மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி கமல் ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளிவந்துள்ளது. உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படும் இத்திரைப்படத்தில் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த இயக்குநர் நிறைய முயன்றுள்ளார். இருந்தும் சில இடங்களில் படம் தூக்கத்தைத் தருகிறது. முகுந்த் வரதராஜனின் மனைவியின் பார்வையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறினாலும் படம் முழுவதும் சிவகார்த்திகேயன் மட்டுமே ஆக்கிரமித்துள்ளார். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி கதாபாத்திரங்களைத் தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் நம்மை கடந்து செல்கின்றன.
படம் வெளியான நாள் முதல் தற்போது வரை பலரது வாழ்த்துக்களை பெற்றுவந்தாலும் அதன் உள்ளடக்கத்திற்காக பரவலான விமர்சனங்களையும் பெற்றுவருகிறது. நிஜத்தில் முகுந்த் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது காதலியான கிருஸ்தவ பெண் இந்து ரெபெக்கா வர்கீஸை திருமணம் செய்துகொள்கிறார். முகுந்தின் மனைவியை கிருஸ்துவ பெண் என காட்சிக்கு காட்சி அடையாளப்படுத்திய இயக்குநர் கதாநாயகன் நிஜத்தில் ஒரு பிராமணர் என்பதை படத்தின் எந்தக்காட்சியிலும் வெளிப்படுதாதது இயக்குனரின் வியாபாரத் தந்திரத்தை வெளிப்படுத்துகிறது.
அமரன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது எந்தவிதமான அரசியலும் இல்லை என பொய்சொல்லி தப்பித்து படத்தை பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் செய்து கல்லாகட்டி இருக்கின்றனர் திரைக்குழுவினர்.
காஷ்மீரில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படும் இத்திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இஸ்லாமியர்கள் மீது நுட்பமான தாக்குதலை நடத்தியுள்ளார் இயக்குநர். படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த போதிலிருந்தே, அதன் நிறைய காட்சிகளில் தொப்பியணிந்த இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புகள் வந்தன. இதற்கு முன்பு இந்திய சினிமாத்துறையில் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த அதே வெள்ளைத் தாடி, தொப்பி அடையாளத்தை கொடுத்து அவர்களை இந்திய இராணுவத்திற்கு எதிராக செயல்படுவதுபோல் காட்சிகளை அமைத்துள்ளனர்.
காஷ்மீரில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் வாழ்க்கையை இராணுவத்தின் பார்வையில் பேசிய திரைப்படம்; அவர்களால் அங்கு அரங்கேற்றப்பட்ட அராஜகங்கள், போலி என்கவுன்டர்கள், பாலியல் வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை முழுமையாக மறைத்துள்ளது.
பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் இந்திய இராணுவத்திற்கு எதிராக போராடிவருகின்றன. தனது சொந்த மண்ணிண் விடுதலைக்காகவும், மாநில சுயாட்சி பறிக்கப்பட்டதற்காகவும், இந்திய இராணுவத்தின் அராஜகத்திற்கு எதிராகவும் போராடிவரும் காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளாக கட்டமைத்திருப்பது யாரை திருப்திபடுத்த என்ற கேள்வி எழுகிறது. இது ஒன்றிய அரசால் காஷ்மீர் மீது நிகழ்த்தப்பட்டுவரும் அநீதிகளை நியாயப்படுத்தும் முயற்சியாகும்.
விடுதலைக் கோஷமான ஆசாதி கோஷம் இராணுவ வீரர்களுக்கு எதிராக எழுப்பப்படுவது போன்ற காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆதிக்கத்திற்கும், அடக்குமுறைக்கும், மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்தும் விடுதலையை முன்னோக்கி எழுப்பப்படும் கோஷம் தான் ஆசாதி. CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது நாடு முழுவதும் வீதிதோறும் ஒலித்தது ஆசாதி கோஷம். அப்பேற்பட்ட பாசிச எதிர்ப்புக் கோஷத்தை இந்திய நாட்டிற்கு எதிராக எழுப்பப்படும் முழக்கமாக காட்சிப்படுத்தி போராட்டக்காரர்களை நாட்டின் விரோதிகளாக கட்டமைத்துள்ளார் இயக்குநர்.
ஷஹீத், முஜாஹித், இன்குலாப் போன்ற பல வார்த்தைகளும் இந்தியாவிற்கு எதிரான வார்த்தைகளாக தவறான முறையில் படத்தில் கையாளப்பட்டுள்ளன.
இராணுவ வீரர்களால் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர்களை தொலைத்த காஷ்மீரி பெண்கள் “பாதி விதவைகள்” என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களது கணவர்களுக்காக இன்னும் காத்திருக்கிறனர், போராட்டங்களை நடத்திவருகின்றனர். அவர்கள் குறித்த ஒரு காட்சியில், அவர்களின் கணவர்கள் “எல்லைத் தாண்டி சென்றுவிடுவார்கள்” என்ற ஒற்றை வசனத்தின் மூலம் இராணுவத்தை பாதுகாத்து காஷ்மீரி தாய்மார்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர்.
படத்தில் வில்லன் ஆசாத் திவானி தற்கொலைப்படைத் தாக்குதலுக்காக இஸ்லாமியர்களை தயார்படுத்துகின்றான். ஆனால் நிஜத்தில் இஸ்லாம் தற்கொலைப்படைத் தாக்குதலை தடை செய்துள்ளது. இதற்கு முன்பு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் குருவான ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யின் துப்பாக்கிப்படத்தில் இதே போல் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக முன்வைத்திருப்பார்.
பஞ்ரங்பலி கீ ஜெய் (Glory to lord hanuman) என்கின்ற இந்துத்துவ சித்தாந்த கோஷங்கள் இராணுவ வீரர்களால் எழுப்பப்படுகின்றது. இதன் மூலம் இந்திய இராணுவம் காவியமமாக்கப்பட்டிருப்பதையும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் கமல் ஹாசனின் அரசியல் புரிதலையும் அறிய முடிகிறது.
படத்தை தயாரித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் (திமுக கூட்டணி) கமல் ஹாசன், விநியோகம் செய்த தமிழக துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (ரெட் ஜெயன்ட் மூவிஸ்), படம் வெளிவந்த முதல் நாளே வாழ்த்தி விளம்பரம் செய்த முதலமைச்சர் ஆகியோரால் திராவிட மாடல் விடியல் அரசு, சிறுபான்மையினர் பாதுகாப்பு அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இவர்களின் இஸ்லாமிய வெறுப்பு இந்தப்படத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இந்த உண்மைகளை மறைத்து, வெறுப்பை ‘சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இடையேயான காதலை’ கருவியாக வைத்து மக்கள் மனதில் திணிக்க முயன்றதில் இயக்குநர் வெற்றியாடைந்துள்ளார் என்பதை கீழக்காணும் நிகழ்வுகளின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
பாஜாக, ஆர்எஸ்எஸ், சீமான் இன்னும் பல இந்துதுவவாதிகளும், இனவாதிகளும் இந்த படத்தை பாராட்டியதன் மூலம் இஸ்லாமிய வெறுப்புச் சிந்தனை உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து வெளிக்காட்டிய பெருமை இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகனையேச் சாரும். இந்த வரிசையில் தங்களை முற்போக்குவாதிகளாக காட்டிக்கொள்ளும் இயக்குநர்களும், அரசியல் தலைவர்களும், முக்கியமான சில நபர்களும் இணைந்துள்ளனர்.
காஷ்மீரில் நடக்கும் உண்மை சம்பவங்களை மறைத்து அதற்கு மாறான காட்சிகளை அமைத்து காஷ்மீரிகளையும் முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக காட்டி அவர்களை மற்றமைகளாகவும், ‘இந்தியா தேசியத்திற்க்கு’ எதிரானவர்களாகவும் வரையறை செய்து, இராணுவ வீரர்களை தவறுகளற்ற புனிதர்களாக சித்தரித்தன் மூலம் இந்துத்துவவாதிகள் மற்றும் தேசியவாதிகளின் சிந்தனைகளை எளிதில் மக்களிடம் கொண்டுசெல்லும் சிறந்த பிரச்சாரப் படமாகவும் காஷ்மீரி ஃபைல்ஸ், ஆர்டிகல் 370 ஆகிய படங்களின் நீட்சியாகவும் இந்திய இஸ்லாமோஃபோபியா சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தை முன்வைத்துள்ளது இந்த அமரன்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் இறப்பிற்காக கண்ணீர் சிந்தும் மக்கள், இந்த கதைகளுக்குப் பின்னால் காலங்காலமாக மறைக்கப்பட்டு வந்திருக்கும் காஷ்மீர் மக்களின் கண்ணீரை ஏனோ அறிவதில்லை.