கடந்த ஆண்டு அக்டோபர் 7, 2023 ஹமாஸ் இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தியது முதல் இஸ்ரேலுக்கு 17.9 பில்லியன் டாலர்கள் இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது என்று ஒரு சர்வதேச அறிக்கை பகிரங்கப்படுத்தியுள்ளது.
பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான வாட்சன் நிறுவனம் தயாரித்த “அக்டோபர் 7, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரை இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பிராந்தியத்தில் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் செலவு” என்ற தலைப்பிலான ஆய்வின் முடிவில் வெளியான அறிக்கை இஸ்ரேலின் மீது அமெரிக்கா கொண்டிருக்கும் விரிவான ஆதரவைக் காட்டுகிறது. இதன் மூலம் இஸ்ரேலின் ராணுவ செயல்பாடுகளின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா தனது இருப்பை வலுப்படுத்திவருவதன் தீவிர தன்மையை நாம் தெரிந்து கொள்ள இயலும்.
அமெரிக்கா 6.8 பில்லியன் டாலர்களை வெளிநாட்டு இராணுவ நிதியுதவிக்கும் (FMF), 5.7 பில்லியன் டாலர்களை அயர்ன் பீம் போன்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கும், 1 பில்லியன் டாலர்களை கனரக ஆயுதங்களுக்கும், 4.4 பில்லியன் டாலர்களை அமெரிக்கா தனது ஆயுத இருப்புக்களை அங்கே நிரப்புவதற்கும் இஸ்ரேலுக்கு வழங்கியதாக அறிக்கை விவரிக்கிறது.
இந்த 17.9 பில்லியன் டாலர்கள் உதவியானது அமெரிக்க இஸ்ரேல் உடனான முந்தைய ஒப்பந்தங்களின் நிதியை உள்ளடக்கியது மட்டுமல்லாது அமெரிக்க அரசின் பொது ஆதரவின் காரணமாகவும் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்க இராணுவத்தின் மூலம் பல வழிகளில் உதவிகள் கிடைக்கின்றன. FMF, Excess Defense Articles (EDA), Foreign Military Sales (FMS), மற்றும் இஸ்ரேலில் US கையிருப்பு ஆயுதங்கள் ஆகியன அவற்றுள் அடங்கும்.
அயர்ன் டோம், ஆரோவ் மற்றும் டேவிட் ஸ்லிங் உள்ளிட்ட இஸ்ரேலின் அனைத்து ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும் குறிப்பிடத்தக்க அளவு அமெரிக்க நிதியுதவியின் மூலமாகவும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தயாரிப்பின் மூலமாகவும் உருவாக்கப்பட்டவை என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
இஸ்ரேலுக்கான அமெரிக்க இராணுவத்தின் ஆதரவு 1978ல் இருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் இப்போது ஆட்சியில் இருக்கும் ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆதரவும் கிடைத்து வருகிறது. இது மட்டுமல்லாது, பிற பிராந்திய நாடுகளுடன் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது, இராணுவ ஆயுதங்களின் வியாபார விஷயங்களில் இஸ்ரேலுக்கான ஆயுத கொள்முதலில் பாதிப்பு வராதவண்ணம் அமெரிக்கா பார்த்துக் கொள்கிறது.
இஸ்ரேல் அமெரிக்க நட்பு மிகவும் தனித்துவமானது. அதனாலயே இஸ்ரேலின் உள்நாட்டு ஆயுதத் தொழிலுக்கு அமெரிக்க இராணுவ உதவியில் 25% பங்குகளை ஒதுக்க அமெரிக்கா அனுமதித்துள்ளது. கூடுதலாக, அமெரிக்க சட்டம் இஸ்ரேலுக்கு ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் FMF நிதியை மொத்தமாகப் பெற அனுமதிக்கிறது. மற்ற நாடுகள் காலாண்டு தவணைகளில் தங்கள் பங்குகளை பெறுகின்றன.
Boeing, General Dynamics, Lockheed Martin, Northrop Grumman, RTX மற்றும் Caterpillar போன்ற ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் இஸ்ரேலை ஒரு முக்கிய வாடிக்கையாளராகக் கருதுவதால், அவர்களின் ஆயுதங்களை அமெரிக்காவில் உற்பத்தியாளர்களிடமிருந்தே இஸ்ரேலால் நேரடியாக வாங்க முடிகிறது.
எடுத்துக்காட்டாக, Boeing நிறுவனம் 2023ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் 8 பில்லியன் டாலர்கள் தற்காப்பிற்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அளித்துள்ளதாகப் பதிவு செய்துள்ளது. Boeingன் வருவாயில் 36% தற்காப்பு ஆயுதங்களை விற்பனை செய்வதில் இருந்து கிடைக்கிறது. மேலும் Boeing இஸ்ரேலின் விமானப்படைக்கு F-15 போர் விமானங்கள், Apache AH 64 ஹெலிகாப்டர்கள் மற்றும் வெடிமருந்துக் கருவிகளை வழங்குகிறது.
இஸ்ரேலுக்கு F-16 ஜெட் விமானங்களுக்கான ஏவுகணை தயாரிப்பதில் வழிகாட்டுதல் மற்றும் விண்ணிலிருந்து தரையை தாக்கும் ஏவுகணைகளை வழங்குவது ஆகியவற்றில் பிரபல இராணுவ ஆயுத தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணியில் உள்ள RTX முக்கிய பங்கு வகிக்கிறது.
இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்க உற்பத்தியாளர்களை ஈடுபடுத்துவதும் இராணுவ உதவியை வழங்குவதும் அமெரிக்காவின் அரசியல் ஆதரவை வலுப்படுத்துகிறது என்று அறிக்கை கூறுகிறது. இம்மாதிரியான உதவிகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்குவதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகுவதாகவும், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உள்கட்டமைப்பு வலுவடைவதாகவும் ஜோ பைடன் நிர்வாகம் வக்காலத்து வாங்குகிறது.
2024ஆம் நிதியாண்டில் நாட்டின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் செலவினங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகப்படியான நிதியை, அக்டோபர் 7 முதல் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க இராணுவம் செலவிட்டிருப்பதாக அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த ஒரு வருடத்தில் மட்டும், இஸ்ரேலுக்கான இராணுவ உதவி மற்றும் அதன் தொடர்புடைய பிராந்திய நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா குறைந்தபட்சம் 22.76 பில்லியன் டாலர்களை செலவிட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை நிலைநிறுத்த 4.86 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அக்டோபர் 7, 2023க்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 34,000 போர் கப்பல்கள், விமானங்கள் உட்பட 19 இடங்களில் 50,000 இராணுவ வீரர்களை அமெரிக்கா தற்போது பராமரித்து வருகிறது.
அக்டோபர் 7, 2023 அன்று ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு தொடங்கியதில் இருந்து காஸாவில் 43,000க்கும் அதிகமான ஃபலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலான உயிரிழப்புகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும்; 101,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தது உள்ளனர் என்றும் நாம் அனைவரும் அறிந்ததே உள்ளோம்.
ஒரு வருடத்திற்கும் மேலாக நடக்கும் இந்த இனப்படுகொலையில், இஸ்ரேலின் கடுமையான முற்றுகைக்கு மத்தியில் உணவு, சுத்தமான தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறையை காஸாவில் வாழக்கூடிய ஃபலஸ்தீனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
ஃபலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரமான இனப்படுகொலைகளுக்கு எதிராக இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கை எதிர்கொள்கிறது. ஆனாலும் அமெரிக்கா தனது ஆதரவை இஸ்ரேலுக்கு வழங்குவதில் குறை வைக்கவில்லை என்பதை இந்த அறிக்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.