மே 17, 2009 அன்று ஆறு முஸ்லிம்களை அரசப்படுகொலை செய்த பீமாப்பள்ளி கலவர நினைவு தினம். அன்றைய ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் உத்தரவின் பெயரில் போலீஸ் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் இறந்தும், 27 பேர் குண்டடியுடன் காயப்பட்டனர். மக்கள் சிவில் உரிமை யூனியன் என்ற சுயாதீன அமைப்பும், தேசிய மனித உரிமை ஆணையமும் சமர்ப்பித்த அறிக்கையில், உள்ளூர் ரவுடிகளை சமாளிக்கிறோம் என்ற பெயரில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தது வெளிப்படுத்தப்பட்டது.
அன்றைய முதலமைச்சர் அச்சுதானந்தமும் உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணனும் போலீசின் தவறுதலால் நடந்த பிழையாக பீமாப்பள்ளி படுகொலையைக் குறிப்பிட்டனர். அவர்கள் சொல்வதைப்போல் தவறுதலாக மக்களுக்கு எதிராக போலீஸ் நிகழ்த்திய முதல் துப்பாக்கிச் சூடு கேரள வரலாற்றில் இதுவாகத்தான் இருக்கும். மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டுமே துப்பாக்கியைப் பயன்படுத்தச் சட்டம் கூறுகிறது. அன்று அத்தகைய சூழல் ஏதும் இல்லாதபோதும் முதல் துப்பாக்கிச் சூட்டிலேயே பார்வையாளர்கள் எவரும் எந்த பிரச்சனையும் கொடுக்காமல் ஒதுங்கிக்கொண்டனர்.
போலீஸால் முதலில் சுடப்பட்ட நபர் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 16 வயது பெரோஸ் என்ற சிறுவர். அந்த இடத்திலிருந்து பெரோஸை போலீஸ் தூக்கிச் சென்றதை ஊடகங்கள் காண்பித்தனர். பிறகு இந்த வன்முறைக்கு மதச்சாயம் பூசப்பட்டது. மத மோதலே துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாகச் சித்தரித்த காவல்துறை அனைவரும் தப்பும்வரை சுடுவதை நிறுத்தவில்லை.
ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பீமாப்பள்ளியும், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வசிக்கும் செரியத்துராவும் திருவனந்தபுரத்தின் கடற்கரை கிராமங்கள். சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் (மே 16) உள்ளூர் ரவுடி கொம்பு ஷிபு செய்த தகராறால் பொதுமக்கள் அவரை தாக்கியுள்ளனர். இரவு மீண்டும் பீமாப்பள்ளிக்கு திரும்பிய ஷிபு அக்கிராமத்து மீனவர்களின் படகுக்கு தீ வைத்துள்ளார். இதனால் மதக்கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்று உணர்ந்த மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கவுல் அமைதி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அன்றிரவுக்குள் ஷிபு கைது செய்யப்படுவார் என்று கூட்டத்தில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் கைதாகவில்லை.
இந்த பதற்ற நிலையில் அடுத்த நாள் காலை அப்பகுதிக்கு வந்தார் ஷிபு. இதன் தூண்டுதலாக மதியம் 2 மணியளவில் பீமாப்பள்ளி குடியிருப்பில் துப்பாக்கிச்சூட்டை போலீஸ் நிகழ்த்தியது. மாலை நான்கு மணிக்குத்தான் சம்பவ இடத்தை அடைந்தார் உதவி ஆட்சியர் கே.பிஜு. கமிஷனர் ஏபி. ஜார்ஜ் தலைமையிலான காவல்துறை உதவி ஆட்சியரின் வழிகாட்டுதலின் பெயரில்தான் சுட்டதாகக் கூறியது. ஆனால், நீதிபதி ராமகிருஷ்ணன் விசாரணை ஆணையத்திற்கு ஆட்சியர் கொடுத்த அறிக்கை காவல்துறை எவ்வித சட்ட அனுமதியையும் பெறாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அன்றைய ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் சரி, பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரசும் சரி நீதிபதி ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிடவே இல்லை. சிபிஐ விசாரணையும் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இறந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் உதவித்தொகை தருவதாக அரசு கூறியது. ஆனால், கொல்லப்பட்ட அனைவரும் அந்தந்த குடும்பத்தின் ஆதார வருமானமுடையவர்கள். சரியாக முஸ்லிம்களைக் கொன்ற காவல்துறை, இந்த வன்முறை முஸ்லிம்களால் ஏற்பட்டது என்று ஊடகங்களில் நிறுவ முயன்றது. செரியதுராவில் முஸ்லிம்கள் பிரச்சனை செய்ததாக அவதூறுகளை ஜோடித்தனர். படுகொலையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் அந்தப்பொழுது சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், பின் பல்வேறு பதவி உயர்வுடன் ஊக்குவிக்கப்பட்டனர்.
திருவனந்த போலீஸ் கமிஷனர் அஜித் குமார் பதற்ற நிலையே துப்பாக்கிச்சூட்டிற்குக் காரணம் என தங்களை நியாயப்படுத்தினார். ஆனால், போலீஸ் எவ்வித விதிமுறைகளையும் கையாளாததை மக்கள் சிவில் உரிமை யூனியன் வெளிச்சமிட்டுக் காட்டியது. பீமாப்பள்ளி படுகொலைக்கு இன்றுவரை முதன்மை ஊடகங்கள் மௌனம் காத்து வருகின்றனர். நடந்த நிகழ்வுகள் தெரியவர சில சுயாதீன பத்திரிக்கையாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களுமே காரணமாக இருந்துள்ளனர். நடந்த அதிகார வர்க்க படுகொலையைப் பற்றிப் பேசாமல் அரசுக்குத் துணைபுரிந்த ஊடகங்கள்தான், பீமாப்பள்ளியை மைய நீரோட்டத்திலிருந்து விலகிய நிழலுலகமாக காட்டத் தீரா முனைப்புக் காட்டி வந்தனர். இதனை நிகழ்த்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அதற்கான பொறுப்புணர்வை ஏற்காமல் இன்றுவரை ஆட்சி செய்து வருகிறது.
‘The Woke Journal’ தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது…
தமிழில் – அஜ்மீ