மதத்தை அடிப்படையாக வைத்து இந்தியா பிரிக்கப்பட்டபோது, புதிதாக உருவாக்கப்பட்ட எல்லைகளைக் கடக்க மக்கள் அவசர அவசரமாக நகர்ந்தனர். அது ஒரு பேரழிவுபோல் இருந்தது. மௌலானா ஆசாத் போன்ற தலைவர்களின் தலையீடுகளும், ஜமா மஸ்ஜிதில் அவர் ஆற்றிய புகழ்பெற்ற உரையும் முஸ்லிம்களுக்கு சிறிது நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வையும் கொடுத்தது. இது முஸ்லிம் வெகுஜன குடியேற்றத்தின் வேகத்தை குறைத்தது. அதே நேரத்தில், இந்து மகாசபை முஸ்லிம்களைக் குறிவைத்து கொலை, கொள்ளை, தீ வைப்பு மற்றும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. உயிருக்கு பயந்து பல முஸ்லிம்கள் டெல்லியில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். வன்முறை தணிந்ததும் தங்களை காத்துக்கொள்ள தப்பி ஓடிய முஸ்லிம்களின் சொத்துக்கள் “வெளியேறியவர்களின் சொத்து” என முத்திரை குத்தப்பட்டு எல்லையின் மறுபுறத்தில் இருந்து வரும் இந்து அகதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
தற்போது பேசுபொருளாகியிருக்கும் வக்ஃப் சட்ட திருத்தத்தை மேற்கூறிய இந்திய வரலாற்றுடன் தொடர்புபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் முழு வீரியத்துடன் முன்வைக்கப்பட்டிருக்கும் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை நுணுக்கமாக ஆராயும் போது, அது சில குழுக்களுக்கு ஆதரவாகவும், அதே வேளையில் குறிப்பிட்ட மக்களை பலவீனப்படுத்தும் நோக்கத்துடனும் முன்வைக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது. நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நில உரிமையாளராக இருக்கும் வக்ஃப் வரியமானது, பெங்களூரு ஈத்கா முதல் ஹைதராபாத் விமான நிலையம் வரையிலான பல்வேறு முக்கிய சொத்துக்கள் மீது முறையான உரிமையை கொண்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், வக்ஃப் வாரியத்தை ஒழித்து அதனிடம் உள்ள பரந்துபட்ட நில உரிமையையும் அதன் நிலங்களை அரசாங்கம் முழுமையாக கையகப்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன சில முஸ்லிம் விரோத குழுக்கள்.
மசோதாவை ஏன் எதிர்க்க வேண்டும்?
இந்த மசோதாவானது, வக்ஃப் வாரியத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், சுமூகமான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்காகவும்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த மசோதாவின் மிகவும் ஆட்சேபனைக்குரிய விஷயம் என்னவென்றால், முஸ்லிம் அல்லாதவர்களை சபையில் சேர்ப்பதற்கு இது அனுமதிக்கிறது. இதை புனிதமான மத உரிமைகளின் மீதான தேவையற்ற தலையீடு என்று முஸ்லிம் அமைப்புகள் விமர்சிக்கின்றன. மேலும், தலைமை நிர்வாக அதிகாரி மாநில அரசால் நியமிக்கப்படுவார் என்றும், இப்பதவி மாநில இணைச் செயலாளர் பதவிக்குக் குறைவாக இருக்கக்கூடாது என்றும் மசோதாவின் உட்பிரிவு 15 கூறுகிறது. ஆனால், தலைமை நிர்வாக அதிகாரி ஒரு முஸ்லிமாக தான் இருக்க வேண்டும் என்று மூலச் சட்டம் கூறுகிறது. இந்த மாற்றமானது, வாரியத்திலிருந்து தங்களை சாமர்த்தியமாக விலக்குவதற்கான வழியாக உள்ளதாக முஸ்லிம்கள் எண்ணுகின்றனர்.
மசோதாவின் மிகக் கொடுமையான மற்றொரு விஷயம் என்னவென்றால், மாவட்ட ஆட்சியருக்கு முழு அதிகாரத்தையும் வழங்குவதாகும். முன்னர், ஒரு கணக்கெடுப்பு ஆணையரை நியமித்து, சொத்துகள் சார்ந்த இறுதி முடிவு எடுக்கும் உரிமை வக்ஃப் வாரியத்தின் கையில் இருந்தது. தற்போது இதற்கான முழு அதிகாரத்தையும் இம்மசோதா மாவட்ட ஆட்சியருக்கு வழங்குகிறது. இந்த அதிகார மாற்றமானது வக்ஃப் வாரியத்தை கணிசமாக பலவீனப்படுத்துவதாகவும் சொத்துக்களை இழப்பதற்கான வழியை உருவாக்குவதாகவும் உள்ளது. இதனால் AIMPLB, ஜம்யியத்துல் உலமா மற்றும் பிற அமைப்புகள் இந்த சட்டத்திருத்தத்தை கடுமையாக கண்டித்துள்ளதுடன். இதனை மத உரிமைகள் மீதான மீறல் என்றும் கூறியுள்ளன.
பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகளால் குறைந்து வரும் வக்ஃப் நிலங்கள் நிலை
வக்ஃப் வாரியம் இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய நில உரிமை பெற்ற வாரியமாக உள்ளது. ஆனால், பரவலான ஆக்கிரமிப்புகளால் அதன் அசல் பங்குகளில் 25%க்கும் குறைவாகக் குறைத்துள்ளன. உதாரணமாக, காஷ்மீர் ஆர்வலர் எம்.எம். ஷுஜா, RTI மூலம் ஜம்மு காஷ்மீரில் உள்ள 1,400 கேனல் அளவுள்ள வக்ஃப் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். ஹைதராபாத்திலும் 75% வக்ஃப் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்ற ஆக்கிரமிப்புகள் வக்ஃப் நிலங்களின் அளவை கணிசமாக குறைக்கின்றன. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்கு, சுமார் 17,000 சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக அரசாங்கம் பதில் கூறியது. இதன்பிறகு, 2021ஆம் ஆண்டில் சிறுபான்மையினர்களுக்கான தேசிய ஆணையத்தின் அப்போதைய தலைவர் அதிஃப் ரஷீத், வக்ஃப் நில ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி கவலைப்படுவதாக கூறினார். மேலும், வக்ஃப் வாரியத்தை சட்டவிரோத அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவிப்பதே தனது குறிக்கோள் என்றும் கூறினார். தெலுங்கானா வக்ஃப் தலைவர், 20% நிலம் மட்டுமே வழக்குகள் இன்றி இருப்பதாக TOI செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். மீதமுள்ள 80% நிலங்களின் நிலையும், இந்தக் கடுமையான அத்துமீறலுக்கு யார் பொறுப்புக் கூறுவது என்பதும் கவலையளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.
வக்ஃப் சொத்துக்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை ஒன்றும் புதிதாக வந்ததல்ல. யுஷ்வ் இந்து பரிஷத், இந்து யுவ வாஹினி மற்றும் பஜ்ரங் தள் போன்ற தீவிர இந்துத்துவ குழுக்கள் இந்த நிலங்களை பறிக்க தொடர்ச்சியாக முயன்று வருகின்றன. வக்ஃப் சொத்து மீதான பெரும்பாலான அத்துமீறல்கள் இந்துக்களால் செய்யப்பட்டவையாக இருக்கலாம் என்பதும், வக்ஃப் வாரியத்தின் விரிவான நில உரிமைகளை கண்டு அவர்கள் வெறுப்படைந்திருக்கலாம் என்பதும் VHP மற்றும் பிற அமைப்புகளின் புகார்களின் மூலம் தெரிய வருகிறது. பிரிவினையின் போது முஸ்லிம்கள் மற்றும் அவர்களது சொத்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைகள், கொள்ளைகள் மற்றும் தீ வைப்புகளில் இந்து மகாசபை கணிசமாக பங்கு வகித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக முஸ்லிம்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர், சிலர் எல்லையின் மறுபக்கத்திற்கு தப்பி ஓடினர், சிலர் இடைத்தங்கல் முகாம்களுக்கு தப்பிச் சென்றனர். நிலைமை சீரானதும் நாட்டை விட்டு வெளியேறிய முஸ்லிம்கள் விட்டுச் சென்ற சொத்துக்களுடன் சேர்த்து நாட்டிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களின் சொத்துகளும், எல்லையின் மறுபுறத்தில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு வழங்கப்பட்டன. அரசாங்கம் மற்றும் தனிநபர்களின் வெறுப்பு மற்றும் பலவந்தமான அத்துமீறல்கள் முஸ்லிம்களை “முஸ்லிம் இலாகா” என்று அறியப்பட்ட பகுதிகளுக்கு தள்ளியது. முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த இதுபோன்ற பகுதிகள் உருவானதில் இருந்தே, “மினி பாகிஸ்தான்” என்று அவற்றை முத்திரை குத்தி, இந்தியா மீதான அம்மக்களின் விசுவாசத்தை வலதுசாரி குழுக்கள் மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன.
பெண்களின் பங்கேற்பு வக்ஃப் வாரியத்தின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்யுமா?
புதிதாக முன்மொழியப்பட்ட மசோதாவின் சில விதிகளில், பெண்களுக்கு வக்ஃப் நிர்வாகத்தில் சமமான பங்களிப்பை வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், 1995 வக்ஃப் சட்டம் பெண்கள் வக்ஃப் விவகாரங்களில் பங்கேற்க தடை விதித்துள்ளதா? இல்லை, 1995 வக்ஃப் சட்டம் பாலினம் சார்ந்து முன்னுரிமை கொடுக்கவில்லை; மாறாக, தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்கியது. 2016ஆம் ஆண்டு, ஹைதராபாத்தைச் சேர்ந்த லுப்னா சர்வத் என்ற பெண் வக்ஃப் நலத்துறையின் செயலர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தது வக்ஃபின் பன்முகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இந்த மசோதாவின் மூலம் பெண்களின் பங்கேற்பு கட்டாயமாக்கப்பட்டால், அத்தகைய பன்முகத்தன்மையானது வக்ஃப் வாரியம் சுமூகமாக செயல்பட வேண்டும் என்ற இலக்கை அடைய உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், முஸ்லிம் பெண்களிடையே கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளதாகவும் அவர்களின் மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் போன்ற சச்சார் குழுவின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தத்திற்கான நியாயத்தை கூறும் அரசாங்கம் மற்றவர்களை புறக்கணிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. பக்கச்சார்புடைய நோக்குடனும், “திருப்திப்படுத்தும் அரசியல்” மூலம் குறிப்பிட்ட பிரிவினருக்கு சாதகமாக செயல்படுவதிலும் அவர்கள் நிபுணர்களாகவே உள்ளனர். “அனைத்திலும் பன்முகத்தன்மையே மகத்துவத்திற்கான பாதையாகும்”.
முஸ்லிம் அல்லாதவர்களை தேவையில்லாமல் சேர்ப்பது, மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படும் முழு அதிகாரம், வக்ஃப் சபையில் முஸ்லிம் அல்லாதவர்கள் உறுப்பினராவதற்கு அனுமதி தருவது மற்றும் வக்ஃபில் வாரிசு உரிமையை தருவது (Waqf alal Aulad) ஆகியவற்றை முக்கிய பிரச்சனைகளாக முஸ்லிம் அமைப்புகளும், எதிர்கட்சிகளும் முன்வைக்கின்றன. இது தவிர, பதிவு செய்தல் என்பது சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் எழக்கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும். மசோதாவின் வரைவின்படி சொத்துக்களை போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான விதிகளை மத்திய அரசு உருவாக்கலாம். பதிவு செய்வதற்கு அவர்களுக்கு விற்பனைப் பத்திரம் அல்லது பிற ஆவணங்கள் தேவைப்பட்டால் என்ன நடக்கும்?
இனி, முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் எதிர்க்கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. இந்த மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதில் அவர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். இல்லையெனில், முஸ்லிம் சமூகம் மேலும் ஓரங்கட்டப்படும். இது இந்த அரசு அமைப்புமுறையின் மீதானா நம்பிக்கையை மேலும் சிதைத்துவிடும்.
(ஆங்கில மூலம்: Maktoob Media)
(தமிழாக்கம்: நேமத்துல்லா)