இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு இந்திய கல்வி நிலையை உயர்த்தும் நோக்கோடு உருவாக்கியதுதான் மத்திய பல்கலைக்கழகங்கள். இவைகளில் பெரும்பாலும் கல்வித்தரம் சிறப்பாக இருக்கும். அது மட்டுமின்றி சமூக பொறுப்புணர்வு மிக்க தலைமுறையும் அங்கே இருந்து வெளி வந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போதுவரை மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மேல்நிலைப்பள்ளி தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும் போதுமானதாகும். ஆனால் இப்போது ஒன்றிய அரசு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இனி சேர வேண்டுமெனில் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இயலும்.
ஒன்றிய பாசிச பாஜக அரசு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு – குறிப்பாக தலித் முஸ்லிம் சமூகங்களுக்கு – கல்வியை தடுக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது சங்பரிவாரின் உருவாக்க நோக்கமும் கூட. ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட்டும் அதன் ஒரு பாகம்தான்.
மத்திய பல்கலைக்கழகங்களில் தற்போது தென்னிந்தியாவிலிருந்து நிறைய மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து முஸ்லிம் மாணவ, மாணவியர் பெருமளவில் மத்திய பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாசிச செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள்தான் தலைமையேற்றார்கள். ஷர்ஜீல் இமாமும் உமர் காலிதும் சபூரா சர்க்காரும் அதன் உதாரணங்கள்.
இவற்றை தடுத்து நிறுத்தும் நோக்கோடுதான் தற்போது நுழைவுத்தேர்வை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது மிகப் பெரும் சமூக அநீதியாகும். தேசிய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் நுழைவுத்தேர்வில் மாநில அளவிலான கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எவ்வாறு வெற்றி பெறமுடியும்? தென்னிந்திய மாணவர்கள் இதன் மூலம் மத்திய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான வாய்ப்பை இழப்பார்கள். இதன்மூலம் மத்திய பல்கலைக்கழகங்கள் சங்பரிவார் மாணவர்களுக்கான கூடாரமாக மாறும். ஆரம்ப நிலையிலேயே எதிரெதிரான வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக தென்னிந்திய மாநில முதலமைச்சர்கள் சட்ட, அரசியல்ரீதியான நகர்வுகளை விரைவாக செய்வதன்மூலம் சங்பரிவாரின் இந்த சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். முறியடிப்பார்கள் என நம்புகிறோம்.