வரலாறு காணாத வெள்ளத்தால் கேரளத்து மக்கள் புரட்டிப் போடப்பட்டதிலிருந்தே நாடு முழுவதும் சூடான விவாதம் ஒன்று நடந்து வருகின்றது. இந்த விவாதத்தை நீங்கள் கட்டுரைகளிலோ, பதிவுகளிலோ, விவாத மேடைகளிலோ அவ்வளவாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது சொற்களால் நடத்தப்படுகின்ற விவாதம் அல்ல. செயல்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற விவாதம்தான் இது. இரண்டு வகையான இந்தியாவைக் குறித்துதான் விவாதமே. இரண்டு வகை இந்தியாக்களும் ஒன்றுக்கொன்று நேர் முரணான, முழுக்க முழுக்க நேர் எதிரான வடிவங்களையும் மணங்களையும் கொண்டவை. வெகு விரைவிலேயே அவற்றில் ஒன்றை ஏற்றுக்கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு நாம் அனைவரும் தள்ளப்படலாம். முதல் வகையான இந்தியா எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கு அந்தக் கேரளத்து மண்ணில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிலைகுலைந்து, தத்தளித்து நின்ற எண்ணற்ற மனிதர்களுக்கு உதவுவதற்கும் ஒத்துழைப்பதற்கும் துயர் துடைப்பதற்கும் களம் இறங்கிய எண்ணற்ற மனிதர்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். நீர் மட்டம் உயர, உயர, வீடுகள் ஒவ்வொரு…