவையெல்லாம் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் வெகுமானங்கள்.
முறையாக தேர்தல் நடத்தி, முடிவில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்கும் உரிமை என்பது அரசியல் சாசன வழிமுறை. ஆனால் ஜார்கண்ட்டிலும், சத்தீஸ்கரிலும் ஆட்சியில் இருப்பவர்களை அரசியல் அமைப்பிற்கு புறம்பாக, தங்களால் நியமிக்கப்பட்ட பொம்மை ஆளுநர்கள் மூலம் அகற்றிவிட்டு அங்கு தங்கள் ஆட்சியை நிறுவியது பாஜக. மணிப்பூர், கோவா, அசாம் போன்ற மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சியமைக்க அழைக்கப்படாமல் பெரும்பான்மைக்கு அருகாமையில் கூட இல்லாத பாஜக ஆட்சியமைத்தது. இதுதான் இந்த ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டத்திற்கும், தேர்தலுக்கும், மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்திற்கும் வழங்கப்படும் மரியாதை.
இந்தியா பல இன, மொழிக்குழுக்கள் தங்களுக்கான நிலப்பகுதிகளில் தாங்கள் விரும்பிய ஆட்சியை அமைத்து வாழும் பல மாநிலங்களின் கூட்டால் அமையப் பெற்றுள்ளது. இந்திய ஒன்றியம் என்று அரசியல் சாசனம் அதனை வரையறுத்துள்ளது. மத்தியில் இருக்கும் ஒன்றிய அரசுக்கு சில அதிகாரங்களும், மாநில அரசுகளுக்கு அதிகபட்ச அதிகாரங்களும் கொண்டே இந்தியாவின் மத்திய-மாநில ஆட்சி முறைமை அமைந்துள்ளது. இதனைத்தான் மத்தியில் கூட்டாட்சி-மாநிலத்தில் சுயாட்சி என்று நாம் முழங்குகின்றோம். ஆனால் இன்றைய மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளைத் தட்டிப் பறிப்பதிலும், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளை ஆட்டுவிக்கும் வேலையையும் வெட்கமின்றி செய்துவருகின்றது. தமிழகத்திலும், புதுச்சேரி, டில்லி போன்ற இடங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இருக்கும்போது அவர்களை செயல்பட விடாமல் தடுப்பதும், அவர்களின் அனுமதியின்றி ஆளுநர் அரசின் செயல்பாட்டில் தலையிடுவதும் அருவருப்பான அரசியலாக அரங்கேறி வருகிறது. உச்சபட்சமாக கோவாவில் யாரை அரசமைக்க அழைப்பது என்பது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் விவாதித்ததாக அம்மாநில ஆளுநர் தெரிவித்தது இந்த அரசில் யாருக்கு என்ன வேலை என்ற வரைமுறை இருக்கிறதா, பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. முன்பே சொன்னது போல பல மாநிலங்களில் போதிய பலம் இல்லாத பாஜக ஆளுநர்கள் மூலம் ஆட்சியையும் பிடித்துள்ளது ஆளுநர்களை வைத்து அரசியல் சாசன வழிமுறைகள் எப்படி அப்பட்டமாக மீறப்படுகிறது என்பதை எடுத்தியம்புகிறது.
இந்திய அரசியலமைப்பு குடிமக்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்பியதை பேசக்கூடிய, எழுதக்கூடிய, வெளிப்படுத்தக்கூடிய கருத்து சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. ஆட்சியாளர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறுகள் செய்யும்போது அவற்றை விமர்சிக்க தார்மீக உரிமை அவர்களை ஓட்டளித்து தேர்ந்தெடுத்தவர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த நான்கு வருடங்களில் அரசையும், ஆளும்கட்சியின் சித்தாந்தத்தையும் விமர்சிப்பவர்களின் குரல்வளைகள் நெறிக்கப்பட்டு வந்துள்ளன. மத்திய அரசை பின்புலமாக இருந்து இயக்கி வரும் ஆர்எஸ்எஸ், இந்துந்துவ, சங் பரிவார இயக்கங்களை எதிர்த்து எழுதியதற்காகவும், பேசியதற்காகவும் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் என்று பல சிந்தனைவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளில் ஈடுபட்டவர்கள் யாரெனத் தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் காலம் தாழ்த்திவருகின்றனர். ஏனென்றால் அவர்கள் ஆளும் பாஜகவின் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள். இந்த ஒரே காரணத்திற்காக குற்றவாளிகள் அரசியல் சட்டத்திற்கு புறம்பாக சுதந்திரமாக உலவ விடப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஆதிவாசி, பழங்குடி மக்களுக்காகவும், தொழிலாளிகளுக்காகவும் குரல் கொடுத்து வந்த சுதா பரத்வாஜ், கௌதம் நாவல்கா, வெர்னான் கான்சால்வ்ஸ், வரவரராவ், அருண் ஃபெரேரா போன்ற சமூக போராளிகளையும், மனித உரிமை ஆர்வலர்களையும் வீட்டுக் காவலில் வைத்து பிறகு ஜாமின் கூட தராமல் சிறையில் அடைத்துள்ளது மத்திய அரசு. தமிழகத்திலும் திருமுருகன் காந்தி, வளர்மதி, பேராசிரியர் ஜெயராமன், தோழர் முகிலன் போன்றவர்கள் மீது பல முறை குண்டர் சட்டங்கள் போடப்பட்டு, அவை நீதிமன்றங்களால் உடைக்கப்பட்டுள்ளன. இந்த அரசிற்கும், அரசை பின்னிருந்து இயக்கும் சித்தாந்தத்திற்கு எதிராகவும் பேசும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரணம் அல்லது சிறைக் கொட்டடிதான் பரிசளிக்கபடுகிறது.
ஒட்டுமொத்த இந்திய குடிமக்களும் நீதிக்காக நம்பியிருப்பது நீதிமன்றத்தை. நீதிமன்றங்களில் அதிகாரம் மிக்கதாக அரசியலமைப்பு சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது உச்சநீதிமன்றம். அந்த உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருக்கும் நீதிபதிகள் தங்களால் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை என்று வரலாற்றிலேயே முதல்முறையாக போர்க்கொடி தூக்கினார்கள். வழக்கை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது, முக்கியமான வழக்குகளை விசாரிப்பதில் தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது புகார்ப்பட்டியல் வாசித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய், லோகூர் ஆகிய நீதிபதிகள் ஜனவரி மாதம் பத்திரிகையாளர்களை சந்தித்து உச்சநீநிமன்றம் தனது கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும், அதனால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிப்படையாக அறிவித்தனர். நீதித்துறையில் தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருப்பவர்கள் பல நேரகங்களில் ஒருதலைப்பட்சமாக தீர்ப்புகளை வழங்கி அரசியலமைப்பு சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை விடுதலை செய்து அதற்கு பகரமாக கேரள ஆளுநராக பதவி பெற்றார் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம். சிறுபான்மை மக்களுக்கு அவர்களது உடை உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்துள்ள நிலையில் மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவிகள் தலையை மறைக்கும் ஸ்கார்ஃப் அணியக் கூடாது என்று தலைமை நீதிபதி தத்து தீர்ப்பு வழங்கி அரசியலமைப்பு சட்டத்தை அசிங்கப்படுத்திய நிகழ்வும் இந்த ஆட்சியில்தான் அரங்கேறியது. உச்சபட்சமாக ஒரு முக்கியமான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருந்த நீதிபதி லோதா மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் அவசர அவசரமாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவே தலையிட்டு அது இயற்கை மரணம் என்று தீர்ப்பெழுதியது நாட்டையே உலுக்கியது.
அரசியலமைப்பு சாசனம் மக்களுக்கு வழங்கும் உரிமைகள் மறுக்கப்படும்போது அவற்றில் தலையிட்டு அந்த உரிமைகளை மீட்டுத்தரும் உயரிய இடத்தில் இருப்பவை நீதிமன்றங்கள். நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகளை ஆட்சியாளர், பொதுமக்கள் பேதமின்றி அனைவரும் மதிக்க வேண்டும். மறுத்தால் அது நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதப்பட்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்த ஆட்சியில் நீதிமன்ற தீர்ப்புகள் பல நேரங்களில் மருந்துக்கும் கூட மதிக்கப்படுவதில்லை. ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே மத்திய அரசு அவசர அவசரமாக பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் அட்டையை கட்டாயம் என்று நடைமுறைப்படுத்தியது. இடையில் பல சமயங்களில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்தும் கூட ஆதாரை கட்டாயமாக்குவதில் அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. இறுதியில் நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என்று இறுதித் தீர்ப்பு வந்தபோது அநேகமாக அனைத்து துறைகளிலும், பெரும்பான்மையான மக்கள் ஆதாரை இணைத்து விட்டிருந்தனர். பல நாட்கள் கூடி, பல மணி நேரங்கள் விவாதம் நடத்தி வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றுக்கும் உதவாததாக மத்திய அரசாலேயே மாற்றப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு மூன்று வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இரண்டு வாரங்கள் தாமதித்து கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பில் இருப்பது சரியாக புரியவில்லை என்று கூச்சமே இல்லாமல் வாதாடி கர்நாடக தேர்தலை மனதில் வைத்து வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தியது மத்திய அரசு. இதுபோல பல நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புகளை முதுகுக்கு பின்னால் தூக்கியெறிந்து தனது அரசியல் சாசன விசுவாசத்தை நிரூபித்தது மத்திய பாஜக அரசு.
இந்தியாவில் சிபிஐ, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்ற அரசு நிறுவனங்கள் மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டாலும் அவை தன்னாட்சி அந்தஸ்து பெற்று இயங்கக்கூடிய வகையில் அரசியலமைப்பு சட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த நான்கு வருடங்களில் இந்த தன்னாட்சி அமைப்புகளை தனது இஷ்டத்திற்கு இயக்கும் இழிவான வேலையை மத்திய அரசும், அதனை ஆள்பவர்களும் செய்து வருகின்றனர். தங்களது அரசியல் எதிரிகள், தங்கள் வழிக்கு வராதவர்கள் மீது வருமான வரித்துறை சோதனை எனும் ஆயுதத்தை பிரயோகப்படுத்தி தங்கள் அடிமைகளாக மாற்றும் முயற்சியை இந்த அரசு கூச்சமின்றி மேற்கொண்டது. தமிழகத்தில் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மீதும், கர்நாடகத்தில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாத்த அமைச்சர் டிகே சிவகுமார், அவரது சகோதரர் மீதும், மேற்கு வங்காளத்திலும், இன்னும் பல்வேறு நபர்கள் மீதும் வருமான வரித்துறையை ஏவி அராஜகம் செய்தது. வருமான வரித்துறையை போலவே சிபிஐ அமைப்பையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி எடுத்தது பாஜக அரசு. ர்பேல் ஊழல் பற்றி விசாரிக்க துணிந்த சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை அந்த பதவியில் இருந்து நீக்கி தனது கைப்பாவையாக ஒருவரை நியமித்தது. அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்று போராடி மத்திய அரசின் முடிவு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய ஒரு நாளுக்குள்ளாகவே மீண்டும் அலோக் வர்மாவை நீக்கி நீதிமன்ற தீர்ப்பையும், அரசியல் அமைப்பையும் அசிங்கப்படுத்தினார் பிரதமர் மோடி.
இன்னும் பல்வேறு துறைகளிலும் அரசியல் அமைப்பு சாசனத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு மூர்க்கமாக செயல்படுத்தியது. இன்னும் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு சிலவற்றையே இங்கே பட்டியலிட்டுள்ளேன். ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் அரசியல் சாசனத்தையே முழுமையாக நீக்கிவிட்டு சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்தவும் தயங்கமாட்டார்கள். அதில் இருந்து தேசத்தை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கிறது.
எழுதியவர்
அபுல் ஹசன்