உலகின் மிகவும் பயங்கரமான இனப்படுகொலையின் உயிருள்ள சாட்சியாக இருப்பவர் பில்கீஸ் பானு. அவருடைய குடும்பத்தினர் 14 நபர்களும் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். அவரது மூன்று வயது மகளின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்தனர் ஃபாசிஸ பயங்கரவாதிகள். பில்கீஸ் பானு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அப்போது அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். இறுதியாக இந்துத்துவவாதிகள் அங்கிருந்து வெளியேறும்போது பில்கீஸ் பானு இறந்திருப்பார் என்று கருதியிருக்கக்கூடும். ஆனால், தனக்கு இழைக்கப்பட்ட கொடிய அநீதிக்கு எதிராகக் கேள்வி எழுப்ப அவர் உயிரோடுதான் இருந்தார்.
அவருக்கு நடந்த அநீதிக்கு எதிராக 17 வருடங்கள் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தார் வீர மங்கை பில்கீஸ். அந்தச் சட்டப்போராட்டத்தில் அவர் சந்தித்த அச்சுறுத்தல்களும், அழுத்தங்களும், தடைகளும், தலையீடுகளும் அவரை நிராசையில் ஆழ்த்தவில்லை. இறுதியாக உச்ச நீதிமன்றம் அவருக்கு இழப்பீடாக 50 இலட்சம் ரூபாய், தங்க இடம், ஒரு வேலை ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் காற்றில் பறக்க விடப்பட்டன. அவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் இன்னமும் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. இவற்றையெல்லாம் தாண்டி உச்சபட்சமாக, அந்தக் கொடூரத்தை நிகழ்த்திய இந்துத்துவ பயங்கரவாதிகள் விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர். 14 நபர்களை கூட்டுப்படுகொலைச் செய்து, ஐந்து மாத கர்ப்பிணியை வன்புணர்வு செய்த 11 பேர் கொண்ட கும்பலுக்கு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையே மிகக்குறைவு எனும்போது அவர்கள் பிராமணர்கள் அதனால் அவர்கள் நன்னடத்தை உடையவர்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் என அரசு கூறுவது வெட்கக்கேடானது.
பில்கிஸ் பானு தற்போது கேட்பதெல்லாம் அமைதியான ஒரு வாழ்க்கை. ஆனால் அது பறிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்டின் நீதிமன்றங்களோ, சட்டங்களோ எந்தவிதத்திலும் அவருடைய அமைதிக்கு உத்தரவாதத்தை வழங்கவில்லை. நியாயத்தைப் பேசுகிறேன் பேர்வழி என்று சல்மான் ருஷ்டிக்கு ஆதரவாக பேசிய ஊடகங்கள் அத்தனையும் செய்திகளை மட்டும் வெளியிடும் ஆண்மையற்றவர்களாய் வேடிக்கைப் பார்க்கின்றன. நிர்பயாவுக்கு நீதி கேட்டு வீதியில் இறங்கிய பொதுமக்கள் பாவம் தேசியக்கொடியினை ஜி.எஸ்.டி கட்டி வாங்கி தங்கள் தேச பக்தியை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
நிர்பயாவுக்கு நடந்த அநீதிக்கு தூக்கு தண்டனை தீர்வென்றால், பில்கிஸ் பானு அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அநீதியாளர்களுக்கு விடுதலை வழங்கப்படுவதை எப்படி நீதி என்கிறீர்கள் ஜனநாயகவாதிகளே?
கொடூரங்களின் உச்சத்தை செய்த இந்துத்துவ பயங்கரவாதிகள் இந்த நாட்டின் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவதை தேசத்தை காதலிக்கும் தேசியவாதம் மௌனமாய் வேடிக்கைப் பார்ப்பதை எப்படி அனுமதிப்பது?
குற்றவாளிகள் பிராமணர்கள் அதனால் விடுதலை செய்தது நியாயம்தான் என்று குஜராத் சட்டமன்ற உறுப்பினர் பேசும்பொழுது அனைவருக்கும் சமநீதி, சமதர்மம் பேசும் சோசியலிசம் எங்கே ஓடி ஒழிந்தது?
ஜனநாயகம், தேசியவாதம், சோசியலிசம் ஆகியவை பெரும்பான்மைவாதத்தின் ஊன்றுகோல்களாக மாறி மக்களை வஞ்சிக்கின்றன. குறிப்பாக அதனால் சிறுபான்மை மக்கள் தினம் தினம் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவையெல்லாம் இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை மட்டுமல்லாமல். நாட்டின் கொள்கை, சட்டம் ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நமக்குத் தெளிவாக்குகிறது. ஒடுக்கப்படுபவர்களும், அநீதிக்குள்ளானவர்களும் சுதந்திரத்தையும், நீதியையும் பெறுவதற்கு இவை அவசியமாகும்.
குறிப்பாக சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, நீதி குறித்தான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். வெறுமனே இந்துத்துவவாதிகள் ஆட்சியிலிருந்து அகற்றப்படுவது மட்டும் சிறுபான்மை மக்களுக்கான உண்மையான விடுதலைத் தீர்வாக அமைந்துவிடாது என்பதை நீதியை விரும்பும் அனைவரும் உணர்ந்திட வேண்டும். முஸ்லிம்களும் நீதிக்கான போராட்டங்களை இந்த நாட்டின் கொள்கை, சட்டங்கள் மேம்படுத்தலை நோக்கி நகர்த்த வேண்டும். அதனை நாம் சாத்தியப்படுத்தும்போதுதான் பில்கிஸ் பானுவுக்கு அமைதியும், நீதியும் வழங்கப்படும்.