ஒரு தீமையைக் கண்டால் அதனை உங்கள் கைகளால் தடுங்கள் முடியாவிட்டால் வாயால் அதனை தடுங்கள், அதற்கும் முடியாவிட்டால் நீங்கள் முழுவதுமாக அதிலிருந்து விலகிவிடுங்கள . இதன் பொருள் ஒரு முஸ்லீம் சமூகத்தில் ஒரு தீமை ஏற்படும் நேரத்தில் அதனைக்கண்டு வெறுமனே இருத்தல் கூடாது என்பதுதான்.
இதில் முதலாவது நிலையாக இருக்கக்கூடிய கையால் தடுப்பது என்பது ஒரு தந்தை தனது மகனை கண்டிப்பது போன்று, ஒரு ஆசிரியர் தனது மாணவரை கண்டிப்பது போன்று. ஒருஅரசு அதிகாரி தனது மக்களுக்கு தண்டனை வழங்குவதை ஒத்ததுதான். ஆக மக்களை கண்டிக்கவேண்டுமானால் சமூகத்தின் மீது அக்கறையும் அன்பும் இருந்தால் மட்டும் போதாது அதற்கான அதிகாரமும் நமக்கு தேவை.
இவ்வாறு சமூகத்தின் மீது அக்கரை உள்ள சமூகத்தை குறித்து கவலைப்டக்கூடிய நபர்தான் கேரளாவை சேர்ந்த அணீஸ் ரஹ்மான் அவர்கள். இவர் நேற்றைய தினம் டெல்லி பலகலைக்கழகத்திலிருந்து தனது LLB படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். மேலும் வழக்கறிஞராக பயிற்சி மேற்கொவததற்காக பதிவு செய்துள்ளார். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் தனது பட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி செய்வதற்கு தயாராகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அணீஸ் ரஹ்மானை நாம் இங்கே கொண்டாடுவதற்கு காரணம் இருக்கிறது.
அணீஸ் ரஹ்மான் அவர்கள் கேரளாவில் உள்ள அல் ஜாமியா அல் இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய துறையில் பயின்று பட்டம் பெற்றவர். அவருக்கு கிடைத்த இஸ்லாமிய அறிவின் காரணமாக சமூகத்தின் மீதும் மக்களின் நலன் மீதும் தீராத காதல் கொண்ட நபர். டெல்லி பலக்லைக்கழகத்தில் இவர் படிக்க சென்ற நேரத்தில்தான் தேசம் முழுவதும் CAA சட்டத்தை எதிர்த்து தேசம் முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.
சகோதரர் அணீஸ் அவர்களும் அங்கே போராட்டக் களத்தில் முதல் வரிசையில் நின்று போராடியதோடு பலமுறை காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். நோன்பு வைத்துள்ள நிலையில் இவர் காவல் துறையினரால் தாக்கப்பட்டு இரத்தம் வழியும் நிலையில் காவல் நிலையத்தில் இருந்த படம் இன்றும் சத்தியத்திற்கான இவரது நேசத்திற்கான ஆதாரமாக உள்ளது.
யாரேனும் வந்து எங்களை மீட்டுவிடுவார்கள், யாரேனும் மீட்பர் வந்து எங்களுக்காக பேசுவார்கள். யாரேனும் மீட்பர் வந்து எங்களுக்காக படம் எடுப்பார்கள். யாரேனும் மீட்பர் வந்து எங்களுக்காக ஒரு தொல்லைக்காட்சி சேனலை தொடங்குவார்கள் என்ற சிந்தனையிலிருந்து கேரளமக்கள் விழித்துக்கொண்டு பலகாலம் ஆயிற்று. இப்பொழுது அவர்களுக்கான மீட்பராக அவர்களே மாறியுள்ளனர். அவர்களுக்கான காப்பாளரை, ஊடகத்தை, செய்த்தித்தாளை, பேச்சாளரை, எழுத்தாளரை, பள்ளியை, கல்லூரியை அவர்களே உருவாக்கி அவர்களை மட்டுமல்லாது சமூகத்தையும் காத்து வருகின்றனர். அந்த வரிசையில் இனி வழக்கறிஞர் அணீஸ் அவர்கள் நிச்சயம் மீட்பராக இருப்பார்.
–வி.எம். முஹம்மது பஷீர்