‘மனிதாபிமான போர் இடைநிறுத்த’ நேரத்தில் காஸா ஊடக அலுவலகத்தின்படி, இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,532 ஆக இருந்தது, காணாமல் போனவர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 7,000இல் நின்றது. கொல்லப்பட்டவர்களிலும் பாதிக்கப்பட்டவர்களிலும் 40% குழந்தைகள்தாம். இன்னும் சொல்லப்போனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களும் குழந்தைகளுமாகத்தான் இருந்தனர்
21ஆம் நூற்றாண்டில் நடந்த எந்த ஒரு மோதலிலும் இத்துணை பெரும் விகிதத்தில் குழந்தைகள் கொல்லப்பட்டதில்லை. காஸாவின் மக்கள் தொகையில் 80% பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். காஸாவில் இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பை நடத்த வேண்டும் என்று இஸ்ரேலிய அமைச்சர்கள் அத்தனை பேரும் வெளிப்படையாகக் கூச்சலிட்டனர். இதன் பிறகும் மேற்கத்திய உலகத் தலைவர்களில் சிலரைத் தவிர அனைவருமே இஸ்ரேல் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இனப்படுகொலையை அதன் தற்காப்பு உரிமையாகவும் அல்லது ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதலின் தவிர்க்க முடியாத விளைவாகவும் தொடர்ந்து நியாயப்படுத்தி வருகின்றார்கள்.
ஆக மேற்கத்தியத் தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றார்கள். அவர்கள் இஸ்ரேலைத் தத்தெடுத்திருப்பது புதியதல்ல; ஆனால் இந்தத் தடவை குற்ற உணர்வு இம்மியளவுகூட இல்லாமல் மனநிறைவுடன் கூடியதாய் அவர்களின் இந்தப் பக்கச் சார்பான நிலைப்பாடு இருப்பதுதான் புதுமையானதாகவும் பளீரென்று உறைக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. காஸா எந்த அளவுக்குச் சின்னஞ் சிறு பகுதியாகவும், அடர்த்தியான, செறிவான மக்கள்தொகையைக் கொண்டதாகவும் இருக்கின்றது எனில், போரின் கொடுமைகள் முகத்தில் அறைவதைப் போன்று எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாய் உள்ளன. மிகவும் சிக்கலான பின்னணியில் அரங்கேறுகின்ற வேறு சில போர்களில் மண்ணுடனும் மாந்தர்களுடனுமான சிக்கலான சூழலமைப்புகளின் காரணத்தாலும் அறியாமையின் காரணத்தாலும் உலகத்தின் கண்களுக்கே தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கக்கூடிய அட்டூழியங்கள் காஸாவில் தெள்ளத்தெளிவாக உலகம் முழுவதற்கும் தெரிகின்றன.
முற்றாகவும் இறுக்கமாகவும் அடைக்கப்பட்டுள்ள இரண்டு எல்லைகளுக்கு நடுவில் இருக்கின்ற ஒரு நிலப்பகுதியை அடக்கி ஒடுக்குவதற்காகக் குண்டு மழையைப் பொழிந்து கொண்டிருக்கின்றார்கள். அதன் வடக்கு பகுதியைக் காட்டிலும் தென் பகுதிதான் பாதுகாப்பானது என்று பயத்தை ஏற்படுத்தி இஸ்ரேல் முதலில் தென் பகுதிக்கு மக்களைத் துரத்தியது. வடக்கு பகுதி முழுவதும் தரைமட்டமாக்கப்பட்ட பிறகுத் தென் பகுதியிலிருந்து வெளியேறுமாறும் இல்லையேல் குண்டுவீசப்படும் என்றும் ஆணையிட்டது. இதுவரை இருபத்தி ஓராயிரம் பேரைக் கொன்று குவித்துள்ளது. பனியும் குளிரும் நிறைந்த குளிர்காலம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்நாள்களில் தற்காலிகமான கூடாரங்களில் பசியிலும் தாகத்திலும் நோய்க்கு ஆளாகின்ற அச்சுறுத்தலுக்கு நடுவிலும் மரண பயத்திலும் இருபது இலட்சம் பேரைத் தள்ளிவிடுவதை ஹமாஸை ஒழித்துக் கட்டுகின்ற இலட்சியத்துக்காகச் சகித்துக் கொண்டாக வேண்டிய பக்கச் சேதமாக சித்திரித்துக் கொண்டிருக்கின்றார்கள். கொஞ்சங் கூட செல்லுபடியாகாத வாதம்தான் அது.
இது ஒரு பக்கம் இருக்க, அங்கே மேற்குக் கரையிலோ (West Bank) இஸ்ரேலின் முரட்டுக் குடியேறிகள் இஸ்ரேல் போலீசாரின் ஆதரவோடும் உதவியோடும் அப்பாவியான, நிராயுதபாணிகளான பூர்விக ஃபலஸ்தீனர்கள் மீது பாய்ந்து அராஜகங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்கள். இத்தனை கொடுமைகள் அரங்கேறிய பிறகும்கூட இங்கிலாந்தும் ஜெர்மனியும் எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவும், ஹமாஸை இஸ்ரேல் முற்றாக அழித்தொழிக்கின்ற நாள் வரை போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பே இல்லை எனப் பிடிவாதமாக முரண்டு பிடித்துக் கொண்டு நிற்கின்றன. நீளமான கஃபன் துணிகளால் போர்த்தப்பட்ட ஏராளமான ஃபலஸ்தீனர்கள் ஒற்றைப் பெருங்குழியில் கூட்டாக அடக்கம் செய்யப்படுகின்ற காட்சியை விவரிக்கும் நூற்றுக்கணக்கான காணொளிகளின் பின்னணியில் பார்க்கின்ற போது ‘ஒட்டுமொத்த மக்களையும் ஒடுக்குகின்ற, தண்டிக்கின்ற இந்தச் செயல்’ அதனை விடப் பன்மடங்கு கொடூரச் செயலாக ‘போர்க் குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கின்ற நடத்தையாக’ மாறிவிடுகின்றது.
உலகமே கொண்டாடுகின்ற சிறப்பான மாண்புகளின் கொடிதாங்கிகள் என்கிற மேற்கத்திய நாடுகளின் நற்பெயரும், விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கும் காஸாவில் நடந்து வருகின்ற இந்தக் கொடூரங்களால் பலத்த அடி வாங்கியிருக்க, அதிலிருந்து மீள்வதற்கான சாத்தியங்களும் இல்லை. மக்கள் கருத்தை மிக வேகமாக மாற்றி அமைத்து விடுகின்ற திருப்புமுனையாக, அதனைக் குலைக்கின்ற சறுக்கலாக காஸாவின் நிகழ்வுகள் அமைந்துவிட்டுள்ளன. ஏனெனில் மேற்கத்தியத் தலைவர்களான ரிஷி சுனக்கும் சரி, கெய்ர் ஸ்டார்மரும் சரி, ஓலாஃப் ஸ்கோல்ஸ், ஜோ பைடன் ஆகியோரும் சரி இந்த முறை நியாயத்தின் பக்கம் நிற்பதாக, நீதி செறிந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகப் பாசாங்குகூடச் செய்யவில்லை. காஸாவை முற்றுகையிடுவதற்கும் தண்ணீரையும் மின்சாரத்தையும் துண்டித்துவிடுவதற்கும் இஸ்ரேலுக்கு முழு உரிமை இருப்பதாக ஸ்டார்மர் பொது வானொலியிலேயே கொக்கரித்தார். இன்னும் ஒரு படி மேலாக ஃபலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பதிவு செய்கிற குடியேறிகளை நாடு கடத்தப்போவதாகவும் ஜெர்மன் அரசு அச்சுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு அதிவேகமாக, அவசர அவசரமாக ஆயுதங்களை அனுப்பிய பைடன் அதற்கும் மேலாக 1400 கோடி டாலர் மதிப்பிலான இராணுவ உதவி அளிப்பதாகவும் அறிவித்தார்.
மேற்கத்தியர்கள் காலங்காலமாகத் தாம் கடைப்பிடித்த நயவஞ்சகத்தனத்துக்கு முற்றிலும் நேர்மாறாக, கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாமலும், தெனாவட்டுடனும் ஃபலஸ்தீனர்கள் மீதான தங்களின் பகையுணர்வை வெளிப்படுத்தியிருப்பதுதான் இந்தத் தருணத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாய் ஆக்கிவிடுகின்றது. இந்த மாற்றம் எப்படி நடந்தது என்பது குறித்து இனி வருங்காலங்களில் வரலாற்றாளர்களால் இடைவிடாமல் விவாதிக்கப்படும். அதேநேரம் சமகாலத்தவர்களான நம்மால் இதற்கான காரணங்களை ஊகிக்க முடியும். ஒவ்வாத, இயைந்துபோகாத அண்டை நாடுகளைக் கொண்ட சூழலில் இருக்கின்ற மேற்கத்திய நாடாக இஸ்ரேலைப் பார்க்கும் போக்கு மேற்கத்திய அரசாங்கங்களிடம் காலங்காலமாக இருந்து வந்துள்ளது. ஐரோப்பாவின் இதயப் பகுதியில் நிகழ்ந்த இன அழிப்புக்குப் பிறகு இஸ்ரேல் உருவான பின்னணியும், இஸ்ரேலை உருவாக்குவதில் ஐரோப்பிய அஸ்கனாசு யூதர்கள் அச்சாணியாக இயங்கியதும், இஸ்ரேலுக்கு ஐரோப்பிய நாடு என்கிற ஒரு வகையான தார்மிக அந்தஸ்தை அளித்தன.
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு மேற்கத்தியச் சக்திகளை ஒன்றிணைத்தது. அதற்கு முன் சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு மேற்கத்திய உணர்வே பல ஆண்டுகளில் சிறுகச் சிறுக கரைந்து காணாமலே போய்விட்டிருந்தது. இந்நிலையில் சீனாவின் எழுச்சியும் சீனாவைக் குறித்து அமெரிக்காவால் கிளறப்பட்ட பெரும் அச்சமும் மேற்கத்திய அடையாள உணர்வை மீட்டெடுத்தது. இந்தப் பரபரப்பான புவிசார் அரசியல் சூழலில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் இஸ்லாமிஸ்டுகளின் எழுச்சிக்கு எதிராக இஸ்ரேலுடனான அணிதிரட்டலுக்கான அடித்தளமாகவும் அமைந்துவிட்டது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்ற தோரணையுடன் தொடங்கியது இப்போது மிகவும் அருவருப்பானதாய் உருவெடுத்திருக்கின்றது. மேற்கத்திய உலகத்தின் பெரும் நகரங்களில் ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகத் தன்னெழுச்சியாக நடந்த எழுச்சிமிகு பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் போர்நிறுத்தத்திற்கு வழிவகுத்தன. ஆனால் அந்த ஆர்ப்பாட்டக் காரர்களையும் பேரணியில் எழுச்சியுடன் திரண்ட மக்கள் திரளையும், குறிப்பாகப் புலம்பெயர்ந்தோரையும் முஸ்லிம்களையும் இஸ்ரேலுக்கு மட்டுமின்றி, மேற்கத்திய மக்களின் சுய அடையாளத்துக்கே உலை வைக்கக்கூடிய போலி ஐரோப்பியர்களாகவும் அச்சுறுத்தலாகவும் மேற்கத்திய அரசாங்கங்களும் அவற்றின் அறிவுசார் சக்திகளும் பார்க்கத் தொடங்கினார்கள். இஸ்ரேலுடன் கைகோர்ப்பதில் அந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உடன்பாடு இல்லாமல் போனது; அவர்களுக்கு கேடு விளைவிக்கின்ற அந்நியத்தன ஏற்படுத்தியது.
இஸ்ரேல் ஆதரவு உணர்வால் உந்தப்பட்டு சொந்த நாட்டு மக்களையே பகைவர்களாக முத்திரை குத்தும் அரசாங்கங்களை விட்டுவிடுங்கள். சாதாரணமான சிவில் சமூக அமைப்பு ஒன்றையே சிறப்பான எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஓபர்ஹேசன் நகரத்துச் சர்வதேச குறும்பட விழாவின் இயக்குநராகப் பல ஆண்டுகளாக இருக்கின்ற எழுத்தாளரும் திரை விமர்சகருமான லார்ஸ் ஹென்ரிக் காஸ் அந்தக் குறும்பட விழாவின் அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில் பதிவு செய்த அழைப்பே இதற்குச் சான்று. இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் யூத எதிர்ப்பு உணர்வுக்கு (ஆண்டி செமிட்டிசம்) எதிராக ஆர்ப்பரிக்கின்ற வகையிலும் அவர் பெர்லினில் நடத்தப்படவிருந்த பேரணியில் சேருமாறு பெர்லின் வாழ் மக்களை வலியுறுத்தினார்: “2022 மார்ச் மாத்தில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த போது அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ஐந்து இலட்சம் பேர் வீதிகளில் திரண்டார்கள். அந்தப் போராட்ட உணர்வுதான் இப்போது முக்கியம். குறைந்தபட்சம் அதேபோன்று மிகப் பெரும் அளவில் இஸ்ரேலுக்கு ஆதரவாகத் திரண்டு வலிமையான குரல் கொடுப்போம். எங்களோடு ஒப்பிடும் போது நியூகோல்ன் ஹமாஸ் தோழர்களும் யூத வெறுப்பாளர்களும் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கின்றார்கள் என்பதை உலகத்தாருக்கு உணர்த்துவோம்” என்று அவர் ஓங்கி முழங்கியிருந்தார்.
ஃபலஸ்தீனுக்கு ஆதரவாகத் திரண்ட மக்கள் திரளை நியூகோல்ன் ஹமாஸ் தோழர்கள் என்று அவர் முத்திரை குத்தியதில் இருக்கின்ற நுண்ணரசியலைக் கவனிக்க வேண்டும். பெர்லின் மாநகரத்தில் மிக அதிகமான அளவில் புலம்பெயர்ந்த மக்களைக் கொண்ட தொகுதியின் பெயர்தான் நியூகோல்ன். அந்தத் தொகுதியின் மக்கள் தொகையில் 18% பேர் மத்தியக் கிழக்கு நாடுகளைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். மேலும் அவர்களில் கணிசமானோர் ஃபலஸ்தீன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இஸ்ரேலுக்கு ஆதரவாக வாரீர், யூத எதிர்ப்பு உணர்வுக்கு எதிராகத் திரண்டு வாரீர் என்று நேரடியாக அழைப்பு விடுக்காமல் உலகத்தின் முக்கியமான சர்வதேசக் குறும்பட விழாவின் இயக்குநர் எத்துணை நுட்பமாக நியூகோல்ன் வாழ் புலம்பெயர்ந்த சமுதாயத்தார் மீது யூத எதிர்ப்பாளர்கள் என்கிற சேற்றை வாரி இறைக்க முற்பட்டிருக்கின்றார் என்பதைக் கவனியுங்கள்.
இன்று பொதுவாக ஃபலஸ்தீனர்கள் அனைவரையும் சுட்டுகின்ற சொல்லாக, ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த முஸ்லிம்களை – ஐரோப்பாவின் வெகு விருப்பமான பூச்சாண்டிகளை – குறிக்கின்ற உருவகமாக ஹமாஸ் என்கிற பெயர் மிக வேகமாக மாறிப் போயிற்று.
ஃபலஸ்தீன நலன்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எடுத்துள்ளதற்குத் தீனி போடுவதாக இருப்பது புலம்பெயர்ந்தோர் பற்றிய கவலையை மையமாகக் கொண்ட அரசியல்தான். ஒரு பக்கம் இஸ்ரேல் மீதான கறாரான, கடுமையான விமர்சனம் யூத எதிர்ப்பு உணர்வுக்குச் சமமானதாகக் கருதப்படுகின்றது எனில், இன்னொரு பக்கம் இஸ்ரேலின் நெருக்கடியான காலத்தில் அதனைத் திட்டவட்டமாக ஆதரிக்கின்ற நிலைப்பாட்டை எடுக்கவே ஐரோப்பாவின் தார்மிக நலன் நிர்ப்பந்திக்கின்றது. இங்கிலாந்து நாட்டின் தொழிற் கட்சியில் ஜெரமி கார்பின் என்கிற அரசியல் தலைவர் மீது யூத எதிர்ப்பு உணர்வைச் சகித்துக் கொண்டார் என்கிற குற்றம் சுமத்தப்பட்டதால், தொழிற் கட்சியிலிருந்து கார்பினின் ஆதரவாளர்களையெல்லாம் அப்புறப்படுத்தத் தொடங்கினார் கெயிர் ஸ்டார்மர். இவ்வாறாகக் கட்சியை இஸ்ரேலுக்கு ஆதரவான வலுவான நிலைப்பாட்டில் கொண்டு போய் நிறுத்தினார். காலங்காலமாகத் தொழிற்கட்சியை ஆதரித்து வந்த பிரிட்டிஷ் முஸ்லிம்களை ஸ்டார்மர் இப்போது அரசியல் சங்கடமாகப் பார்க்கின்றார்.
ஐரோப்பிய அரசுகள் அவை இடதுசாரி அரசுகளாக இருந்தாலும் சரி, வலதுசாரி அரசுகளாக இருந்தாலும் சரி புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதன் பக்கம் நகர்ந்துகொண்டிருக்கின்றன. புலம்பெயர்தலின் முகமாகப் புலம்பெயர்ந்த முஸ்லிம்தான் இருக்கின்றார். அதே சமயம் அவர்களை எதிர்க்கும் சிறுபான்மையினரை நெறிப்படுத்துவதற்கும் தண்டிப்பதற்கும் யூத எதிர்ப்பு உணர்வு கொண்டவர் என்கிற முத்திரையை சாட்டையாகப் பயன்படுத்த முனைந்திருக்கின்றார்கள். இந்த உத்தியின் மற்றுமோர் பரிணாமமாக இருப்பதுதான் இஸ்ரேல் தவறு செய்தாலும் இஸ்ரேலுக்கே ஆதரவு என்கிற வெளியுறவுக் கொள்கை. அந்தக் கொள்கைதான் இப்போது காஸாவை இனப் படுகொலை, இனச் சுத்திகரிப்பு ஆகியவற்றின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது.
எழுதியவர் – முகுல் கேசவன்
தமிழில் – இப்னு ரஹ்மத்துல்லாஹ், மணவை