அர்ஜுன் ரெட்டி எனும் வக்கிரக் கதாநாயகனை வைத்து வெற்றிப் படம் கொடுத்த இயக்குநரின் அடுத்த வக்கிரப் படைப்பு தான் இந்த அனிமல். படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல ஆரம்பம் முதலே நாயகனின் கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லத் தொடங்குகிறது படத்தின் கதை.
அனிமலின் கதை என்னவென்றால் படத்தின் கதாநாயகனான ரன்விஜய் சிங் (ரன்பீர் கபூர்) இந்தியாவின் முதல் பணக்காரரான பல்பீர் சிங்கின் (அனில் கபூர்) ஒரே மகன். தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் விஜய் சிங் சிறுவயது முதலே பணக்காரனாக இருப்பதால் அவனுக்கு அனைத்தும் கிடைத்து விடுகிறது. தந்தையின் பாசத்தைத் தவிர, தந்தையின் அன்பிற்காக ஏக்கம் கொள்கிறான். ஒருகட்டத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படவே தந்தைக்கு அரணாக நின்று எதிரிகளைப் பழிவாங்கத் துடிக்கிறான். இறுதியாகத் தந்தையைக் கொலை செய்ய நினைக்கும் எதிரிகளைப் பழி வாங்கினாரா? ஏக்கத்தில் இருக்கும் ரன்விஜய் தந்தையின் அன்பைப் பெற்றாரா? என்பதே மீதி கதை.
இப்படத்தின் தொழில்நுட்ப ரீதியான சிறப்புகளை ஓரம் வைத்து விட்டு இப்படம் சொல்ல வரும் கருத்துகளையும் மையக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பையும் சற்று சிந்திப்போம். இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் முந்தைய படங்களைப் போலவே அர்ஜூன் ரெட்டி, கபீர் சிங் போலவே இப்படத்தின் கதாநாயகனும் ஆல்ஃபா ஆண் என்பதாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார். ஆல்ஃபா ஆணான விஜய் சிங் கோவக்காரனாகவும் ஆணாதிக்கம் கொண்டவனாகவும் தலைக்கனம் உள்ளவனாகவும் படம் முழுக்க சுற்றிக் கொண்டிருக்கிறார்.
தனது குடும்பத்தின் மேல் உயிரையே வைத்திருக்கும் விஜய் சிங் தனது சகோதரிக்கு ஏற்பட்ட இடருக்காக அவர் படிக்கும் கல்லூரிக்குத் துப்பாக்கி, கத்தி எனக் கையில் கிடைத்த அனைத்தையும் காரில் ஏற்றிக்கொண்டு செல்கிறார். தனது கோபத்தினால் ஏற்படும் விளைவுகளின் போது, தான் தவறே செய்யவில்லை என வாதிடுகிறார். பல கொலைகளைச் செய்து விட்டு அனைத்தும் தவறில்லை என்கிறார். தனது குடும்பத்தில் ஒருவராக இருப்பவரே தனது தந்தையின் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருக்கிறார் எனத் தெரிந்த மறுகணமே அவரிடம் சமரசம் பேசாமலே அல்லது அவரது மன அசௌகரியங்களைத் தெரிந்துகொள்ளாமலே அவரை இரக்கமின்றி கொலை செய்துவிடுகிறார். சட்டத்தையெல்லாம் குப்பையில் எறிந்துவிட்டு தனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதையே பாதையாகக் கொண்டு நடக்கிறார். இரு சகோதரிகள், தாயின் பாசத்தில் வளரும் விஜய்க்கு ஒரு பெண்ணிடம் எப்படிப் பேச வேண்டும் எனத் தெரியவில்லை. தனது காதலியைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே தனது ஆண்மையை மிருகங்களுடன் ஒப்பிட்டு நிறுவி, குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இடுப்பு இருப்பதாகத் தனது காதலியிடம் கூறி தனது அனிமல் உணர்வை வெளிப்படுத்தி விடுகிறார்.
கருத்துகளையோ ஆலோசனைகளையோ விஜய் சிங் கேட்பதில்லை, கட்டளைகள் தான் இட்டுக்கொண்டிருக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக நடப்பவர்களையோ, எல்லையைத் தாண்டும் நபர்களையோ ‘கொன்றுவிடுவேன்’ என்கிறார். இப்படி வெறும் விஷம குணாதிசயங்களை மட்டுமே வைத்துக்கொண்டிருக்கும் ஆல்ஃபா ஆண் விஜய் சிங் கதாபாத்திரத்தை நாயகனாக உருவகப்படுத்தி அதற்கு அனிமல் என்று தலைப்பிட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கிறார் இயக்குநர் சந்தீப் வங்கா.
கதையில் வரும் அனைத்து முக்கியக் கதாபாத்திரங்களும் இம்மாதிரியான விஷம எண்ணங்களை வைத்துக் கொண்டுதான் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ரன்விஜய் சிங்கின் தந்தை பல்பீர் சிங் தலைக்கனத்தில் சிறந்தவராக இருக்கிறார், அவரிடமிருந்தே இவ்வகை விஷம எண்ணங்களை விஜய் சிங் பெற்றிருக்கலாம் போல. அவரைச் சுற்றியுள்ள சூழலை அவரே தீர்மானிக்கிறார், செலவழிப்பதற்குப் பணம் அவரிடம் அதிகம் இருந்தாலும் தனது குழந்தைகளிடம் நேரம் செலவிடுவதற்கு அவருக்கு மனமில்லை. தனது குடும்பத்திடம் சர்வாதிகார போக்கையே அவர் கடைப்பிடிக்கிறார், ஆலோசனைகளையும் எதிர்த்தரப்பு கருத்துக்களைக் கேட்பதில்லை என்பதோடு சில பல அதட்டல்களின் மூலம் தனது மனைவியை வாயடைக்கவும் செய்துவிடுகிறார்.
மற்றொரு கதாபாத்திரமாக வரும் ரன்விஜயின் மனைவி கீதா (ராஷ்மிகா), ஒரு கட்டத்தில் கணவர் தனக்குத் துரோகம் செய்த விஷயத்தைத் தெரிந்து அவருடன் சண்டையிடும் போது, தன் மேல் உள்ள அன்பை நிரூபிக்கக் கணவனிடம் அவருடன் துரோகத்தில் ஈடுபட்ட அப்பெண்ணை ‘கொன்றுவிட்டு வா’ என்கிறார். என்னே ஒரு பெண்! தண்டனை என்பது அப்பெண்ணுக்கு மட்டும்தானா கணவருக்கு இல்லையா?
கதையின் வில்லன் கதாபாத்திரத்தை யோசிப்பதற்கு இயக்குநர் சந்தீப் நீண்ட நேரம் எடுத்திருப்பார் எனத் தோன்றவில்லை. நாயகன் ரன்விஜய் நல்ல அனிமல் என்றால் வில்லன் அப்ரார் (பாபி தியோல்) கெட்ட அனிமல். வில்லன் அப்ரார்ரின் கதாபாத்திர வடிவமைப்பில் தான் இயக்குநர் தனது சூட்சமத்தைக் கையாண்டிருக்கிறார். (இதனைக் குறித்து பிறகு ஆராய்வோம்)
வன்முறைகளும் பாலியல் கருத்துக்கள், காட்சிகளும் இந்த முக்கிய பாத்திரங்களுடன் படம் நெடுகிலும் பயணிக்கின்றன.
படத்தின் கதாபாத்திரத்திங்களை இவ்வளவு ஆழமாக ஆராய்வதன் நோக்கம் இயக்குநரின் படைப்பில் குறை நோக்குவதற்காக அல்ல. மாறாக ஏதோ ஒருவகையில் அவை பார்வையாளர்களின் ஆழ்மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத, தடை செய்வதற்கு உகந்த சில ஒழுக்கமற்ற செயல்களைக் கதையின் முக்கிய கதாபாத்திரமே செய்யும் போது அதைப் பார்க்கும் மக்கள் தன்னால் செய்ய இயலாதவற்றை நாயகன் செய்யும்போது அதின்பால் ஈர்க்கப்படுகிறார்கள். எனவேதான் சில படங்களில் நாயகனைக் காட்டிலும் எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்போது அவற்றை மக்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர்.
மனிதன் இயற்கையிலேயே ஒழுக்கமற்ற செயல்களைச் செய்யத் தூண்டப்படுகிறான். விலங்குகளைப்போல் அல்லாமல் அவற்றைச் செய்யவிடாமல் தடுப்பது அவனது பகுத்தறிவு. அந்த பகுத்தறிவு தான் அவனுக்கு இறைநம்பிக்கையை அதிகப்படுத்துகிறது, அந்த இறைநம்பிக்கையை அவனைத் தீமைகளிலிருந்து காக்கிறது. மாறாக அனிமல் படத்தின் இரு முக்கிய கதாபாத்திரங்களும் வெவ்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தும் எவ்வித அச்ச உணர்வும் இல்லாமல் தனக்குப் பிடித்த தீமைகளில் ஈடுபடும்போது அவற்றைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அது எவ்வகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பாருங்கள்!
இதனோடு அல்லாமல் இப்படத்தின் 5 பிரச்னைகளாக இருக்கும் சில விஷயங்களைக் கீழே தொகுக்க விழைகிறேன்.
பிரச்னை 1: ஆல்ஃபா ஆண் எனும் தவறான புரிதல்
படத்தின் கதாநாயகனின் தன்மைகளை இயக்குநர் ஆல்ஃபா ஆண் என்பதாகச் சித்தரிக்கிறார். இதனை ஆல்ஃபா ஆண் ஓநாய் (alpha male wolf) எனும் கருத்தியலை முன்வைத்த டேவிட் மெக்கே ஒப்புக்கொள்ள மாட்டார். ஆல்ஃபா ஆண் சூழ்நிலைகளை யோசித்து முடிவெடுப்பார், தலைமைத்துவப் பண்புகளுடன் மக்களை வழிநடத்துவதும், பாதுகாப்பதும் அவர்களது பலம், இன்னும் பல சீற்றத் தோற்றங்கள் ஆல்ஃபா ஆணிடம் இருந்தாலும் அவற்றின் நன்மையான தன்மைகளைக் காட்ட இயக்குநர் முன்வரவில்லை.
உண்மை என்னவென்றால் ஆல்ஃபா ஆண் என்ற பதமே உண்மைக்கு ஒட்டாத கற்பனை தான். நாயகன் எப்போதும் கோபத்துடனேயே சுற்றிக் கொண்டிருப்பதும், சமூகத்திற்கென்று ஒரு சட்டம் இருந்தால் அந்த சட்டத்தைப் புறக்கணித்துவிட்டு தனக்கென்று ஒரு சட்டத்தை வரையறுத்துச் செல்வதும், மற்றவர்களுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருப்பதும், சிறந்த புத்திக் கூர்மை இருப்பதாக மற்றவர்களால் பாராட்டப்படுவதும் தான் ஆல்ஃபா ஆணின் தன்மைகளாக இயக்குநர் நினைத்துக் கொண்டிருக்கிறாரா? ஆல்ஃபா ஆணின் குணாதிசயங்களை வைத்து உருவாக்கப்படும் நாயகனால் இயக்குநர் சொல்ல வரும் செய்தி என்ன? தனது முந்தைய படமான அர்ஜுன் ரெட்டியின் அப்கிரேடெட் வர்ஷனாகத் தான் இந்த ரன்விஜயைக் காட்ட முயன்றிருக்கிறார். இதன் மூலம் ஆல்ஃபா ஆணின் கீழ்த்தரமான குணாதிசயங்களை சமூகத்தில் இயல்பாக்கம் செய்ய விழைகிறார். இவ்வகை குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் ஆல்ஃபா ஆண், நாயகனாக இருக்கத் தகுதியற்றவன் என்பதை அவர் தெரிந்து கொள்ளட்டும்.
பிரச்னை 2: பெண் எனும் போகப் பொருள்
ஆல்பா ஆண்கள் ஏன் பெண்களை அடக்குமுறை படுத்துகிறார்கள். இயக்குநரின் முந்தைய படம் அர்ஜுன் ரெட்டியில், நாயகன் நாயகியைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார், வகுப்பிற்குள் வந்து அனைத்து மாணவர்களிடமும், நீங்கள் எந்த பெண்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் இந்தப் பெண் எனக்குரியவள் என்று அவளின் அனுமதியின்றி பிரகடனம் செய்கிறார். பின்னர் நாயகியைக் கூட்டிக்கொண்டு பல பகுதிகளுக்குச் சென்று ஊர் சுற்றிக்கொண்டு உடலுறவும் வைத்துக் கொள்கிறார். அப்பொழுதுதான் நாயகிக்கு நாயகனிடம் பேச வாய்ப்பு கிடைக்கிறது, எது என்னிடம் உனக்குப் பிடித்தது என்று கேட்கிறாள் அதற்கு நாயகன் சொல்லும் பதில் ‘நீ விடும் மூச்சுக்காற்று எனக்குப் பிடித்திருக்கிறது’. என்ன ஒரு பதில்? இந்த அனிமல் படத்திலும் இதே போன்று காட்சிகள் இருக்கின்றன. ஏனெனில் இது அர்ஜுன் ரெட்டியின் அப்கிரேடெட் வர்ஷன் அல்லவா?
இந்த படத்தில் நிச்சயமான ஒரு பெண்ணிடம் ஆல்ஃபா ஆண் குறித்த சிறப்புகளைக் கூறி, கடைசியில் உன்னுடைய இடுப்பின் அளவு நன்றாக உள்ளது. அதனால் நீ ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறார் ரன்விஜய். இதனைக் கேட்ட அப்பெண்ணும் அவன் பின்னாலேயே வந்து விடுகிறாள். பின்னர் அனைவரும் கதாநாயகியை அவளது செயலின் காரணமாகத் திட்டிக் கொண்டிருக்க, ரன்விஜயும் கீதாவும் உறவினர்கள் முன்னிலையில் முத்தமிட்டுக் கொள்கின்றனர். இந்த செயல்கள் அனைத்தையும் கண்டிப்பாக இயக்குநர் ரொமாண்டிக் என்று தான் நினைத்திருப்பார்.
மேற்குறிப்பிட்ட காட்சிகள் சொல்வதென்ன? பெண்ணுக்கும் ஓர் உணர்வு உண்டு என்பதை ஆல்ஃபா ஆண் நினைக்க வேண்டாமா? ஒரு காட்சியில் தன்னுடைய மனைவி கீதாவை விஜய் சிங் அவளது பின்னால் நின்றுகொண்டு அவள் நிறுத்த சொல்லியும் காயம் ஏற்படும் வரை முதுகில் அடிக்கிறார். பின்னர் அவருக்கு பின்னால் ஒரு நபர் இருக்கிறார் என்று கூட பாராமல் ஆடையைக் களையச் சொல்கிறார். ஜோயா என்ற பெண் விஜய் மீது தனக்கு காதல் இருப்பதாகக் கூறும்போது, அதனை நிரூபிக்கத் தனது ஷுவை நக்குமாறு கூறுகிறார். இந்த காட்சிகள் அனைத்துமே இயக்குநர் பெண்களைப் போகப் பொருளாகத் தான் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதையே பிரதிபலிக்கின்றன.
பிரச்னை 3: விலங்கியல் கோட்பாடு
ஆல்ஃபா ஆணின் மகிமையை கீதாவிற்கு விஜய் சிங் புரிய வைக்கும் போது பலமான ஆல்ஃபா ஆண்கள் தான் பெண்களைப் பாதுகாப்பார்கள். பெண்கள் ஆல்ஃபாக்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். பலம் இல்லாதவர்கள்தான் பெண்களுக்காக இல்லாத ஒரு விஷயத்தைச் செய்வதாகக் கவிதை வடிப்பார்கள், எனினும் அவர்களுக்குத் தகுதி இருக்காது. ஆனால் அவற்றை உண்மையில் செய்து காட்டுவது ஆல்ஃபா ஆண்கள் தான் என்று கூறுவார். ஆல்ஃபா எனும் கருத்தோட்டமே விலங்குகளைப் பார்த்து வந்ததுதான்.
ஒப்பீட்டளவில் விலங்குகளின் வாழ்க்கையை மனிதர்களோடு எவ்வாறு ஒப்பிட முடியும்? பலமான ஆல்ஃபா ஆண் கெட்டவன் என்றாலும் இந்த கூற்று ஒப்பிடப்படுமா? பெண்கள் அவன் பின்னால் கண்மூடித்தனமாகச் சென்று விடுவார்களா? நற்குணங்கள் தேவையில்லையா? வரலாற்றில் இதுவரை மேற்குறிப்பிட்ட குணாதிசயங்கள் கொண்ட எந்த ஆல்ஃபா ஆண் சமூகத்தில் மிகப் பெரும் தாக்கம் செலுத்தி இருக்கிறான்? எளிமையானவர்களும் பலவீனமானவர்களுமே சமூகத்திற்காகப் பாடுபட்டுத் தான் இருக்கிறார்கள். இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா பலமான ஆல்ஃபா ஆண்களுக்காக விரும்பி வைத்த இந்த கோட்பாட்டின் அடிப்படையே தவறானது.
பிரச்னை 4: வில்லனின் தேவையற்ற முஸ்லிம் அடையாளம்
வில்லனின் முஸ்லிம் தோற்றம் கதையில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்று பார்த்தால் வில்லன் மற்ற மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும் அல்லது கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்தாலும் கதையில் 0.01% பாதிப்பு கூட இல்லை. பின்னர் ஏன் இயக்குநர் சந்தீப் முஸ்லிம் கதாபாத்திரம் ஒன்றை வில்லனாக வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை. வில்லன் அப்ரார் செய்யும் ஒவ்வொரு செயல்களும் இஸ்லாத்திற்கு எதிரான செயல்கள் தான்.
முதன்முதலில் வில்லன் அப்ரார் அறிமுகப்படுத்தப்படுவது அவனது நிக்காஹ்வில் தான். ஆம் அது அப்ரார்ரின் 3வது நிக்காஹ். முஸ்லிம் என்பதற்காக அவருக்கு 3வது திருமணம் செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார் இயக்குநர் சந்தீப். இஸ்லாம் தடை என்று வன்மையாகக் கண்டித்த அனைத்து செயல்களும் அந்நிக்காஹ்வில் நடக்கின்றன.
!) முதல் இரு மனைவிகளின் அனுமதி இல்லாமல் மூன்றாவது திருமணம் நடக்கிறது.
!!) இரு மனைவிகளும் புகைப் பிடிக்கிறார்கள்.
!!!) நிக்காஹ்வில் வெளிப்படையாகவே வில்லன் அப்ரார் மதுக் கோப்பையைத் தலையில் வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார்.
!!!!) அநியாயமாகக் கொலை செய்கிறார்.
!!!!!) புது மணப்பெண்ணின் அனுமதி இல்லாமலே அவரிடம் அங்குக் குழுமியிருந்த அனைவர் முன்னிலையிலும் உடலுறவு கொள்கிறார். பின்னர் பெண்களை அடித்துத் துன்புறுத்துகிறார்.
இவ்வாறு இஸ்லாத்திற்கு எதிரான அனைத்தையுமே வேண்டுமென்றே காட்சிப்படுத்தியிருப்பதன் நோக்கம் அப்ராரை மோசமான வில்லனாகக் காட்ட வேண்டும் என்பதாலா அல்லது இயக்குநரின் வெறுப்பு இஸ்லாத்தின் மீது இருப்பதாலா?
நாயகன் விஜய் சிங் மற்றும் வில்லன் அப்ரார் இருவரையும் சகோதரர்கள் எனவும் கதையின் முடிவில் இருவரின் மோதலையும் மகாபாரதக் கதையுடன் ஒப்பிடுவதிலும் இயக்குநர் சொல்ல விரும்பும் கருத்திற்குள் ஒளிந்திருக்கும் குட்டு வெளிப்பட்டு விடுகிறது. வில்லனை மதமாற்றம் செய்ததன் நோக்கம் நாயகன் மற்றும் வில்லனுக்கு இடையே நடக்கும் கடைசி சண்டையானது இந்து ஆல்ஃபா ஆணும், வில்லன் முஸ்லிம் ஆல்ஃபா ஆணும் சண்டையிட்டு இறுதியில் நாயகன் வெல்வதாகக் கதையை முடித்துள்ளார்.
பிரச்னை 5: ஜாதி வெறி
மேலே குறிப்பிட்ட பிரச்னைகளில் இது ஒன்றை மட்டும் தான் ஒரளவு மறைவாக வைத்திருக்கிறார் இயக்குநர் சந்தீப். நாயகன் விஜய் சிங் தனது தந்தையின் உயிருக்கு ஆபத்து என்றவுடன் பல கோடி சொத்துக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் பாதுகாப்பிற்காக அவர் உதவி தேடிச் சென்றது அவரின் உறவினர்களிடம். ஆயிரம் இருந்தாலும் இரத்த பந்த உறவுகள் அல்லவா? உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுவார்கள் என்று விஜய் சிங் நம்பியிருக்கலாம். ஆனால் அது மட்டும் இங்கு பிரச்னை அல்ல.
தனது சகோதரியின் கணவரைத் தனது தந்தையின் அருகில் வைத்துக்கொள்ளக் கூட விஜய் சிங் விரும்பமாட்டார். தான் கூட்டிக் கொண்டு வந்த அனைத்து சிங் சகோதரர்களும் தனது தந்தையை அப்பா என்றோ சித்தப்பா என்றோ மாமா என்றோ பெரியப்பா என்றோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் தனது சகோதரியின் கணவராக இருக்கிறாரே அவர் மட்டும் தனது தந்தையை அப்பா என்று கூப்பிடுவதை விஜய் சிங் தாங்கிக் கொள்ள மாட்டார். ‘சார்’ என்று தான் சொல்ல வேண்டும் எனச் சொல்கிறார். ஏன்? அவர் தனது குடும்ப இரத்த உறவில் பங்குபெறுபவர் இல்லை என்பதாலா? தனது இரண்டாவது சகோதரியின் கணவர் கூட தனது தந்தையைச் சார் என்று அழைத்த பிறகே அமைதி கொள்வார் விஜய் சிங்.
விஜய் சிங்கிற்கும் அப்ராருகுமான கடைசி சண்டையில் வில்லன் அப்ராரை மன்னிப்பதற்கும் விஜய் சிங் தயாராகிவிடுவார். ஆனால் தனது சகோதரியின் கணவர் தந்தையின் கொலை முயற்சிக்கு உடந்தை என்பதால் அவரை கொலை செய்து விடுவார். ஏன் இந்த பாரபட்சம்? வில்லன் அப்ரார் எப்படி இருந்தாலும் தனக்குச் சகோதரன் ஆனால் சகோதரியின் கணவர் அப்படியல்ல என்பதுதானே.
படத்தில் ஏன் இவ்வளவு எதிர்மறை கதாபாத்திரங்கள் சொருகப்பட்டிருக்கின்றன? படத்தில் நேர்மறை கதாபாத்திரத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதே மிகப்பெரும் சோதனையாக அமைந்துவிட்டது. இதுபோன்ற பலவகையான பிரச்னைகள் இப்படம் முழுக்க ஒளிந்து கிடக்கின்றன. அர்ஜுன் ரெட்டி படத்திற்குப் பிறகு ஆல்ஃபா ஆண் என்ற அதே கருத்தியலைக் கொண்ட படத்தை எடுத்ததன் மூலம் தனது வக்கிர எண்ணங்களையே இரண்டாவது முறையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வாங்கா ரெட்டி.