அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடியிடம் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு வலியுறுத்துவதன் பின்னணி என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் 5225 மாணவர்கள் கற்பதற்கான இடங்கள் இருக்கின்றன. பொதுவாகவே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் கற்கச் செல்லும் தமிழக மாணவர்களில் அநேகமானோர் 15% உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டில் (AIQ) தங்களுக்கான இடங்களை எடுப்பதில்லை. மாறாக, 85% உள்ள மாநில ஒதுக்கீட்டிலேயே தங்களின் இடங்களைப் பெறுகின்றனர்.
இதன் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவர் அதிக இடங்களைப் பெறும் சூழல் உள்ளது. மட்டுமின்றி, கட்-ஆஃப் மதிப்பெண் சற்று குறைவாக எடுத்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இந்த மாநிலத்தின் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலையும் உள்ளது. இதற்குக் காரணம் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே.
கடந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டான 784 இடங்களில் சுமார் 100 தமிழக மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு மாணவர் மருத்துவராவதற்கு தமிழக அரசு ரூ.60 லட்சம் செலவு செய்துவரும் சூழலில், தமிழக மக்களின் வரிப் பணத்தைத் தமிழக மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலைமை இன்று உள்ளது.
இந்த அவல நிலையை மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மருத்துவக் கல்வியைத் தொடரவிருக்கும் மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில அளவில் பரப்புரை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் எஸ்ஐஓ சுகாதாரத்துறை செயலரைச் சந்தித்து, இதுதொடர்பான விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.