கலை மனித நாகரிகம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நடனம், நடிப்பு(நாடகம்), பாடல், கதை சொல்லுதல், ஓவியம், கட்டிட வடிவமைப்பு ஆகியவை கலைகளுக்குள் அடங்கும். குறிப்பாக நடனம், நடிப்பு (நாடகம்), பாடல், கதை சொல்லுதல் மக்களிடையே நேரடி தாக்கத்தைச் செலுத்துகிறது.
அனைத்து நாகரீகங்களும் அரசின் செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்க்க, மதப் பிரச்சாரங்கள் செய்ய, ஒழுக்க விழுமியங்களைப் போதிக்கக் கலையை ஒரு மிகச் சிறந்த கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. இஸ்லாமிய நாகரீகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. முஸ்லிம்களும் கலையைப் பிற நாகரீகங்களைப் போலப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் அவற்றை ஊக்குவித்திருக்கிறார்கள். நபிகள்(ஸல்) அவர்கள் காலத்தில் கவிஞர்கள் இஸ்லாத்தின் மீது கவிதை மூலம் வைத்த விமர்சனங்களுக்குக் கவிதையிலே விமர்சனம் வைக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இன்று உள்ள முஸ்லிம் சமூகம் கலையை வெறுப்போடு பார்க்கிறது. குறிப்பாகக் கலைகளின் கலவையாக உள்ள சினிமாவை. இதற்கு முக்கியக் காரணம் இன்றைய சினிமாக்கள் இஸ்லாமிய வரையறைக்குள் இல்லாது இருப்பதே ஆகும்.
கதைசொல்லிகள்
இஸ்லாம் மதமாக அல்லாமல் மார்க்க நெறியாக உள்ளது. எல்லா துறைகளிலும் இஸ்லாம் அதற்கென பிரத்யேக அணுகுமுறைகளையும் வரையறைகளையும் விதிக்கிறது. இந்த வரையறைகள் இடது – வலதுசாரி சிந்தனைகளை விட்டு தனித்துவமானதாகத் திகழ்கின்றன. கலை கலைக்கானது என்று ஒரு தரப்பினரும், கலை மக்களுக்கானது என்று மற்றொரு தரப்பினரும் காலங்காலமாக விவாதித்து வந்துள்ளனர். ஆனால் இஸ்லாம் கலை இறைவனிடம் இருந்து மனிதர்களுக்கு வந்தது, இறைவனுக்கே உரியது என்கிறது. கலை மூலமாக மக்களிடைய இஸ்லாம் போதிக்கும் சமூகநீதி, அறம், ஒழுக்கம், இறைச்சிந்தனை, இஸ்லாமிய அடிப்படையில் மக்கள் மத்தியில் உள்ள மூட பழக்கவழக்கங்களை விமர்சிக்க, தவறான கொள்கை கோட்பாடுகளை விமர்சிக்கக் கலையை முஸ்லிம்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இஸ்லாமிய வரலாற்றில் நபிகளார் மறைந்து 15 ஆண்டுகளில் இஸ்லாம் பல்வேறு இடங்களில் பரவத் தொடங்கியது. அக்காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் தாக்கம் செலுத்தக் கூடிய கலையாகக் கதைசொல்லுதல் (ஸ்டோரிடெல்லிங்) இருந்துள்ளது. அதாவது மக்கள் கூடக்கூடிய இடங்களுக்குச் சென்று தங்களது திறமையால் சுவாரசியமான கதைகளை மக்கள் மத்தியில் கூறி அவர்களிடம் இருந்து பாராட்டுக்கள், வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வர். இந்தக் கலையை முஸ்லிம்கள் இஸ்லாமியச் செய்திகளை மக்களிடையே சென்று சேர்க்க பயன்படுத்தினர்.
முஸ்லிம் கதைசொல்லிகள் மூன்று வகையினராக இருந்தனர், முதலாவது தரப்பினர் இஸ்லாமிய அடிப்படைகளை எடுத்துரைப்பவர்கள், இரண்டாவது தரப்பினர் பாத்தில் (தவறான மூட சித்தாந்தங்களை) விமர்சிப்பவர்கள், மூன்றாவது தரப்பினர் மறுமை நாள், சுவர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நேரில் நிகழ்வது போலத் தத்ரூபமாக மக்கள் மத்தியில் பேசுவர்.
இந்தக் கலையை இறை உவப்பிற்காக இஸ்லாமிய அடிப்படைகளைக் கொண்டு செம்மைப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் தாக்கம் செலுத்திய இந்த கலை, வணிகமாக மாறிவிடுமோ என்ற அச்சம் மார்க்க அறிஞர்கள் மத்தியிலிருந்தது. மக்கள் சுவாரஸ்யம் அடைய இரட்டை அர்த்தம் உள்ள விஷயங்கள், காதல் கதைகளைக் கதைசொல்லிகள் சொல்லத் தொடங்கினர். இது இக்கலை வணிகத்தை நோக்கி செல்வதற்கான காரணிகளாக அமைந்தது. இதுவே இன்றைய சினிமாக்களிலும் பிரதிபலிக்கிறது.
பொம்மலாட்டம்
கலையின் வாயிலாகப் பல சித்தாந்தங்கள் தங்களது கருத்துக்களை மக்களிடையே கொண்டு சென்றன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பொம்மலாட்டம் வாயிலாகப் புராண, இதிகாசங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தனர். இன்று உலகத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு இந்தோனேசியா, இந்த நாடு பல நூற்றாண்டுகள் முன்னர் சைவ, வைணவ மதங்களைப் பின்பற்றக் கூடிய மக்களைக் கொண்டதாக இருந்தது. முஸ்லிம்கள் வணிகத்திற்காகக் கிழக்கு ஆசிய வரை பயணித்தது அனைவரும் அறிந்ததே. சூஃபி அறிஞர்கள் வணிகத்திற்காக இந்தோனேசியா சென்ற போது பொம்மலாட்டம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்ததைக் கண்டார்கள். மேலும் இந்தக் கலை மூலமாக மதச் செய்திகளைப் போதிப்பதையும் கண்டார்கள். இந்த கலையின் மூலம் இஸ்லாத்தை அறிமுகம் செய்தனர். மக்களிடையே பரவிய சூஃபிகளின் பொம்மலாட்டம் மன்னர் வரை சென்று சேர்ந்தது. இதன் மூலம் இஸ்லாத்தின் மீது ஈர்ப்பு கொண்ட மக்கள் இஸ்லாத்திற்கு வரலாயினர். பொம்மலாட்டத்தை முஸ்லிம்கள் வட ஆப்பிரிக்காவிலும் இஸ்லாமிய அழைப்புப் பணிக்காகப் பயன்படுத்தினர்.
நாடகமும் அவிநயக்கூத்தும்
சூஃபி அறிஞர்கள் இஸ்லாத்திற்காகப் பல தியாகங்களைப் புரிந்து உள்ளனர். அவர்கள் பல துறைகளின் மூலம் இஸ்லாத்திற்காகவும் மக்கள் நலனிற்காகவும் பெரும் பங்காற்றி உள்ளனர். இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான கர்பலா எனும் பெரும் துயர் நிகழ்ந்தது. ஷியா பிரிவினை சார்ந்த முஸ்லிம்கள் கர்பலா நிகழ்வை கர்பலா நிகழ்ந்த நாள் அன்று நாடகமாக நடித்து நேரில் நடப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவர்.
பண்டைய கிரேக்கர் அல்லது ரோமர் வழக்கில் அவிநயக்கூத்து கலைஞர்கள் மக்கள் வாழ்வியலை உடல் அசைவு, உணர்வுகளால் வெளிப்படுத்துவர், வசனங்களின்றி பிரதிபலிப்பர். முஸ்லிம்களிடையே இந்த கலையானது இஸ்லாமிய ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் கருவியாகவும், பொழுதுபோக்காகவும் இருந்து வந்தது. இந்த கலை ஓட்டோமான் பேரரசால் மிகவும் ஆதரவும் பெற்றதாக இருந்தது, இன்றளவும் முஸ்லிம்கள் அவிநயக்கூத்தைப் பள்ளிக்கூட விழாக்களில் நிகழ்த்துகின்றனர்.
பொய்த்தோற்ற நாடகம்
பொய்த்தோற்ற நாடகம் எகிப்து நாட்டில் மிகவும் பிரபலமான கலையாகவும் மக்களுக்கான நல்ல பொழுது போக்காகவும் இருந்தது. இந்த நாடகத்தில் நாடக கலைஞர்கள் தங்களின் அசல் தோற்றத்தை மாற்றி வேறு ஒரு நபராக அல்லது முகமூடி, ஒப்பனை செய்து கொண்டு மாறுவேடத்தில் நடிப்பார். உதாரணமாக இளைஞர் வயது முதிர்ந்த நபராக நடிப்பார். முஸ்லிம்கள் இஸ்லாமியச் செய்திகள், திருக்குர்ஆன் மூலம் இறைவன் படிப்பினையாகச் சொன்ன வரலாற்றுச் சம்பவங்களை மாறுவேடம் அணிந்து நடித்து அரங்கேற்றுவர். பிற்காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த மறுமலர்ச்சியின் தாக்கம் முஸ்லிம் உலகத்தையும் வெகுவாக பாதித்தது. இது பொய்த்தோற்ற நாடகத்தில் இஸ்லாமிய நெறிமுறைகளைத் தளர்த்தியது. ஆண் பெண் வேடம் அணிவது, ஆபாச செய்கைகள் போன்றவற்றைக் கலைஞர்கள் வணிகத்திற்காகச் செய்யலாகினர். இஸ்லாமிய அறிஞர்கள் இது போன்ற நாடகங்களைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். பொய்த்தோற்ற நாடகம் குறித்தான தரவுகளும் மிகவும் குறைவானவையே. இன்று சினிமா வந்த பின்பும் இந்த கலை மிகவும் சொற்பமான மக்களால் காப்பாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கலைகளை முஸ்லிம்கள் இஸ்லாத்திற்காகவும் மக்கள் நலனிற்காகவும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், என்ன நோக்கத்திற்காக கலைகளைப் பயன்படுத்தினார்களோ அந்த நோக்கம் சில காலம் கழித்து தடம் மாறிப் போனதை வரலாற்று நெடுகிலும் காணலாம். இந்த மாற்றத்திற்கான காரணம் மக்களிடையே தோன்றிய உலகாதாய நோக்கும், மார்க்க பற்றின்மையுமே ஆகும். இக்கலைகளைச் சீர் செய்து புனரமைப்பதன் மூலம் இறைச் செய்திகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த இயலும். கலை இறைவனுடையது, இறைவனுக்கானது, இறைவனுக்கே உரியது.