கடந்து எட்டு வருடங்களில் மோடி அரசு ஒரு திட்டத்தை அறிவிப்பதும் யாருக்காகக் கொண்டு வரப்படுகிறதோ அவர்களே அத்திட்டத்தை எதிர்ப்பதும் வாடிக்கையாக உள்ளது. பண மதிப்பீடு நடவடிக்கை கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்கும் என்று கூறி அத்திட்டத்தை எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் முந்தைய காலங்களை விடவும் இப்பொழுது கருப்பு பணத்தின் விகிதம் அதிகமாகியிருக்கிறது என்று கூறுகிறது புள்ளிவிவரங்கள்.
விவசாயிகள் நலன் பெறுவார்கள் என்று கூறி அறிவிக்கப்பட்ட வேளாண் சட்டம் விவசாயிகளிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. நாடெங்கும் உள்ள விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜிஎஸ்டி வரி சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் என்று நடைமுறைபடுத்தப்பட்ட திட்டம். மாறாக இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து அவர்களை தெருவில் நிற்க வைத்துள்ளளது.
இவ்வாறாக மோடி அரசு அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும் மக்களையும் மக்கள் நலனையும் பாதிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்பொழுது இளைஞர்களின் திறமையையும், இராணுவத்தின் பலத்தையும் முன்னேற்றுவதாக கூறி “அக்னிபாத்” திட்டத்தை அறிவித்துள்ளது மோடி அரசு. முன்னாள் இராணுவ அதிகாரிகள், ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் இத்திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இத்திட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கல்வி பயில்வதற்கான வயதில்தான் அக்னிபாத் திட்டத்திற்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நான்கிற்கு ஒன்று என்ற விகிதத்தில் அக்னிபாத் திட்டத்திலிருந்து இராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். முழுமையாக பயிற்சி அடையாத நபர்களை இராணுவத்தில் சேர்ப்பதால் இராணுவத்தின் திறன், பலம், ஆற்றல் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படும் என்பதை முன்னாள் இராணுவ அதிகாரிகள் பெரும் கவலையுடன் வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது நிரந்தரமான பணி நியமனம் பெறாமல் பட்டாளத்திலிருந்து வெளியேறும் இளைஞர்கள் அரசு தரக்கூடிய சிறிய தொகையை வைத்து எவ்வாறு தங்களது வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்ள முடியும்? என்பது பெரும் கேள்வியாகத்தான் இருக்கிறது.
இராணுவத்தில் இருபது ஆண்டுகள் முப்பது ஆண்டுகள் பணியில் இருந்து வெளியேறிய நபர்களுக்கே அடுத்தகட்ட வாழ்வாதாரம் என்ன? வாழ்க்கைக்கான அடித்தளம் என்ன?என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தில் நிரந்தர பணி நியமனம் பெறாமல் வெளியேறும் நபர்களுக்கு மஹேந்திரா குழுமத்தின் சார்பில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுவதெல்லாம் நிச்சயமாக மக்களை முட்டாளாக்கும் ஏற்பாடுகள்தான் என்று கூறுகின்றனர் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள்.
இளைஞர்களை உயர்கல்வி நிலையங்களில் பயிலக்கூடிய சிறந்த அறிஞர்களாக, இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றக் கூடிய ஆளுமைகளாக, தவிர்க்க இயலாத மிகப்பெரும் சக்தியாக மாற்ற வேண்டியதுதான் அரசின் தலையாயக் கடமை. மாறாக இளைஞர்களை கல்வியறிவு இல்லாதவர்களாக, வாட்ச்மேன்களாக, அடிமட்ட ஊழியர்களாக, தொழில்முறை தேர்ச்சி பெறாதவர்களாக உருவாக்க நினைப்பது இளைஞர் சக்திக்கு அரசு செய்யும் மிகப்பெரும் அநீதியாகும். இராணுவத்தின் திறனையும் ஆற்றலையும் இளைஞர்களின் சக்தியையும் வீணாக்கக் கூடிய அக்னிபாத் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
சகோதரன்