அசாம் மாநிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. 2018 ஜூலையில் வெளியிடப்பட்ட முதல் வரைவு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இரண்டு கோடியே 89 லட்சம் மக்கள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இறுதிப் பட்டியலில் 3 கோடியே 11 லட்சம் மக்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். 19 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் போதிய ஆவணங்கள் இல்லாததால் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாமல் அவர்கள் அந்நியர்கள் என்று அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
பல பத்து வருடங்களாக இந்தியாவில் இந்திய குடிமகன்களாக வாழ்ந்து வந்த, வாழும் கிட்டதட்ட இருபது இலட்சம் இந்தியர்கள் இனி அந்நியர்களாக கருதப்பட்டு, கம்பிகளால் சூழப்பட்ட வெட்டவெளி மைதானங்களில் அகதிகளை விடவும் மோசமான வாழ்நிலைகளில், ஐநாவின் கணக்குப்படி உலகின் மிகப்பெரிய முள்கம்பி வேலி வசிப்பிடத்தில் அடைக்கப்பட இருக்கிறார்கள்.
2018 ஜூலையில் வெளியிடப்பட்ட வரைவு பதிவேட்டிற்கும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இறுதிப்பட்டியலுக்கும் இடையில் இருக்கும் இந்த முப்பது லட்சம் மக்கள் வேறுபாடு என்பது அந்தப் பட்டியலின் மீதே நமக்கு பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்திய இராணுவத்தில் கர்ணலாக பல வருடங்கள் பணி புரிந்த ஒருவரது பெயர் இந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து விடுபட்டு இருந்த செய்தி பல ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இந்த செய்தி மூலம் இந்த பட்டியல் எந்த லட்சணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆனது. ஒரே குடும்பத்தில் தந்தையின் பெயர் பட்டியலில் இருப்பதும் மகன்களின் பெயர் இல்லாமல் இருப்பதும், கணவனின் பெயர் பட்டியலில் இருப்பதும் மனைவியின் பெயர் இல்லாமல் போனதும் இந்த பதிவேட்டின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.
இறுதிப்பட்டியல் வெளியாவதற்கு முன்னதாகவே வரைவுப் பட்டியலில் இருந்து விடுபட்டவர்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து, அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படாமல், கைதிகளை விடவும், அகதிகளை விடவும் மோசமான வாழ் நிலைகளில் வாழ்வதற்கு நிர்பந்தித்துள்ளது இந்திய அரசு. ஒரே குடும்பத்தில் பட்டியலில் பெயர் இடம் பெற்று வெளியிலிருக்கும் உறவினர்கள், பெயர் இடம்பெறாமல் கம்பி வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்களது உறவினர்களைப் பார்க்க கூட அனுமதிக்கப்படாமல் சித்திரவதை செய்கிறது இந்திய அரசு. சொந்த குடிமக்கள் மீது ஆயுதமின்றி ஒரு உள்நாட்டுப் போரை நடத்தி அவர்களை கைதிகளாக்கி, சொந்த தேசத்திலேயே அகதிகளாக்கி அடைத்து வைத்திருக்கிறது இந்திய அரசு.
இப்போது அசாமில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு, டெல்லியிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பாஜகவின் புதுடில்லி தலைவர் மனோஜ் திவாரி இன்று தெரிவித்திருக்கிறார். அதாவது அசாமை தொடர்ந்து மெதுவாக நாட்டின் பிற மாநிலங்களுக்கும் இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு விரிவுபடுத்தப்பட்டு ‘அந்நியர்கள்’ ஆக கருதப்படும் இந்திய குடிமக்கள் இனி அந்நியர்கள் ஆக ஆக்க படுவார்கள்.
அந்நியர்கள் ஆக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த 20 லட்சத்துக்கு மக்களில் கிட்டத்தட்ட 80-90 சதவீதம் மக்கள் முஸ்லிம்கள். இதே போல நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கும் இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் அந்நியர்கள் ஆக அறிவிக்கப்பட இருக்கும் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாகவே இருப்பார்கள்.
இந்தியாவில் இந்தியர்களாக வாழும் முஸ்லிம்களை அந்நியர்கள் என்று அறிவிப்பதில் இவ்வளவு ஆர்வம் காட்டும் இந்த மத்திய அரசு, சென்ற வருடம் அறிமுகப்படுத்திய குடியுரிமை திருத்த மசோதாவில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்கள் இந்தியாவில் குடியேறினால் அவர்களை இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கும் ஒரு வழிமுறையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நீ முஸ்லிமாக இருந்தால் இந்தியனாக இருந்தாலும் உனது இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படும், இதுவே நீ வெளிநாட்டில் வசித்தாலும் இந்துவாக இருந்தால் நீ இந்திய குடிமகனாக அங்கீகரிக்கப்படுவாய் என்பதே இன்று ஆளும் பாசிச பாஜக அரசின் தர்மம்.
தலைகீழாக நின்றாலும் தங்களில் இருந்து ஒருவரை முதல்வராக்க முடியாது என்பதால் ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் தேர்தல் பிரதிநித்துவம் ஏற்படாதவாறு உருவாக்கி பிறகு ஆட்சியையும் அபகரித்து விடலாம் என்ற ஒரு நயவஞ்சக எண்ணத்துடன் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இருப்பதைப் போல, எத்தனை யுகங்கள் ஆனாலும் தங்களால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று தெரிந்துவிட்டதால் தமிழகத்தையும் ஜம்மு காஷ்மீரை போல பிரிக்கப்பட வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் பேசத் துவங்கியிருப்பதைப் போல, ஒட்டு மொத்த தேசத்தையும் தங்கள் ஆக்டோபஸ் கரங்களை அகலப் பரப்பி அபகரிப்பதற்காக சர்வாதிகாரத்தனமான திட்டங்களை, குள்ளநரித்தனத்துடன் செயல்படுத்துகின்றது பாசிச பாஜக அரசு.
இந்தியாவை இந்து ராஷ்டிரம் ஆக அறிவிக்கும் அவர்களது செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக எத்தகைய விளிம்பிற்கும் செல்வதற்கு மத்திய அரசு தயாராகிவிட்டதையே இந்த நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. மக்களால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டிருக்கும் தேர்தல் பெரும்பான்மை அவர்களது நயவஞ்சகத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது. மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மை மக்களின் அமைதி ஒரு அனுமதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. ஒருநாள் அந்த அமைதி அவர்களையே அழிப்பதற்கும் அனுமதியாக எடுத்துக் கொள்ளப்படும்போது கையறு நிலையில் இருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
ஆர்.அபுல் ஹசன்,கட்டுரையாளர்